அழியாத கோலங்கள்



நா ன் பரமக்குடியில் வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் ராஜா சேதுபதி போர்டு ஹை ஸ்கூலில் நேரடியாக 9ம் வகுப்பில் சேர்க்கப்பட்டேன்.   அன்று என் தந்தை ஜில்லா போர்டு துணைத் தலைவராக இருந்ததால் அதைச் செய்ய முடிந்தது.  வெள்ளையர் காலத்தில் 1937ம் ஆண்டில், இந்தியாவின் சுயாட்சிக்கு டிரெயினிங் கொடுப்பது போல் ‘கவர்மென்ட் ஆஃப் இந்தியா ஆக்ட் ஆஃப் 1935’ என்று ஒரு சட்டம் இயற்றி, அதன் கீழ் கலெக்டர் மேற்பார்வையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஜில்லா போர்டு ஒன்று அமைத்து, அதற்கு தலைவரும், உப தலைவரும், மக்கள்தொகைக்கேற்ப பிரதிநிதிகளும் அமைத்தார்கள்.

என் தந்தையாருக்கு பெண் கொடுத்த மாமனார் வகையில் எல்லோரும் சர்க்கார் உத்தியோகஸ்தர்கள். இவர் காங்கிரஸ்காரர் என்பதால் அவர்களுக்கும் இவருக்கும் ஒத்து வராது. ஆனால், நேரடியான வெள்ளைக்கார அதிகாரிகள் காங்கிரஸ் தலைவர்களை மரியாதையுடன் நடத்துவார்கள். நான் சிறுவனாக இருக்கும் காலத்திலேயே ‘இந்து நேசன்’ என்ற மஞ்சள் பத்திரிகை வந்தது. வாரம் ஒரு முறை வரும் என்று ஞாபகம்.

விலை, அன்றைய ஒரு அணா. அதாவது, ஒரு ரூபாயில் 16ல் ஒரு பங்கு. அது சென்னையிலிருந்து பத்திரிகை படிக்கும் ஊர்களுக்கு எப்படி அனுப்பப்பட்டது என்று எனக்கு இன்றுவரை புரியவில்லை. வயதானவர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் ரகசியமாக ஒளித்து வைத்துப் படிப்பார்கள். என் வகுப்பில் ஒரு சீனியர், டெஸ்க் அடியில் வைத்துப் படிப்பார். அவர் பதினெட்டாம்படி முதலியார் என்ற பெயர்கொண்டவர் என ஞாபகம். அந்த ‘நல்ல’ நண்பர் எனக்கும் கொஞ்சம் படித்துக் காட்டுவார்.

‘தியாகராஜ பாகவதரும் வெள்ளைக் குதிரையும்’ என்று தலைப்பு... வெள்ளைக்குதிரை என்பது ‘White Horse’ எனும் ஸ்காட்லாந்து நாட்டு மது. கூடவே ஒரு கதாநாயகியின் பெயரைப் போட்டு, ஒரே நேரத்தில் இரண்டு குதிரைகள் என்று அதில் எழுதுவார்கள். ஒரு அணா விலையில் வெளிவந்த ‘இந்து நேசன்’, ஒரு ரூபாய்க்கு விற்கப்படும். வாங்கியவர் அதைப் படித்துவிட்டு, ஒரு காக்கி கவரில் போட்டு மறுநாள் ஒரு ரூபாய்க்கு விற்றுவிடுவார்.

பின்னால் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ என்ற ஒரு தொலைக்காட்சி சீரியலில் நான் நீதிபதியாக நடித்தேன். தொலைக்காட்சி அனுமதி இல்லாததாலோ, அல்லது வேறு காரணங்களாலோ, அது வெளியிடப்படவில்லை. அந்தக் கொலை வழக்கு தமிழ்நாட்டையே கிடுகிடுக்க வைத்தது. லக்ஷ்மிகாந்தனை கொலை செய்யும் தீவிர நோக்கமில்லாமல் காயப்படுத்தி பயமுறுத்தும் நோக்கமாக இருக்குமோ என்பதும் எனக்கு ஒரு சந்தேகம். கத்தியால் குத்தியது வடிவேல் என்பவர். அதில், ஆரிய வீரசேனன் என்ற அப்ரூவர் சாட்சிக் கூண்டில் மாறிவிட்டதாக ஞாபகம். கொலை தூண்டல் குற்றம் சாட்டப்பட்ட பிரபலங்கள் நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன், எம்.கே.தியாகராஜ பாகவதர், பக்‌ஷி ராஜா ஸ்டுடியோ அதிபர் ராமுலு நாயுடு ஆகியவர்கள்.

