ஊஞ்சல் தேநீர்
யுகபாரதி-70
ஜப்பானியர்களின் நில, உள தன்மைக்கேற்ப இருந்த ஹைக்கூ வடிவத்தை தமிழ்ப்படுத்தியதில் தமிழன்பன் வெளிப்படுகிறார். ஒன்றை அப்படியே ஏற்பது வேறு. அதை நமக்கேற்ப மாற்றி, பயன்பாட்டுக்குக் கொண்டுவருவது வேறு. ஹைக்கூவைப் போலவே ஜப்பானியர்களின் இன்னொரு கவிதை வடிவமான சென்ரியூவையும் தமிழன்பனே முதல் முதலாக தமிழில் எழுதிக்காட்டியவர். இயற்கையிலிருந்து எடுக்கப்பட்ட காட்சிப் படிமங்களை மெய்யியல் உணர்வோடு வெளிப்படுத்தும் குறுங்கவிதைகளே ‘சென்ரியூ’. சமூகம் குறித்தும் அரசியல் குறித்தும் அங்கத, நகைச்சுவை உணர்வுடன் வெளிப்படும் சென்ரியூவில் ஹைக்கூவின் அடர்த்தியைப் பார்க்கமுடியாது.
ஹைக்கூவைவிட சென்ரியூக்கள் செறிவு குறைவானவை. ஒரு தேநீர்க்கடையிலும் மதுபானக்கூடத்திலும் எளிய மனிதர்கள், தமக்குத் தாமே களிப்பூட்டிக்கொள்ளும் முறையில் சொல்லப்படும் சென்ரியூக்களில் அர்த்தத்தையும் கவித்துவத்தையும் எதிர்பார்க்க இயலாதுதான். என்றாலும், எவ்வடிவையும் தமிழுக்குக் கொண்டுவரும் ஆர்வத்துடன் தமிழன்பன் இயங்கியிருக்கிறார். முக்கிய கவிஞர் அறைகூவலாக முதல் வரியை கேள்விபோல முன் வைக்க, பின்வருபவர்கள் அவ்வரிகளை நிறைவு செய்வதே சென்ரியூக்களின் சிறப்பு. மிகுதியும் உரையாடல் தொனியில் அமையப்பெறும் சென்ரியூவின் இறுதி வாக்கியம், ஒரு சிரிப்பை வரவழைக்கவேண்டும் என்பது விதி.
இந்த விதியைப் பின்பற்றி, “பக்தர்களிடம் / கடவுள் கேட்ட வரம் / அரசியலுக்கு இழுக்காதீர்கள்...” என்பதாக தமிழன்பன் ‘ஒரு வண்டி நிறைய சென்ரியூ’ என்னும் நூலில் எழுதியிருக்கிறார். நடப்புச் சூழலை உள்வாங்கி எந்த வடிவத்திலும் கவிதை செய்யும் மொழித்திறம் அவருக்குண்டு. ‘‘மொழி வளம் இருக்கிறது என்பதற்காக எதைக் கவிதையாக எழுதுவது என்பதில் தேர்வுநிலை இல்லாமல் செயல்படுவதாக...’’ தமிழன்பன் கவிதைகளை மதிப்பீடு செய்த க.பஞ்சாங்கம் குறைப்பட்டிருக்கிறார். அவரே இன்னொரு இடத்தில், ‘‘தொடர்ந்து எழுதுவதன்மூலம் கவிதையின் தரத்தையும் தேடலையும் காப்பாற்றி வருவதால் தமிழன்பன் இந்த நூற்றாண்டின் கவிஞன்...’’ என்பதை நிரூபித்திருப்பதாகவும் வியந்திருக்கிறார்.
கடவுளையும் மதத்தையும் இணைத்து அரசியல் செய்யும்போக்கிற்கு எதிரான கவிதைகளைத் தமிழில் அதிகமும் எழுதியவர் தமிழன்பன். ஆன்மிக அரசியல் போன்ற பதங்கள் கவனத்துக்கும் விவாதத்திற்கும் வந்திருக்கும் இச்சூழலில் நவீன சென்ரியூக்கள் பிறக்கக்கூடும். ஈரோட்டை அடுத்த சென்னி மலையில் பிறந்த ஜெகதீசன், தமிழன்பன் ஆனதும் பாரதிதாசனுடன் கொண்ட பற்றினால் கவிதைக்குள் வந்ததும் அறியக்கூடியது. ஆனால், இதுவரை அறுபதுக்கும் மேலான நூல்களை எழுதியிருக்கிறார் என்னும் தகவல் எத்தனை பேருக்குத் தெரியும்? ‘வணக்கம் வள்ளுவ’ என்ற கவிதை நூலுக்கு ‘சாகித்ய அகாடமி’ விருது பெற்றிருக்கிறார்.
