இயக்குநர் என்ன நினைக்கிறாரோ அதை சிறப்பா கொடுக்கணும்...



ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் Open Talk

சமீபத்தில் அத்தனை பேரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி கொண்டாட வைத்திருக்கிறது ‘விடுதலை பாகம்1’. ஜெயமோகனின் கதை, வெற்றிமாறனின் திரைக்கதை - இயக்கம், இளையராஜாவின் இசை, கலைஞர்களின் நடிப்பு என எதார்த்த சினிமாவின் அடையாளமாக தமிழ் சினிமாவை இன்னொரு களத்திற்கு உயர்த்தியிருக்கிறது. இதில் இன்னும் சிறப்பாக கொண்டாடப்படுவது படத்தின் விஷுவல்.

காடும், மலையும், பறவைகளின் சிறகுகளும், அரிக்கன் விளக்கும், குளிரும் பனியும், குட்டிக் குட்டி ஓடைகளும், மலைமேலே நிற்கும் சிறிய ஓட்டு வீடுகளும், குடிசைகளும், காட்டு மல்லிப் பூக்களும், செக் போஸ்ட் அதிகாரிகளும், அந்த அழகுக்கு இடையிலே கேட்கும் மரண ஓலங்களும், அதிகாரங்களும் என நம்மை நீண்ட அமைதியாக்கி, அதே அமைதியை மிக அற்புதமாகக் குலைக்கவும் செய்திருக்கிறது வேல்ராஜின் ஒளிப்பதிவு.

அதிலும் சிங்கிள் ஷாட்டாக நகர்ந்து நம் மனதை உறைய வைக்கும் முதல் காட்சியான இரயில் விபத்து நிச்சயம் படம் பார்த்து இரண்டொரு நாட்கள் வரையிலும் கூட நம் மனதை உலுக்கும்.

பல கேள்விகள், சந்தேகங்களுடன் அமர்ந்தால் அதே வெள்ளந்திப் புன்னகை மின்ன ‘‘வாங்க... எப்படியிருக்கீங்க...’ என்கிறார் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ்.
‘‘ஒருசில காட்சிகள் நாங்க கேமராவினுடைய ஆக்ஸசரிஸ் எல்லாம் மேலே, கீழே, ஸ்டேண்ட், கிம்பல் எல்லாம் இல்லாமல் கூட பயணிக்க வேண்டியிருந்தது. முக்கியமா அந்த இரயில் காட்சிகள்ல பெட்டிகளுக்கிடையே... இன்னும் படத்தில் நாங்க ஐபோன் கொண்டு கூட சில காட்சிகளை படமாக்கினோம்...’’ புன்னகையுடன் ‘விடுதலை’ படத்தின் நினைவுகளில் இருந்து இன்னும் வெளியே வராதவராக பேசத் தொடங்கினார் ஆர்.வேல்ராஜ் (எ) ராஜாமணி வேல்ராஜ்.

யார் இந்த ராஜாமணி வேல்ராஜ்..?

ஏழை விவசாயக் குடும்பம். மதுரை, கூத்தியார் குண்டுதான் சொந்த ஊர். பி.கே.என் ஹையர் செகண்டரி ஸ்கூலில் பள்ளிப் படிப்பு, சௌராஷ்டிரா கல்லூரியிலே பி.எஸ்சி கெமிஸ்ட்ரி முடிச்சேன். பொதுவாகவே எங்க குடும்பத்திலே ‘நீ படிச்சு வேலைக்குப் போனாதான் வீட்டுச் சூழல் மாறும்’ங்கற சூழல் இல்லை. காரணம் எங்கப்பா என் விருப்பு, வெறுப்புகள்ல தலையிடாதது. குடும்பப் பொறுப்பை எங்கப்பா என் தலையில ஏத்தி வைக்கவே இல்ல.

