குழந்தை விஜய் நடத்தும் ஐஸ் க்ரீம் ட்ரக்!
‘ஃப்ரெண்ட்ஸ்’ திரைப்படத்தில் விஜய்யின் சின்ன வயது கேரக்டரில் வந்து அசத்தியிருப்பார் பரத் ஜெயந்த். அதற்கு முன்பே 90ஸ் கிட்ஸ்களுக்கு நன்கு பரிச்சயமான முகம் பரத். சன் டிவியில் ஒளிபரப்பான ‘ஜீபூம்பா’ குழந்தைகள் தொடர் முதல் ஏராளமான சீரியல்களில் நடித்திருக்கிறார்.
 ‘ஃப்ரெண்ட்ஸ்’ திரைப்படத்திற்குப் பிறகு சில படங்கள், சீரியல்கள் என டீன் ஏஜ் பருவம் வரை பிரபலமாக இருந்தவர் சட்டென காணாமல் போனார். இதோ மீண்டும் ‘த டிக்கிள் ட்ரக்’ என்னும் ஐஸ்கிரீம் ட்ரக் மூலம் எங்கும் எதிலும் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறார்.  ‘‘+2 வரைக்குமே நான் நடிச்சிட்டுதான் இருந்தேன். அதுக்குப் பிறகு ஒரு கேப் தேவைப்பட்டுச்சு. பொதுவாகவே சின்ன வயதில் இருந்து ஒரு துறையில் ஆக்டிவா இருக்கறவங்க எடுத்துக் கொள்ளும் கேப்தான் இது.அப்படித்தான் நானும் காலேஜ் லைஃப், பிசினஸ்னு ஒரு கேப் எடுத்துக்கிட்டேன். மறுபடியும் சினிமாத் துறைக்குத் திரும்பி வரணும்னு எனக்கு ஐடியாவே வரலை. பி.எஸ்சி விஸ்காம் முடிச்சிட்டு ஒரு விளம்பரக் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தேன்.
 ரொம்பச் சின்ன வயதிலேயே அப்பா இறந்துட்டார். என்னை முழுக்க முழுக்க படிக்க வச்சு ஆளாக்கினது அம்மாதான்...’’ சற்றே நிறுத்தி ஆசுவாசப்படுத்திக்கொண்டு தொடர்ந்தார் பரத். ‘‘அப்பா சீனிவாசன் ரொம்ப சின்ன வயதிலேயே இறந்துட்டார். அம்மா நிகிலா பி.எஃப் அலுவலகத்தில் வேலை செய்திட்டு இருந்தாங்க. அவங்களும் சில வருடங்களுக்கு முன்னாடி இறந்துட்டாங்க. அதன் பிறகு என் வாழ்க்கைப் பயணம் முழுக்க முழுக்க தனியாதான் போய்க்கிட்டு இருக்கு.

எனக்கு மிகப்பெரிய பலம்னா என்னுடைய நண்பர்கள்தான். நான் விளம்பரக் கம்பெனியில் சேரும்பொழுது என்கூட நண்பர்களானவங்கதான் இப்பவும் என் கூட பயணம் செய்துட்டு இருக்காங்க. அம்மா இறந்து ஏழு வருஷம் ஆகிடுச்சு.
அதிலிருந்து வெளியே வரும்பொழுது எனக்கு கை கொடுத்தது என்னுடைய வேலையும் என்னுடைய நண்பர்களும்தான்...’’ என்னும் பரத் ஜெயந்த் மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு ஐஸ்கிரீம் ட்ரக் கொண்டு வரலாமே என முடிவெடுத்திருக்கிறார். ‘‘ரொம்ப சின்ன வயசுல இருந்து இந்த ஆசை உண்டு. ஐஸ்கிரீம் பிடிக்காத குழந்தைகள் யார் இருப்பாங்க..? ஆனா, எனக்கு இன்னும் ஒரு படி மேலே போய் நானே சொந்தமா ஐஸ்கிரீம் கடை வச்சிருந்தா எனக்குத் தேவையான ஐஸ்கிரீமை நானே எடுத்து அள்ளி சாப்பிட்டுக்கலாமே... எவ்ளோ ஐஸ்கிரீம் வேணுமானாலும் கிடைக்குமேனு நினைச்சேன்.
அந்த ஐஸ்கிரீமை யார் செய்வாங்க என்பதெல்லாம் தெரியாது. என் கடை, நான் சாப்பிடுவேன் அப்படிங்கற சிறுவயது கற்பனைதான் இன்னைக்கு பிசினஸா மாறியிருக்கு. நம்ம இந்தியாவைப் பொறுத்தவரை ஐஸ்கிரீம் கடைகள், பார்லர்கள் எல்லாமே எங்க பார்த்தாலும் இருக்கு. ஏன், ஐஸ்க்ரீம் பிராண்ட்கள் கூட உண்டு. ஆனா, ஐஸ்கிரீம் ட்ரக் அல்லது ஐஸ்கிரீம் வேன்... இதெல்லாம் இங்க நான் இதுவரையிலும் பார்த்ததே கிடையாது.
