சன் கண்டுபிடித்த ஆப்கன் மன்னன்!



கடந்த 2017ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்காக ‘ஹைதராபாத் சன் ரைசர்ஸ்’ அணி, நாலு கோடி ரூபாய் கொடுத்து ஊர் பேர் தெரியாத ஒரு பதினெட்டு வயது வீரரை ஏலம் எடுத்தபோது அனைவருமே ஆச்சரியப்பட்டார்கள். போயும் போயும் கத்துக்குட்டி ஆப்கானிஸ்தான் அணியின் சின்னப்பயலையா  இவ்வளவு பெரிய தொகைக்கு எடுக்க வேண்டும் என்று ஆதங்கப்பட்டார்கள். ஆனால், சன் ரைசர்ஸின் கணக்கு என்றுமே தப்பாது. சொல்லி அடித்த  கில்லியாக ஐபிஎல்லில் மட்டுமல்ல, சர்வதேச கிரிக்கெட்டிலும் இன்று ஒப்பற்ற சாதனை மன்னன் வேறு யாருமல்ல, ரஷித்கான்தான்.

ஆப்கானிஸ்தான் அணியின் மாயாஜால வலதுகை சுழல்பந்து மன்னன். ஒரு நாள் மற்றும் டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இன்று நெம்பர் ஒன்  பவுலர் இவர்தான். இதுவரையிலான ஐசிசி தரவரிசையில் ஒட்டுமொத்தமாகவே (டெஸ்ட், ஒருநாள், டி-20) நெம்பர் ஒன் இடத்தை (பேட்டிங், பவுலிங்  இரண்டுமே சேர்த்து) பிடித்தவர்களில் இவர்தான் வயதில் இளையவர். இந்த சாதனையை இருபது ஆண்டுகளாக தக்கவைத்துக் கொண்டிருந்த  பாகிஸ்தான் வீரர் சக்லைன் முஷ்டாக் வசமிருந்து தட்டிப் பறித்திருக்கிறார் ரஷித்கான்.

சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணிக்கு (தற்காலிக) கேப்டனாக நியமிக்கப்பட்டதன் மூலம்  ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20) மிக இளம் வயது கேப்டன் என்கிற சாதனையையும் படைத்திருக்கிறார். இவர்  தலைமையிலான அணிதான் இந்தத் தொடரின் சாம்பியன் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதிலும் ஜாம்பவான் அணியான மேற்கிந்தியத் தீவுகளை லீக்  மற்றும் இறுதிப் போட்டிகளில் கத்துக்குட்டி அணியான ஆப்கானிஸ்தான் புரட்டி எடுத்தது என்பதுதான் விசேஷமே.

சாதனை மன்னர்களே வியப்படையும் சாதனையாக ஒரு நாள் போட்டிகளில் அதிவிரைவாக 100 விக்கெட்டுகள் (44 போட்டிகள்) என்கிற இலக்கை 19  வயதிலேயே எட்டியிருக்கிறார். 1998ல் ரஷித்கான் பிறந்தபோது ஆப்கானிஸ்தானில் போர் நடந்து கொண்டிருந்தது. குடும்பமே பாகிஸ்தானுக்கு  இடம்பெயர்ந்து உயிர் பிழைத்தது. ரஷித்கானின் குடும்பமே ஒரு கிரிக்கெட் அணிக்கு நிகரானது. இவரோடு சேர்த்து குழந்தைகள் மொத்தம் பத்து பேர்!  ரஷித், குழந்தையாக இருந்தபோது பாகிஸ்தானின் அதிரடி மன்னன் அப்ரிடி, தன் கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சத்தில் இருந்தார்.

அண்ணன்களோடு கிரிக்கெட் ஆடும்போது தன்னை ‘அப்ரிடி’ என்றே அழைக்க வேண்டுமென அடம் பிடிப்பாராம் ரஷித். அப்ரிடியைப் போன்றே  தன்னுடைய பந்து வீச்சு பாணியையும் அமைத்துக் கொண்டார். ஆப்கானிஸ்தானில் நிலவரம் சரியானதுமே மீண்டும் தாய்நாட்டுக்கு குடும்பம் வந்தது.  2015ல் தன்னுடைய பதினேழாவது வயதில் ரஷித், சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொள்ள ஆரம்பித்தார். மூன்றே ஆண்டுகளில் கிரிக்கெட் உலகம்  கண்டிராத சாதனைகளை, கத்துக்குட்டி அணியான ஆப்கானிஸ்தானுக்காக விளையாடிக் கொண்டே படைத்திருக்கிறார்.

2017 ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடியபோது அவருடைய சட்டை எண் 19. ராசியான அந்த எண்ணையே பிறகு விளையாடிய  அத்தனை அணிகளிலும் கேட்டு வாங்கிக் கொண்டார். அடுத்த இருபது ஆண்டுகளில் ரஷித்கான், இதுவரை கிரிக்கெட் உலக பவுலிங் துறையில்  படைக்கப்பட்ட அத்தனை சாதனைகளையும் முறியடிப்பார் என்று கணிக்கிறார்கள் கிரிக்கெட் நிபுணர்கள். ‘சன்’னின் கண்டுபிடிப்பு. கிண்ணென்றுதான்  இருப்பார்.

-யுவகிருஷ்ணா