சின்ன வயதிலே இருந்தே சினிமா ஆர்வம் அதிகம். காமராஜர் யுனிவர்சிட்டியிலே போட்டோகிராபி கோர்ஸ் ஒரு மூணு மாசம் படிச்சேன். அங்கதான் கேமரா எனக்குப் பழக்கமாச்சு.
முதல் சினிமா அறிமுகம் எங்கே, எப்படி நடந்தது? என்னுடைய நண்பர் சீனிவாசன் மூலமா ஒளிப்பதிவாளர் திரு சார்கிட்ட அசிஸ்டெண்டா சேர்ந்தேன். முதல் படம் 1993ல் ‘மகளிர் மட்டும்’. அவர் கூடவே ஒரு அஞ்சாறு வருடங்கள் அசிஸ்டெண்ட்டா பயணிச்சேன். அவரே ஒரு சில படங்களுக்கு என்னை ரெகமெண்ட் செய்யத் தொடங்கினார்.

அப்படித்தான் முதல் படமா ‘பரட்டை என்கிற அழகுசுந்தரம்’ அமைஞ்சது. தனுஷ் சார் சந்திப்பும், நட்பும் கிடைச்சது. அவர்தான் என்னை வெற்றிமாறன் சாருக்கும் அறிமுகப்
படுத்தினார். இதனாலயே அடுத்த படமா ‘பொல்லாதவன்’ சாத்தியமாச்சு.

தனுஷ், வெற்றி மாறன், வேல்ராஜ்... இந்த மேஜிக் பற்றி சொல்லுங்க..?

என்னவோ தெரியல... தனுஷ் சாருக்கு முதல் சந்திப்பிலேயே ஏதோ ஒண்ணு என்கிட்ட அவருக்கு பிடிச்சிருக்கு. அவர் மூலமா வெற்றிமாறன் சார் எனக்கு நட்பானார். இப்ப வரைக்கும் தனுஷ் சார் ஒரு விஷயம் ஆரம்பிச்சாலும் சரி வெற்றிமாறன் சார் ஒரு விஷயம் ஆரம்பிச்சாலும் சரி என்னையும் கூடவே சேர்த்து கூட்டிக்கிட்டு போறாங்க.

தனுஷ் சார் இப்ப வரைக்கும் எனக்கு ஒரு ஆச்சரியமாதான் தெரிகிறார். அவர் பாடல் எழுதும் போது கூட நான் ரொம்ப ரசிச்சுப் பார்த்ததுண்டு. எப்படி இப்படி வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்தறார், எங்கே இருந்து இவருக்கு இந்த வார்த்தைகள் கிடைக்குது... இப்படி எல்லாம் சிந்திச்சிருக்கேன். அவருக்கு எல்லா விஷயமுமே தெரியும். ஆனா, அந்த பந்தாவோ அல்லது அந்த ஆதிக்கமோ எங்கேயும் தெரியாது.

‘என்னுடைய கதையையும், என் சிந்தனையையும் எங்கேயுமே வேல்ராஜ் இடையூறு செய்யவே மாட்டார்’னு வெற்றிமாறன் சார் ஒருசில இடங்களில் சொல்லி இருக்கார். ஒருவேளை இதுதான் நானும் அவரும் சேர்ந்து பயணிக்க முக்கியமா காரணமா இருக்கலாம். என்னைப் பொறுத்தவரைக்கும் இயக்குநர் என்ன நினைக்கிறாரோ அதை சிறப்பாகக் கொடுக்கணும்... அவர் என்ன நினைக்கிறாரோ அதைக் கொடுக்கணும்.  

இயக்குநர் - ஒளிப்பதிவாளர் கெமிஸ்ட்ரி எவ்வளவு முக்கியம்?  

ஒரு கதை எழுதி கதைக்களம் எங்கே ஆரம்பிக்கிதோ, அங்கே இருந்து இயக்குநர் + ஒளிப்பதிவாளரின் பயணம் ஆரம்பிச்சிடுது. லொகேஷன் முதற்கொண்டு ரெண்டு பேரும் சேர்ந்துதான் போய் பார்ப்போம். இயக்குநர் எடுத்து வைக்கிற அத்தனை நடவடிக்கைகளிலும் ஒளிப்பதிவாளர் பங்கு இருக்கணும். அப்பதான் இயக்குநர் என்ன நினைக்கிறாரோ அதை முழுமையா காட்சிகள்ல கொடுக்க முடியும்.

