அதென்ன 4DX ஃபார்மேட்?
ஆம். இதுகுறித்துதான் கோலிவுட், டோலிவுட், பாலிவுட்... என எல்லா ‘வுட்’களிலும் பேச்சு. காரணம், ‘பொன்னியின் செல்வன் 2’ .இந்த இரண்டாம் பாகம் IMAX ஃபார்மேட்டில் மட்டுமில்லாமல் 4DX ஃபார்மேட்டிலும் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளி வந்திருக்கின்றன.
அதென்ன 4DX ஃபார்மேட்?
4DX என்பது அதிநவீன சினிமாட்டோக்ராஃபிக் டெக்னாலஜி. இந்த தொழில்நுட்பத்தை CJ4DPLEX நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது.திரையில் பார்க்கும் காட்சிகளோடு, அதில் சுற்றுப்புறத்தில் இடம்பெறும் மழை, காற்று, தண்ணீர், பனி, புகை என அனைத்தின் நுணுக்கமான ஓசையையும் மிகத்துல்லியமாக காட்சியோடு இணைந்து கேட்கச் செய்யும் தொழில்நுட்பம்தான் 4DX.  இந்த தொழில்நுட்பத்தில் படம் பார்க்கும்போது, அமர்ந்திருக்கும் இருக்கையும் கூட காட்சிகளின் சூழலுக்கு ஏற்றவாறு மெல்லிய நகர்வை உருவாக்கும்! இதனால் படம் பார்க்கும்போது, காட்சி நடக்கும் இடத்தில் நாமும் நேரடியாகச் சென்று பார்ப்பதைப் போன்ற உணர்வை அளிக்கும்.  பொதுவாக இந்த 4DX தொழில்நுட்பம், அட்ரினலினைத் தூண்டும் ஆக்ஷன் படங்கள், மிரட்டும் ஹாரர் வகையறா படங்கள், மனதை மெல்லியதாக்கும் அனிமேஷன் படங்கள், படபடக்க வைக்கும் லைவ் - ஆக்ஷன் படங்களைப் பார்க்கும் அனுபவத்தை இன்னும் பிரமாதப்படுத்தும்.இதனால் ‘பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தை’ 4DX தொழில்நுட்பத்தில் வெளியிட டைரக்டர் மணிரத்னம் முடிவு செய்திருப்பதாகக் கூறுகிறார்கள்.

இந்தியாவில் 4DX ஸ்கிரீன்கள் எண்ணிக்கை மிகக் குறைவுதான். சூரத், அகமதாபாத், இந்தூர், நொய்டா, ஹைதராபாத், சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம், கொச்சி, குர்கிராம், புனே, மும்பை மற்றும் நியூதில்லியில் பிவிஆர் சினிமாஸில் இந்த 4DX ஸ்கிரீன்கள் இருக்கின்றன.
அதேபோல் சினிபோலிஸ் ஆறேழு நகரங்களில் 4DX ஸ்கிரீன்களை வைத்திருக்கிறது. என்றாலும் துணிந்து இந்த தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துகிறார் மணிரத்னம்.ஸோ, 4DX ஃபார்மேட்டில் வெளியாகும் முதல் தென்னிந்தியப் படம் ‘பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம்’தான்.
ஜான்சி
|