பாஜக Vs மஹுவா மொய்த்ரா!
மஹுவா மொய்த்ரா மக்களவை எம்.பி. அவர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்காரர். மேற்குவங்க மாநிலம் கிருஷ்ணாநகர் தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். துறுதுறுப்பானவர். மக்களவையில் எப்போதும் பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசை கிடுக்கிப்பிடி போட்டு கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பார்... இதுதான் மஹுவா மொய்த்ரா.
இப்படிப்பட்டவர் இப்போது ஒரு இடியாப்பச் சிக்கலில் விழுந்திருக்கிறார். அவரது எம்.பி. பதவி பறிபோகும் அபாயமிருப்பதாக சொல்கிறார்கள். தர்ஷன் ஹீரா நந்தானி என்று ஒரு ரியல் எஸ்டேட் அதிபர். இவரது நண்பராக இருந்தவர்தான் மஹுவா மொய்த்ரா.மொய்த்ரா மும்பைக்குப் போனால், அவரைத் தேடி ஹீரா நந்தானியின் கார் வந்து விடும். அந்த காரில்தான் மும்பை விமானநிலையத்தை விட்டு மொய்த்ரா வெளியே செல்வார்.இந்நிலையில், பாஜக எம்.பி.யான ரிஷிகாந்த் துபே என்பவர் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு அனுப்பிய ஒரு கடிதம்தான் பிரச்னைக்குப் பிள்ளையார் சுழி.
‘அன்புள்ள ஐயா, தர்ஷன் ஹீரா நந்தானி என்ற ரியல் எஸ்டேட் அதிபர், மக்களவையில் கவுதம் அம்பானியைப் பற்றி கேள்வி எழுப்பச் சொல்லி மஹுவா மொய்த்ரா எம்.பி.க்கு 2 கோடி ரூபாய் பணம் கொடுத்திருக்கிறார். உச்சநீதிமன்ற வழக்கறிஞரான ஜெய் ஆனந்த் தேஹத்ராய் இந்த தகவலை எனக்குத் தெரிவித்து அதற்கான ஆதாரங்களை என்னிடம் தந்திருக்கிறார். இது தொடர்பாக நடவடிக்கை எடுங்கள்’ என்பதுதான் அந்த கடிதத்தின் சாராம்சம்.
உடனே, பாஜக எம்.பி.யான விநோத் குமார் சோன்கர் தலைமையிலான மக்களவை நெறிமுறைக் குழு இந்தப் புகாரை விசாரிக்க மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா உத்தரவிட்டார். நெறிமுறைக் குழு, முதல்வேலையாக ரிஷிகாந்த் துபே, உச்சநீதிமன்ற வழக்கறிஞரான ஜெய் ஆனந்த் தேஹத்ராய் ஆகியோருக்கு அழைப்பாணை அனுப்பியது. இருவரும் ஆஜரானார்கள். மொய்த்ரா மீது குற்றச்சாட்டுகளைக் குவித்தார்கள். இவர்களில் ஜெய் ஆனந்த் தேஹத்ராய், மொய்த்ராவின் முன்னாள் காதலர் என்பது தனிச்செய்தி.
இதற்கு நடுவே, ரியல் எஸ்டேட் அதிபர் தர்ஷன் ஹீரா நந்தானியை மிரட்டி அவரிடம் கடிதம் மூலம் மக்களவை நெறிமுறைக் குழு வாக்குமூலம் வாங்கியதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. அந்தக் கடிதத்தில், ‘பிரதமர் மோடி மீது மக்களவையில் குற்றச்சாட்டுகளை சுமத்த காரணங்கள் கிடைக்காததால், எதிர்க்கட்சிகள், தொழிலதிபர் கவுதம் அதானியைக் குறி வைக்கத் திட்டமிட்டுள்ளன’ என்று நந்தானி கூறியிருந்தாராம்.
இந்த பரபரப்பு ஒருபக்கம் இருக்க, நாளிதழ் ஒன்றுக்கு மொய்த்ரா பேட்டி அளித்தார். அதில், ‘நானும், தர்ஷன் ஹீரா நந்தானியும் நண்பர்கள். என் பிறந்தநாளின்போது அவர், ஸ்கார்ஃப், பாபி பிரவுன் மேக்கப் செட், மேக் ஐ சேடோ, லிப்ஸ்டிக் எல்லாவற்றையும் துபாயில் இருந்து வாங்கி வந்து தந்தார்.எனக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களா பாழடைந்த நிலையில் இருந்தது.
