காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்



யுவகிருஷ்ணா - 51

எண்பதுகளின் இறுதியிலும், தொண்ணூறுகளின் தொடக்கத்திலும் பாப்லோ எஸ்கோபாரும், அவரைச் சார்ந்தவர்களும் இடம் பெயர்ந்து கொண்டே  இருக்க வேண்டியதாயிற்று. தலைமறைவாக இருந்து கொண்டே கார்டெல்லை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருந்தார் பாப்லோ. ஆரம்பத்தில்  கொலம்பிய போலீசும், மிலிட்டரியும், பின்னர் அமெரிக்க சிஐஏவின் ஒட்டுண்ணிகளாக செயல்பட்ட சில போட்டி கார்டெல்கள், அமெரிக்காவின் டெல்டா  ஃபோர்ஸ் ஏஜெண்டுகள், பாப்லோவின் கண்ணுக்குத் தெரியாத எதிரிகள் ஏவிவிட்ட தொழிற்முறை கொலையாளிகள் என்று அவரை வேட்டையாட  அலைந்து கொண்டிருந்தோரின் பட்டியல் பெரியது.

அரசியலில் ஈடுபட்ட புதிதில் பாப்லோவை ஆதரித்த ஊடகங்கள் பலவும், அமெரிக்க மிரட்டலுக்கு பயந்து அவரை உலகின் மிகக்கொடூரமான  பயங்கரவாதியாக கட்டமைக்கத் தொடங்கின. பாப்லோவை ஒழித்துவிட்டால் உலகத்தில் போதைத் தொழிலே நடக்காது என்கிற அளவுக்கு ஊடகங்கள்  ஊதிக் கொண்டிருந்தன. உலகப் பணக்காரர்களில் டாப்-10 பட்டியலில் இருப்பவர் பேய் மாதிரி அலைந்து கொண்டிருக்க வேண்டியதானது.  கொலம்பியாவில் திடீர் திடீரென்று எங்காவது தோன்றுவார். அதே வேகத்தில் காணாமல் போவார். மெதிலின் நகருக்குள் பாப்லோ வருகிறார் என்றால்  விரல் விட்டு எண்ணக்கூடிய சிலருக்கு மட்டுமே தகவல் தெரியும்.

நாக்கை அறுத்தாலும் பாப்லோவை அவர்கள் காட்டிக் கொடுக்கமாட்டார்கள் என்னுமளவுக்கு முரட்டு விசுவாசிகள் அவர்கள். பொதுவாக  கொலம்பியாவின் ஏழைகளுக்கு பாப்லோ மீது பாசம் இருந்தது. அவர் தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியவர், அரசாங்கத்துக்கே தங்கள் மீது  அக்கறை இல்லாதபோது, தங்களுக்காக வாழ்ந்தவர் என்கிற எண்ணம் வலுவாகவே இருந்தது. எனவேதான் அத்தனை ஆண்டுகளாக உலகின் நெம்பர்  ஒன் நாட்டுக்கே அவரால் ‘தண்ணீர்’ காட்ட முடிந்தது. ஒரு காலத்தில் மக்களை பாப்லோ பாதுகாத்தார். அவருடைய கடைசிக் காலம் முழுவதும்  அவரைப் பாதுகாத்தவர்கள் மக்களே.

பாப்லோவின் தலைமறைவுக் காலம் பெரும்பாலும் அவரது பண்ணை வீடுகளிலேயே அமைந்தது. காடுகளுக்கு மத்தியிலும், உயரமான மலைகளிலும்,  வயல்கள் சூழ்ந்த கிராமங்களிலும் என்று விதவிதமான லொக்கேஷன்களில் பாப்லோவுக்கு சொந்தமான சொத்துகள், கொலம்பியா முழுக்க ஏராளமாக  இருந்தன. பாப்லோ எங்கிருக்கிறார் என்பது குஸ்டாவோ உள்ளிட்ட வெகுசிலருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். அந்த வெகுசிலர் எங்கிருக்கிறார்கள்  என்று கூட போலீஸால் கண்டுபிடிக்க முடியாது என்பதே பரிதாபம். யாரையாவது பாப்லோ சந்திக்க விரும்பினால் அடுத்த 24 மணி நேரத்துக்குள்ளாக  அவருக்கு முன்பாக ‘கட்டாயப்படுத்தப்பட்டாவது’ இழுத்து வரப்படுவார்கள்.