‘விடுதலை’ பயணம் எப்படி இருந்தது?

மாபெரும் வெற்றி பெற்ற ஒரு படத்தில் என்னுடைய பங்கு இருக்குனு நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. அதற்கு முழுக்க முழுக்க வெற்றிமாறன் சார்தான் காரணம்.  
‘விடுதலை’ படத்தில் ரயில் விபத்து காட்சிக்குப் பின்னால் இருக்கும் உழைப்பைப் பற்றி சொல்லுங்க?

கேமராவை தூக்கிக் கொண்டு ரயில் பெட்டிகளுக்குள்ளே பயணிக்கும்போது சின்னதா இடிச்சாகூட அந்த ஷாட் ரிப்பீட் ஆகும். ஒவ்வொரு முறையும் தவறு செய்துதான் அந்தக் காட்சியை முழுமையாக்கினோம். இப்பவும் அந்தக் காட்சிகள்ல ஒருசில தவறுகள் எங்களால் சொல்ல முடியும். மொத்தம் 25 அசிஸ்டெண்ட் டைரக்டர்கள், அந்தக் காட்சியில் குழந்தைகள் முதற்கொண்டு இருப்பதாலும் அது சாதாரண சந்தோஷமான நிகழ்வோ அல்லது கடந்து போகிற காட்சியோ கிடையாது என்பதாலும் ரொம்பவே மெனக்கெடணும்.

இதுக்காக கேமராவின் ஆக்சஸரீஸ், லென்ஸ், கிம்பல்னு எல்லாத்தையுமே சுருக்கினோம். அந்தக் காட்சிக்கு மட்டும் எட்டு நாட்கள் ரிஹர்சல் எடுத்தோம். அந்தக் காட்சியை மட்டுமே ஒரு மாசம் படமாக்கினோம்.

ஒரு சில இடங்களில் குறிப்பிட்ட ஆர்ட்டிஸ்ட்டால் வரமுடியாது; திடீர்ன்னு மழை பெய்ய ஆரம்பிக்கும்; திரும்பவும் அந்த இடம் காய்ந்த பிறகுதான் கேமரா வைக்க முடியும். ‘ஸ்ட்ரெச்சரைத் தூக்கிட்டு ஓடு’னு வெறுமனே சொல்ல முடியாது. விபத்துக்கான பரபரப்ப அந்த குறிப்பிட்ட ஆர்ட்டிஸ்ட் நடிச்சாகணும். ஒரு குழந்தை வலில கத்தணும்.

இப்படி ஒவ்வொரு காட்சியிலும் அத்தனை பேரும் நடிக்கணும். நிறைய பிராக்டிக்கலான சவால்களைச் சந்தித்தோம். காலநிலை மாற்றங்கள் காரணமாகவே நிறைய நாட்கள் காத்திருந்தோம்.

இதே மாதிரியான ஒரு காட்சிதான் ‘எங்கேயும் எப்போதும்’ படத்திலும் நடந்தது. ரெண்டு பஸ்களை மோதவிட்டு எடுத்திருப்போம். ஆளே இல்லாம முதல்ல கேஸ் வைத்து இரண்டு பஸ்களை மோத விடணும், ஆசியாவிலேயே முதன்முறையா ஒரு சினிமாவுக்காக ரெண்டு பஸ்ஸ உண்மையாவே மோத வெச்சது அந்தப் படம்தான்.

அதன் பிறகு அதில் அடிபட்டவர்கள் உட்பட ஆக்சிடெண்ட் காட்சியை சித்தரிக்கணும். அதுவும் கிட்டத்தட்ட இதே மாதிரியான ஒரு விபத்துக் காட்சிதான். ஆனா, ‘விடுதலை’ல சிங்கிள் ஷாட் ரொம்ப சவாலா இருந்துச்சு. வெற்றிமாறன் அப்படித்தான் கன்ஸ்யூம் செய்திருந்தார். அதை விஷுவலாக்க வேண்டியது ஒளிப்பதிவாளரின் கடமை இல்லையா? இப்ப அந்தக் காட்சியை மக்கள் அவ்வளவு பாராட்டறாங்க. இதுதான் நாங்க பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் கிடைத்த பரிசு.

