ஒரு வழிப்பறிக் கொள்ளையனின் ஒப்புதல் வாக்குமூலம்





நூறாண்டுகளுக்கு முன்பு வட இந்தியாவில் பயணம் மேற்கொள்வது உயிரைப் பணயம் வைக்கும் செயல். ‘தக்கி’ என்ற கொடூர கொள்ளைக்கூட்டத்தின் அட்டகாசத்தால் பல மாநிலங்கள் ரத்தக்களரியாகின. பல ஆயிரம் உயிர்கள் பறிபோயின.  

தக்கிகளின் செயல்பாடுகள் வினோதமானவை. இவர்களின் தொழில் தெய்வம் காளி. நல்ல சகுனம் கிடைத்தால் மட்டுமே தொழிலை ஆரம்பிப்பார்கள். வணிகர்களையும், யாத்ரீகர்களையும் குறி வைத்து, உதவி செய்வது போல அணுகி, தனிமைப்படுத்தி கொலை செய்வார்கள். பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்குப் பிறகு பல தனிப்படைகள் அமைக்கப்பட்டு தக்கிகள் ஒடுக்கப்பட்டார்கள்.
தம்மிடம் பிடிபட்ட தக்கிகளின் வாக்கு மூலத்தை வைத்து, பிலிப் மெடோஸ் டெய்லர் என்ற காவல்துறை அதிகாரி ‘Confessions of a Thug’ என்ற புத்தகத்தை எழுதினார். நாவலின் தொனியில் அமைந்துள்ள இந்த நூலை ‘ஒரு வழிப்பறிக் கொள்ளையனின் ஒப்புதல் வாக்குமூலம்’ என்ற பெயரில் சந்தியா பதிப்பகம் தமிழில் வெளியிட்டுள்ளது. இந்த வாக்குமூல நூலின் ஒரு பகுதி...  

தசரா நாளில் நான் தக்கியாகும் நிகழ்ச்சி நடைபெற்றது. குளித்துவிட்டு, சலவை செய்யப்படாத ஆடைகளை அணிந்தேன். என் தந்தைதான் இறைச் சடங்குகளுக்கான அதிகார பூர்வ குரு. ஒரு விசாலமான அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். குழுத் தலைவர்கள் பலரும் அங்கே இருந்தார்கள். ‘‘இவனை தக்கியாகவும், உங்கள் சகோதரனாகவும் ஏற்றுக்கொள்ள விருப்பம்தானே’’ என்று என் அப்பா அவர்களிடம், கேட்டார். எல்லோரும் ஒருமித்த குரலில் ‘‘ஆம்’’ என்றார்கள்.

என் தந்தை உரத்த குரலில் கூவினார்: ‘‘ஓ... பவானீ... உலகத்தின் தாயே... உன்னுடைய பக்தர்கள் கேட்கிறோம். இவனைச் சேவகனாக ஏற்றுக்கொள். இவனுக்கு அருள் வழங்கி, பாதுகாப்பு கொடுப்பதற்குரிய முன்னறி விப்பை எங்களுக்கு வழங்கு...’’

சற்று நேரம் காத்திருந்தோம். இறுதியில் ஆந்தையின் மெல்லிய அலறல் ஒலி கேட்டது. ‘‘ஜெய் பவானீ... வெற்றி பவானிக்கே’’ என தலைவர்கள் கூட்டாகக் குரல் கொடுத்தார்கள். என் தந்தை என்னைத் தழுவிக் கொண்டு சொன்னார். ‘‘நல்ல சகுனம் மகனே. இத்தகைய சகுனம் கிடைப்பது அரிது. பொறுப்பேற்பு முழுமையாக முடிவடைந்தது...’’
எங்கள் தொழிலின் சின்னமான வெட்டுக் கோடரியை ஒரு தட்டில் வெள்ளைத்துணி மீது வைத்து என் கையில் கொடுத்தார்கள். அதை என் மார்பு உயரத்திற்கு உயர்த்திப் பிடித்தேன். உறுதிமொழியை அவர்கள் சொல்லச் சொல்ல திருப்பிச் சொன்னேன். படையல் வைத்த ஒரு துண்டு வெல்லத்தைக் கொடுத்து வாயில் போட்டுக்கொள்ளச் சொன்னார்கள். எனது துவக்க நிகழ்ச்சி நிறைவுற்றது. என்னைப் பார்த்து அப்பா பின்வருமாறு கூறினார்:

