தலைக்கு குளிக்க ஒரு மெஷின்



விநோத ரஸ மஞ்சரி

‘மனுஷனை சோம்பேறியாக்க இன்னும் என்னவெல்லாம் கண்டுபிடிப்பாங்களோ’ என உலகையே புலம்ப வைத்திருக்கிறார் சீன இளைஞர் செங் காங்கே. நிஜமாகவே இவர் உருவாக்கியிருப்பது தலைக்கு குளிக்க வைக்கும் இயந்திரம்தான். ஐந்தே நிமிடங்களில், உடல் சற்றும் நனையாமல் ஹேர் வாஷ் மட்டும் செய்து அசத்துகிறது இவரின் நவீன கருவி. முழுக்க முழுக்க கையில் கிடைத்த வேஸ்ட் பொருட்களால் தயாரிக்கப்பட்ட இயந்திரம் இதுவென்பது கூடுதல் ஸ்பெஷல்!

நார்மல் டூ வீலர் ஹெல்மெட்தான். அதில் பல மாறுதல்கள் செய்து நவீன மோட்டார்களைப் பொருத்தி, தண்ணீர்க் குழாயையும் ஷாம்பூ குழாயையும் இணைத்திருக்கிறார் காங்கே. இதை நம் தலையில் மாட்டிக்கொண்டால் போதும்... சற்று நேரத்துக்கெல்லாம் தண்ணீர் வந்து கூந்தலை அலசும். பின்னர் ஹெல்மெட் முழுவதும் உள்ள சிறு சிறு குழாய்கள் வழியே ஷாம்பூ வெளிவந்து தலையெங்கும் சீராகப் பரவும்.

மோட்டார்கள் இயங்கி நுரை பொங்கச் செய்தபின், மீண்டும் தண்ணீர் வந்து அலசும். கடைசியாக டிரையர், வெப்பக் காற்றைப் பாய்ச்சி தலைமுடியைக் காய வைக்கும். இத்தனையையும் வெறும் 5 நிமிடங்களில் செய்து முடித்து நம் நேரத்தை மிச்சப்படுத்தும் இந்த மெஷினுக்குக் காப்புரிமையையும் தந்துவிட்டது சீன அரசு.

என்ன... இந்த மெஷின் தலையைக் கழுவும்போதே சூடு பறக்க நமக்கு ஒரு மசாஜும் செய்யுமாம். சோதனை ஓட்டத்தின்போது இந்த மசாஜ் முயற்சியில் 18 ஹெல்மெட்டுகள் சுக்குநூறாக உடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அந்தத் தவறுகள் எல்லாம் சரி செய்யப்பட்டுவிட்டதாக காங்கே சொன்னாலும், இந்த மெஷினில் தலையைக் கொடுக்க யாருக்குமே துணிச்சல் வரவில்லை. கடைசியில் காங்கேயின் அப்பாவே தைரியமாக முன்வந்து, இதன் மூலம் பாதுகாப்பாக தலைக்கு குளித்துக் காட்டியிருக்கிறார்.

‘‘என் பாட்டிக்கு வெகுநாட்களுக்கு முன்பே பக்கவாதத்தால் கை, கால்கள் செயல்படாமல் போய்விட்டன. அவரைக் குளிப்பாட்டத்தான் இப்படியொரு மெஷின் செய்யும் முயற்சியில் நான் இறங்கினேன். அவரைப் போன்ற பலருக்கும் இது பயன்படும்!’’ என்கிறார் காங்கே நம்பிக்கையாக!இதுலயும் சென்டிமென்ட் ஃபினிஷிங்கா?

- ரெமோ