சர்வதேச அளவில் பதக்கங்களை குவிக்கும் மாதவன் மகன்!
தன் தந்தையின் துறையைத் தவிர்த்து சற்றும் எதிர்பார்க்காத துறையில் மகன் சாதிப்பது அரிய விஷயமல்லவா..?  அப்படியொரு காரியத்தைத்தான் செய்து வருகிறார் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த்.யெஸ். நீச்சல் சாம்பியனான வேதாந்த், சர்வதேச அளவில் பதக்கங்களைக் குவித்து வருகிறார். அதுவும் மூன்று மாதங்களுக்கு ஒரு சாதனை என்பது வேதாந்தின் கரியரில் நடக்கும் சர்வசாதாரணமான செயலாகிவிட்டது.  அந்த வகையில் லேட்டஸ்ட் வரவு இந்த விருதுகள்!சமீபத்தில் மலேசியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் நடந்த மலேசியன் இன்விடேசனல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்ற வேதாந்த், இந்தியாவுக்கு 5 தங்கப் பதக்கங்களை வென்று தன் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.  அதாவது 50 மீட்டர், 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் மற்றும் 1500 மீட்டர் ஆகிய பிரிவுகளில் தங்கப் பதக்கங்களை தட்டிச் சென்றுள்ளார். இதனால், சர்வதேச அளவில் புகழ் பெற்றவராகவும் மாறியுள்ளார். வழக்கம்போல் இந்த மகிழ்ச்சியை நடிகர் மாதவன் தனது சமூகவலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்து கொண்டார்.மாதவனின் இயல்பு அப்படி. ஒவ்வொரு முறை வேதாந்த் வெற்றி பெறும்போதும் சோஷியல் மீடியாவில் அதைப் பகிர்ந்து கொள்வார்.
அப்படி பகிர்ந்துகொண்ட இந்த பதிவில், ‘கடவுளின் கருணையாலும், உங்களுடைய நல்வாழ்த்துகளாலும் மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் வார இறுதியில் நடந்த 2023ம் ஆண்டுக்கான மலேசியன் இன்விடேசனல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்ற வேதாந்த், இந்தியாவுக்காக (50 மீட்டர், 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் மற்றும் 1500 மீட்டர்) 5 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். மகிழ்ச்சி அடைந்தேன். நன்றிகள்...’ என பதிவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று, ஆடவர் பிரிவில் 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 1,500 மீட்டர் ஆகிய பிரிவுகளில் கலந்துகொண்டு 3 தங்கப் பதக்கங்களையும்; 400 மீட்டர் மற்றும் 800 மீட்டர் பிரிவில் 2 வெள்ளிப் பதக்கங்களையும் இதே வேதாந்த் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இடத்தில் ஒரு விஷயத்தைக் குறிப்பிடவேண்டும்.முன்பு வேதாந்த் வெற்றி பெற்றபோது, அதுகுறித்து மாதவன் டுவீட் போட்டார். அதைப் பார்த்து ‘மாதவனின் மகன் வெற்றி’ என செய்திகள் வெளியாயின. உடனே, ‘அது மாதவனின் மகன் இல்லை... வேதாந்த். அவருக்கு என்று ஒரு பெயர், அடையாளம் இருக்கிறது. அதை மீடியாக்கள் அழித்துவிட வேண்டாம்...’ என நெட்டிசன்கள் கோரிக்கை வைத்தனர்.
இதை ஆமோதிக்கும் வகையில் வேதாந்தும், ‘ஆர். மாதவனின் மகன் என்கிற டைட்டில் எனக்கு வேண்டாம். எனக்கென்று ஒரு பெயரை உருவாக்க விரும்புகிறேன். நான் யாராக இருக்கிறேன் என்பதற்காகத்தான் என்னுடன் போட்டியிடுபவர்கள் என்னை மதிக்கிறார்கள்...’ என்றார்.இவை எல்லாம் தெரிந்தும் இச்செய்தியின் தலைப்பை இப்படி வைத்திருக்கிறோம்! வேதாந்தும், மாதவனும் வழக்கு போட மாட்டார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது!
நிரஞ்சனா
|