தண்ணீர் தேவைப்படாத டாய்லெட்!
‘‘நமக்குத் தேவையானதைப் பயன்படுத்திட்டு, தேவையில்லாததைக் குப்பைனு தூக்கி வீசறோம். ஆனா, இயற்கையோட அமைப்புல குப்பைனு எதுவுமே இல்ல. ஒண்ணோட கழிவு இன்னொண்ணுக்கு உணவு. இதுதான் உயிர்ச்சூழலோட அடிப்படையே. இதைப் புரிஞ்சிக்கிட்டா குப்பைகளை, கழிவுகளைக் கையாள்ற விதமே மாறிடும். நம் சுற்றுச்சூழலும் மேம்படும்...’’ நிதானமாகப் பேச ஆரம்பித்த விஷ்ணுபிரியாவின் வார்த்தைகளில் சமூக அக்கறை தெறிக்கிறது. சென்னை போன்ற மாநகரங்களில் உற்பத்தியாகும் குப்பைகளை, மனிதக் கழிவுகளை யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் அகற்றுவதற்கான மாற்று வழிகளைப் பேசுகிறது ‘மீள்’ எனும் ஆவணப்படம்.
இதன் இயக்குனர் இவர். ‘‘சொந்த ஊர் மதுரை. ஆர்க்கிடெக்சர் முடிச்சுட்டு பெங்களூருவுல கொஞ்ச நாள் வேலை செஞ்சேன். மரபு சார்ந்த பாரம்பரிய கட்டடங்கள்னா உயிர். அதனால அதைப் பத்தி ஆராய்ச்சி பண்ணலாம்னு வேலையை விட்டுட்டு ஊர் ஊரா சுத்தினேன். புதுப்புது நண்பர்கள் அறிமுகமானாங்க. அதுல ‘குக்கூ’ சிவராஜ் அண்ணா, கழிவறை வசதி இல்லாததால பெண் குழந்தைகளுக்கு ஏற்படுற சிரமங்களைப் பத்தி நிறைய சொன்னார். ரொம்பவே அதிர்ச்சியா இருந்துச்சு. அவர் பகிர்ந்த ஒரு நிகழ்வு என் வாழ்க்கையையே மாத்திடுச்சு...’’ நெகிழ்கிற விஷ்ணுபிரியா தன் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்த அந்த சம்பவத்தைப் பகிர்ந்தார்.
‘‘சிறுமி ஒருத்தியோட கிராமத்துல கழிவறையே இல்ல. அந்த ஊர் மக்கள் காட்டுலதான் மலம் கழிப்பாங்க. அவள் படிக்கற ஸ்கூல்லயும் சரியான கழிவறை வசதி இல்ல. கூச்ச சுபாவத்தால மலத்தை அடக்கி வைச்சிருக்கா. நாளடைவுல மலத்தை அடக்கி வைக்கறது அவளுக்கு ஒரு பழக்கமாவே மாறிடுச்சு. இதனால உடல் நிலை பாதிப்படைஞ்சு இறந்துட்டா...’’ என்று வருந்துகிற விஷ்ணுபிரியாவிற்கு கட்டடவியல் சார்ந்து உயர்கல்வி படிப்பதற்காக சிட்னி பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தது. ஆனால், சிட்னிக்குச் செல்லாமல் கையில் கேமராவை எடுத்து விட்டார். இதற்குக் காரணம் அந்தச் சிறுமி.
‘‘கிராமப்புறங்கள்ல பெரும்பாலான பெண் குழந்தைகள் பருவமடைஞ்சதும் படிப்பை நிறுத்திடுறாங்க. மாதவிடாய் காலத்துல அவங்க பயன்படுத்த சரியான கழிவறை வசதிகள் பள்ளியில இல்லாததே இதுக்குக் காரணம். இதைப் பத்தி எல்லாருமே பேசினாலும் எந்த மாற்றமும் ஏற்படல. அரசுப் பள்ளிகள்ல கழிப்பறை வசதிகள் இருந்தாலும் முறையா பராமரிக்கப்படாம பூட்டிக்கிடக்கு. போதுமான தண்ணி வசதியும் இல்ல. அதனால குறைவான தண்ணில கழிவறையைப் பயன்படுத்த என்னென்ன வழிகள் இருக்குனு தேட ஆரம்பிச்சேன். அப்ப அறிமுகமானதுதான் ‘சூழல் மேம்பாட்டுக் கழிவறை (Ecosan Toilet)’.
இதைப்பத்தி நிறையப்பேருக்கு தெரிஞ்சிருந்தும் பெருசா எந்த விழிப்புணர்வும் இல்ல. அதனால சூழல் மேம்பாட்டுக் கழிவறையைப் பரவலா எடுத்துட்டுப் போகணும்னு நினைச்சேன். அதுக்காகவே இந்த ஆவணப்படம்...’’ என்றவர் சிறிது மௌனத்திற்குப் பிறகு தொடர்ந்தார். ‘‘வீடு, ஹோட்டல்னு எல்லா இடத்திலும் உற்பத்தியாகற குப்பைகளை ஒரே குப்பைத்தொட்டிலதான் போடறோம். துப்புரவுப் பணியாளர்கள் அதை எடுத்துட்டுப்போய் ஒரு இடத்துல மலையா குவிக்கறாங்க, இல்லைன்னா எரிக்கறாங்க. எரிக்கும்போது விஷவாயு உற்பத்தியாகுது. குவிக்கும்போது அந்தக் குப்பைகள் நசிஞ்சுபோய் நிலத்தடி நீரைப் பாதிக்குது.
