2023 புது வரவு!
வந்தாரை வாழவைப்பது தமிழ்நாடு மட்டுமல்ல, தமிழ் சினிமாவும்தான். அப்படி இந்த வருடம் வெல்கம் போர்டு வைத்து வரவேற்ற அறிமுக நாயகிகள் பலர். அதில் முத்தான பத்து புதுமுக நாயகிகள் இதோ...
தாராக்ஷி
‘பகாசூரன்’ படத்தில் செல்வராகவனுக்கு மகளாக பலராலும் அறியப்பட்டு இணையத்திலும் படு ஃபேமஸ் ஆனவர். அரியலூர் பொண்ணு. அப்பா தண்டீஸ்வரர் சுவாமி இண்டஸ்ட்ரிய லிஸ்ட், அம்மா ஆராக்ஸி சாப்ட்வேர் இன்ஜினியர். சினிமா ஆர்வத்தில் தாராக்ஷி பி.காம் படித்து முடித்துவிட்டு மாடலிங் மற்றும் டிவி நிகழ்ச்சிகள் என களமிறங்கினார். அவருக்கு முதல் படமாக அறிமுகம் கொடுத்தது ‘பகாசூரன்’.
பிரீத்தி அஸ்ராணி
‘அயோத்தி’ படம் மூலம் குஜராத்தில் இருந்து ராமேஸ்வரம் வரும் குடும்பத்தின் மூத்த மகளாக நடிப்பாலும் மேலும் மொழியே தெரியாவிட்டாலும் உணர்வுகளாலும் தமிழ் சினிமா நெஞ்சங்களை நெகிழச் செய்தவர். சினிமா ரசிகர்களுக்குத்தான் இவர் புதிது. ஆனால், டிவி சீரியல் ரசிகர்களுக்கு இவர் நன்கு பரிச்சயமானவர். சன் டிவியில் ஒளிபரப்பான ‘மின்னலே’ (2018-2020) சீரியலின் கதாநாயகி இவர்தான்.
குஜராத் சிந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர். தெலுங்கில் பாலகிருஷ்ணாவின் ‘ஊ கொடதாரா உலுக்கி படதாரா’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். சினிமா கரியருக்காக ஹைதராபாத்தில் குடியேறியவர் தற்சமயம் படிப்பையும் ஒருபக்கம் முடிக்க வேண்டும் என தொலைதூரக் கல்வியில் சேர்ந்து கல்லூரிப் படிப்பையும் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
ஆதிரா ராஜ்
‘வீரன்’ படத்தின் மூலம் ஹிப் ஹாப் ஆதியின் ஜோடியாக அறிமுகமானவர். கேரளா, கண்ணூர்தான் சொந்த ஊர். 2023ல் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த மறு கணமே அடுத்தடுத்து படங்கள் ஒப்பந்தமாகி தமிழில் நடிகர் மகேந்திரனுடன் ‘அமிகோ கேரேஜ்’, கன்னடத்தில் நடிகர் சத்யதேவ் உடன் ‘கிருஷ்ணம்மா’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் நிறைய ஷார்ட் ஃபிலிம்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் இந்த வருடம் ‘வீரன்’ படத்தின் வாயிலாக வெள்ளித் திரையில் பயணத்தை துவங்கி இருக்கிறார். பட்டப் படிப்பை முடித்த கையோடு நடிப்பே பிரதானம் என கவனம் செலுத்தி வருகிறார்.
ரேவதி ஷர்மா
‘ஆகஸ்ட் 16, 1947’ படம் மூலம் கௌதம் கார்த்திக் ஜோடியாக தமிழில் அறிமுகமான சீனிக்காரி. ‘அருவி’ அதிதி பாலனின் தங்கை. அப்பா சுனில் ஜி ஷர்மா, அம்மா லக்கி அனைவருக்கும் கேரளாதான் பூர்வீகம். ஆனால், சென்னையில் செட்டில் ஆனவர்கள். சமையல் கலையில் அதீத ஆர்வம் என்பதால் கல்லினரி ஆர்ட் படிப்பதற்காகவே மணிப்பாலில் தங்கி இருக்கிறார். ‘கிழக்கு வாசல்’ படத்தின் ரேவதி சாயலாக இந்த வருடத்தின் முக்கியத்துவம் வாய்ந்த கதாநாயகியாக மாறி இருக்கிறார்.
