
வைரத்தை பட்டை தீட்டுவதைப்போல மெருகேற்றிக் கொண்டிருக்கிறார்கள் ‘பில்லா இரண்டாம் பாகத்தை’. படத்தில் அஜித்துடன் பங்குபெறும் நடிக நடிகையரை இந்தியா முழுவதும் வலைவீசித் தேடிப் பிடித்திருக்கிறார் இயக்குநர் சக்ரி டோலெட்டி. முதலில் ஹைதராபாத்திலும், விசாகப்பட்டினத்திலும் தொடர்ந்த ஷெட்யூலில் அஜித் நடித்த காட்சிகளைப் படமாக்கிய அவர், அடுத்து கோவா ஷெட்யூலுக்காக பார்வதி ஓமனகுட்டனை ஒப்பந்தம் செய்து ஹீரோயின் ஆக்கினார்.
29 நாட்கள் நடந்த கோவா ஷெட்யூலை வெற்றிகரமாக முடித்ததில் படத்தின் பாடல்கள், ஆக்ஷன் காட்சிகளைத் தவிர எஞ்சிய பகுதிகள் நிறைவடைந்து விட்டன. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜார்ஜியாவில் ஆக்ஷன் காட்சிகளுக்கு ஸ்பாட் வைத்த சக்ரி, முதல்கட்டமாக வில்லனைத் தேர்வு செய்யும் வேலையில் இறங்கினார். ஹீரோயின்களுக்காக தென்னக அழகும், வடக்கு வாளிப்பும் கொண்ட பார்வதியையும், பிரேசில் பியூட்டியான புரூனா அப்துல்லாவையும் கொண்டு வந்தவர், வில்லனுக்கும் அதேபோன்று இந்திய அளவில் அறிமுகம் மிக்க நடிகரைத் தேடி, கடைசியில் வித்யுத் ஜம்வாலை பிடித்திருக்கிறார்.

ஐந்து வருடங்களாக மாடலிங்கில் கலக்கி வரும் வித்யுத், சமீபத்திய பாலிவுட் ரிலீசான ‘ஃபோர்ஸ்’ படத்தில் ஜான் ஆப்ரஹாமுக்கு வில்லனானவர். நம்ம ஊர் ‘காக்க காக்க’தான் இந்தியில் ‘ஃபோர்ஸ்’ ஆனது. ஜானுக்கு நிகரான உயரம், உடல் உறுதிமிக்க நடிகரைத் தேடி, தேர்வுக்கு வந்த 500 பேரிலிருந்து வித்யுத்தை தேர்ந்தெடுத்தார் அந்தப்படத்தின் இயக்குநர் நிஷிகாந்த் காமத். ஆறடி உயரம் மட்டுமல்லாமல், இயல்பில் சிக்ஸ் பேக்குடன் இருக்கும் வித்யுத்தை அலுங்காமல் குலுங்காமல் கோலிவுட்டுக்குக் கூட்டி வருகிறார் சக்ரி.
வித்யுத் ஜம்வால் இளம் வயதிலிருந்தே தற்காப்புக் கலைகளான குங் பூ தொடங்கி நம் பாரம்பரிய களரிப் பயட்டு வரை தேர்ச்சி பெற்றதுடன், ஜிம்னாஸ்டிக்கிலும் பெரிய கை. அந்தக்கலைகளை பிரபலப்படுத்தும் வகையில் அதற்கான பயிற்சி முகாம்களையும் நடத்தி வருகிறார் அவர். இந்த அரிய ஆற்றல்களுடன் ஜார்ஜிய சண்டைக்காட்சிகளில் அஜித்துடன் மோத முஷ்டியை மடக்கிக் கிளம்பிவிட்டார் வித்யுத். என்றாலும், ‘‘தமிழ்ப்படத்தில், அதுவும் அஜித் சாருடன் சேர்ந்து நடிக்க நேர்ந்தது பெருமையான விஷயம்...’’ என்று தன் அடக்கத்தையும் காட்டிக்கொள்ளத் தவறவில்லை அவர்.
இன்னொரு பக்கம் பாடல்களின் இசைக்காக உழைத்துக் கொண்டிருக்கும் யுவன் ஒரு அட்டகாசமான ஐட்டம் நம்பரைப் போட்டுக் கொடுக்க, அதற்கும் ஒரு ஸ்பெஷல் நடிகையை ஆட வைக்கலாம் என்று தன் தேடுதலை இந்தியப் படவுலகெங்கும் சக்ரி விரிவுபடுத்திப் பார்க்க, சமீபத்திய டோலிவுட் சூப்பர்ஹிட் படமான ‘தூக்குடு’வில் மகேஷ் பாபுவுடன் ஒரு கலக்கல் குத்தாட்டம் போட்ட பாலிவுட் புயல் மீனாட்சி தீட்ஷித் அவர் கண்களில் சிக்கினார்.
உடலைப் பாம்பாக்கி மனதை மகுடி ஊதச்செய்யும் ஆட்ட பார்ட்டி மீனாட்சியிடம், அடுத்த ஃபிளைட்டில் போய் அக்ரிமென்ட் போட்டுத் திரும்பி விட்டார் படத்தைத் தயாரிக்கும் ஐஎன் என்டர்டெயின்மென்ட் சுனீர்.
இந்த சுவாரஸ்யங்களுடன் கடந்த புதனன்று படத்துக்குத் தேவையான புகைப்படங்களுக்காக அஜித்தை வைத்து ஒரு போட்டோ ஷூட் நடத்தி முடித்துவிட்டு, ‘தல’ உள்ளிட்ட தன் யூனிட்டுடன் ஜார்ஜியாவுக்குப் பறந்துவிட்டார் சக்ரி. அவர் திரும்பி வரும்போது மொத்த ஷூட்டிங்கும் முடிந்திருக்கும் என்று சத்தியமே செய்யலாம்.
வேணுஜி