இருபதாம் நூற்றாண்டிலே வாழ்ந்த சங்கீத மேதைகளில் முக்கியமானவர் மதுரை மணி ஐயர். தேனை எடுத்து வாயில் போட்டால் என்னவொரு தித்திப்பான உணர்வு கிடைக்குமோ, அதுபோலத்தான் மதுரை மணி ஐயரின் பாட்டு. அன்னாரின் நூறாவது பிறந்த நாள் இந்த வருடம்தான்!
அந்த சங்கீத மேதையின் நினைவைக் கொண்டாடும் வகையில், ஸ்ரீகிருஷ்ண கான சபா ஆதரவோடு அனைத்து சபாக்களும் இணைந்து தொடக்க விழா நடத்தின. கிருஷ்ண கான சபா செயலாளர் பிரபு, டிசிஎஸ் மேலாளர் ஜெயராமகிருஷ்ணன், ஹம்ஸத்வனி செயலாளர் சுந்தர் மூவரும் இணைந்து இரண்டு நாட்களில் முடிவு செய்து, அனைத்து சபாக்களையும் இணைத்து, அந்த மாமேதையின் நூற்றாண்டு விழாவை மிகச்சிறப்பாக ஆரம்பித்துள்ளார்கள்.
நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி என்.கோபால்சாமி வந்திருந்து மிக அழகாக உரையாற்றினார்.
‘‘மதுரை மணி ஐயர் எப்படி சௌகரியமாக, லகுவாக, சிரமமில்லாமல் பாடுவாரோ, அதேபோல அவரது கச்சேரியை ஏற்பாடு செய்த சபாவுக்கும் எந்த கஷ்டமும் இல்லாமல் சௌகரியமாக இருக்கும்படி நடந்து கொள்வார். அவருடைய கச்சேரி கபாலீஸ்வரர் கோயிலில் நடக்கும்போது, நான்கு மாடவீதிகளிலும், கோயிலிலும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இரவு 9 மணி முதல் விடியற்காலை 4 மணி வரை அமர்ந்தபடி கேட்டு அனுபவிப்பார்கள்’’ என்றார் நாரத கான சபா செயலாளர் கிருஷ்ணஸ்வாமி.

உண்மைதான்! மதுரை மணி ஐயர் பாடிய ‘கபாலி’, ‘காணக் கண் கோடி’, ‘காவா வா’ போன்ற பாபனாசம் சிவன் இயற்றிய பாடல்களாகட்டும்... அவருடைய குரு முத்தையா பாகவதர் கீர்த்தனைகள் ஆகட்டும்... ‘வெள்ளைத்தாமரை’ பாடலாக இருக்கட்டும்... அதை கச்சேரிக்குக் கச்சேரி பாடப் பாட ரசிகர்கள் சொக்கிப் போய், ‘இப்படிக்கூட பாட்டு உண்டா’ என்று வியந்ததுண்டு. அவருடைய சங்கராபரண ‘நோட்’ ரொம்பப் பிரசித்தம்.
அதென்ன நோட்டு என்கிறீர்களா? ஸ்வரங்களை மட்டும் வைத்துப் பாடுவதை ‘நோட்’ என்பார்கள். சங்கீதமே தெரியாத ரிக்ஷாக்காரர்கள்கூட அமர்ந்து ரசித்து விட்டுத்தான் செல்வார்கள். இப்பேர்ப்பட்ட ஸ்வரகான மணி ஐயர் அவர்களுக்கு நூற்றாண்டு விழாவைக் கொண்டாட முனைந்த ஜெயராமகிருஷ்ணனை பாராட்டியே ஆக வேண்டும்.
நவக்ரக கீர்த்தனைகள், கமலாம்பா நவாவர்ணம் போன்ற கீர்த்தனைகளை அந்தக் காலத்தில் கோயில் மேடையாக இருந்தாலும் சரி, சபையாக இருந்தாலும் சரி... மணி ஐயர் பாடாமல் இருந்ததே இல்லை. அவர் ஒரு நாதயோகி. சங்கீத சித்தி பெற்றவர். அந்த நிகழ்ச்சியில் டி.வி.சங்கரநாராயணன், தன் மாமா மதுரை மணி ஐயரின் மேன்மைகளை எடுத்துரைத்தார். கானகலாதரர், சங்கீத கலாநிதி மதுரை மணி ஐயர் வாழ்ந்த காலம் சிறிதாக இருந்தாலும், அவருடைய சங்கீதம் அவருடைய நூற்றாண்டில் மட்டுமல்ல, சங்கீதம் இருக்கும் வரை அவர் பெயரைச் சொல்லும்.
அவரோடு கச்சேரிகளில் வாசித்த கிருஷ்ணனும், மூர்த்தியும் இந்நிகழ்ச்சியில் மணி ஐயரை நினைவு கூர்ந்தார்கள். நிகழ்ச்சியின் முடிவில், இசை அர்ப்பணத்தின் ஆரம்பமாக டி.என்.கிருஷ்ணன்&விஜி கிருஷ்ணனின் இரு வயலின் இசைக் கச்சேரி. மதுரை ஐயர் பாடி பிரபலப்படுத்திய ‘வாதாபி’, ‘நாத தநுமநிசம்’, ‘தாயே யசோதா’, ‘காவா வா’, சங்கராபரண நோட் போன்ற கீர்த்தனைகளால் ரசிகர்களை மயங்க வைத்தார். மணி ஐயருக்கு பல கச்சேரிகள் வாசித்த டி.கே.மூர்த்தி மிருதங்கம் வாசிக்க, கே.வி.கோபாலகிருஷ்ணன் கஞ்சிராவுடன் கனகச்சித கச்சேரி.
இந்நிகழ்ச்சியில் லால்குடி ஜெயராமன், வேலூர் ராமபத்ரன், உமையாள்புரம் சிவராமன் போன்ற மிகப் பெரிய கலைஞர்கள், மதுரை மணி ஐயருக்கு பல கச்சேரிகள் வாசித்த அனுபவங்களை அசைபோடுவது போல கலந்துகொண்டது மிகச் சிறப்பு. மதுரை ஐயரின் ‘எப்போ வருவாரோ’ பாடலை ரசிக்காதவர் கிடையாது. அவர்கள் இன்றைக்கும் அவரை நினைத்து, ‘எப்போ வருவாரோ’ என்று ஏங்காத நாள் இல்லை.