எங்களை களங்கப்படுத்தும் சமூகம் அழுக்கானது!



உருகிய பெண்... உதவிய ஃபேஸ்புக்

ஒரு கெட்ட வார்த்தையாகத்தான் அதைச் சொல்லியும் சொல்வதைக் கேட்டும் நமக்குப் பழக்கம். நிஜமாகவே இந்த நாட்டில் விதி வசத்தால் விலைமாதர்களானவர்கள் உண்டு... அவர்களுக்கும் பிள்ளைகள் உண்டு... பள்ளிகளில் அப்பா பெயர் கேட்டு புறக்கணிக்கப்படும் அவர்களின் வாழ்வைப் பற்றி என்றைக்காவது சிந்தித்திருக்கிறோமா? ஆனால், பொறுப்பே இல்லாதவர்களாக முத்திரை குத்தப்பட்ட ஃபேஸ்புக் தலைமுறை அதை உணர்ந்திருக்கிறது. உதவிக்கரமும் நீட்டியிருக்கிறது. வருங்காலம் பற்றிய நம்பிக்கையை விதைத்திருக்கும் சம்பவம் இது!

மும்பையின் காமத்திபுரா... உலகறிந்த சிவப்பு விளக்குப் பகுதி. ஆட்டு மந்தைகள் போல அங்கே பெண்கள் குவிந்திருப்பார்கள். பெரும்பாலானவர்கள் கடத்தி வரப்பட்டவர்கள், கணவர்களாலேயே விற்கப்பட்டவர்கள். குழந்தையோடு அங்கே வந்தவர்களும் உண்டு, வந்த பின் தாயானவர்களும் உண்டு. ‘‘தனக்குத்தான் இந்த நரக வேதனை... தன் பிள்ளைகளாவது படிக்க வேண்டும்... சமூகத்தில் ஒரு அந்தஸ்தைப் பெற வேண்டும் என்பதுதான் இங்கிருக்கும் ஒவ்வொரு பெண்ணின் கனவும். அந்தக் கனவைத்தான் எங்கள் கடமையாக ஏற்றிருக்கிறோம்!’’ என்கிறார் ராபின் சௌரசியா.

இவரின் ‘க்ராந்தி’ தொண்டு நிறுவனம் மும்பை சிவப்பு விளக்குப் பகுதியின் குழந்தைகளுக்காகவே இயங்குகிறது. இங்கு பிறக்கும் சிறுமிகள் வல்லுறவிலும் சிறுவர்கள் கஞ்சா விற்பனையிலும் ஈடுபடுத்தப்படுவதைத் தடுக்கிறது. ஒரு காலத்தில் காமத்திபுராவில் தாய் தன்னை விற்றுக்கொண்டிருக்க, பிள்ளைகள் அந்தக் கட்டிலின் அடியில் தூங்க வைக்கப்பட்ட கொடுமையெல்லாம் நேர்ந்திருக்கிறது.

அப்படியொரு சூழலில் வளர்ந்தால் அந்தத் தளிர்களின் வாழ்வும் அதே விதத்தில்தான் தொடரும் என்பதால், பெண் குழந்தைகளை அங்கிருந்து அழைத்து வந்து தனித்த வாடகை வீட்டில் தங்க வைக்கிறது க்ராந்தி. அவர்களின் படிப்புக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்கிறது. ஆனால், பிரச்னை இதோடு முடிவதில்லை.

‘‘இவர்களுக்கு அம்மா பெயர்களையே இனிஷியலாகக் கொடுப்போம். வளர்ந்த சிறுமிகளைக் கூட்டிப்போய் 3ம் வகுப்பில் சேர்க்க வேண்டியிருக்கும். அரசுப் பள்ளிகள் என்றாலும் இதையெல்லாம் வித்தியாசமாய்ப் பார்ப்பார்கள். சக மாணவர்களே இவர்களைத் திட்டுவதும் புறக்கணிப்பதும் நடந்தது. அதையெல்லாம் மாற்ற நிறைய பாடம் புகட்ட வேண்டியிருந்தது. ஆனால், இன்றுவரை எங்களால் மாற்ற முடியாமல் இருக்கும் புறக்கணிப்பு, வாடகை வீட்டு உரிமையாளர்களுடையது.

பொதுவாகவே பெண்கள் தனித்து வசிப்பதென்றால் மும்பையில் வீடு தர மாட்டார்கள். இப்படிப்பட்ட சிறுமிகள் என்றால் தரவே மாட்டார்கள். இவர்களின் அடையாளங்களை மறைத்து தங்க வைத்தாலும்கூட, பிறகு உண்மை தெரிந்துவிட்டால் இரக்கமில்லாமல் தெருவுக்கு துரத்திவிடுவார்கள்!’’ என்கிறார் சௌரசியா.
சமீபத்தில் நடந்த சம்பவம் அச்சு அசல் இதேதான்.

