ஹீரோ+இயக்குநரான பாடலாசிரியர்!



மிஷ்கின், மகிழ்திருமேனி போன்ற இயக்குநர்களின் ஆஸ்தான பாடலாசிரியர்களில் ஒருவர் பிரியன். ‘எகிடு தகிடு...’ (சித்திரம் பேசுதடி), ‘உனக்காக வருவேன்...’ (பிச்சைக்காரன்), ‘மஸ்காரா போட்டு மயக்குறியே...’ (சலீம்), ‘வேலா வேலா...’ (வேலாயுதம்), ‘உசுமுலாரசே...’ (உத்தமபுத்திரன்), ‘செக்ஸிலேடி கிட்டவாடி...’ (நினைத்தாலே இனிக்கும்), ‘டோலே டோலே...’ (காதலில் வீழ்ந்தேன்), ‘மனசுக்குள் மழை...’ (அஞ்சாதே) உட்பட பாடலாசிரியராக ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியவர் இவர்.   

பாடலாசிரியர்களுக்கெல்லாம் பாடலாசிரியராக தன்னுடைய தமிழ் திரைக்கூடம் வழியாக பல நூறு இளம் பாடலாசிரியர்களுக்கு பாடல் எழுத பயிற்றுவித்து வரும் பிரியன் ‘அரணம்’ படத்தில் இயக்குநராகவும், ஹீரோவாகவும் களமிறங்கியுள்ளார்.‘அரணம்’ என்ன ஜானர் படம்?

ஹாரர், க்ரைம், த்ரில்லர் ஜானர். ஒரு பெரிய ஜமீன் வீடு. அந்த வீட்டில் ஒரு மரணம் நிகழ்கிறது. அந்த மரணத்துக்குப் பிறகு அந்த வீட்டில் பேய் இருப்பதாக நம்புகிறார்கள்.
அந்த வீட்டில் பிறந்தவர்தான் ஹீரோ. அவருக்கு ஒரு தம்பி. ஹீரோ திருமணமாகி சென்னையில் இருக்கிறார். கிராமத்தில் குடும்ப சொத்துகளப் பராமரித்து வந்த தாத்தாவின் மறைவுக்குப் பிறகு ஹீரோ கிராமத்துக்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

கிராமத்துக்கு வந்தபிறகு ஹீரோ, அவருடைய மனைவி இருவரும் பல பிரச்னைகளைச் சந்திக்கிறார்கள். அந்தப் பிரச்னைகளை ஹீரோ எப்படி சமாளிக்கிறார் என்பதை எளிதில் யூகிக்க முடியாத திரைக்கதையில் சொல்லியிருக்கிறேன்.
‘அரணம்’ என்றால் கவசம் என்று அர்த்தம். இன்னொரு அர்த்தம் பாதுகாப்பு நிறைந்த இடம். சாதாரண வீட்டை, மனை என்று சொல்வோம். அரசர்கள் வசிக்கும் வீட்டை அரண்மனை என்று சொல்வோம். காரணம், அந்த வீடு வீரர்கள், மதில் சுவர்களால் பாதுகாக்கப்பட்ட வீடாக இருக்கும். என்னுடைய ஹீரோ தன் வீட்டுக்கு பாதுகாப்பு கொடுக்கிறவர் என்பதால் ‘அரணம்’ என்ற டைட்டில் பொருத்தமா இருந்துச்சு.

பாட்டெழுதுவதை விட்டுவிட்டு திடீர்னு நடிகராயிட்டீங்க..?

நடிப்பு வாய்ப்பு என்பது நான் பாடல் எழுத வந்த காலகட்டத்திலிருந்தே வந்தது. கிட்டத்தட்ட 6 பட வாய்ப்புகள் வந்திருக்கும். சினிமாவுக்கு வந்து 20 வருடங்களாகிவிட்டது. இத்தனை வருடங்களில் பாடல் எழுதுவதில்தான் என்னுடைய கவனம் இருந்தது.

நான் கேட்காமலேயே எனக்கு கிடைத்த படமும் நடிப்பு. அதுல ஒரு பெரிய இயக்குநரின் படமும் அடக்கம். அப்போது நான் மறுத்துவிட்டதால் அந்த இயக்குநருக்கு என்னிடம் பேசாதளவுக்கு கோபம் இருந்தது. ஆனாலும் நடிப்பு வாய்ப்பு அடிக்கடி என்னைத் தேடி வரும்.

