திரெளபதி ஆய்வில் அமெரிக்க அறிஞரின் கண்டுபிடிப்பு
வெகுமக்கள் வழிபாட்டில் மதம் நெகிழ்வானது...
1970 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தின் வடமாவட்டங்களில் இருந்த பல திரெளபதி அம்மன் கோயில்கள் பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்டவர் ஆல்ஃப் ஹில்டபெட்டல் (Alf Hiltebeitel) எனும் அமெரிக்க அறிஞர். இவர் இது தொடர்பாக எழுதிய பல புத்தகங்கள் ஆய்வாளர்கள், வரலாற்று மாணவர்கள் மத்தியில் மிகப் பிரபலம்.
 உதாரணமாக, மகாபாரதத்தில் கிருஷ்ணன் (The ritual of Battle: Krishna in Mahabharata), திரெளபதி வழிபாடு (Cult of Draupadi இரண்டு பாகங்கள்) இராஜபுத்திரர்கள், முஸ்லிம்கள் மற்றும் தலித் களிடையே திரெளபதி (Rethinking India’s Oral and Classical Epics: Draupadi among Rajputs, Muslims and Dalits), மற்றும் குற்றவாளிக் கடவுள்கள், அசுரர்களை வழிபடும் பக்தர்கள் (Criminal Gods and Demon Devotees) புத்தகங்கள் அழுத்தமான தடங்களைப் பதித்தவை.

அல்ஃபின் தமிழக ஆய்வுக் களப்பணிகளில் உதவியாக இருந்த பலரில் தில்லி அசோகா பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ரவீந்திரன் ஸ்ரீராமச்சந்திரனும் ஒருவர். ரவியிடம் பேசினோம். ‘‘1965களில் அமெரிக்காவின் சிக்காகோ பல்கலைக்கழகத்தில் தன் டாக்டர் படிப்பை மேற்கொண்டவர் ஆல்ஃப். ஆல்ஃப் எடுத்த ஆய்வுத் தலைப்பு இந்திய காவியங்களில் மிகவும் பிரபலமான மகாபாரதம்.
இந்த ஆய்வுக்காக சமஸ்கிருத மொழியையும் கற்றுக்கொண்டார். அவரின் ஆசிரியராக இருந்தவர் உலகின் மிகப் பிரபல சமய ஆய்வாளரான மெர்சியா எலியாட். ஆல்ஃப், மொழி கற்றுக்கொள்வதற்காக புனே வரையும் கூட வந்தவர்...’’ என்று சொல்லும் ரவி, ஆல்ஃபின் ஆய்வு எப்படி தமிழகத்தின் திரெளபதி ஆய்வு நோக்கி திரும்பியது என்பது பற்றியும் கூறினார்.‘‘தன் மகாபாரத ஆய்வுக்காக தொடச்சியாக 70 முதலே வருடந்தோறும் தமிழகத்துக்கு வந்துபோனார். 1980களில் தன் இரு மகன்களோடும் குடும்பத்தோடும் இரண்டு வருடங்கள் சென்னையிலேயே தங்கி தன் ஆய்வை மேற்கொண்டார்.
90களில் நான் பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரியில் நாட்டார் வழக்காற்றியலில் முதுகலை படித்துக் கொண்டிருந்தேன். அப்போது அந்தத் துறை ஒரு ஆய்வுப் பட்டறையை ஒருங்கிணைத்தது. அந்தப் பட்டறையில் ஆல்ஃபும் தன் ஆய்வு முறைகளைப் பற்றிப் பேசினார். இந்தத் தொடர்புதான் அவரின் தமிழக கள ஆய்வில் என்னையும் இணைக்க வைத்தது...’’ என்று சொல்லும் ரவி, ஆல்ஃபின் தமிழக ஆய்வுகள் பற்றியும் மகாபாரதத்தோடு தொடர்புடைய திரெளபதி அம்மன் வழிபாடு பற்றியும் அவர் கண்டடைந்த முடிவுகள் பற்றியும் பேசினார்.
‘‘திரெளபதி அம்மன் கோயில்கள் தமிழகத்தின் வடமாவட்டங்களில் பெரும்பான்மையாக இருக்கின்றன. திரெளபதி அம்மன் கோயில் மூல ஆலயமாக செஞ்சிக்கு பக்கத்தில் இருக்கும் மேலச்சேரி கோயில் திகழ்கிறது.
கேரளாவின் பாலக்காடு பக்கத்தில் இருக்கும் மன்னார்காடு எனும் ஊரில் ஒரு பெரிய திரெளபதி அம்மன் கோயில் உண்டு. இந்த இடத்துக்கு தமிழகத்திலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் மேலச்சேரியில் இருந்த திரெளபதி அம்மன் கோயிலிலிருந்து பிடிமண் எடுத்துதான் இந்தக் கோயிலைக் கட்டியதாக ஒரு வரலாறு உண்டு. இப்படி வடமாவட்டங்களில் திரெளபதி அம்மன் கோயில்கள் அதிகமாக - பிரபலமாக இருந்தாலும் தமிழகத்தின் பிற மாவட்ட கிராமங்களிலும் திரெளபதி அம்மனுக்கு கோயில்கள் உண்டு...’’ என்று சொல்லும் ரவி, ஏன் திரெளபதி அம்மன் கோயில்கள் வடமாவட்டங்களில் பிரபலமாக இருக்கிறது என்பது பற்றியும் எடுத்துரைத்தார்.
‘‘ஒவ்வொரு பிரதேசத்துக்கும் சிலவகையான கோயில்கள் பிரபலமாக இருக்கும். உதாரணமாக சுடலைமாடன் சாமி தென் மாவட்டங்களிலும், முனீஸ்வரன் கோயில்கள் மதுரையிலும், அண்ணன்மார் சாமி கோயில்கள் கொங்கு மாவட்டங்களிலும்தான் அதிகமாகக் காணப்படும். அப்படி வடமாவட்டங்களில் திரெளபதி அம்மன்.