‘‘மகனே, நீ உனது தொழிலை ஏற்றுக்கொண்டு விட்டாய். மிகத் தொன்மையான தொழில் இது. சட்டத்திற்கு அப்பாற்பட்ட இத்தொழிலின் பொருட்டு, ‘விதிவிலக்காகத் தடை செய்யப்பட்டவர்களைத் தவிர பிறவுயிர்களை மாய்ப்பதற்காக உன் அறிவை, ஆற்றலை வசப்படுத்தித் தொடர்வேன்’ என்ற சபதம் ஏற்றுள்ளாய். இனி அவை புனிதமான காரியங்கள் ஆகும். வண்ணார்கள், பாட் இனத்தவர், சீக்கியர்கள், நானூக் சகீக்கள், முடாரீ பக்கீர்கள், நாட்டியக்காரர்கள், இசைக் கலைஞர்கள், பங்கீகள், தெய்லீக்கள், லோகார்கள், புராக்கள், முடவாத நோய் கண்டவர்கள், குஷ்டரோகிகளை நாம் கொல்லக்கூடாது. இவர்களைத் தவிர்த்து மனித இனம் முற்றிலும் நாம் அழிப்பதற்காக உருவாக்கப்பட்டதே. இப்போதிருந்து நீ கொள்ளைக்காரன்...’’
நான் சொன்னேன்: ‘‘இது போதும் அப்பா. நான் உங்களுக்காக உயிரைத் தருவதற்கும் சித்தமாக இருக்கிறேன். என் அர்ப்பணிப்புப் பண்பை உங்களுக்குக் காட்டும் வாய்ப்பை விரைவில் எதிர்பார்க்கிறேன்.’’
இப்படியாக நான் ஒரு கொள்ளைக்காரன் ஆனேன். எங்கள் பயணம் துவங்கியது. பயணத்தைத் துவக்குவதற்கு முன்னால் குறியும் சகுனமும் பார்க்க வேண்டும். புனிதக் கோடரி எடுத்து வரப்பட்டது. அப்பா மீண்டும் கூவினார்.

‘‘பிரபஞ்சத்தின் தாயே, எங்களை முறையாகப் பாதுகாத்து அருள்பாலிப்பவளே, இந்தப் பயணத்தில் உனக்குச் சம்மதம் என்றால் உனது இசைவை உறுதி செய்யும் முன்னறிவிப்பை வெளியிடு. உன் தயவை வேண்டுகிறோம். எங்களைப் பாதுகாத்து அருள் செய்!’’
அப்பா அமைதியான பின்னர், கும்பல் அவருடைய பிரார்த்தனையை உரத்த குரலில் திருப்பிச் சொன்னது. இப்போது ஒவ்வொருவரும் சகுனத்தை எதிர்நோக்கி நீண்ட நேரமாக காத்துக் கொண்டிருந்தோம். இறுதியில் ஒரு கழுதை கனைத்தது. அதே நேரத்தில் வலது புறத்தில் இருந்த திபாபூவும் பதிலளித்தது. இதைவிடவா நல்ல சகுனம் வேண்டும். பவானியைப் போற்றி உரத்த குரலில் கூச்சலிட்டார்கள். ஒவ்வொருவரும் நல்ல அதிர்ஷ்டத்திற்காக வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டார்கள்.

