நார்டிக் நாடுகளில் திராவிட மாடல் கல்வி!
இந்தியாவில் குஜராத் மாடல், கேரளா மாடல், நம்ம ஊர் திராவிட மாடல்... போல் மேற்கு நாடுகளில் நார்டிக் (Nordic) மாடல் என்பது மிகவும் பிரபலம்.
 நார்டிக் நாடுகள் என்று அழைக்கப்படும் ஸ்வீடன், நார்வே, டென்மார்க், ஃபின்லாந்து மற்றும் ஐஸ்லாந்து நாடுகளில் பொதுவாக அரசுகள் கடைப்பிடிக்கும் ஒருவகை பொருளாதாரம், கல்வி மற்றும் சமூகக் கொள்கைகளின் வெற்றிகரமான தாக்கங்களையே பல மேற்குலக நாடுகளில் நார்டிக் மாடல் என்று செல்லப்பெயர் கொண்டு அழைக்கிறார்கள்.
அது என்ன நார்டிக் மாடல்..?

பொருளாதாரத்தில் தனியார் மயம், சமூக திட்டங்களில் பொதுவுைடமை என்ற எதிரும் புதிருமான கலவைதான் நார்டிக் மாடலின் சூத்திரம். அதாவது பொருளாதாரத்தில் சுதந்திரமான சந்தை வர்த்தகம், அரசியல் சமூக ரீதியாக மக்கள் நல அரசு (welfare state) என்பதுதான் இந்த நார்டிக் மாடலின் கம்ப சூத்திரம்.
 இந்தியாவில் மக்கள் நலன் மற்றும் அதனால் விளையும் இலவசங்களை ஏளனமாகப் பார்க்கும் நிலையில் கடந்த 70 வருடங்களுக்கும் மேலாக முதலாளித்துவத்தையும் சோஷலிசத்தையும் கலந்து கட்டி வெற்றிகரமான ஒரு மாடல் தேசங்களாக இருக்கும் நாடுகளில் ஒன்றான ஸ்வீடனில் குடும்பத்துடன் வசிக்கும் விஜய்சங்கர் அசோகன் கடந்தவாரம் சென்னையில் வெளியிட்ட ‘நார்டிக் கல்வி’ எனும் புத்தகம் நார்டிக் மாடலின் அடிப்படையான கல்வி எப்படி இந்த மாடலை ஒரு முன்னுதாரணமான மாடலாக மாற்றியது என்பது பற்றிப் பேசுகிறது. தர்மபுரியில் பிறந்து அங்கேயே பள்ளிக் கல்வி கற்ற விஜய் கோவையில் கல்லூரிப் படிப்பையும் நார்டிக் நாடுகளில் ஒன்றான நார்வேயில் பிஎச்.டி படிப்பையும் முடித்திருக்கிறார். இடையில் சென்னையில் திருமணத்தையும் முடித்த விஜய் கடந்த 4 வருடங்களாக ஸ்வீடன் வாசி. குடும்பம் பிள்ளைகளுடன் ஸ்வீடனில் வசிக்கும் விஜய் நார்டிக் நாடுகள், இந்திய அமைப்புகள் மற்றும் தமிழ்நாட்டின் சில அரசு மற்றும் தனியார் அமைப்புகளுடன் சேர்ந்து பல்வேறு திட்டங்களில் மாணவர்களுக்கான முன்னெடுப்புகளைச் செய்து வருகிறார்.
நார்டிக் நாடுகளில் உள்ள 90 சதவீத பள்ளிகள் அரசுப் பள்ளிகள் என்ற ஆச்சரியமான தகவலைச் சொல்லும் விஜய் அதன் வெற்றிக்கான காரணங்களைப் பற்றி நம்மிடையே பேசினார். ‘‘இந்தியாவைப் போலவே நார்டிக் நாடுகளிலும் கிராமம், நகரம் என்று இருக்கும். அதேபோல கிராமம், நகரங்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகளும் இருக்கும். இந்த ஏற்றத்தாழ்வைக் களைய இந்த நார்டிக் நாடுகள் எடுத்த முதல் அடி கிராமம் - நகரம் என்று வித்தியாசம் இல்லாமல் எல்லா ஊர்களுக்கும் ஒரு பள்ளி என்று கொண்டு வந்தது.
