இரவு 10.45 மணி.என் நண்பரின் மகள். பத்தாம் வகுப்பு. பரீட்சைக்காகப் படித்துக்கொண்டிருக்கிறாள். அவளது கைபேசிக்கு ஓர் அழைப்பு. எதிர் முனையில் ஆண் குரல்...
‘‘ஹாய், எப்டி இருக்க? உன் பேர் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?’’
‘‘நீ யாருன்னே எனக்குத் தெரியாது. நான் எதுக்கு எம் பேர ஒங்கிட்ட சொல்லணும்?’’ எனக் கேட்கிறாள்.
‘‘நான் ராம். பெங்களூர்ல ஐ.டி&யில ஒர்க் பண்றேன். 45 ஆயிரம் ரூபாய் சம்பளம். படிக்கும்போதே நல்ல பிளேஸ்மென்ட் கிடைச்சாச்சு. அப்பா அம்மா ஃபாரீன்ல செட்டிலாயிட்டாங்க. நான் தனியாதான் இருக்கேன்.”
அவள் கைபேசியை அணைத்து விடுகிறாள். உடனே மீண்டும் அழைப்பு...
‘‘நீ ஸ்கூல் கேர்ளா, காலேஜ் கேர்ளா?’’
‘‘நான் என்ன படிச்சா உனக்கு என்ன?’’
‘‘நீ இப்ப எனக்கு பதில் சொல்லலேன்னா, திருப்பித் திருப்பி உனக்கு ‘கால்’ பண்ணுவேன். தூங்கவிடமாட்டேன்!’’
‘‘ஸ்கூல் கேர்ள்...’’
‘‘11 மணிக்குக்கூட உன் வாய்ஸ் ஃபிரெஷ்ஷா இருக்கு. தூங்கலையா? நீ இன்னும் பத்து நிமிஷம் என்கிட்ட பேசிட்டுத்தான் போகணும்!’’
‘‘நீ யாரு எனக்கு ஆர்டர் போடறதுக்கு... இடியட்!’’
மீண்டும் அணைத்து வைக்கப்பட்ட அவளது கைபேசி சிணுங்குகிறது...
‘‘என்ன கோச்சுக்கிட்டியா? கோச்சுக்காத... கோச்சுக்காத... உன் வெயிட் என்ன? கலர் என்ன? ஹைட் என்ன?’’
‘‘நீ என்ன லூசா? யாருன்னே தெரியாம, சம்பந்தமே இல்லாம கேள்வி கேட்டுட்டு இருக்க?”
‘‘சும்மா... உன் ஸ்ட்ரக்சர் எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்கலாம்னுதான்!’’
அவள் கைபேசியை அணைத்து, சிம் கார்டை கழற்றி வைத்துவிட்டு, அச்சத்தோடு உறங்கியிருக்கிறாள்.
அடுத்தமுறை அழைப்பு வந்தால் சைபர் க்ரைம் போலீசுக்கு புகார் கொடுப்பதாக இருக்கிறார் அவளது தந்தை.
தகவல் பரிமாற்றத்திற்கான கைபேசியை தாறுமாறாகப் பயன்படுத்தும் இத்தகைய நரம்பு நோயாளிகளுக்கு இன்டர்நெட் இன்னும் வசதியாகிவிட்டது. இஷ்டம்போல் புகுந்து விளையாடுகிறார்கள். காமரூப விநோத வேட்டைகள் வித விதமாய் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
பூச்சிகளைப் பிடித்துண்ணும் சிலந்தி வலைகளைப் போல காமுகர்கள் கம்ப்யூட்டரில் சமூக வலைத்தளங்களைப் பின்னுகிறார்கள். ஆயிரக்கணக்கான பெண்கள் இந்த ஆபத்தில் விழுந்து கிடக்கிறார்கள்.
