Must Watch
 புருஷ பிரேதம்
‘சோனி லிவ்’வில் வெளியாகி அப்ளாஸை அள்ளிக்கொண்டிருக்கும் மலையாளப்படம், ‘புருஷ பிரேதம்’. தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது. நதியில் பிணம் ஒன்று மிதந்து கொண்டிருக்கும் செய்தி தீயாகப் பரவுகிறது. சப் இன்ஸ்பெக்டர் செபாஸ்டியன் தலைமையிலான காவல் படை அந்தப் பிணத்தை மீட்கிறது.
இறந்தவர் யார் என்று அடையாளம் தெரியவில்லை.இறந்தவரின் உறவினர்கள் தேடி வருவார்கள் என்று அந்தப் பிணத்தை பிணவறையில் வைத்திருக்கிறது காவல்துறை. நாட்கள் ஓடுகின்றன. இறந்தவரைத் தேடி யாரும் வரவில்லை. அனாதைப் பிணம் என்று கருதி காவல்துறையே பிணத்தை அடக்கம் செய்துவிடுகிறது.
சில நாட்கள் கழித்து சூசன் என்ற பெண், இறந்தவர் எனது கணவர் என்று காவல் நிலையத்துக்கு வருகிறாள். அவர் உன் கணவர் இல்லை என்று காவல்துறை சாக்குப் போக்கு சொல்லி சமாளிக்கிறது.
அந்தப் பெண் நீதிமன்றத்துக்குச் செல்கிறாள். பிணத்தைத் தோண்டி எடுத்து சூசனிடம் காட்டுமாறு நீதிமன்றம் உத்தரவிடுகிறது. புதைத்த இடத்தில் அந்தப் பிணம் இல்லை. சூடுபிடிக்கிறது திரைக்கதை. சீரியஸான கதையை நகைச்சுவை ததும்ப சொல்லியிருக்கின்றனர். கதாபாத்திரங்களின் தேர்வும், நடிப்பும் படத்துக்கு பலம். படத்தின் இயக்குநர் கிரிஸண்ட். சுப்பா
‘நெட்பிளிக்ஸி’ல் நேரடியாக வெளியாகி, டாப் டிரெண்டிங்கில் இடம்பிடித்திருக்கும் ஆங்கிலப்படம், ‘சுப்பா’. தமிழில் டப்பிங்கிலும் பார்க்கலாம். ஓர் அரிய வகை விலங்கு சுப்பாகாப்ரா. மருந்துத்துறையில் புரட்சி செய்யும் அளவுக்கு மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு விலங்காக கருதப்படுகிறது சுப்பா.
உண்மையில் சுப்பா என்ற ஒரு விலங்கே கிடையாது. அது ஒரு கட்டுக்கதை என்றும் சொல்கின்றனர். இந்நிலையில் மெக்சிகோவில் சுப்பாவைத் தேடி அலைகிறார் விஞ்ஞானி குயின். அவரது கண்ணில் ஒரு குட்டியும், அம்மாவும் கண்ணில் படுகிறது. அவரது குழு இரண்டு சுப்பாக்களையும் துரத்திச் செல்கிறது. இரண்டும் தப்பித்துவிடுகிறது. இச்சூழலில் மெக்சிகோவில் இருக்கும் தாத்தாவின் வீட்டுக்கு வருகிறான் சிறுவன் அலெக்ஸ். அவனுக்கு முன்பே தாத்தாவின் வீட்டுக்கு இன்னொரு பேரனும், பேத்தியும் வந்திருக்கின்றனர். தாத்தாவின் வீட்டுக்கு வந்திருக்கும் உறவினர்களான சிறுவன், சிறுமியிடம் நட்பாகிறான் அலெக்ஸ். குயினிடமிருந்து தப்பித்த குட்டி சுப்பாவை ரகசியமாக பாதுகாத்து வருகிறார் தாத்தா. இந்த ரகசியம் அலெக்ஸுக்கும் மற்ற பேரன், பேத்திக்கும் தெரியவர, குடும்பமாகச் சேர்ந்து குயினிடமிருந்து சுப்பாவை எப்படி பாதுகாக்கிறார்கள் என்பதே மீதிக்கதை. குழந்தைகளுடன் சேர்ந்து பார்க்கக்கூடிய ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஜோனாஸ் குரான்.