பெரும்பாலும் இம்மாதிரி இழுத்து வரப்பட்டவர்கள் அந்நாளைய முன்னணி வக்கீல்களே. பாப்லோவுக்கு எதிரான வழக்குகளில் கண்ணில் விரல்விட்டு  ஆட்டிக் கொண்டிருந்த வக்கீல்கள் பலரும் இம்மாதிரி இழுத்து வரப்பட்டு, பாப்லோவின் கால்களில் விழுந்து, அவரது கைகளை முத்தமிட்டு  உயிர்ப்பிச்சை வாங்கிக் கொண்டு ஓடினார்கள். ‘பாப்லோவை ஒழிப்பேன்’ என கோஷம் போட்ட சில அரசியல்வாதிகளுக்கும் இதுபோல அன்பான  வரவேற்பு வழங்கப்பட்டதுண்டு. பாப்லோ எந்த அளவுக்கு உஷாராக இருந்தார் என்பதற்கு சான்று அவருடைய அம்மா. தன் மகனை அவர் சந்திக்க  விரும்பும் போதெல்லாம், ஒரு காரில் அழைத்துச் செல்லப்படுவார்.

அப்போது அவருக்கு ஒரு கருப்புக் கண்ணாடி மாட்டப்படும். அந்த கண்ணாடியை மாட்டிக் கொண்டால் எதுவுமே தெரியாது. சொந்த அம்மாகூட ஏதோ  காரணத்தால் போலீசுக்கு தன்னுடைய இருப்பிடம் குறித்த தகவலை கசியவைத்து விடலாம் என்கிற சந்தேகம் ஏனோ அவருக்கு இருந்து கொண்டே  இருந்தது. பாப்லோ, தன்னுடைய மனைவி, மகள் மற்றும் மகன் சகிதமே ஒவ்வொரு இடத்துக்கும் இடம்பெயர்ந்து கொண்டிருந்தார். ஒருமுறை  மகளுக்கு நல்ல காய்ச்சல். அப்போது கொலம்பியாவில் குளிர் காலம். ஒரு மலை மீதிருந்த காட்டேஜ் வீட்டில் தங்கியிருந்தார்கள்.

அங்கிருந்த கனப்பு அடுப்பில் விறகுகளைப் போட்டு குளிர் காய்ந்து கொண்டிருந்தார்கள். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பாப்லோ கிதார் இசைத்து, அவரே அருமையாகப் பாடுவார். மகள் தூங்குவதற்காக பாப்லோ பாடிக் கொண்டிருந்தார். மகள் தூங்க ஆரம்பிக்கிறாள். அடுப்பில் போடுவதற்கு விறகு  தீர்ந்துவிட்டது. அடுப்பு அணைந்துவிட்டால் மகளுக்கு குளிருமே என்று பாப்லோவுக்கு கவலை. உதவியாளரை அனுப்பி எங்காவது காய்ந்த விறகுகளை வாங்கிவரச் சொன்னார். அவன் வருவதற்குள் அணைந்துவிடுமோ என்று நினைத்தவர், சட்டென்று தன்னுடைய பையை எடுத்துக் கொட்டினார். கரன்ஸி  கட்டுகள்.

அவற்றைத் தூக்கி எந்த சலனமும் இல்லாமல் அடுப்பில் போட்டு மகளைக் குளிர்காய வைத்தார். சாம்பலான பணம், பல மில்லியன் டாலர்கள்  என்கிறார்கள்! மகள் மீது பாப்லோ கொண்ட பிரியத்துக்கு சான்றாக இந்த சம்பவத்தை இன்றும்கூட கொலம்பியாவில் சிலிர்ப்பாக சொல்லிக்  கொண்டிருப்பார்கள். மெதிலின் நகரின் ராஜாவாக ஆண்டு கொண்டிருந்த காலத்திலும் சரி. இதுபோன்ற தலைமறைவு வாழ்க்கையின் போதும் சரி,   பாப்லோ, ஒரே மாதிரியாகத்தான் இருந்தார். எது நடக்கிறதோ அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் அவருக்கு இருந்தது.