கணேஷ்பூருக்கான அருகாமைச் சாலையில் பயணத்தைத் துவங்கினோம். சில நாட்களில் நாங்கள் கணேஷ்பூரைச் சென்று நகருக்கு வெளியே தங்கியிருந்தோம். அதுவரை எந்த சாகசமும் நிகழ்த்தப்படவில்லை. பயணிகள் பற்றிய தகவல்கள் கொடுத்து தக்கிகளின் கும்பலுக்கு முக்கிய பலமாக விளங்கும், சோதாயீ எனப்படும் உளவாளிகள் நகருக்குள் அனுப்பப்பட்டிருந்தார்கள். வண்டியில் நாக்பூர் சென்றுகொண்டிருந்த கயாத் என்ற வயதான வணிகரை அணுகி, ‘‘நகரில் ஆங்காங்கே தக்கிகள் அலைகிறார்கள். நாங்களும் நாக்பூர்தான் செல்கிறோம். எங்களுடன் இணைந்து கூட்டாக வரலாம். ஒருவருக்கு ஒருவர் பாதுகாப்பாக இருக்கும்’’ என்று அழைத்துக்கொண்டு வந்திருந்தான் ஒரு உளவாளி.

கயாத் பெரிய மனிதராகத் தெரிந்தார். அவருடைய இளம் மகன் அழகான, புத்திக் கூர்மையானவனாகத் தோன்றினான். எனக்குத் தெரியும். இன்று இரவு இவர்கள் எல்லோரும் இறக்கப் போகிறார்கள். அவர்கள் எங்கள் முகாமை அடைந்த உடனே அது தீர்மானிக்கப்பட்டு விட்டது. அவரையும் அவருடன் சேர்ந்தவர்களையும் புதைப்பதற்கான இடமும் குறித்தாகிவிட்டது. என் அப்பா, ஹுசைன், கௌஸ்கான் போன்றவர்கள் பெரியவரை அமரவைத்து பேசிக்கொண்டிருந்தார்கள்.
தனக்கு பாதுகாப்பு அளித்ததற்காக அவர் நன்றி கூறினார். எனக்குப் பின்னால் அமர்ந்திருந்த ஒரு முதிய தக்கி கேலியாக முனகினான். கயாத்தின் கழுத்தை நெரிக்கத் தேர்வு செய்யப்பட்டவர்களில் அவனும் ஒருவன் என்பது எனக்குத் தெரியும்.

அமர்ந்திருந்த அந்தக் குழு மீது வைத்த கண் விலகாமல் பார்த்துக் கொண்டிருந்தேன் நான். வயதான கயாத் உட்கார்ந்திருந்தார். அவருக்குப் பின்னால் அவருடைய அழகான பையன். அவர்களுக்குப் பின்னால் அழிவுக்காரர்கள், தங்கள் வேலைக்கான சமிக்ஞைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வயதான மனிதருக்கு மரண ஆபத்தைப் பற்றிய பிரக்ஞை இல்லை. அவரது கவனம் முழுக்க என் அப்பாவின் நயமான உரையாடலின் மீது இருந்தது. அவர் என்ன யூகித்திருப்பார்? யார் கையால் தன் மரணத்தைச் சந்திக்க இருக்கிறாரோ அவரின் கைகளுக்குள் தான் அடைக்கலம் கொண்டிருப்பதை அறிவாரா? அய்யோ இல்லை... கூடாது... பார்க்கிறேன், பார்க்கிறேன், அப்படியே நிலை குத்திப் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். ஒரே ஒரு கூப்பாடு போட்டு அவர்களைத் தப்பிப் போகச் செய்ய எத்தனை நேரம் ஆகும். ஆனால் அடுத்த நிமிடமே நானும் மரணத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது எனக்குத் தெரியாதா? நான் என்ன செய்தாலும் அது பலன் தராது. நான் அவர்கள் பக்கமிருந்து கண்களைத் திருப்பிக் கொண்டேன். இறுதியில் சூழலின் உஷ்ணத்தைத் தாங்க முடியாமல் நான் சட்டென்று எழுந்து அந்த இடத்தைவிட்டு அகன்றேன்.
என் அப்பா பின்னாடியே வந்து கேட்டார். ‘‘எங்கே போகிறாய் நீ? அங்கேதான் நீ இருந்தாக வேண்டும். இது உனக்கு முதல் நிகழ்ச்சி. அதனால் கண்டிப்பாக அதை நீ பார்த்தாக வேண்டும். எல்லாவற்றையும் துவக்கம் முதலே முழுமையாக ஒரு சுற்றுப் பார்க்க வேண்டும்.’’