அடுத்து ஒரு பள்ளிக்கு மாணவன் எப்படி முக்கியமோ அதுபோல் ஆசிரியரும் முக்கியமானவர் என்பதால் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஆசிரியர் பள்ளியை நிறுவியது. பின்னர் வித்தியாசமான பின்னணிகளோடு வரும் மாணவர்களை சமமான மாணவர்களாக மாற்றுவதற்கு ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை (சிலபஸ்) திணிக்காமல் ஒவ்வொரு ஊர் மாணவர்களுக்கும் என்ன தேவை என்று ஆராய்ந்து அதற்கேற்ப ஒரு பாடத்திட்ட வழிகாட்டியை (கைட்லைன் அல்லது பிரேம் ஒர்க்) உருவாக்கியது.
அதாவது ஒவ்வொரு ஊரிலும் உள்ள நகராட்சி அந்த ஊர் மாணவர்களின் கல்வித் திறனை கணக்கில் எடுத்து அதற்கேற்ப ஆசிரியர்களோடு கலந்தாய்ந்து இந்த வழிகாட்டியை உருவாக்கியது.
இது என்ன செய்தது என்றால் எல்லா மாணவர்களையும் ஒருகட்டத்தில் கல்வியில் ஒரே மட்டத்தில் உயர்த்தியது. இதுதான் சமத்துவத்தையும் சமூக நீதியையும் மாணவர்களிடையே கொண்டு வந்தது...’’ என்று சொல்லும் விஜய், இந்த வேறுபாடான பாடத் திட்ட வழிகாட்டிகள் தாய்மொழியில் இருந்ததுதான் பெரிய பலனைக் கொடுத்தது என்கிறார்.
‘‘எல்லா நார்டிக் நாடுகளிலும் ஒரு தாய்மொழி உண்டு. உதாரணமாக ஸ்வீடனில் ஸ்வீடிஷ் மொழி, டென்மார்க்கில் டேனிஷ், நார்வேயில் நோர்வேஜியன் மொழி என்று இருக்கும். பொதுவாக நார்டிக் நாடுகளில் பல வடக்கு ஜெர்மன் மொழியின் கிளை மொழியாக இருப்பதால் ஒன்றுக்கொன்று வேறாக - வேறு மொழியில் உச்சரிக்கப்பட்டாலும் - பல வேளைகளில் ஒன்றுக்கொன்று ஒரே மாதிரிதான் இருக்கும்.
இது தவிர நார்டிக் நாடுகளில் பல இனத்தினர் வாழ்கிறார்கள். அரசு பள்ளிகளைப் பொறுத்தளவில் ஒன்றாம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை இலவசக் கல்விதான். இத்தோடு இலவசக் காலை உணவு, மதிய உணவுகளும் உண்டு. என் பிள்ளைகள் முதலில் நார்வேயிலும் பிறகு ஸ்வீடனிலும்தான் படித்தார்கள். என் பிள்ளைகள் இரண்டாம் மொழியாக தாய்மொழி யான தமிழை ஒன்பதாவது வரையும் கூடப் படிக்கலாம்.
இப்படி நார்டிக் நாடுகளில் சுமார் 100க்கும் மேலான மொழிகளை இரண்டாம் மொழியாகக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு உண்டு...’’ என்று சொல்லும் விஜய், நார்டிக் நாடுகள் பற்றிய ஒரு டூரிஸ்ட் கைடைக் கொடுத்தார்.‘‘ஐரோப்பிய நாடுகளுக்கு வடக்கே உள்ள நாடுகள் எனும் அர்த்தத்தில்தான் இந்த நார்டிக் என்ற வார்த்தை உருவானது. இந்த நார்டிக் நாடுகளில் பலவும் மூன்று பக்கம் கடல் ஒரு பக்கம் நிலம் என்று தென் இந்தியாவைப் போல ஒரு தீபகற்பமாக இருக்கிறது.