இந்த பிசினஸை ஆரம்பிக்கிறதுக்கு ஒரு மாதம் முன்பு வரை கூட சென்னை முழுக்க தேடிப் பார்த்தேன். எங்கயும் ஐஸ்கிரீம் ட்ரக் என் கண்ணில் படவே இல்ல. ஆனா இருபது முப்பது வருடங்களுக்கு முன்பே டாம் & ஜெர்ரி கார்ட்டூன் தொடங்கி நாம பார்த்து வளர்ந்த அத்தனை கார்ட்டூன்களிலும், ஹாலிவுட் படங்களிலும் ஐஸ்கிரீம் வேன் ரொம்ப பிரபலம்.
இவ்வளவு பிரபலமான ஐஸ்கிரீம் வேன் ஏன் இந்தியாவில் இல்லைனு எனக்குள்ள ஒரு கேள்வி. சரி, அதற்கான ஆரம்பமா நாமே ஏன் இருக்கக் கூடாதுன்னு தோணுச்சு. ‘த டிக்கிள் டிரக்’ (The Tickle Truck) என்னும் ஐஸ்கிரீம் ட்ரக் பிசினஸை உருவாக்கி அதை ஒரு பிராண்டாகவே மாற்ற நினைச்சேன்.
ஐஸ்க்ரீமைப் பொறுத்தவரை பிரதானமான கஸ்டமர்கள் குழந்தைகள்தான். குழந்தைகளுக்காக செய்கிற பிசினஸ் என்கிறதால அதுல பிசினஸ் மைண்ட் இருக்கவே கூடாதுன்னு முடிவு செய்துட்டேன். எங்ககிட்ட கிடைக்கும் ஐஸ்கிரீம், மத்த இடங்களைக் காட்டிலும் கொஞ்சம் விலை அதிகமாதான் இருக்கும். ஆனாலும் குழந்தைகள் சாப்பிட்டால் அவங்க உடல்நிலை கெடாத அளவுக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ செய்துட்டு இருக்கறோம்.
பழங்கள் அடிப்படையிலான ஐஸ்கிரீமுக்கு உண்மையான பழங்களை மட்டும்தான் பயன்படுத்தறோம். எதுவுமே ஃபுட் கலர் அல்லது எசென்ஸ் கிடையாது. கோடை காலத்துல மோர், ஜிகர்தண்டா, இளநீர், ரோஸ்மில்க்... இந்த மாதிரியான பானங்களையும் கூட நான் ஐஸ்கிரீமாக மாற்றிக் கொடுக்கணும்னு நினைச்சேன். அந்த ஃபிளேவர்களும் உண்மையான மோர், ஜிகர்தண்டா கொண்டுதான் ஐஸ்க்ரீம்களா உருவாக்கறோம்.
அதாவது ஐஸ்கிரீம் வேற, ஃபிரோஸன் டெஸர்ட்கள் வேற. எங்களுடையது ஃபிரோஸன் டெஸர்ட்கள். வழக்கமான ஐஸ்கிரீம்களா இல்லாம இருக்கும்...’’ என்ற பரத், ஐஸ்கிரீம் என்பது சீசன் பிசினஸ்தான் என்பதை ஒப்புக் கொள்கிறார். ‘‘அதனால்தான் நல்ல தண்ணீரும் எந்த கெமிக்கலும் இல்லாத ஐஸ்கிரீம்கள்னு முடிவு செய்தோம். கொட்டுகிற மழையிலும் இந்த ஐஸ்கிரீம் சாப்பிடும் பொழுது எந்த பிரச்னையும் வரக்கூடாதுன்னு நினைக்கறோம்.
பிஸினஸ் மைண்ட்ல நிறைய ஃபிரான்ச்சைஸ் கேட்டு வராங்க. யாருக்கும் இந்த பிராண்டை நாங்க பிஸினஸா மாத்திக் கொடுக்க விரும்பலை. ஆரோக்கியமா நாங்க செய்கிறதை அப்படியே செய்ய முன்வந்தா எங்க கூட பிஸினஸ் பார்ட்னர் ஆகலாம். இப்ப சென்னை பெசன்ட் நகர், அடுத்து ஹைதராபாத் நண்பர் ஒருத்தர் இந்த ட்ரக் கான்செப்ட்டில் ஆர்வமாகி எங்களுடைய ஸ்டைலிலேயே தொடங்க முன்வந்தார். அங்க ‘த டிக்கிள் ட்ரக்’ ஆரம்பிச்சிருக்கோம். சென்னையிலும் அண்ணா நகர் உள்ளிட்ட சில இடங்கள்ல பேசிட்டு இருக்கோம்.
‘த டிக்கிள் ட்ரக்’கைப் பொறுத்தவரை ஐஸ்கிரீம்தான் பிரதானம். இதிலே இருந்து வேறு பெயர்கள்ல கிளைகள் உருவாக்கி மத்த உணவுகள் சார்ந்த பிஸினஸ்கள் தொடங்கும் பிளான் இருக்கு.
நாங்க மூணு பேர் நண்பர்கள்; நாங்கதான் பார்ட்னர்ஸ். ஜஸ்வின் பிரபு, சண்முகப் பாண்டியன், நான். இந்த ட்ரக் டிசைன், லோகோக்கள் எல்லாம் டிசைன் செய்தது கூட என்னுடைய முந்தைய விளம்பர ஏஜென்சி டீம்தான்...’’ புன்னகைக்கிறார் பரத் ஜெயந்த்.
செய்தி: ஷாலினி நியூட்டன்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
|