க்ராந்தி தொண்டு நிறுவத்தால் தனி வீடெடுத்து தங்க வைக்கப்பட்டிருந்த நான்கு பெண்கள் வீட்டு உரிமையாளரால் திடீரென்று வெளியேற்றப்பட்டார்கள். சமரசம் பேசிய போது, ‘‘பாதுகாப்புத் தொகையாக 5 லட்சம் ரூபாய் கொடுத்தால் இங்கே இருக்கலாம்’’ என்றிருக்கிறார் அந்த வீட்டு உரிமையாளர். இதனால் அந்தப் பெண்கள் துவண்டுவிடவில்லை. ‘ஹியூமன்ஸ் ஆஃப் மும்பை’ எனும் ஃபேஸ்புக் பக்கத்தை நாடியிருக்கிறார்கள். அந்தப் பெண்களில் ஒருத்தி அதில் இட்ட பதிவில் இருந்த வார்த்தைகள், அனைவரையும் உலுக்கிவிட்டன.

‘‘என் அம்மா தான் செய்வதை களங்கப்பட்ட தொழில் என்று நினைத்தார். நான் அந்த இடத்தில் ஒருமுறை வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறேன். அந்தச் சமயத்தில் நானும் கூட என்னை கறைபட்டவள் என்றுதான் நினைத்தேன். ஆனால், இப்போது அந்த எண்ணங்கள் இல்லை. யார் அழுக்கானவர்கள்? எங்களைப் போன்றவர்களை களங்கப்படுத்திய ஆண்களும் இந்தச் சமூகமும்தான் அழுக்கானவை!’’

இந்தப் பதிவுக்கு உடனடியாக லைக்ஸ் குவியத் துவங்கிவிட்டன. லைக்ஸ் மட்டுமல்ல... இந்தப் பெண்களுக்கு நல்ல இருப்பிடம் வேண்டும் என்பதற்காக ஃபேஸ்புக் வழியாகவே உதவிகளும் குவியத் துவங்கின. நன்கொடைகளை ஏற்கத் துவங்கி 15 மணி நேரத்துக்குள் வீட்டு உரிமையாளர் கேட்ட 5 லட்சம் ரூபாய் சேர்ந்துவிட்டது. அதைக் கொடுத்து மீண்டும் அந்த வீட்டிலேயே அந்தப் பெண்கள் போய் இருக்கலாம். ஆனால், அந்த வீடு எப்படிப்பட்டது தெரியுமா? காறை பெயர்ந்த சுவர், தடுப்புகள் அற்ற ஒரே அறை, மழைக்கு ஒழுகும் கூரை...

அவ்வளவு ஏன், தனித்த கழிவறை கூட இல்லாத வீட்டுக்குத்தான் இத்தனை முன்பணம். ‘‘வேறு வழியில்லை. இந்தப் பெண்களின் பின்னணி தெரிந்துவிட்டால் இந்த தரத்திலான வீடு கூட வேறெங்கும் கிடைக்காது’’ என்கிறார் சௌரசியா. இதே வீட்டில் தேவையான வசதிகளை செய்துகொள்ளும் அளவுக்கு மேலும் கொஞ்சம் பணம் திரட்டிக் கொண்டிருக்கிறார்கள் இந்தப் பெண்கள்.

இத்தனை சீக்கிரம் ஆன்லைன் வழியாக இந்தப் பெண்களுக்கு உதவிகள் குவியும் என யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. முதல் சில மணி நேரங்களில் வசூலான 1.5 லட்சம் ரூபாய் நன்கொடையைக் கணக்குப் பார்த்தபோது அதில் சுமார் 60 ஆயிரம் ரூபாய் பெயர் வெளியிட விரும்பாத நபர்களால் தரப்பட்டிருப்பது தெரிந்தது. ஆக, வழக்கமான பார்வைகளுக்கும் கலாசார கேள்விகளுக்கும் இளைய தலைமுறை கொஞ்சம் பயப்படுகிறது.

ஆனால், தலைமறைவாகவேனும் நல்லது செய்ய நினைக்கிறது. இனியும், இவர்களை பொறுப்பில்லாதவர்கள் எனக் குறைபட்டுக்கொண்டால், நமக்குத்தான் பொறுப்பில்லை!இவர்களின் அடையாளங்களை மறைத்து தங்க வைத்தாலும்கூட, பிறகு உண்மை தெரிந்துவிட்டால் இரக்கமில்லாமல் தெருவுக்கு துரத்திவிடுவார்கள்!

- மும்பையிலிருந்து சாரு