“வரலாற்றில் எந்தவொரு டானும் வயதான காலத்தில் மரணமடைந்தது கிடையாது. ஏனெனில், அவனுக்கு வயதாக போலீசும், சட்டமும்  அனுமதிக்காது...” என்று சிரித்தவாறே சொல்வார். எப்போதுமே பாப்லோ இரவில் வெகுநேரம் விழித்திருப்பார். பிற்பகலில்தான் கண் விழிப்பார். அவரது  உயிர் நண்பன் குஸ்டாவோ இதற்கு நேரெதிர். மாலையிலேயே தூங்கி, அதிகாலையிலேயே கண் விழிப்பான். 24 மணி நேரத்தை இவர்கள் இதுமாதிரி  ‘ஷிப்ட்’ போட்டு பார்த்துக் கொண்டதாலேயே பல பிரச்னைகளுக்கு தீர்வு காண முடிந்தது.

பாப்லோவுக்கு பல் துலக்குவதில் அலாதி பிரியம். விழித்து எழுந்ததுமே பல் துலக்குவதற்கு மட்டுமே அரை மணி நேரம் எடுத்துக் கொள்வார்.  விலையுயர்ந்த டூத் பேஸ்ட் மற்றும் பிரஷ் பயன்படுத்துவார். பற்கள் பளீரென்று இருப்பதுதான் ஒரு பிசினஸ்மேனுக்கு அவசியமான தோற்றத்தைக்  கொடுக்கும் என்பார். குளித்து முடித்ததுமே பளிச்சென்று ஒரு சட்டையை எடுத்து அணிவார். ஒருநாளைக்கு ஒரு சட்டை. ஒருமுறை அணிந்த  சட்டையை மீண்டும் அணிவதில்லை. எனவே, ஆண்டுக்கு குறைந்தது 365 சட்டைகள் அவருக்கு தேவைப்பட்டன.

பாப்லோ எஸ்கோபார் அணிந்துவிட்டு கழற்றிய சட்டையை வாங்குவதற்கு கொலம்பியாவில் பெரும் போட்டா போட்டி நிலவியது. பார்ட்டிகளில் ‘இது  பாப்லோவோட சட்டை தெரியுமா?’ என்று கெத்து காட்டுவது அப்போது ஃபேஷன். சமூகத்தின் பெரிய மனிதர்கள் சிலருக்குமே கூட, பாப்லோ போட்ட  சட்டையை வாங்கி போட்டுக்கொள்ள வேண்டும் என்கிற ஆசை இருந்தது. பாப்லோவின் காலை உணவு பெரும்பாலும் சோள அடை, முட்டை  பொடிமாஸ், நறுக்கப்பட்ட வெங்காயம் மற்றும் தக்காளி. டிபன் முடித்ததுமே பால் கலக்காத திக்கான டிகாக்ஷன் காஃபி. குடும்பத்தோடு இருக்கும்போது  பாடுவது பாப்லோவுக்கு விருப்பம் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

சில நேரங்களில் பாதுகாப்புக் காரணத்துக்காக குடும்பத்தை வேறெங்காவது தனித்து தங்க வைப்பார். அதுபோன்ற சந்தர்ப்பங்களில் தன் மனைவிக்கு  காதல் ரசம் சொட்ட கவிதைகள், மகளுக்கு ரைமிங்கான பாடல்கள் என்று எழுதி தன்னுடைய பிரத்யேக கூரியர் மூலமாக கொடுத்து அனுப்புவார்.  கவிதை எழுத மூடு வராவிட்டால் பாட்டுப் பாடி, அதை கேசட்களில் ரெக்கார்டு செய்தும் அனுப்புவதுண்டு. தலைமறைவு வாழ்க்கையில் தன்  குடும்பத்தை - குறிப்பாக மகள் மேனுவலாவை - பிரிவதுதான் பாப்லோவுக்கு துயரமாக இருந்ததே தவிர, மற்றபடி வேறெந்த புகாரும் இல்லை.


(மிரட்டுவோம்)
ஓவியம் : அரஸ்