காட்சி ஊடகங்கள் பரவலாகாத எண்பதுகளில், சென்னைத் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளராகவும் பதினாறு ஆண்டுகள் இருந்திருக்கிறார். செய்திகள் முடிவடைந்தன என்பதை மாற்றி, ‘செய்திகள் நிறைவடைந்தன’ எனச் சொல்லும் வழக்கத்தை அவரே ஏற்படுத்தினார். முடிவுக்கும் நிறைவுக்கும் உள்ள வித்யாசத்தை ஊடகங்களுக்குக் கற்பித்த அவர், புதுக்கல்லூரி தமிழ்த்துறைத் தலைவராகவும் பணி புரிந்திருக்கிறார். கவிஞர் இன்குலாப்புடன் அணுக்கமும் இணக்கமும் காட்டிய தமிழன்பன், திராவிடக் கருத்தியலை வரித்துக்கொண்டவர். ஆயினும், சர்வதேச பார்வையுடைய கவிஞரென்றே அறியப்பட்டிருக்கிறார். 1990ம் ஆண்டு பிப்ரவரி 25ல் சென்னை பெரியார் திடலில் தமிழ்த்தேச தன்னுரிமை மாநாடு நடந்தது.
அம்மாநாட்டிற்குத் தஞ்சையிலிருந்து கிளம்பிய பேருந்தில் அப்பாவுடன் தொற்றிக்கொண்ட எனக்கு, செய்தி வாசிக்கும் ஒருவர் கவிதை வாசிக்கப் போகிறார் என்னும் செய்தியே மகிழ்வூட்டியது. தமிழன்பனும் அண்ணன் அறிவுமதியும் அம்மாநாட்டில் கவிதை வாசித்தார்கள். அரங்க கவிதையென்றால் எப்படி அமைய வேண்டும் என்பதை அப்போதுதான் அறிந்துகொண்டேன். வெறும் கைத்தட்டலுக்காக கவிதைகளை வாசிக்காமல், அவர்கள் இருவரும் கருத்துச் செறிவுடன் அரசியல் கவிதையை எழுதியிருந்தார்கள். மாநிலங்களுக்கான சுயாட்சியை மறுக்கும் மத்திய அரசு குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்த அவர்களுடைய கவிதைகள் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கின.
அப்போது ரஷ்ய ஒன்றியத்திலிருந்து அஜர்பைஜான் பிரிந்த நேரம். அதை மையமாக வைத்து “அஜர்பைஜான் நெருப்பு / அசோகச் சக்கரத்தை விசாரிக்கும்...” என்பதாக தமிழன்பன் கவிதை எழுதியிருந்தார். நடந்தது என்ன தெரியுமா? அஜர்பைஜான் நெருப்பு அசோகச் சக்கரத்தை விசாரித்ததோ இல்லையோ, இப்படியொரு கவிதையை வாசித்த தமிழன்பன், காவல்துறையால் விசாரிக்கப்பட்டார். விசாரணை முடிவில், மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள தொலைக்காட்சியில் செய்திவாசிக்கும் ஒருவர், மத்திய அரசையே அச்சுறுத்தும் விதமாக கவிதை வாசிப்பதா? என்று செய்தி வாசிக்கும் பணியிலிருந்து தமிழன்பன் விடுவிக்கப்பட்டார்.
உச்சரிப்பு சுத்தத்துடன் செய்தி வாசித்த ஒருவர், உண்மையை வாசித்ததற்காக விலக்கப்பட்ட விநோதக் கதை இதுதான். இக் கைங்கர்யத்திற்கு திரைக்கதையை எழுதியதில் ‘துக்ளக்’ சோவின் பங்கு முக்கியமானது. திராவிட இயக்கச் சார்புடைய தமிழன்பன், கவியரங்க மேடைகளைப் புதுக்கியவர்களில் குறிப்பிடத்தக்கவர். ‘Oral Poetry’ என்னும் வகைப்பாட்டை மிகத் துல்லியமாக விளங்கிக்கொண்டு, அதற்கேற்ப பல முன்மாதிரிக் கவிதைகளைத் தந்திருக்கிறார். ‘வார்த்தைகள் கேட்ட வரம்’ என்னும் தலைப்பில் தமிழன்பனின் கவியரங்கக் கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. அரங்கத்தின் மனநிலையை உணர்ந்து கவிதைகளை எழுதக்கூடிய தமிழன்பன், ஓரிரு திரைப்படங்களுக்குப் பாடல்களையும் எழுதியிருக்கிறார்.
பாலச்சந்தரின் ‘அச்சமில்லை அச்சமில்லை’யிலும், ஹரிகரனின் ‘ஏழாவது மனிதனி’லும் அவருடைய இசைப் பாட்டுகள் இடம்பெற்றுள்ளன. தொடர்ந்து திரைப்பாடல் எழுதுவதில் விருப்பம் இல்லை என்று வெளிப்படுத்திய பிறகும்கூட அவரைத் திரைப்பாடல் எழுதவைக்க பலரும் முயன்றிருக்கிறார்கள். தன்னை ஸ்தாபித்துக் கொள்வதில் பிரியமில்லாத அவர், திரை வெளிச்சத்திலிருந்தும் விலகி இருக்கவே விரும்பியிருக்கிறார். பல ஆண்டுகள் பாரதிதாசனுடன் பழகியிருப்பதால், திரைத்துறை நல்ல கவிஞர்களை என்ன பாடு படுத்தும் என்பதைக் கேட்டறிந்திருப்பாரோ என்னவோ. இப்போதும் அவர் என்னுடன் தொலைபேசியில் பேசும்போதெல்லாம் கவிதைகளை விட்டுவிடாதீர்கள் என்பதைச் சொல்லாமல் உரையாடலை முடிப்பதில்லை.