குத்தப்பட்ட லக்ஷ்மிகாந்தன் சட்டக்கல்லூரியில் சில காலம் படித்ததாக தகவல் உண்டு. கத்தியால் குத்தியதும் ஆஸ்பத்திரிக்குப் போகாமல், தன் வக்கீல் வீட்டுக்குப் போய், அவரின் ஆங்கிலோ  இந்திய நண்பர் ஒருவருடன் காவல் நிலையம் சென்று குற்றச்சாட்டு மனு கொடுத்துவிட்டு, அதன்பின் ஆஸ்பத்திரி சென்றதில் ஏராளமான ரத்தத்தை இழந்து, மறுநாள்தான் இறந்திருக்கிறார்.

இந்தியாவின் எவிடென்ஸ் ஆக்ட் பிரிவு 27ன் கீழ், ஒரு குற்றவாளி போலீஸில் கொடுக்கும் வாக்குமூலத்தின்போது குற்றம் சம்பந்தப்பட்ட பொருள் கைப்பற்றப்பட்டால் அந்தப் பகுதி சாட்சியமாக அனுமதிக்கப்படலாம் என்றிருக்கிறது. அந்தக் கொலை வழக்கில் போலீஸ் கத்தியைக் கைப்பற்றும்போது பெற்ற வாக்குமூலத்தில் இரண்டு நடிகர்கள் பெயரும் சேர்க்கப்பட்டிருந்ததால் வழக்கு வலுவானது. பாகவதரும் கிருஷ்ணனும் தண்டித்து சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

அதே நேரத்தில் In Re Kottaiah என்ற வழக்கில் இங்கிலாந்தின் House Of Lords என்று சொல்லப்பட்ட நீதிமன்றம் ஒரு பரபரப்பான தீர்ப்பைச் சொன்னது. ‘பிரிவு 27 எவிடென்ஸ் ஆக்ட், கைப்பற்றப்படும் பொருளை மட்டும் அனுமதிக்கிறதே தவிர, வாக்குமூலத்தில் வரும் பெயர்களை அனுமதிக்க அவசியம் இல்லை’ எனும் பொருள் கொண்ட தீர்ப்பு அது. என்.எஸ்.கே., பாகவதர் இருவரும் 30 மாதங்கள் கழித்து இந்தத் தீர்ப்பின் அடிப்படையில்தான் விடுதலையானார்கள். அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியில் இன்று சுதந்திர இந்தியாவில் கிடைப்பதுபோல் கொலைக் குற்றங்களுக்கு நீதிமன்ற விடுதலைகள் அவ்வளவு எளிதாகக் கிடைப்பதில்லை. 

என் முகநூல் கணக்கில் நண்பர்கள் எண்ணிக்கை நிறைந்துவிட்டது. யாராவது ரொம்ப விரும்பி, ‘என்னையும் சேர்த்துக்கொள்ளுங்களேன்’ எனக் கோரிக்கை வைத்தால் முன்பெல்லாம் சங்கடமாக இருக்கும். உடனடியாக வேலை மெனக்கெட்டு, யார் நமக்கு அதிகம் தொடர்பில்லாதவர்கள், யார் அடையாளமே இல்லாதவர்கள் என்று பார்த்துப் பார்த்து சில பெயர்களை நீக்க வேண்டியிருக்கும்.

இப்போதெல்லாம் அப்படிக் கஷ்டப்படுவதே இல்லை. இந்திராணி முகர்ஜியில் ஆரம்பித்து, பலதார மணம், பல கணவன் மணம் எனத் தாவி, நமது ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் சின்னதாக எள்ளல் பண்ணி ஒரு போஸ்ட் போட்டால் போதும். அடுத்த நாளே ‘நீயும் வேண்டாம்; உன் சகவாசமும் வேண்டாம்’ என ஒரு 500 பேர் அத்துக்கொண்டு ஓடிவிடுவார்கள். எனக்கு வேலை மிச்சம்!
        

(நீளும்...)

சாருஹாசன்

ஓவியங்கள்: மனோகர்