‘கல்லுக்கும், மண்ணுக்கும் முன் தோன்றியது திராவிடக்குடி. தமிழே அந்தக் குடிக்கு தலை மொழியானது...’ என்று சொல்லித்தான் தொடங்குகிறதாம் ஆகஸ்ட் சினிமாவின் ‘உருமி’ திரைப்படம். தென்னக மொழிகள் தமிழிலிருந்து பிரியாத சேரநாட்டுப் பகுதியில், பதினைந்தாம் நூற்றாண்டில் ஆரம்பிக்கிறது இந்தப்படம்.
கைகொள்ளாத தேசிய, சர்வதேச விருதுகளைப் பெற்றிருக்கும் ஒளிப் பதிவாளர், இயக்குநர் சந்தோஷ் சிவனின் பல வருடக் கனவாக இருந்த இந்தப்படம், இரண்டரை ஆண்டுகள் உழைப்பில் தமிழ், மலையாளம் இரு மொழிகளிலும் தயாரிக்கப்பட்டு கேரளாவில் வெளியாகி நூறு நாள் களைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியாகிவிட, திராவிடக்குடிக்கு மூலமாக படத்திலேயே சொல்லப்படும் தமிழில் மட்டும் வெளியாக பல தடைகளைத் தாண்டிக் கொண்டிருக்கிறது.
படத்தின் நாயகர்களாக பிரித்விராஜும், பிரபுதேவாவும் நடிக்க, நாயகிகளாக ஜெனிலியாவும், நித்யா மேனனும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ஆர்யா, வித்யா பாலன், சிறப்புத் தோற்றத்தில் தபு நடிக்க... இந்தியப் படவுலகின் முக்கியமான படமாக உருவாகியிருக்கிறது ‘உருமி’. பல வருடங்களாக சந்தோஷ் சிவனின் மனதில் உருக்கொண்டிருந்த கருவை கதை, திரைக்கதையாக சங்கர் ராம கிருஷ்ணன் எழுத, தமிழுக்கான வசனங்களை எழுதியிருக்கிறார் இந்தப் படத்தின் முதல்நிலை உதவி இயக்குநராகப் பணியாற்றிய சசிகுமாரன். இசைக்கு தீபக் தேவை மலையாளப் படவுலகிலிருந்து தமிழுக்கு அறிமுகம் செய்யும் சந்தோஷ் சிவனே ஒளிப்பதிவையும் மேற்கொண்டிருக்கிறார். நூற்றாண்டுகளாகப் பயணப்படும் கதையாக ஆனதால், சுனில்பாபுவின் கலை இயக்கம் வெகுவாக கவனிக்கப்படும் சாத்தியமிருக்கிறது.

போர்த்துக்கீசிய வாஸ்கோடகாமாவின் தென்னகக் கடல்பகுதி வருகையிலிருந்து தொடங்குகிறதாம் கதை. இங்கே விளைந்த மிளகைத் தங்கள் நாட்டுக்குக் கொண்டுபோய் 3 ஆயிரம் மடங்கு லாபம் சம்பாதிக்கும் அவர், இந்திய வளத்தை வசப்படுத்த மீண்டும் பெரும்படையோடு வர, முதல் உரிமைக்குரல் சேது ராயனாக வரும் ஆர்யாவிடமிருந்து கிளம்புகிறது. ஆர்யா கொல்லப்பட, அவர் மகனாக வரும் கேளு ராயன் பிரித்வி, வாஸ்கோடகாமாவைக் கொல்லும் நோக்கத்தில் ஏந்தும் தங்கத்திலான ‘சுருள் வாள்’தான் ‘உருமி’.
பதினைந்தாம் நூற்றாண்டில் உருவான உருமி, 21ம் நூற்றாண்டில் வரலாற்றின் மௌனசாட்சியாக அருங்காட்சியகத்தில் இருக்க, இந்த நவீன உலகின் பாத்திரங்களாகவும், பதினைந்தாம் நூற்றாண்டில் மேற்படி வேடங்களேற்ற பிரித்விராஜ், பிரபுதேவா, ஜெனிலியா, நித்யா மேனனே நடித்திருப்பது படத்தின் சுவாரஸ்யமான விஷயங்களில் ஒன்றாகியிருக்கிறது. காலங்கள் மாறியும் சுரண்டல் களம் மட்டும் இன்னும் இங்கே மாறவில்லை என்பதைப் புரியவைக்கும் விதமாக அமைந்திருக்கிறதாம் திரைக்கதை.
மறைக்கப்பட்ட உண்மை வரலாற்றின் மறுக்கப்பட்ட நாயகர்களாக பிரித்வியும், பிரபுதேவாவும் வர, அப்போதிருந்த மத வேறுபாடுகள் கடந்த திராவிட நாட்டின் பதிவை ஆங்காங்கே சொல்லியிருக்கிறாராம் சந்தோஷ் சிவன். அப்படி மதங்களைத் தாண்டி கலப்பு மணம் புரிந்து கொள்கிறார்களாம் பிரித்வியும், பிரபுதேவாவும். வன தேவதை வேடத்தில் வித்யா பாலன் வர, ஒரு பாடலுக்கு ஆடிச்சென்றிருக்கிறார் தபு.
மும்பை கல்யாணுக்கு அருகிலுள்ள மலைப்பிரதேசத்தில் நல்ல மழைக்காலத்தில் பெரிய நட்சத்திரங்கள் சகிதம் ஒருநாள் கூட இடைவெளியில்லாமல் 57 நாட்கள் முகாமிட்டு மேற்படி சரித்திர கால நிகழ்வுகளைப் படமாக்கியிருப்பது சந்தோஷ் சிவனால் மட்டுமே முடியக்கூடிய சாதனை என்று சொல்லலாம். அதுவே அவரது பத்துக்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகள், ஆறு தேசிய விருதுகளுடன் மேலும் பல விருதுகளைப் பெறும் சாத்தியத்தைத் தரும் காரணியாகவும் அமையக்கூடும்.
வேணுஜி