‘அரணம்’ படத்தைப் பொறுத்தவரை கதை எழுதியதும் ஹீரோவாக வரும் கதிர் கேரக்டருக்கு நான்தான் சரியாக இருப்பேன் என்று நலம் விரும்பிகள் சொன்னார்கள். எனக்கும் நடிக்கலாமா, வேண்டாமானு  இரண்டு மனசா இருந்துச்சு.

ஆனா, காலம் நான்தான் பண்ண வேண்டும் என்ற இடத்தில் நிறுத்தியது. அதன் பிறகும் தட்டிக்கழிக்கக் கூடாது என்று யோசித்தேன்.

ஒருவேளை என்னைத் தேடி வரும் வாய்ப்பு எனக்கான வெற்றியை ரகசியமாக வைத்திருக்கலாம். இது எளிய மனிதனின் கதை. அது எனக்கு பொருந்திப் போனதால் நடிக்கலாம்  என்ற முடிவுக்கு வந்தேன்.

படப்பிடிப்பு அனுபவம் எப்படி?

நான் எழுதிய கதை என்பதால் நான் உட்பட ஒவ்வொரு கேரக்டரும் எப்படி நடிக்க வேண்டும் என்பதில் எந்தவித பிரச்னையும் வரவில்லை. ஆனா, ஷூட்டிங் ஸ்பாட்ல சில பிரச்னைகள் இருந்தது. கூட்டத்தை சமாளிப்பது, எதிர்பாரத சிறிய விபத்துகள், காயங்கள், படக்குழுவை நிர்வகிப்பது  என சில நடைமுறை சவால்கள் இருந்தது.

அப்போதுதான் ஷூட்டிங் என்பது சாதாரண விஷயம் இல்லை என்பது புரிந்தது. சினிமாவில் நீண்ட காலம் இருந்ததால் கிடைத்த புரிந்துணர்வு மூலம் எல்லாத்தையும் சமாளிக்க முடிந்தது.புதுமுகம் வர்ஷா எனக்கு ஜோடியா வர்றார். ஏர் ஹோஸ்டஸுக்கு படித்த அவருக்கு இது முதல் படம். கதைக்கு அப்பாவி முகம் தேவைப்பட்டது. ஆடிஷன்ல கிடைச்சார். படப்பிடிப்புக்கு முன் முறையான ஒர்க் ஷாப் நடத்தினேன். அது படத்துல நடிக்கிற எல்லோருக்கும் உதவியாக இருந்துச்சு.

‘எட்டுத்திக்கும் மதயானை’, ‘ராட்டினம்’ படங்களில் ஹீரோவாக பண்ணிய லகுபரன் இன்னொரு ஹீரோவாக வர்றார். படத்துல எனக்கு தம்பி கேரக்டர். அவருக்கு ஜோடியாக கீர்த்தனா. மற்ற கலைஞர்களை படப்பிடிப்பு நடந்த புதுக்கோட்டையிலிருந்து தேர்வு செய்தேன்.

டைரக்‌ஷன் பெரிய பொறுப்பு என்று சொல்வார்கள்... எப்படி சமாளித்தீர்கள்?

டைரக்‌ஷனை முறையாக எந்த இயக்குநரிடமும் கற்றுக்கொள்ளவில்லை. இயக்குநர் மிஷ்கினிடம் ‘அஞ்சாதே’ படப்பிடிப்பு சமயத்தில் சில நாட்கள் கூடவே இருந்து அவருடைய டைரக்‌ஷனை அப்சர்வ் பண்ண முடிஞ்சது. அந்தப் படத்தில் ‘மனசுக்குள் மனசுக்குள்...’ என்ற பாடலையும் எழுதினேன். பொதுவாக நான் எழுதும் பாடல்களை படமாக்கும்போது சில சமயம் படப்பிடிப்புல கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். அந்த வகையில் என்னுடைய இயக்குநர்களுடன் பயணித்ததால் வந்த தெளிவு, சினிமா அனுபவம் டைரக்‌ஷனுக்கு கைகொடுத்தது.

அதுக்காக டைரக்‌ஷனை எப்படியாவது சமாளித்துவிடலாம் என்று சொல்லமாட்டேன். டைரக்‌ஷன் என்பது பெரிய சவால். சொல்லப்போனால் நடிப்பை விட டைரக்‌ஷன் மிகப் பெரிய சவால். 

