அன்றைய டாப் ஸ்டார் எம்.ஜி.ஆர், இன்றைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் & இருவருக்கும் நிறைய வெற்றிப்படங்களைத் தந்த நிறுவனம் தேவர் ஃபிலிம்ஸ். எம்.ஜி.ஆரின் ஆஸ்தான தயாரிப்பு நிறுவனம் என்றே தேவர் ஃபிலிம்ஸை சொல்வார்கள். ‘பூஜை போட்டா, மூணு அமாவாசையில படம் முடியணும்... அடுத்த பௌர்ணமிக்கு ரிலீசாகணும்’ என்பாராம் அதன் நிறுவனரான சாண்டோ சின்னப்ப தேவர். ஹீரோ எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் எந்த சமரசமும் கிடையாது. இதனாலேயே ‘கோலிவுட்டின் இடி அமீன்’ என அழைக்கப்பட்டிருக்கிறார். தயாரிப்பாளர் ரோல் தவிர்த்த மற்ற இடங்களில் நடிகர்களின் நல்ல நண்பர், வள்ளல், முருக பக்தர். சினிமாவையும் சிவமைந்தனையும் நேசித்த சின்னப்ப தேவரின் குடும்பம் இப்போது மீளமுடியாத வறுமையில் இருக்கிறது.
‘நலிந்து போன தங்களுக்கு ஏதாவது உதவி கிடைக்குமா’ என தயாரிப்பாளர் சங்கத்தை அவர்கள் அணுகியதாகத் தெரியவர, சின்னப்ப தேவரின் ஒரே மகனான தண்டாயுத பாணியை
சந்தித்தோம். நீண்ட தயக்கத்துக்குப் பின் பேசுகிறார் அவர்...
‘‘தேவர் ஃபிலிம்ஸ் படம்னா அப்படியொரு பெருமை இருந்திச்சு. வெற்றியும் வித்தியாசமும்தான் காரணம். ‘எம்.ஜி.ஆரை வச்சே மூணு மாசத்துக்கொருக்கா படமெடுக்கிறாங்களேய்யா’ன்னு ஃபீல்டுல பேசுவாங்க. எம்.ஜி.ஆரை வச்சுத்தான் முதல் படமான ‘தாய்க்குப்பின் தாரம்’ ஆரம்பிச்சோம். ஷூட்டிங்ல எம்.ஜி.ஆர். ஒத்துழைப்பு கொடுக்கிறது பத்தி அப்ப பலதரப்பட்ட பேச்சுகள் இருந்திச்சு. அப்பா எதையும் காதுல போட்டுக்காம படத்தை எடுத்தார். அதுக்குப் பின்னாலதான் அவங்க ரெண்டு பேருக்குமான நட்பு அதிகமாச்சு. ‘விவசாயி’, ‘நல்ல நேரம்’ போன்ற படங்கள் பிற்காலத்துல அவர் அரசியலுக்கு வந்தப்ப உதவுச்சு.
எம்.ஜி.ஆர். படங்களையே தொடர்ந்து தயாரிச்சாலும் இன்னொரு புறம், அப்ப இருந்த மத்த நடிகர்களை வச்சும் படமெடுத்திருக்கோம். முத்துராமன், ஜெய்சங்கர் போன்றவர்களை உதாரணமாச் சொல்லலாம். எங்க கம்பெனியில நடிக்காதவர், நடிகர் திலகம் சிவாஜிகணேசன்தான். என்னவோ அவரை வச்சு எடுக்க முடியாமலே போயிடுச்சு.
எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வந்து தமிழக முதல்வர் ஆன பின்னால ரஜினி பக்கம் திரும்புனோம். ‘அன்புக்கு நான் அடிமை’, ‘அன்னை ஓர் ஆலயம்’, ‘தாய்வீடு’, ‘ரங்கா’ எல்லாமே எங்க கம்பெனி படங்கள்தான். ‘தாய்வீடு’ அப்பா இறந்ததுக்குப் பிறகு எடுத்த படம். ரஜினி படங்களுக்கு வசூலைக் கேக்கவா வேணும்? கடைசியா நாங்க எடுத்த படமும் ரஜினி நடிச்சு குஷ்பு அறிமுகமான ‘தர்மத்தின் தலைவன்’தான்.
சினிமாவுல இருந்தவரை அப்பா அதை அவ்வளவு நேசிச்சார். வித்தியாசமா ஏதாச்சும் பண்ணணும்ங்கிற எண்ணம் எப்பவுமே அவருக்கு இருந்திச்சு. ஆடு, மாடு, நாய், குதிரை, குரங்குகளை சினிமாவுல நடிக்க வச்சதெல்லாம் அப்படித்தான். எவ்வளவு வேணாலும் மெனக்கெடுவார். இல்லாட்டி, நாத்திகம் பேசிட்டிருந்த எம்.ஆர்.ராதாவை ஆத்திகரா நடிக்க வைக்க முடிஞ்சிருக்குமா?