மீனாட்சி சௌத்ரி
விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘கொலை’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மிஸ் இந்தியா 2018. அப்பா பிஆர் சௌத்ரி மறைந்த ராணுவ வீரர் மற்றும் கர்னல். அப்பாவின் வேலை நிமித்தமாகவே மீனாட்சியின் பள்ளிப்படிப்பு முதல் குழந்தைப் பருவம் அத்தனையும் இந்தியாவின் எல்லைப் பகுதியிலேயே கடந்து இருக்கிறது. மீனாட்சியும் நீச்சல் மற்றும் பேட்மின்டனில் மாநில அளவில் சாம்பியன். பல் டாக்டர் ஆக பட்டம் பெற்ற மீனாட்சி அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்.
‘ஃபெமினா மிஸ் இந்தியா’ பட்டத்தை வென்றபின் ‘மிஸ் இந்தியா இன்டர்நேஷனல்’ கிரீடமும் பெற்றவர் மீனாட்சி. இந்தியில் ‘அப்ஸ்டார்ட்ஸ்’ படம் மூலம் சினிமா பயணத்தை துவங்கியவர் தெலுங்கில் தனக்கென தனி இடத்தைப் பிடித்து ரவி தேஜா துவங்கி இன்று மகேஷ் பாபுவின் ‘குண்டூர் காரம்’ படம் வரை தனது பயணத்தில் மாஸ் காட்டி வருகிறார். தமிழிலும் ‘சிங்கப்பூர் சலூன்’, துல்கர் சல்மான் உடன் ‘லக்கி பாஸ்கர்’, இதைவிட ஆச்சரியமான தகவல் ‘தளபதி 68’ படத்திலும் மீனாட்சிக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரமாம்.
மிஷா நரங்
விமல் நடிப்பில் வெளியான ‘துடிக்கும் கரங்கள்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர். இந்தியில் பிரபல சீரியலான ‘தில் யெஹ் சித்தி ஹை’ மூலம் நடிப்புக்கு அறிமுகமான மிஷா கல்லூரியில் படிக்கும் பொழுதே உள்ளூர் விளம்பரங்கள், பிராண்டுகள் என விளம்பரங்களில் நடித்தவர். தெலுங்கில் ‘தெள்ளவரிதெ குருவரம்’ படத்தின் மூலம் வெள்ளித் திரையில் அறிமுகமானவர். தன்னைப் பற்றியும் தன் குடும்பம் பற்றியும் எந்த கேள்விகள் கேட்டாலும் சிரிப்பை மட்டுமே பதிலாகக் கொடுத்து எதுவும் சொல்வதற்கு மறுக்கிறார்.
ஆரதி பொடி
தமிழில் மகேந்திரன் நடிப்பில் வெளியான ‘ரிப்- அப்- பரி’ ஹாரர் படம் மூலம் அறிமுகம். மலையாளத்தில் சென்சேஷன் மங்கையாக வலம் வரும் கேரளத்துப் பெண். தனியார் சேனல் நடத்திய ரியாலிட்டி நிகழ்ச்சி மூலம் பொண்ணுக்கு ஏராளமான ரசிகப் பெருமக்கள். சினிமாவுக்குள் வரும் முன்பே தென்னிந்திய மொழி டிவிகள் அனைத்திலும் ஒரு கை பார்த்துவிட்டு பல சர்ச்சைகள், கிசுகிசுக்கள் என அனைத்தையும் கடந்து வந்திருக்கிறார். ஃபேஷன் டிசைனிங்கில் பட்டம் பெற்ற ஆரத்தி சொந்தமாக பிராண்ட் வைத்திருக்கும் தொழிலதிபர்.