ஒரு படத்துக்கு சூழலியல் விபரங்கள் எவ்வளவு முக்கியம்?  

‘பொல்லாதவன்’ ஒரு கமர்சியல் ஆக்‌ஷன் ஃபிலிம்தான். ஆனாலும் அந்த பைக் தொலைந்த மொமெண்ட்ல இருந்து கதை வேறு ஒரு களத்துக்கு பயணிக்க ஆரம்பிச்சுடும். ஒரு பைக் தொலைந்து போனால் இப்படி எல்லாம் ஆகுமானு நிறைய மக்களுக்கு ஒரு கண் திறப்பா கூட அந்தக் காட்சிகள் இருந்திருக்கும். அந்த எதார்த்தத்தை ஜியாகிர
ஃபிக்கல் விபரங்கள் மூலமாகத்தான் காட்ட முடியும்.

‘விடுதலை’ல நிறைய காட்சிகள்ல மலை ஏறிப்போய் படமாக்கணும். சில இடங்களில் கனமான பொருட்களைத் தூக்கிட்டுப் போக முடியாது. அதே சமயம் ஒரு கேமராவைத் தூக்கிட்டு கிராஸ் செய்தா கூட குறுக்கே செடியோ அல்லது மரமோ தடையாக வந்து நிற்கும். இதனாலயே சில காட்சிகளை ஐபோன்களில் படமாக்கினோம். ஆர்ட்டிஸ்ட் முதற்கொண்டு தர்மாகோல் தூக்கிட்டு வரணும்; கேமரா ஸ்டாண்ட் எடுத்துட்டு வரணும். இப்படி ஒவ்வொருத்தரும் உழைச்சாங்க.

இது கூட பரவாயில்லை. ஒரு சில சமயங்களில் ஒரு குழு முன்னாடி போய்விடும், இன்னொரு குழு பின்னாடி தொடர்ந்து வந்துகிட்டே இருக்கும். வாக்கி டாக்கி ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கு மேல கேட்காது. இதனால வழி மாறி தொலைஞ்சு போய் திரும்பி வந்த மக்கள் கூட இருக்காங்க. காணாம போயிட்டா திரும்ப எங்கள கண்டுபிடிக்கிற வரைக்கும் அவங்களுக்கு சாப்பாடு கூட கிடைக்காது.

எங்கேயிருந்து என்ன மாதிரியான விஷப் பூச்சிகள் வரும், பாம்புகள் வரும்னு சொல்ல முடியாது அதிலும் நாங்க இருந்த இடத்துல மர அட்டைகளும், வெள்ளை நாகமும் நிறையவே இருந்துச்சு. கடவுள் புண்ணியத்துல யாருக்கும் எதுவும் ஆகாம இந்த ப்ராஜெக்ட் முடிச்சதே பெரிய விஷயம்.  

அடுத்த தலைமுறைக்கு நீங்க என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

சினிமாவுக்கு வரணும்னு ஒருத்தன் அவ்வளவு ஈஸியா முடிவெடுக்க மாட்டான். சினிமாவைக் காதலிக்கிறவன் மட்டும்தான் இந்தத் துறையை தேர்வு செய்வான். அதனால அவனுக்கு அவ்வளவு அட்வைஸ் தேவைப்படாது.

இன்னைக்கு இளைஞர்கள் ரொம்ப திறமையா இருக்காங்க. ஒரேயொரு விஷயம் மட்டும் சொல்ல விரும்பறேன். எந்தத் துறையை தேர்வு செய்தாலும் சின்சியரா வேலை பாருங்க; கடின  உழைப்பைக் கொடுங்க. அந்த உழைப்பு நீங்க நினைச்சுப் பார்க்க முடியாத இடத்துக்கு உங்களைக் கூட்டிட்டுப் போகும். சுத்தி இருக்கிறவங்களையும், வேலையையும் எப்பவும் மதிச்சு மரியாதை கொடுங்க. கண்டிப்பா வெற்றி நிச்சயம்.

செய்தி: ஷாலினி நியூட்டன்

படங்கள்: தமிழ்வாணன்