போட்டோ



சுமதி ஆபீஸ் கிளம்பும்போது இடைமறித்தார் அப்பா. ‘‘இவர்தான்மா அடுத்த வாரம் உன்னைப் பார்க்க வரப்போற மாப்பிள்ளை, நல்லா பார்த்துக்கோ!’’ என  ஒரு போட்டோவைக் கொடுத்தார்.‘‘எனக்கு நேரமாச்சுப்பா. ஆபீஸ்ல போய் பொறுமையா பார்த்துக்கிறேன்!’’ - அதை வாங்கி பையில் போட்டுக் கிளம்பினாள்.

மாலை...அதே போட்டோவை அப்பாவிடம் திருப்பிக் கொடுத்து, ‘‘இந்த ஆள் வேண்டாம்பா. பார்க்கக் கூட வர வேண்டாம்னு சொல்லிடுங்க!’’ என்றாள்.
‘‘நல்ல பையன்... ஏம்மா வேணாம்கிறே?’’

‘‘வேணாம்னு சொன்னா விடுங்கப்பா!’’‘‘வெறும் போட்டோவுல என்ன தெரியும்? காரணத்தைச் சொல்லு!’’ - விடாப்பிடியாகக் கேட்டார் அப்பா.
‘‘எங்க ஆபீஸ்ல எல்லார்கிட்டயும் இந்த போட்டோவை சந்தோஷமா காட்டினேன்பா. எல்லாரும் சிரிக்கிறாங்க. காரணம் கேட்டப்போதான் தெரியுது... இந்த ஆள் போன வாரமே எங்க ஆபீஸுக்கு வந்து விசாரிச்சிருக்கார்!’’‘‘கட்டிக்கப் போகிறவர் விசாரிக்கிறது சகஜம்தானேம்மா... தப்பில்லையே!’’

‘‘நாலு பேர்கிட்ட விசாரிச்சிருந்தா பரவாயில்லப்பா. என்னைத் தவிர பாக்கி நாற்பது பேர்கிட்டேயும் என் கேரக்டரைப் பத்தி துருவித் துருவி விசாரிச்சிருக்கார். இப்படிப்பட்டவரை கட்டிக்கிட்டா வாழ்க்கை நல்லாயிருக்காதுப்பா!’’மகளின் முடிவில் இருந்த நியாயத்தைப் புரிந்துகொண்டார் சுமதியின் தந்தை.