மேடையில் அவர் வாசித்த கவிதை கேட்டு எழுதவந்த நான், அவருடைய தலைமையில் பல கவியரங்குகளில் பங்கு கொண்டிருக்கிறேன். அரங்கத்தை தயார் செய்து, இளம் கவிஞர்களை அறிமுகப்படுத்துவதில் அவருக்கிருக்கும் ஆர்வத்தை அளவிட வழியில்லை. அடுத்த தலைமுறையிடம் காலத்தையும் கவிதைகளையும் ஒப்படைக்க அவர் இன்னமும் உழைத்துவருகிறார். இப்போது எழுதிவரும் பல இளம் கவிஞர்களின் படைப்புகள் குறித்து நேர்ப்பேச்சில் என்னிடம் தெரிவித்திருக்கிறார். எதார்த்த நிலையிலிருந்து அரசியலை எப்படி அணுக வேண்டும் என்பதையும் உலகின் பல பகுதிகளில் நிலவிவரும் கவிதைக் கோட்பாடுகளையும் அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
எது கவிதை என்பதைத் தெளிந்துகொள்ள அவர் எழுதிய ‘சிகரங்கள் மேல் விரியும் சிறகுகள்’ எனும் கட்டுரை நூல் முதன்மையானது. அக்காலத்தில் விரிந்த இலக்கியப் பார்வையுடன் வெளிவந்த ஒரே நூல் அதுவே. நீண்ட வாசிப்பின் பின்புலத்திலிருந்து, உலகக் கவிஞர்களை அந்நூலில் படம் பிடித்திருப்பார். மொழிபெயர்ப்பின் வழியே நல்ல கவிதைகளையும் அந்நூலில் பகிர்ந்திருக்கிறார். ஆங்கிலப் புலமை அல்லாத ஒருவர், உலகக் கவிதைகளை உணர்ந்துகொள்ள ஏற்றவகையில் எழுதப்பட்ட அந்நூல், இளம் கவிஞர்களை எளிதாக ஈர்த்துவிடக்கூடியது. வால்ட் விட்மன் முதல் செங்கோர் வரையுள்ள பதினெட்டு கவிஞர்கள் குறித்த அறிமுகத்தை வழங்கிய அந்நூலைப் பின்பற்றி பல நூல்கள் வந்துவிட்டன.
ஆயினும்கூட, அவருடைய மொழிபெயர்ப்புக்கும் தகவல் திரட்டலுக்கும் பக்கத்தில் கூட பிந்தைய நூல்கள் வரவில்லை என்பது என் எண்ணம். தமிழன்பன், பழந்தமிழ் இலக்கியப் பரிச்சயத்திற்குச் சற்றும் குறைவில்லாத வகையில் நவீன இலக்கியத்தையும் பயின்றுவருபவர். யாப்பு மரபை விடுவித்துக்கொண்ட தமிழ், ஷேக்ஸ்பியரிடமிருந்து ‘சானட்’ என்னும் வகையை எடுத்துக்கொண்டது. பரிதிமாற்கலைஞர் போன்றவர்கள் அவ்வகையைப் பின்பற்றி எழுதியதாக தகவல் இருக்கிறது. அதேபோல, ‘லிமிரிக்’ என்றழைக்கப்படும் ஆங்கில கவிதை வடிவத்தை ஐந்து வரிகளில் இலங்கையைச் சேர்ந்த மஹாகவியும், தமிழகத்தைச் சேர்ந்த கோவேந்தனும் முயன்றிருக்கிறார்கள்.
ஹைக்கூவையும் லிமிரிக்கையும் இணைத்து ‘லிமிரைக்கூ’ என்னும் புதிய வடிவத்தை தமிழன்பன் உருவாக்கியிருக்கிறார். ஹைக்கூவில் பயின்றுவரும் மூன்று வரிகளைக் கணக்கிட்டுக்கொண்டு, லிமிரிக்கில் பயின்றுவரும் இயைபுத்தொடையையும் இணைத்து லிமிரைக்கூவை அவர் எழுதிக்காட்டியிருக்கிறார். “பறவையோடு சேர்ந்து பற/சிறகுகள் தேவையில்லை/ மனிதன் என்பதை நீ மற...” பற, மற என்பதே இயைபுத்தொடையின் அழகு. ‘சென்னிமலை கிளியோபாத்ராக்கள்’ என்னும் தலைப்பில் வெளிவந்துள்ள தொகுப்பில் அதிகமான லிமிரைக்கூக்கள் இடம்பெற்றுள்ளன.
(பேசலாம்...) ஓவியங்கள்: மனோகர்
|