ரங்க மார்த்தாண்டா
புகழ்பெற்ற மராத்தியப் படம், ‘நட்சாம்ராட்’. இதன் அதிகாரபூர்வ தெலுங்கு ரீமேக்தான் ‘ரங்க மார்த்தாண்டா’. இப்போது ‘அமேசான் ப்ரைமி’ல் காணக்கிடைக்கிறது. நாற்பது வருடங்களாக நாடகத்துறையில் சிறப்பான நடிப்பைக் கொடுத்ததற்காக ரங்க மார்த்தாண்டா எனும் பட்டத்தைப் பெறுகிறார் ராகவா ராவ். தன் மனைவி, மகன், மகளுடன் நேரத்தை செலவிடுவதற்காக நடிப்பிலிருந்து ஓய்வை அறிவிக்கிறார் ராகவா. இதுவரை, தான் சேர்த்து வைத்த அனைத்து சொத்துகள் மற்றும் பணத்தையும் மகன் குடும்பத்துக்கும், திருமண வயதில் இருக்கும் மகளுக்கும் எழுதி வைக்கிறார்.
மகனும், மகளும் தன்னையும், மனைவியையும் மகிழ்ச்சியாகப் பார்த்துக்கொள்வார்கள் என்பது ராகவாவின் எண்ணம். ஆனால், நடப்பதோ வேறு. பழமை வாய்ந்த வீட்டை இடித்து அபார்ட்மெண்ட் கட்டலாம் என மகனின் குடும்பம் திட்டம் தீட்டுகிறது. சோஃபாவில் இருந்த பணம் காணவில்லை என்பதால் அப்பாவின் மீது திருட்டுப் பழியை சுமத்துகிறாள் மகள். மகனும் வேண்டாம்; மகளும் வேண்டாம் என்று வீட்டைவிட்டு வெளியேறும் ராகவா ராவும், மனைவியும் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே மீதிக்கதை. கிருஷ்ண வம்சி இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
மிஸஸ் அண்டர்கவர்
கடந்த வாரம் ‘ஜீ5’ல் நேரடியாக வெளியாகி, பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்கும் இந்திப்படம், ‘மிஸஸ் அண்டர்கவர்’. முற்போக்கு சிந்தனை கொண்ட பெண்கள் வரிசையாக கொல்லப்படுகின்றனர். கொலை செய்வதற்கு முன்பு ஒரு வீடியோவை அந்த கொலைகாரன் வெளியிடுகிறான். இதைத் தவிர்த்து கொலைகாரனைப் பற்றிய ஒரு சிறு தடயம் கூட காவல்துறைக்கோ, உளவுத்துறைக்கோ கிடைப்பதில்லை.
கொலைகாரனைத் தேடிப்போகும் அண்டர்கவர் ஏஜெண்ட்டுகளும் கொல்லப்படுகின்றனர். கொலையாளியைப் பிடிப்பதற்கான ஏஜெண்ட் பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்நிலையில் உளவுத்துறை அதிகாரியான ரங்கீலாவுக்கு அண்டர்கவர் ஏஜெண்ட் துர்காவைப் பற்றி தெரியவருகிறது. துர்காவைத் தேடிப்போனால் ரங்கீலாவுக்கு ஆச்சர்யம். ஆம்; கணவன், குழந்தை, மாமனார், மருமகள் என ஒரு குடும்பப் பெண்ணாக மாறியிருக்கிறாள் துர்கா. அவளால் வீட்டைவிட்டு வெளியே வந்து டிடெக்டிவ் வேலையெல்லாம் பார்க்க முடியாத நிலை.
இருந்தாலும் துர்காவைத் தன் வழிக்குக் கொண்டு வருகிறார் ரங்கீலா. குடும்பப் பெண், அண்டர்கவர் ஏஜெண்ட் என இரட்டை வாழ்க்கையை துர்கா எப்படி வெற்றிகரமாக எதிர்கொள்கிறாள் என்பதே திரைக்கதை. ஒரு துப்பறியும் கதையை காமெடியாக சொல்லியிருப்பது சிறப்பு. படத்தின் இயக்குநர் அனுஸ்ரீ மேக்தா.
தொகுப்பு: த.சக்திவேல்
|