திடீர்னு இந்தி சினிமா மேல ஆசை வர அங்கயும் கால் பதிச்சு நினைச்சதைச் செஞ்சு முடிச்சார். ராஜேஷ் கன்னாவை வச்சு எடுத்த இந்திப்படமும் நல்லா ஓடுச்சு. அதெல்லாம் ஒரு காலம் தம்பி. கனவு மாதிரி வந்திட்டுப் போயிடுச்சு’’ & கறுப்பு வெள்ளை காலம், தண்டாயுதபாணியின் நினைவுகளில் அப்படியே பதிந்திருக்கிறது.

‘‘சினிமா எடுக்கறதுல இருந்த ஆர்வம் சேர்த்து வைக்கிறதுல இல்லாமப் போயிடுச்சு அப்பாவுக்கு. அன்னிக்கு தேவைக்குப் போதுமான பணம் இருந்தா போதும்... மிச்சத்தை கேக்கற
வங்களுக்குக் கொடுத்திடுவார். சினிமா வியாபாரத்தில் படத்தோட உரிமையை மாத்தி விடுற வழக்கம் அப்பவே இருந்திச்சு. ஐந்தாண்டுக்கு ஒருத்தருக்கு விநியோக உரிமை தந்தா, அடுத்து வேற ஆளுக்கு மாத்தி விடுவாங்க. தயாரிப்பாளர்கள் ஒரே படத்தை வச்சு பணம் சம்பாதிக்க இது நல்ல வழியா இருந்திச்சு. இந்த மாதிரி பிசினஸ் அப்பாவுக்குப் பிடிக்கலை. ‘படத்தை வித்தாச்சு... நடிகர்கள் சம்பளம் வாங்கிட்டாங்க... நமக்கும் கொஞ்சம் லாபம் கிடைச்சிடுச்சா, அத்தோட விட்டுடணும்’ங்கிறது அவரோட பாலிசி. ‘இப்படிப் பொழைக்கத் தெரியாம இருந்திருக்காரே’ன்னு எஸ்.பி.முத்துராமன்கூட இன்னிக்கும் சொல்வார்.
அப்பா மறைவுக்குப் பின்னால, நிலையான மூலதனம் ஏதும் இல்லாம சினிமா ஃபீல்டை சமாளிக்க எங்களுக்குத் தெரியலை. படத்தயாரிப்புகளைக் குறைக்க வேண்டி வந்தது. 3டி படம் வெளியிடலாம்னு இறங்குனதுல ஏகப்பட்ட நஷ்டம். பட்ட கால்லயே படும்ங்கிற மாதிரி பிரச்னைகள் சூழ, கடைசியில சினிமாவை விட்டே ஒதுங்கியாச்சு.
தமிழ் சினிமாவோட தலைநகரான சென்னையில கோலோச்சுனவங்க நாங்க. இன்னிக்கு சென்னைக்கு வந்தா தங்கறதுக்கு இடமில்லை. இப்ப பட்டுக்கோட்டை பக்கம் கிராமத்துல, மாமனார் வீட்டோட இருந்து விவசாயத்துல அவங்களுக்கு ஒத்தாசை பண்ணிட்டிருக்கேன். பழனி, மருதமலை, திருச்செந்தூர்னு ஏராளமான முருகன் சன்னதிகள்ல அப்பா செய்த திருப்பணிகள் நிறைய. அந்த முருகன் வந்து ஏதாச்சும் அதிசயம் நிகழ்த்துனாத்தான் திரும்பவும் சினிமா பக்கம் நாங்க வரமுடியும். அது நடக்கும்னு ஒரு சின்ன நம்பிக்கை எனக்குள்ள இப்பவும் இருந்துட்டுதான் இருக்கு...
கொஞ்ச நாளைக்கு முன்னால சென்னை போனபோது, தயாரிப்பாளர் சங்கம் பக்கம் போயிருந்தேன். எம்.ஜி.ஆர்., ரஜினியோட பழைய படங்களோட ரீகலெக்ஷனே இப்ப வர்ற புதுப்படங்களோட வசூலை மிஞ்சிடுதுன்னு கேள்விப்பட்டேன். ‘ராயல்டி, அது இதுன்னு ஏதாச்சும் கிடைக்கும்னா தகவல் சொல்லுங்க’ன்னேன். அவ்வளவுதான். மத்தபடி என்னோட இப்போதைய எதிர்பார்ப்பெல்லாம், திரும்பவும் ‘தேவர் ஃபிலிம்ஸ்’ பேனர்ல படம் கொண்டு வரமுடியுமாங்கிறதுதான். ரஜினியைக்கூட இதுசம்பந்தமா போய்ப் பார்க்கச் சொன்னாங்க சில நலம் விரும்பிகள். அதுக்குள்ள அவருக்கும் உடம்பு முடியாமப் போக, எனக்கும் சின்னதா ஒரு தயக்கம். அவர் முதல்ல முழுசா குணமாகி வரட்டும். அப்புறம் பார்க்கலாம்னு விட்டுட்டேன்’’ என்கிறார் தண்டாயுதபாணி.
அய்யனார் ராஜன்
படங்கள்: புதூர் சரவணன், தயாநிதி