டெக்னீஷியன்கள் விஷயத்தில் எந்த சமரசமும் பண்ணாமல் பெரிய டெக்னீஷியன்களிடம் போய்விட்டேன். ‘முரண்’, ‘சித்திரம் பேசுதடி - 2’ படங்களுக்கு இசையமைத்த சாஜன் மாதவ் மியூசிக். பாடல்கள், பின்னணி இசை இரண்டிலும் பிரமாதமான உழைப்பு கொடுத்தார்.

தமிழ் திரைக்கூடம் மாணவர்கள் முருகானந்தம், பாலா, சஹானாவுடன் நானும் ஒரு பாடல் எழுதியுள்ளேன். சிறந்த கேமராமேனுக்காக கனடா தேசத்து அவார்டு பெற்ற நித்தின் கே.ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மலையாளத்தில் ஏழெட்டு படங்கள் பண்ணியவர். இன்னொரு கேமராமேன் நெளசத், கின்னஸ் சாதனையாளர். கலை இயக்குநர் பழனிவேல். 300க்கும் மேற்பட்ட படங்களில் ஒர்க் பண்ணிய சீனியர். எடிட்டிங் பி.கே. தயாரிப்பு தமிழ் திரைக்கூடம்.

இப்போது வரும் பாடல்களின் தரம் எப்படி இருக்கிறது?

எப்போதும் பாடல்களின் தரத்தை கதைதான் தீர்மானிக்கும். இன்னொரு வகையில் சொல்வதாக இருந்தால் பாடல்களுக்கு தரம், தரமின்மை கிடையவே கிடையாது. கதைதான் முக்கியம். ஒரு கேரக்டர் ரோட்டில் குப்பை சேகரிக்கிறவர் என்றால் அதுக்கேற்ற மாதிரி வரிகள் இருக்க வேண்டும். அதே கேரக்டர் காலேஜ் புரொஃபசர் என்றால் அதுக்கேற்ற மாதிரி வரிகள் இருக்க வேண்டும். எப்போதும் பாடலின் மொழி எப்படி இருக்க வேண்டும் என்பதை கதைதான் தீர்மானிக்கிறது.

‘வறுமையின் நிறம் சிவப்பு’ பாடல்கள் பாரதியாரை பிரதிபலிக்கக் காரணம் அதன் நாயகன் பாரதியின் கொள்கையில் பயணித்ததால் அப்படி இருந்திருக்கும். ‘கே.ஜி.எப்’ ஹீரோவுக்கு வேறு மொழியில் பாடல்கள் எழுத வேண்டும்.கதாபாத்திரம் எதைக் கேட்கிறதோ அதைப் பொறுத்துதான் பாடலின் தரம் இருக்கும். எளிய மொழியில்  எழுதுவதால் அந்தப் பாடலை தரமற்றதாகவோ, நற்சுவை வார்த்தைகள் இருப்பதால் அந்தப் பாடலை தரம் வாய்ந்த பாடலாகவோ சொல்லமுடியாது. பாடல் என்பது பாடல் மட்டுமே. அது அந்த கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்க வேண்டும்.

உங்கள் மாணவர்களுக்கு பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்துள்ளதா?

30 மாணவர்கள் நேரடி படங்களுக்கு எழுதியுள்ளனர். ‘ராட்சசன்’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘நவரசா’ உட்பட ஏராளமான படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார்கள். அடுத்த தலை
முறைக்கு படைப்பாளிகளை உருவாக்குவதுதான் என்னுடைய நோக்கம். நான் சினிமாவுக்கு வந்தபோது சரணம் என்றால் என்ன, பல்லவி என்றால் என்ன என்ற நிலையில்தான் இருந்தேன். பாடல் எழுத வருகிறவர்களுக்கு தமிழ் திரைக்கூடம் சரணாலயம். நான் கற்றுக்கொண்ட மொழியை ஒரு தனி மனிதனுக்கு சொல்லும்போது அது அங்கேயே நின்றுவிடும். படைப்பாளிக்கு சொல்லும்போது பல நூறு பேருக்கு போய்ச் சேரும். அதனால்தான் பாடலாசிரியர்களை உருவாக்கும் பாடலாசிரியர் என்ற பேர் எனக்குக் கிடைத்தது.

புதியவர்களில் உங்கள் கவனத்தை ஈர்த்த பாடலாசிரியர் யார்?

ஜி.கே.பி. ‘மரகத நாணயம் படத்துல ‘நீ கவிதைகளா கனவுகளா கயல்விழியே...’, ‘நம்ம வீட்டுப் பிள்ளை’யில் ‘உன் கூடவே பொறக்கணும்...’ போன்ற பாடல்களை
எழுதியவர்.

எஸ்.ராஜா