ஷ்ருதி பெரியசாமி
நடிப்புக்காக முறைப்படி கல்லூரிப் படிப்பை முடித்த சேலத்துப் பொண்ணு. சிறுவயதிலிருந்தே அப்பாவின் கொடுமையால் பாதிக்கப்பட்டவர். பல கடினமான போராட்டங்களைக் கடந்து தன்னிச்சையாகவே மாடலிங் துறையில் கால் பதித்து மிஸ் இந்தியா போட்டிகள் வரை சென்றவர். தனியார் தொலைக்காட்சி நடத்திய ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ட்ரெண்ட் ஆனவர். தமிழில் ‘பீட்சா 3 : தி மம்மி’, மற்றும் ‘டிமன்’ இரண்டு படங்களும் ஷ்ருதிக்கு சினிமா துறையில் இந்த வருடம் அறிமுகம் கொடுத்திருக்கிறது. இவரது டஸ்க்கி சருமத்திற்காகவே பல சர்வதேச பிராண்டுகள் இவருக்கு வாண்டட் போர்டு வைத்திருக்கிறார்கள்.
சரஸ்வதி மேனன்
வாரிசு நடிகைகள் யாரும் இந்த வருடம் அறிமுகம் இல்லையா என்ற கேள்விக்கு பதில் கொடுத்தவர். பிரபல இயக்குநர் மற்றும் சினிமாட்டோகிராபர் ராஜீவ் மேனனின் செல்லமான 2வது மகள். கேரளாகொச்சினில் பிறந்தவர். கடந்த வருடம் வெப் சீரிஸ் நாயகியாக அறியப்பட்டவருக்கு இந்த வருடம் சினிமா அறிமுகம் கொடுத்திருக்கிறது. இந்த வருடத்தின் முக்கியத்துவம் வாய்ந்த ஹாரர் திரைப்படமாக இடம் பிடித்த ‘அஸ்வின்ஸ்’ திரைப்படத்தின் நாயகியாக அறிமுகமானவர். அப்பா வழியிலேயே துவக்கத்தில் எழுத்தாளர், காஸ்டியூம் டிசைனர் என சினிமாவில் டெக்னிக்கல் நிபுணராகத்தான் கால் பதித்தார்.தொடர்ந்து நடிப்பிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
திவ்யன்ஷா கவுசிக்
இன்ஸ்டாகிராமை திறந்தாலே ‘நிரா நிரா நீ என் நிரா...’ என இப்போது வரைக்கும் மாஸ் ட்ரெண்டிங்கில் இருக்கும் இந்த வருடத்தின் ஹாட் கதாநாயகி இவர்தான். கேஷுவல் லுக், பார்ட்டி கேர்ள், கிளாமர், கிடைத்த கேப்பில் கெட்ட வார்த்தை பேசுபவர் என இவர் நடித்த இரண்டு படங்களிலுமே இவரின் கேரக்டர் கிட்டத்தட்ட இக்கால மாடர்ன் பெண்களை அச்சு அசலாக காண்பித்ததால் இவருக்கு இணைய உலகம் ஹார்ட்டின் விடுகிறது.
சந்தீப் கிஷானுடன் ‘மைக்கேல்’, சித்தார்த்துடன் ‘டக்கர்’ உள்ளிட்ட இரண்டு படங்கள் சகிதமாக தமிழில் அறிமுகமானவர். தில்லியை பிறப்பிடமாகக் கொண்ட திவ்யன்ஷா, இந்தியின பிரபல யாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் காஸ்டிங் மேனேஜராக பணியாற்றி இருக்கிறார்.
திவ்யாவின் அம்மா அஞ்சு கவுசிக், ராணி முகர்ஜி உள்ளிட்ட பிரபல இந்தி நடிகைகளுக்கு ஆஸ்தான மேக்கப் ஆர்ட்டிஸ்ட். தெலுங்கில் நாகசைதன்யாவின் ‘மஜிலி’ படம் மூலம் சினிமாவில் நடிப்புத் துறைக்கு வந்தவர் தற்போது பல படங்களில், பல மொழிகளில் பிசி.
என்னவோ தெரியவில்லை எந்த வருடமும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் புதுமுக நாயகிகள் வரவு மிகக் குறைவுதான். 2024 எப்படி இருக்கப்போகிறது என பொறுத்திருந்து பார்க்கலாம்..
ஷாலினி நியூட்டன்
|