ஆபாச எஸ்.எம்.எஸ், சமூக வலைத்தளங்கள் மூலம் தனது இளம் மனைவியை பலபேர் கூட்டணி அமைத்துப் பகிர்ந்துகொண்டார்கள் என்பதை ஆதாரபூர்வமாக போலீசுக்கு எழுதிவைத்துவிட்டு, மூணாறுக்கு தன் மனைவியைக் கூட்டிச் சென்று கொலை செய்த மகேஷ்குமார் என்பவர் ஈரோட்டில் தனது சொந்த ஊருக்குத் திரும்பி தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தை யாரும் லேசில் மறந்திருக்க முடியாது.

சமீபத்தில¢ லண்டனில் நடந்த ஒரு சம்பவம். பிரபல ஆங்கில மாத இதழில் வெளிவந்திருக்கிறது.
12 வயது பெண் இன்டர்நெட்டில் கிடைத்த தோழியோடு சில காலம் ‘சாட்’ செய்திருக்கிறாள். பிறகு ஒருநாள் இருவரும் நேரில் சந்திப்பதாக முடிவு செய்திருக்கிறார்கள்.
தோழிக்காக அவள் நீண்ட நேரம் காத்திருந்தாள். தோழி வரவில்லை. காரில் ஒருவன் வந்தான். தோழியின் பெயரைச் சொல்லி அவளைக் கடத்த முயன்றிருக்கிறான். விபரீதத்தைப் புரிந்துகொண்ட பெண், அங்கிருந்து தப்பித்து ஓடிவந்து தனது கம்ப்யூட்டரின் இணையதளத்தில் உள்ள ‘ரெட் பட்டனை’ அழுத்தியிருக்கிறாள். தகவல் காவல்துறைக்குப் போன சில மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டான்.
குற்றவாளி தங்கியிருந்த வீட்டில் ஏராளமான பெண் குழந்தைகளின் படங்கள். தாறுமாறாக அந்தக் குழந்தைகளோடு முறையற்ற உறவு கொண்ட படங்கள். இப்படிப்பட்ட குற்றவாளிகளைப் பிடிப்பதற்கென்றே லண்டனில் செயல்படும் இணையதள காவல் அமைப்பு அந்தக் காரியத்தை துரிதமாகச் செய்து முடித்திருக்கிறது. Child Exploitation and Online Protection Agency என்பதுதான் அந்த அமைப்பு. ஒரு சில ஐரோப்பிய நாடுகளில் மட்டும்தான் இணையதளத்தில் அந்த ‘ரெட் பட்டன்’ சிஸ்டம் இருக்கிறதாம்.
இணையதள குற்றவாளிகளிடம் அறியாமல் தெரியாமல் மாட்டிக்கொள்ளும் நம்மூர் குழந்தைகளைக் காப்பாற்ற இப்படி ஒரு ‘ரெட் பட்டன்’ நமது சமூக இணையதளங்களிலும் இருந்தால் நல்லது. ஆனால் அந்த அமைப்பில் ஊழல் இல்லாமல் இருக்க வேண்டும்.
இத்தகைய குழந்தைக் கடத்தலில் உலகமெங்கும் ஆண் குழந்தை, பெண் குழந்தை என்கிற வித்தியாசமெல்லாம் கிடையாது. இது குறித்து ஒரு சமூக ஆர்வலர் சொன்ன விஷயங்கள் என்னை அதிர்ச்சியடைய வைத்தன.
இந்தக் குழந்தைகள் கடத்தப்படுவது பாலுறவுக்குப் பயன்படுத்த மட்டுமல்ல. பெரிய பெரிய பணக்காரர்களின் பண்ணை வீடுகளில் இவர்கள் வேலைக்காரர்களாக விற்கப்படுகிறார்கள். சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகளும் இவர்களிடமிருந்து எடுத்து விற்பனை செய்யப்படுகின்றன. காட்டுக்குள் மனிதன் வேட்டையாடி உண்டு வாழ்ந்த காலத்தில்கூட அவனது சிந்தனையில் இவ்வளவு சுயநலம் இருந்திருக்காது; இத்தனை மூர்க்கம் இருந்திருக்காது.