தர்ஷன் ஹீரா நந்தானியிடம் சொல்லி ஒரு வடிவமைப்பாளரை வரவழைத்து பங்களாவைச் சீர்படுத்தினேன். நாடாளுமன்ற இணையதளத்தைப் பார்ப்பதற்கான கடவுச்சொல்லை நான் தர்ஷன் ஹீரா நந்தானிக்குத் தெரியப்படுத்தியது உண்மைதான். மற்றபடி நான் அவரிடம் பணம் எதுவும் வாங்கவில்லை. நான் 2008ல் அரசியலுக்கு வருவதற்கு முன்னால் முதலீட்டு வங்கியாளராக இருந்தேன். ரூ.2 கோடிக்கும் அதிகமாக சம்பாதித்தேன். அப்படியிருக்கும்போது மக்களவையில் கேள்வி கேட்க நந்தானியிடம் நான் 2 கோடி ரூபாய் பணம் வாங்கினேன் என்பது நகைச்சுவையான ஒன்று...’ என அந்த நேர்காணலில் மொய்த்ரா கூறியிருந்தார்.
இந்நிலையில் எம்.பி. மொய்த்ரா நேரில் வந்து ஆஜராகும்படி, மக்களவை நெறி முறைக் குழு, அழைப்பாணை அனுப்பியது. மொய்த்ராவும் ஆஜரானார். அவரை நோக்கி சரமாரியாகக் கேள்விக்கணைகள் பறந்தன. மொய்த்ரா எங்கெங்கே சென்றார்? எங்கெங்கே தங்கினார்?’ என்பது மாதிரியான கேள்விகள் கேட்கப்பட்டன. மொய்த்ராவின் மொபைல் போனில் உள்ள பதிவுகளையும் நெறிமுறைக் குழு கேட்டது.
‘தனிப்பட்ட முறையில் இப்படி எல்லாமா கேள்வி கேட்பது?’ என்று குழுவில் அங்கம் வகித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்புத் தெரிவிக்க, மொய்த்ரா, விசாரணையின் நடுவே, வெளிநடப்பு செய்து விட்டார்.அவர் மட்டுமல்ல, எதிர்க்கட்சி எம்.பி.க்களான பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த டேனிஷ் அலி, ஜனதா தள எம்.பி. கிரிதாரி யாதவ், காங்கிரஸ் எம்.பி. உத்தவ்குமார் ரெட்டி ஆகியோரும் வெளிநடப்பு செய்தார்கள்.
இதற்கிடையே மொய்த்ராவை எம்.பி. பதவியில் இருந்து நீக்கும் முடிவில் மக்களவை நெறிமுறைக் குழு படுஉறுதியாக இருந்தது. மொய்த்ரா தொடர்பாக 500 பக்க அறிக்கை தயாராகி, கடந்த 8ம்தேதி மக்களவை நெறிமுறைக் குழு உறுப்பினர்களுக்கு அது அளிக்கப்பட்டது.மொய்த்ராவை பதவிநீக்கம் செய்வது தொடர்பாக மக்களவைத்தலைவரிடம் பரிந்துரைக்கும் வரைவு தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், தீர்மானத்துக்கு ஆதரவாக 6 பேரும், எதிர்ப்பாக 4 பேரும் வாக்களித்துள்ளனர்.
மொய்த்ராவை எம்.பி. பதவியில் இருந்து நீக்க பரிந்துரை செய்யும் 500 பக்க அறிக்கை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா விடம் ஒப்படைக்கப்பட உள்ளது. அதை பொதுவெளியில் வைப்பதா இல்லையா என்பதை அவர் முடிவு செய்வார்.வர இருக்கும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில், மக்களவையில் அந்த அறிக்கையை ஓம் பிர்லா முன்வைக்கக் கூடும். மக்களவை எம்.பி.க்களில் பெரும்பான்மையினர் அதை ஏற்கும்நிலையில், அரைமணிநேரத்துக்கு மிகாமல் அந்த அறிக்கை குறித்து விவாதம் நடைபெறலாம். அதைத்தொடர்ந்து வாக்கெடுப்பும் நடக்கலாம். அதன்மூலம் ஒருவேளை மொய்த்ராவின் எம்.பி. பதவி பறிபோகவும் வாய்ப்புஉண்டு.
மொய்த்ராவின் எம்.பி. பதவி பறிபோகுமா அல்லது அவர் தப்பிப்பாரா என்பது தெரியவில்லை.ஆனால், திடுக்கிட வைக்கும் ஒரு திரில்லர் திரைப்படத்தின் இடைவேளைக் காட்சி போல இருக்கிறது இப்போதைய நிலை.
என்.ஆனந்தி
|