குளிர்காலத்தில் 24 மணிநேரமும் இருட்டு. கோடையில் 24 மணிநேரமும் வெளிச்சம் எனும் அளவுக்குக்கூட தட்பவெப்ப நிலை இருக்கும். குளிர்காலத்தில் பனிப் பொழிவு அல்ல... ஐஸ் கட்டி மழைதான். இதனால்தான் நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடுகள் என்று இந்த நாடுகளை அழைக்கிறார்கள். இந்தியாவில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களைத்தானே கல்வி கற்றவர்கள் என்று சொல்வார்கள்..? ஆனால், நார்டிக் நாடுகளில் எல்லோருமே ஒன்று முதல் 9 வரையாவது கட்டாயக் கல்வியின் கீழ் படித்தவர்களாக இருப்பதால் கல்வியில் தேர்ந்தவர்களாக இந்த நாட்டு மக்கள் இருக்கிறார்கள்.
14 வயது ஆகிவிட்டால் ஒரு மாணவன் சுதந்திர மனிதனாக ஆகிவிடுகிறான். நார்டிக் நாடுகளில் பள்ளி முடித்து 17 வயது முதலே வேலை செய்யலாம். வேலைக்குப் பிறகு அல்லது வேலை காலத்திலோ படிக்கலாம். பின்பு கல்யாணம் செய்துகொள்ளலாம். கல்யாணத்துக்குப் பிறகும் படித்துக்கொள்ளலாம்.
உடல் உழைப்புக்கு அங்கே இரட்டிப்பு ஊதியம் என்பதால் கல்வியும் உழைப்பும் கைகோர்த்துச் செல்லும். படிப்புக்கு ஏற்ற வேலை. வேலைக்கு ஏற்ற மேற்படிப்புகளைப் படித்துக்கொள்ளலாம். மகிழ்ச்சிகரமான நாடு.
கருத்துச் சுதந்திரத்தில், ஜனநாயகத்தில், மனித உரிமைகளில், பாதுகாப்பு போன்ற மனிதவளக் குறியீடுகளில் நார்டிக் நாடுகளில் பல முதன்மையான நாடுகளான இருக்கின்றன...’’ என்று சொல்லும் விஜய்யிடம் முதலாளிகளிடம் அதிகப்படியான வரியை வாங்கித்தான் இந்த நாடுகள் மக்கள் நலன் அரசுகளாகச் செயல்படுவதாகவும், இந்த நாடுகளின் உற்பத்தி பெரிய அளவில் இல்லை என்றும் சில விமர்சகர்கள் சொல்கிறார்களே என்றால் சிரிக்கிறார். ‘‘சுவீடனின் வால்வோ கார், ஸ்கேனியா பஸ், இரும்பு போன்றவை உலகளவில் புகழ்பெற்றது. அதேமாதிரி பால் உற்பத்தியில் டென்மார்க்; எண்ணெய், கப்பல் கட்டுமானத்தில், மீன் பிடிப்பில் நார்வே போன்றவை உலகப் பிரசித்தம். அரசு தலையீடு என்பதைவிட திட்டமிடல் என்பதுதான் இதற்கான பதில். உண்மையில் தமிழ்நாடு 1920ல் நீதிக்கட்சி தொடங்கிய திராவிட மாடலை 1948களில் தொடங்கிய நார்வே நாடுகள் இடைவிடாமல்பின்பற்றியதால் வெற்றிகரமான மாடலாக இருக்கிறது...’’ அழுத்தமாகச் சொல்கிறார் விஜய்.
செய்தி: டி.ரஞ்சித்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்
|