இன்றைய இளைய சமூகம் கைபேசியிலும் ஃபேஸ்புக்கிலும் இடைவிடாமல் பேசிக்கொண்டே இருக்கிறது. இரவுகளும் பகல்களும் ஜன்னலுக்கு வெளியே நின்று அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டே நகர்ந்து போகின்றன. சமூக அக்கறை கொஞ்சம்; மற்றதெல்லாம் சாயங்கால மயக்கம்தான்.
உயிரற்ற ஓர் எந்திரத்தின் முன்னால் அமர்ந்து, தமது உயிரான உணர்வுகளைக் கொட்டுகிறார்கள். உடல்கள் இணையாமல் உறவு கொள்கிறார்கள். உதடுகள் ஒட்டாமல் முத்தம் கொடுக்கிறார்கள். உறக்கம் வராமல் தவிக்கிறார்கள்.
கம்ப்யூட்டர் ஒரு கற்பக மரம் போல. அதன் கீழ் அமர்ந்து நட்பு, காதல், காமம், வணிகம், விளையாட்டு எதைக் கேட்டாலும் தருகிறது. அது உண்மைதான்!
உலகத்தையே ஒரு புள்ளியில் இணைக்கும் கம்ப்யூட்டர், சமூக மனிதனைத் தனி மனிதனாக்கி, அவனை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்து, சக மனிதனோடு உயிராலும் உணர்வாலும் உண்மையாகப் பழகும் வாய்ப்புகளைத் தகர்த்து, இயற்கையான மனிதனைப் பழி வாங்கிவிட்டது. அதுவும் உண்மைதானே!
தமிழ் சினிமாவின் தங்கப்பதக்கம்நானும் நண்பர்கள் மணிவண்ணனும் பூபதியும், இயக்குநர் மகேந்திரனை அவரது வீட்டில் சந்தித்தோம். சினிமா சினிமா சினிமா. சினிமாவைத் தவிர வேறொன்றையும் சிந்திக்கத் தெரியாத மனிதராக இருக்கிறார்.
தமிழ் சினிமாவின் திசையைத் திருப்பி வைத்த மனிதர், பழகுவதற்கு ஒரு பறவை போல இருந்தார். ஈரக்காற்று வீசும் வயலில், சேற்றில் நின்றுகொண்டு நிலம், விதை, காற்று, மழை, வெயில் பற்றி ஒரு விவசாயியோடு பேசுவது போல இருந்தது உரையாடல். மார்தட்டல் இல்லை; மயக்கம் இல்லை; யாரோடும் கோபமும் இல்லை.
தனது படங்களின் வெற்றி, தோல்வி இரண்டையும் எல்லா கலைஞர்களுக்கும் பகிர்ந்து கொடுத்துப் பேசுகிறார். புதியவர்கள் வரும் பாதையை உற்றுக் கவனிக்கிறார்.
‘‘வெற்றிப் படங்களைவிட தோல்விப் படங்களைத்தான் சினிமாக்காரர் பார்க்கணும்’’ என்று சாண்டோ சின்னப்பா தேவர் சொன்னதை மீண்டும் நினைவுபடுத்திப் பேசினார். ‘ஒரு படம் ஏன் தோல்வி அடைகிறது’ என்பதைத் தெரிந்து கொள்வதில்தான் வெற்றியின் ரகசியம் இருக்கிறது. தேவர் தனது ‘தெய்வச் செயல்’ என்ற தோல்விப் படத்தை இந்தியில் ‘ஹாத்தி மேரா சாத்தி’ என்று எடுத்து இமாலய வெற்றி கண்டதைச் சொன்னார். அதைத்தான் தமிழில் மீண்டும் ‘நல்ல நேரம்’ என்று எடுத்தாராம்.
எப்போதும் தீராத தேடல் கொண்ட எளிய கனவு மனிதரின் சந்திப்பு, எங்கள் கண்களிலும் நெஞ்சிலும் நிறைந்திருந்தது. சத்யஜித் ரேயை மகேந்திரன் ‘மனித நேயக் கவிஞன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். எனக்கு மகேந்திரனையும் அப்படியே குறிப்பிடத் தோன்றுகிறது.
(சலசலக்கும்)
பழநிபாரதி