
சினேகா மூன்றெழுத்து. பிரசன்னா ஐந்தெழுத்து. இவர்களுக்கு முதலில் ஏற்பட்ட நட்பு மூன்றெழுத்து. அது காதலாகிக் கல்யாணம் என்ற ஐந்தெழுத்து வரை சென்றதில் மகிழ்ச்சியே! சினேகாவின் சிரிப்பைப் போலவே வாழ்க்கையும் சந்தோஷமாகப் பூக்கட்டும்!
- ந.பேச்சியம்மாள், கடலூர் 1..

‘சீனாவிலிருந்து சினிமாவுக்குள்’ & சீன தேசத்திலிருந்து அபூர்வ கலைப்பொருட்களை சேகரித்து படங்களில் காட்சிகளை மெருகேற்றிவரும் சேகரிப்பாளர்கள் சேவை திரையுலகத்துக்குத் தேவை!
- எஸ்.சண்முகம், விழுப்புரம்.

சொந்தக்காலில் நிற்க விரும்பும் பெண்களின் ஆர்வத்துக்கு வாராவாரம் தீனி போடுகிறது ‘வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்கலாம்’ பகுதி. இதைப் பின்பற்றினால் வாழ்வில் புதிய திருப்பம் உண்டு!
- தி.அனுஷா, சிதம்பரம்.

‘முந்தானை முடிச்சு’ படத்தில் அழகாலும் நடிப்பாலும் ரசிகர்களை சுண்டியிழுத்த ஊர்வசி, ‘பேச்சியக்கா மருமகன்’ படத்தில் ரசிகர்களை மிரட்டி விடுவார் போலத் தெரிகிறதே! காமெடியில் கலக்கியவர் மாமியார் கேரக்டரில் அசத்துவாரா?
- எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்..

மிதுன ராசிக்காரர்களின் அதிபதி புதன் என்றாலும் வீட்டு யோகத்தை சுக்கிரன்தான் பூர்த்தி செய்வார் என்கிற செய்தி புதிது!
- மயிலை கோபி, சென்னை 83.

முகமது அலியைத் தோற்கடித்த குத்துச்சண்டை வீரர் ஜோ பிரேஸியரை புற்றுநோய் காவு வாங்கியுள்ள செய்தி படித்து வருந்தினேன். விஞ்ஞானிகளே... ஏதாவது மருந்து தயாரிங்க சீக்கிரம்!
- ஆர்.சிங்காரவேலன், திருவிடைமருதூர்.

அனைத்து ஜோக்குகளும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தன. வயிறு வலிக்க சிரிப்புதான் சார்... தொடரட்டும் உங்களது சிரிப்பு பணி!
- த.புகழேந்தி, கூகூர்.

‘பெட்ரோல் விலையை பாதியாகக் குறைக்கலாம்’ என்ற வெங்கடேஷின் விளக்கம் சூப்பர்! பணவீக்கம் சம்பந்தமான சந்தேகங்களும் தீர்ந்தது.
- கிருத்திகா, திருச்சி.