சண்டையென்றால் சாக்லெட்; சிலபேருடைய சுபாவம் அப்படி. 'சண்டைக் கோழி’ என்பார்கள் இவர்களை. ஆண்களிலும் பெண்களிலும் இத்தகைய கோழிகள் நிறையவே இருப்பது எல்லாருக்கும் தெரியும்.
பலரது குடும்ப வாழ்க்கையைப் பார்க்கும்போதும், கேள்விப்படும் போதும் தம்பதியர் பெரும்பாலும் ச.கோ.க்கள் தான். (சண்டைக் கோழிகள்தான்!)
ஒருத்தரோடு ஒருத்தர் சின்னச் சின்ன விஷயங்களுக்குக்கூட மோதிக் கொள்கின்றனர். அறுபது, எழுபது வயசான பிறகுகூட தம்பதிகளின் மோதல் நீடிக்கிறது. விவாகரத்து இந்த நாளில் ரொம்ப சகஜமாகிவிட்டது. கோழிகள் சண்டை போட்டுவிட்டு ஆளுக்கொருபக்கம் இரை மேயப் போய்விடுகின்றன. ஆனால் தம்பதிகள் சண்டையை மனசுக்குள் அழிக்காமல் வைத்திருந்து, அடுத்த சண்டைக்கு சான்ஸ் தேடியபடி ஒருவர் காரியத்தை இன்னொருவர் நோட்டமிடுகிறார்கள்.
ஒரு ஞானியிடம் தாய் ஒருத்தி வந்து புலம்பினாள். தனது ஒரே மகனைப் பறிகொடுத்திருந்தாள் அந்தத் தாய். ஏதோ விபத்தில் பிள்ளை இறந்து விட்டான். அவன்மீது தாயார்க்காரி உயிரையே வைத்திருந்தாள். மகன் போன பிறகு உயிர் வாழ விரும்பாமல், தற்கொலை செய்து கொள்ள ஒரு மரக் கிளையில் கயிற்றை மாட்டிவிட்டாள்.
மரத்தில் கஷ்டப்பட்டு ஏறி, குறிப்பிட்ட கிளையிலிருந்த சுருக்கைக் கழுத்தில் மாட்டிக் கொண்டு குதிக்க வேண்டியதுதான் பாக்கி.
அடர்ந்து படர்ந்த மரத்துக்கு அந்தப் பக்கமாக மகான் ஒருவர் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்ததை அவள் காண நேர்ந்தது. சாகிறதுக்கு முன் அந்தப் புண்ணிய தேவனுக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு இறக்கலாம் என்று நினைத்தவள், கீழே இறங்கி வந்து மகானின் காலில் கண்ணீருடன் விழுந்து கும்பிட்டாள்.
அவரிடம் அவள் எதுவும் கேட்கவில்லை. மகன் போன இடத்துக்குப் போய்ச் சேர்வதில் உறுதியாக இருந்தாள். முக்காலமும் முழு மனசுகளையும் அறிந்த அந்த மகான், மூடிய கண் மூடியவாறிருக்க அவளைக் கேட்டார்...
‘‘மகளே, உனக்கு உன் மகன் உயிரோடு திரும்ப வேண்டும்... அவ்வளவுதானே? நீ இறப்பதால் அவனுக்கு உயிர் வந்து விடாது. அவனை உயிர்ப்பிக்க என்னால் முடியும். ஆனால் அதற்கு நீ ஒரு வேலை செய்ய வேண்டும். திருமணமாகி ஒற்றுமையாக வாழ்ந்துகொண்டிருக்கும் ஏதாவது ஒரு தம்பதியரை ஜோடியாக இங்கே அழைத்துவர வேண்டும். ஒரே ஒரு நிபந்தனை... அந்தத் தம்பதியருக்கு திருமணமாகி குறைந்தபட்சம் ஆறு மாதமாவது ஆகியிருக்க வேண்டும். அந்த ஆறு மாதத்தில் அவர்களிடையே சின்னதாக ஒரு மோதல்கூட ஏற்பட்டிருக்கக் கூடாது.
அப்படிப்பட்ட மோதல் இல்லாத தம்பதியை அழைத்து வா... நான் தரும் பிரசாதத்தை உன் மகனைப் புதைத்த இடத்தில் அவர்கள் கையால் தூவினால் உன் மகன் உயிர்பெற்று எழுவான்!’’
பாசம் மிகுந்த அந்தத் தாய், கண்ணீரைத் துடைத்துக்கொண்டு உத்வேகத்தோடு எழுந்தாள். தனது கிராமம் பூராவும் தேடினாள். அக்கம் பக்கத்து நகரங்களில் தேடினாள். வேறு ஊர்களுக்கும் அலைந்து திரிந்து, பல நாட்கள் கழித்து தோல்வியுடன் ஞானியின் முன் வந்து நின்றாள்.
‘‘மணமான தம்பதியரை நூற்றுக்கணக்கில் கண்டேன் சுவாமி. ஆனால் மோதல் இல்லாதவர்கள் அகப்படவில்லை’’ என்றாள்.
‘‘தாயே, உனக்குச் சலுகை தருகிறேன். திருமணமாகி ஆறு மாதம் ஆகியிருக்கத் தேவையில்லை. மூன்று மாதமாகி இருந்தாலும் பரவாயில்லை. தங்களுக்குள் சண்டை போடாத தம்பதி கிடைக்கிறார்களா என்று தேடு’’ எனச் சொல்லி அவளைத் திருப்பி அனுப்பினார்.
