Must Watch
ஜவான் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வசூலைக் குவித்த இந்திப் படம், ‘ஜவான்’. இப்போது ‘நெட்பிளிக்ஸி’ல் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது. மும்பையிலுள்ள பெண்கள் சிறையின் ஜெயிலராக இருக்கிறார் ஆசாத். தன்னுடைய பெண்கள் குழுவுடன் சேர்ந்து மெட்ரோ ரயிலை கடத்துகிறார். பயணிகளைப் பணயக் கைதிகளாக்கி விவசாய அமைச்சரிடம் ரூ.40 ஆயிரம் கோடி கேட்கிறார் ஆசாத்.
அந்த மெட்ரோவில் பெரிய பிசினஸ்மேன் காலியின் மகளும் இருக்கிறாள். ஆசாத் கேட்ட தொகையைக் கொடுக்க சம்மதிக்கிறார் காலி. பணம் கிடைத்ததும் லட்சக்கணக்கான விவசாயிகளுக்குப் பகிர்ந்தளித்து அவர்களின் கடனை அடைக் கிறார் ஆசாத்.
காலியின் மகளிடம் தனது பெயர் விக்ரம் ரத்தோர் என்று சொல்லிவிட்டு, தனது குழுவுடன் மெட் ரோவிலிருந்து தப்பிக்கிறார் ஆசாத். உண்மையில் விக்ரம் ரத்தோர் யார்? காலி யார்? ஆசாத் யார்... போன்ற கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதில் தருகிறது திரைக்கதை. கமர்ஷியல் படத்துக்கே உரித்தான அனைத்து அம்சங்களும் உள்ள படம் இது. ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோனே என நட்சத்திரப் பட்டாளங்களால் நிரம்பியிருக்கும் இப்படத்தை இயக்கியவர் அட்லீ. கண்ணூர் ஸ்குவாட்
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, சக்கைப்போடு போட்ட மலையாளப் படம், ‘கண்ணூர் ஸ்குவாட்’. இப்பொழுது ‘ஹாட் ஸ்டாரி’ல் காணக்கிடைக்கிறது.ஏஎஸ்ஐ ஜார்ஜ் மற்றும் ஜோஸ், ஜெயன், சஃபி ஆகியோர் அடங்கிய குழுவை கேரள காவல் துறை ‘கண்ணூர் ஸ்குவாட்’ என்று அழைக்கிறது. 2015ல் கண்ணூரின் காட்டுப் பகுதியில் தூக்கில் தொங்கியபடி ஒரு பிணம் கிடைக்கிறது. தற்கொலை என்று இந்த வழக்கை முடிக்கப் பார்க்கின்றனர். ஆனால், இது கொலையாக இருக்கலாம் என்று ஜார்ஜ் சந்தேகப்படுகிறார். கண்ணூர் ஸ்குவாட் களத்தில் குதிக்கிறது. அது தற்கொலை இல்லை, கொலை என்று கண்டுபிடிக்கிறது.
அடுத்து 2017ல் காசர்கோட்டில் அப்துல் வஹாப் என்ற பிசினஸ்மேனைக் கொன்று, அவர் வீட்டை கொள்ளையடித்திருக்கிறது ஒரு கும்பல். கொள்ளையர்களைக் குறித்து எந்த தடயமும் கிடைப்பதில்லை. எஸ்பி மனுநீதி சோழன் கண்ணூர் ஸ்குவாடின் உதவியை நாடுகிறார். கண்ணூர் ஸ்குவாட் எப்படி கொள்ளையர்களைப் பிடிக்கிறது என்பதை சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறது திரைக்கதை. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து படத்தின் கதை எழுதப்பட்டிருக்கிறது. ஜார்ஜாகக் கலக்கியிருக்கிறார் மம்மூட்டி. படத்தின் இயக்குநர் ராபி வர்கீஸ் ராஜ். l
ஸ்கண்டா
அக்மார்க் தெலுங்கு மசாலா படம், ‘ஸ்கண்டா’. ‘ஹாட் ஸ்டாரி’ல் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது. ஆந்திர முதல்வரின் மகளும், தெலங்கானா முதல்வரின் மகனும் காதலிக்கின்றனர். இந்நிலையில் ஆந்திர முதல்வரின் மகளுக்கு உறவினர் ஒருவருடன் திருமணம் நடக்கவிருக்கிறது. சொத்து வெளியில் போய்விடக்கூடாது என்று உறவினருக்குத் தன் மகளைத் திருமணம் செய்து வைக்கிறார் ஆந்திர முதல்வர்.திருமணத்துக்கு விருந்தினர் போல வரும் தெலங்கானாவின் முதல்வரின் மகனுடன் சென்று விடுகிறாள் ஆந்திர முதல்வரின் மகள். திருமணம் நின்று போனதால் நிலைகுலைந்து போகிறார் ஆந்திர முதல்வர்.
‘உன்னுடைய ஏரியாவுக்குள் புகுந்து உன் மகனைக் கொன்று என் மகளை மீட்டு வருவேன்’ என்று தெலங்கானா முதல்வருக்கு சவால் விடுகிறார் ஆந்திர முதல்வர். இரு முதல்வர்களுக்கு இடையில் மோதல் ஆரம்பமாகிறது. இந்நிலையில் இடையில் புகுந்து இரு முதல்வரின் மகள்களையும் கடத்துகிறான் ஒருவன். யார் அவன்? எதற்காக அவர்களைக் கடத்தினான்... என்பதற்கு பதில் தருகிறது ஆக்ஷன் திரைக்கதை. தெலுங்கு மசாலாவை ரசிப்பவர்களுக்கு மட்டுமே உரித்தான படம் இது. படத்தை இயக்கியவர் போயபட்டி ஸ்ரீனு.
கூமர்
சமீபத்தில் விளையாட்டைப் பற்றி வெளியான படங்களில் முக்கியமானது, ‘கூமர்’. ‘ஜீ 5’ல் காணக்கிடைக்கிறது இந்த இந்திப் படம். ஊரே புகழும் கிரிக்கெட் வீராங்கனை, அனினா. பேட்டிங் செய்வதில் திறமைசாலி. லேடி தெண்டுல்கராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஒரு நாள் சர்வதேச அரங்கில் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பது அவரது கனவு.
எதிர்பாராத ஒரு விபத்தில் தனது வலது கையை இழக்கிறார் அனினா. அவரது கனவு நொறுங்கிப் போகிறது. மிகுந்த மனச்சோர்வுக்கு ஆளாகும் அனினா வீட்டைவிட்டு கூட வெளியில் வருவதில்லை. அனினாவுடைய வாழ்க்கை அவ்வளவுதான் என்ற சூழலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர் அவரைச் சந்திக்கிறார். தனது கிரிக்கெட் வாழ்க்கையில் தோல்வியடைந்து மதுவுக்கு அடிமையானவர் அவர்.
வலது கை பேட்ஸ்வுமனான அனினாவுக்கு இடது கையில் பந்து வீசும் பயிற்சியை - கூமர் என்ற ஒரு பவுலிங் முறையைச் சொல்லிக்கொடுக்கிறார். அனினா எப்படி மறுபடியும் ஒரு கிரிக்கெட் வீராங்கனையாக விஸ்வரூபம் எடுக்கிறார் என்பதே மீதிக்கதை. முன்னாள் கிரிக்கெட் வீரராக சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார் அபிஷேக் பச்சன். படத்தின் இயக்குநர் பால்கி.
தொகுப்பு: த.சக்திவேல்
|