மகாபாரதக் கதை வடமாநிலங்களில் உருவானாலும் அந்தக் கதை எப்படி இந்திய அளவில் அதுவும் தென் இந்திய மாநிலங்களான ஆந்திரம், கர்நாடகா மற்றும் தமிழகத்தின் உள்ளூர் வரலாற்றுக்கு ஏற்ப பாரதத்தின் தொடர்ச்சியோடும், வேறுபாடுகளோடும் காணப்பட்டது என்பதுதான் ஆல்ஃப் கண்டடைந்த முடிவு.
தமிழகத்தைப் பொறுத்தளவில் வடமாவட்டங்களில் திரெளபதி கோயில்களுடன் கூத்தாண்டவர் கோயில்களும் காணப்படுகின்றன. கூத்தாண்டவர் கோயில் என்பது அர்ச்சுனனின் மகனான அரவானுக்கான கோயில். கூவாகத்தில் இருப்பதுபோல தமிழகத்தின் பலபகுதிகளிலும் கூத்தாண்டவர் கோயில் உண்டு. இந்த அரவானை களப்பலி இட்டபிறகுதான் மகாபாரதப் போர் தொடங்கும் என்று பாரதக் கதை சொல்கிறது. கூத்தாண்டவருக்கான பெரிய கோயில் ஒன்று தருமபுரியில் இருக்கிறது. இதை பெரியாண்டவர் கோயில் என்று அந்தப் பகுதி மக்கள் அழைக்கிறார்கள்.
திரெளபதி அம்மன் கோயில்களில் பத்து நாள், பனிரெண்டு நாள், பதினெட்டு நாள் என்று திருவிழா நடைபெறும். இந்த நாள் கணக்கு அந்த வருடத்தின் சுபிட்சத்தைப் பொறுத்திருக்கும். இந்த நாட்களில் பகலில் மகாபாரதக் கதைப் பிரசங்கமும் இரவில் பாரதக் கூத்துக்களும் நடைபெறும். நாட்களின் எண்ணிக்கையைப் பொறுத்து கதையை விரித்தோ அல்லது சுருக்கியோ கதை சொல்வார்கள். கூத்தைப் பொறுத்து ஒவ்வொரு நாளும் விதவிதமான பாரதக் கூத்துக் கதைகள் இடம்பெறும்.
உதாரணமாக அர்ஜுனன் வில் வளைப்பு, திரெளபதி துகில் உரிதல், அர்ஜுனன் தபசு, கிருஷ்ணன் தூது போன்றவை...’’ எனச் சொல்லும் ரவி, திரெளபதி அம்மன் கோயில்களின் அமைப்புகள் பற்றியும் விவரித்தார்.‘‘பாரதத்தின் உள்ளூர் தன்மைக்கான வரலாற்றுக்கு உதாரணமாக திரெளபதி அம்மன் கோயில்கள் பெரும்பாலும் பல தர்காக்களுக்கு பக்கமாகவே இருக்கிறது. அதிலும் திரெளபதிக்கு காவல் தெய்வமாக இருக்கும் இரண்டு பேரில் ஒருவர் முஸ்லிம். ஒருவர் போத்த ராஜா என்றால் மற்றவர் முத்தால் ராவுத்தர்.
பொதுவாக வெகுமக்கள் சமயங்களில் மதம் என்பது மிக நெகிழ்வானதாக இருக்கும் என்பதற்கான மிக முக்கியமான ஆதாரமாக இருப்பது இந்த இரு காவல் தெய்வங்கள்...’’ என்று சொல்லும் ரவி, ஆல்ஃபின் எழுதிய இன்னொரு மிக முக்கியமான தொகுப்பு புத்தகமான குற்றவாளிக் கடவுள்கள் பற்றியும் விளக்கினார்.‘‘இந்தியா முழுவதும் இருக்கும் காவல் தெய்வங்கள் பற்றி பலர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. இதை தொகுத்தவர் ஆல்ஃப்.
உதாரணமாக, தமிழகத்தின் காவல்தெய்வங்களான மதுரை வீரன், காத்தவராயன்... என எல்லோருமே குற்றக் கடவுள்கள்தான். அதாவது அரசுக்கும், மேல் சமூகத்துக்கும் வேண்டுமென்றால் இந்த சாமிகள் மரபை மீறியவர்கள், குற்றவாளிகளாக இருக்கலாம். ஆனால், பொது மக்களுக்கு இந்த சாமிகள் விடுதலைக்கான, சுதந்திரத்துக்கான வழிகாட்டிகள். மாபலி, ஓர் அரக்க அரசன். ஆனால், கேரளாவில் மிகப் பிரபலமாகக் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை இந்த மாபலியை கொண்டாடும் விதமாகத்தான் கடைப்பிடிக்கப்படுகிறது...’’ என ஆல்ஃபின் ஆய்வுகள் குறித்து ரவி பகிர்ந்து கொண்டார்.
என்றாலும் ஆல்ஃபின் முடிவுகளை ஒட்டி சில அறிஞர்கள் மாறுபட்ட கருத்துகளை தொடர்ச்சியாக பதிவு செய்து வருவதும் தமிழகத்தில் நடக்கிறது. அதனால் என்ன... எல்லா ஆய்வுகளுக்குமே ஒரு தொடக்கம் வேண்டும்தானே! அது ஆல்ஃப் தொடங்கி வைத்த புள்ளி என்பது அவருக்குக் கிடைத்த பெருமை.
டி.ரஞ்சித்
|