சில நாட்களில் அந்தத் தாய் தோல்வியோடு வந்து சேர்ந்தாள்.
‘‘சுவாமி... மூன்று மாதம் என்ன? திருமணமாகி மூன்று நாளா னவர்களைக் கூட விசாரித்து விட்டேன். திருமணத்தன்றே மோதிக் கொண்டவர்கள் தான் நிறையப் பேர் உள்ளனர்!’’
‘‘ஆகவே தாயே...’’ என்ற ஞானி தொடர்ந்தா. ‘‘சில விஷயங்கள் உலகின் இயல்புக்கு ஏற்றாற்போலவே நடைபெறுகிறது. மரணமும் உலகின் இயல்பில் ஒன்று. இந்த மரத்திலிருந்து பழுத்துக் கீழே உதிர்ந்து கிடக்கும் இலைகளைப் பார். தனது குழந்தைகளான இலைகளை இந்த மரம் வேண்டாமென்று வெறுத்தா உதிர்த்தது? இலையை சிருஷ்டித்தது மரமேயானாலும், அதை உதிர வைப்பது வேறு ஒரு சக்தி. இது இயற்கையின் நியதி. உன் மகனை நீ சிருஷ்டித்தாய். ஆனால் அவனது ஆயுளை வேறொரு சக்தி நிர்ணயிக்கிறது...’’
அந்தத் தாய் மரணத்தைப் புரிந்து கொண்டாலும், ஒரு விஷயத்தை மட்டும் அவளால் புரிந்துகொள்ள இயலவில்லை. ஆகவே, தன் சந்தேகத்தை மகானிடமே கேட்டுவிட்டாள். ‘‘சுவாமி, தம்பதியர் ஏன் மோதிக் கொள்கிறார்கள்? மோதிக்கொள்ளாத தம்பதியரே உலகத்தில் இல்லையா? இந்தக் குறையை நீக்க வழியே இல்லையா?’’
மகான் புன்னகையுடன், ‘‘வாசலில் ஒரு பசுவைக் கட்டினால் சரியாகிவிடும்’’ என்று சொல்லிவிட்டு, கண்களை மூடி தியானத்தில் ஆழ்ந்துவிட்டார்.
கேள்வி கேட்ட தாய்க்கு ஞானியின் விடை புரியவில்லை. ‘தம்பதியரின் ஒற்றுமைக்கு வாசலில் பசுவைக் கட்டுவதா... சுத்த அபத்தமாக அல்லவா இருக்கிறது?’
அவளுக்கு ஞானியின் ஞானத்திலேயே சந்தேகம் வந்துவிட்டது. லோக்கல் ஞானி ஒருத்தரிடம், ‘‘நாம ஒண்ணைக் கேட்டால், அவர் ஒண்ணு பதில் சொல்லுகிறார்’’ என்று அங்கலாய்த்துக் கொண்டாள்.
லோக்கல் ஞானியும் பெரிய ஞானியின் சீடர்தான். அவர் விளக்கினார்...
‘‘தாயே, பசு என்பதற்கு ‘ஆ’ என்றும் ஒரு பெயர் உண்டல்லவா? மோதிக் கொள்வதற்கு முன் ஒரு ‘ஆ’வைக் கட்டி வை என்று சொல்லியிருக்கிறார் அவர். அதாவது ‘ஆ’ எழுத்தைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். ‘மோதிப்பது’ இப்போது ‘ஆமோதிப்பது’ ஆகிவிட்டது. கணவன் சொல்வதை மனைவியும், மனைவி சொல்வதை கணவனும் ஆமோதித்தால் அவர்களிடையே பிரச்னையே எழுந்திருக்காது என்றுதான் மகான் கூறியுள்ளார்’’ என்று விளக்கினார்.
‘‘பறப்பது வெள்ளைக் காக்காய் மாதிரி இல்லையா?’’ என்று கணவன் சொன்னால், ‘‘ஆமாம். அந்த மாதிரிதான் எனக்கும் தோணுது’’ என்று ஆமோதித்துவிட்டுத் தன் காரியத்தை மனைவி தொடரலாம். அந்தக் காக்கை வந்து மறுக்கப் போவதில்லை.
‘‘உங்க கண்ணே சரியில்லை... முதல்ல டாக்டர் கிட்ட போய் காண்பிங்க’’ என்று நக்கல் செய்வானேன்?
‘‘இந்த பிளவுஸ் எனக்கு அழகாக இருக்கிறதல்லவா?’’ என்று மனைவி கேட்டால், ‘‘ஆஹா! பேஷா இருக்கு’’ என்று அவளை ஆமோதிப்பதில் தவறே இல்லை. ‘‘உன் நிறத்துக்கு இது பொருத்தமானதாகத் தோணலை’’ என்று வாயைக் கொடுத்து வம்பிலே மாட்டிக்கொள்ள வேண்டாமே.
ஆகவே, ‘ஆ’ வாழ்க! ஆவையே ஆதரியுங்கள்; ‘ஆ’வுக்கே உங்கள் மேலான ஆதரவைத் தாருங்கள்.
(சிந்திப்போம்!)
பாக்கியம் ராமசாமி