திருப்பரங்குன்றத்தின் மறுமுகம்!
13 வயது சிறுமியின் சாதனை
திருப்பரங்குன்றம் என்றாலே மலையடிவாரத்தில் வீற்றிருக்கும் முருகன் கோயில்தான் முதலில் நினைவுக்கு வரும். அந்த மலையின் அழகும் அதன் மேலுள்ள விஷயங்களும் பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை. அதை தனது கேமராவால் படம்பிடித்து ஒரு நூலாக தொகுத்து வெளியிட்டிருக்கிறார் எட்டாம் வகுப்பு மாணவியான ரெப்லின்! ‘Other Face of Thiruparankundram’ என்கிற இந்த ஆங்கிலப் புகைப்பட நூல்தான் இப்போது மதுரையின் சம்மர் ஹாட்! 360 டிகிரி கோணத்தில் தத்ரூபமாக எடுக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களில் திருப்பரங்குன்றத்தின் மொத்த அழகையும் ரசிக்க முடிகிறது.
குறிப்பாக, மலையின் மேலிருக்கும் காசி விஸ்வநாதர் ஆலயம், பின்புறத்தில் உள்ள சமணக் குகைகள், உச்சியிலுள்ள சிக்கந்தர் பாதுஷா தர்கா என சகலமும் வெரைட்டி ஆங்கிளில் பின்னியெடுக்கின்றன. ‘‘திருப்பரங்குன்றத்துக்கு அப்பா கூட ‘நேச்சர் வாக்’ போவேன். அவரோட கேமராவை வாங்கி எனக்குப் பிடிச்சதை எல்லாம் கிளிக் பண்ணுவேன். அப்புறம் வீட்டுக்கு வந்ததும் அதைப் பார்த்து ரசிப்பேன். ஒரு தடவை என்னோட கிளிக்கைப் பார்த்திட்டு ‘ரொம்ப நல்லாயிருக்குடா...’னு அப்பாவே பாராட்டினார்.
புதுசா கேமராவும் வாங்கித் தந்தார். அந்த நொடியே மலையை முழு கோணத்திலும் எடுக்கணும்னு உற்சாகம் வந்திடுச்சு. பிறகு, அப்பாதான் இதை நூலாக தொகுக்கலாம்னு ஐடியா கொடுத்தார்...’’ எனப் பெருமை பொங்க பேசும் ரெப்லின், ‘ரெஸ்ட்லெஸ் பேர்ட்ஸ்’ எனும் ஆங்கிலச் சிறுகதைத் தொகுப்பை பத்து வயதில் வெளியிட்டவர். மட்டுமல்ல, தமிழக அரசின் கலைப் பண்பாட்டுத் துறையின் ‘கலை இளமணி’ விருதும் பெற்றிருக்கிறார். ‘‘சொந்த ஊர் நாகர்கோவில் பக்கம். மதுரைல செட்டிலாகி பத்து வருஷங்களாச்சு. ரெப்லினுக்குச் சின்ன வயசுலேயே வாசிக்கிறதுல நிறைய ஆர்வம்.
அதைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தினோம். முதல்ல சிறுகதைகள். அப்புறம் 12 வயதில், ‘தி வெஞ்சசம் செவன்’னு ஒரு நாவலை எழுதினா. அதையும் நூலா வெளியிட்டோம். ஆனா, அவளுக்குள்ள புகைப்படக்கலைஞர் அவதாரமும் இருக்கும்னு நினைக்கல.ஆரம்பத்துல சாதாரணமா போன இயற்கை நடை, ஒரு கட்டத்துல அவளோட கனவாவே மாறிப்போச்சு. காசி விஸ்வநாதர் கோயில் போக அறுநூறு படிகள் ஏறணும். சிக்கந்தர் பாதுஷா தர்காவுக்கு அங்கிருந்து இன்னும் நூறு படிகள் மேல போகணும். மலையின் பின்பகுதியை தென்பரங்குன்றம்னு சொல்வாங்க.
அங்க சமணப்படுைககள் இருக்கு. போற வழில நிறைய தீர்த்தங்கள், சுனைகளைப் பார்க்கலாம். இப்படி மலை மேலயும் கீழேயும் ஆறு மாசம் நடந்து, ஆறாயிரம் புகைப்படங்கள் எடுத்தா. அவளால நடக்க முடியாதோனு பயந்தேன். ஆனா, ஒவ்வொரு முறை போகும்போதும் அவள் கண்ணுல அவ்வளவு உற்சாகம் இருக்கும். நிறைவா, திருப்பரங்குன்றத்தைப் பத்தி ஒரு முழுப் பரிமாணம் கிடைச்சது. பிறகு, நண்பர்கள் உதவியோடு 225 புகைப்படங்களா சுருக்கி நூலா கொண்டு வந்தோம். இதை மதுரையின் முதல் போட்டோகிராபி புத்தகம்னு சொல்லணும்...’’ என்று மகளைப் பற்றி பெருமிதத்துடன் முடித்தார் தந்தை எட்வின்.
-பேராச்சி கண்ணன்
|