நான் ‘‘உடனே திரும்பறேன்’’ என்று சொல்லிவிட்டு இரண்டு அடி எடுத்து வைத்தேன். ஆனால் முடியவில்லை, உடம்பெல்லாம் தளர்ந்து போனது.
தணிவான குரலில் அப்பா கேட்டார்: ‘‘இதயம் பலகீனமாகி விட்டதா? இதை நீண்ட நேரம் நீடிக்க விடக்கூடாது. சீக்கிரமாகவே இந்த நாடகத்திற்கு முடிவு கட்டியாகணும்.’’
நான் திரும்பிவந்து பழைய இடத்திலேயே உட்கார்ந்தேன். எனக்கு நேர் எதிர்த்தாற்போல் அழகிய விரிந்த கண்களை உடைய அந்தச் சிறுவன். அந்தப் பையனின் மான் போன்ற பெரிய கண்கள் எனக்குள்ளே ஊடுருவிப் பார்க்கின்றன. என் பார்வை அவர்கள் மீதே நிலை குத்தி நிற்கிறது. என் அப்பா, ‘‘தம்பாக் லாவ்’’ (புகையிலை கொண்டு வா) என்று கத்தினார். அதுவொரு ஜாடைச் சொல். நினைக்க முடியாத வேகத்தில் ஒரு தக்கி தன் கைக்குட்டையால் வயதான மனிதரின் கழுத்தில் சுற்றி இறுக்கினான். மற்றொருவன் அவரது மகனின் கழுத்தில் சுற்றி இறுக்கினான். உடனடியாக அவர்கள் மரண பயத்தில் போராடினார்கள். ஆனால் அவர்களிடம்  இருந்து ஒரு சத்தமும் வரவில்லை. உயிரின் இழுப்பு மட்டும் தொண்டையில் வெளிப்பட்டது. கழுத்தை நெரிப்பவர்கள் சில நொடிகள் நீடித்துக் கொண்டிருந்த மரணத்தை முடிவிற்குக் கொண்டு வந்தார்கள். உறங்கிக்கொண்டிருந்த கயாத்தின் வண்டிக்காரனையும் மற்ற பணியாட்களையும் கொன்று முடித்தார்கள் சிலர். தயாராக வெட்டி வைத்திருந்த குழியில் உடல்களைக் கொண்டு போய் கிடத்தினார்கள் சிலர்.  
‘‘வா, வந்து பார்’’ என்று சொல்லிக்கொண்டே அப்பாவும் ஹுசைனும் என் தோளைப் பற்றி இழுத்துக்கொண்டு விரைந்தார்கள். ‘‘வந்து பார், உடலை எப்படி அடக்கம் செய்கிறார்கள் என்பதைப் பார்த்துக்கொள்’’ என்று எனக்குக் காட்டினார்கள்.

உடனடியாக தவ்பானி சடங்கு தொடங்கியது. என் அப்பா வானத்தை நோக்கி உரக்கக் கூவினார்...
‘‘சக்தி மிகுந்த தேவியே... இப்போது கயாத் நாயக் தன்னிடமிருந்து ஒரு லட்சத்து அறுபதாயிரம் ரூபாயை அளித்துள்ளார்கள். எங்களுக்கு இதுபோன்ற உதவிகளைத் தொடர்ந்து செய்யுமாறு உன்னை மன்றாடுகிறோம். எமது வேண்டுதலை நிறைவேற்றிக் கொடு தாயே!’’
(வெளியீடு: சந்தியா பதிப்பகம், 77, 53வது தெரு, 9வது அவென்யூ, அசோக் நகர், சென்னை-83. பேச: 044-24896979. விலை: ரூ.550/-)