இதுக்கு மாற்று வழியா மக்கும் குப்பை, மக்காத குப்பைனு தனித்தனியா பிரிச்சுப்போடலாம். பிறகு மக்கும் குப்பையை மறுசுழற்சி செஞ்சு விவசாயத்துக்கு உரமா பயன்படுத்தலாம். மக்காத குப்பையை மீண்டும் மறுசுழற்சிக்கு அனுப்பலாம். இதுமட்டுமல்ல, வீடு சுத்தமா இருந்தா போதும்னுதான் எல்லாரும் நினைக்கறோம். ஆனா, வீட்லயிருந்து வெளியேறுற கழிவுகள் என்னவாகுது? எங்க போகுது? இதனால சுற்றுச்சூழலுக்கு என்னென்ன பாதிப்புகள்? நமக்கு எதுவுமே தெரியாது. இதைப் பத்தி யோசிக்கறதும் கிடையாது.
20, 30 வருஷங்கள் கழிச்சு இந்த கழிவுகளால நமக்கு ஏற்படப்போற விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும். அதனால இப்போதிருந்தே இதிலிருந்து தப்பிப்பதற்கான மாற்று வழிகள் என்னன்னு தேட ஆரம்பிக்கணும். கழிவுகளை, குப்பைகளை இயற்கைக்குப் பாதிப்பில்லாம எப்படியெல்லாம் மறுசுழற்சி செய்யலாம்னு யோசிக்கணும். அதே நேரத்துல இதை கையாளுற மக்களுக்கும் பாதிப்பு இருக்கக்கூடாது. இந்த விஷயங்களை எல்லாம் ‘மீள்’ பேசுகிறது...’’ அழுத்தம் திருத்தமாக முடித்த விஷ்ணுபிரியாவின் ஆவணப்படம் உருவாக குடும்பமும், நண்பர்களும் பெரும் உதவியாக இருந்திருக்கிறார்கள்.
-த.சக்திவேல்
சூழல் மேம்பாட்டுக் கழிவறை
மேற்கத்திய நாடுகளில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது ‘சூழல் மேம்பாட்டுக் கழிவறை’. குறைவான தண்ணீர் பயன்பாடு, துர்நாற்றம் இல்லாதது, சுகாதாரமானது ஆகியவைதான் இதன் சிறப்பு. இதில் மலம் கழிக்க ஒரு குழி, சிறுநீர் கழிப்பதற்கு ஒரு துவாரம், கழுவும் நீர் வெளியேற ஒரு துவாரம் என்று தனித்தனியாக இருக்கும். சிறுநீர் வெளியேறும் துவாரத்துடன் குழாய் அமைத்து அதை பானையுடன் இணைத்திருப்பார்கள். பானையிலும் துவாரங்கள் இருக்கும். பானையில் சேகரிக்கப்படும் சிறுநீர் அந்த துவாரங்கள் வழியாக தோட்டத்துக்குப் பாயும்.
இத்தகைய கழிவறை அமைக்கும்போது தோட்டம் இருப்பது நல்லது. இல்லாதவர்கள் பானைகளுக்குப் பதிலாக பிளாஸ்டிக் கேன்களைப் பயன்படுத்தலாம். ஆனால், எப்பொழுதும் அவை மூடியே இருக்கவேண்டும். கழிவறைக்குள்ளே மழைநீர் விழாதவாறு கூரை அமைக்க வேண்டும். கழிவறையின் உள்ளே தண்ணீர் வாளியோ அல்லது தண்ணீர் குழாயோ இருக்கக்கூடாது. வெளியில் இருந்துதான் ஒவ்வொரு தடவையும் தண்ணீர் எடுத்துச் செல்ல வேண்டும். மலம் கழித்தவுடன் மலக்குழியில் மரத்தூள், சாம்பல், மண், சுண்ணாம்புத் தூள் ஆகியவற்றில் ஏதோவொன்றை இரண்டு கைப்பிடி அளவு போட வேண்டும்.
இது நாளடைவில் எருவாகிவிடும். இந்த எரு பாதுகாப்பானது என்று ஆய்வுகள் சொல்கிறது. மட்டுமல்ல, அந்த எரு விவசாயத்துக்கு உரமாகவும் பயன்படுகிறது. ‘‘செப்டிக் டேங்க் கழிவறையைப் பயன்படுத்துபவர்கள் ஆறு, கால்வாய் என அனைத்து நீர் நிலைகளையும் அசுத்தப்படுத்துகின்றனர். மனிதக் கழிவுகளை பூமிக்குள் செலுத்துவதால் நிலத்தடி நீரும் கெட்டுப்போகிறது. இதனால் கொடிய நோய்கள் பரவுகிறது. இதற்கெல்லாம் ஒரே தீர்வு ‘சூழல் மேம்பாட்டுக் கழிவறை’தான். இந்தக் கழிவறையால் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படுவதுடன் செப்டிங் டேங்க் முறையும் அழிந்துபோகும்...’’ என்கின்றனர் சூழலியல் ஆர்வலர்கள்.
|