ஓட்டு போட்டதுக்கு தண்டனையா?



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

                      பாலோடு விடிகிறது காலை. பஸ்ஸோடு தொடங்குகிறது வேலை. அத்தியாவசியமான இந்த இரண்டையுமே ஆடம்பரப் பொருள் போல ஆக்கிவிட்டது
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு. 

மாதாந்திர அட்டை வாங்கி பால் பெறுபவர்களுக்கே லிட்டருக்கு ரூ.6.25 கூடுதல். மார்க்கெட்டில் இன்னும் இன்னும் அதிகம். நெரிசலான, வசதியில்லாத பயணம் என்றாலும் பெரும்பாலான மக்களின் வாழ்க்கை பேருந்துகளைச் சார்ந்தே இயங்குகிறது. பஸ் கட்டணம் 70 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டிருப்பது பலரை நிலைகுலையச் செய்திருக்கிறது. புத்தாண்டு போனஸாக மின்கட்டண உயர்வும் ஷாக் அடிக்கப் போகிறது. மக்களின் ஷாக் ரீயாக்ஷன்ஸ்...

மணிமொழி சங்கர், திருவையாறு:

‘விலைவாசியைக் குறைப்போம்’னு சொல்லித்தான் ஓட்டு கேட்டு வந்தாங்க. அந்த வார்த்தையை நம்பித்தானே ஓட்டு போட்டோம்? முதல்ல புள்ளைக படிப்புல கைவச்சாங்க. இப்போ பொழைப்பிலயே கை வைக்கிறாங்க. நல்லா இருங்கம்மா!

கணபதி, சென்னை:

பெட்ரோல் விலை ஏறினா எல்லாப் பொருளும் விலை ஏறத்தானே செய்யும்? விலை ஏத்தாம பால் உற்பத்தியாளர்களுக்கு எப்படி கூடுதல் விலை கொடுக்கிறது? வருஷா வருஷம் கொஞ்சம் கொஞ்சம் ஏத்துனா மக்களை பாதிக்காது. இப்படி மொத்தமா ஏத்துனதுதான் உதைக்குது.

மீனா ராமநாதன், தாமரைப்பாக்கம்:

பால் விலையை இப்படி ஒரேயடியா ஏத்துனா எப்பிடி? எங்கள மாதிரி நடுத்தர மக்கள் நிலைமை என்ன ஆகுறது? பெண்களோட கஷ்டம் கண்டிப்பா முதல்வருக்குப் புரியும். பால் விலையை மட்டுமாவது குறைக்கணும். இல்லைன்னா பாலையும் காபியையும் மறக்க வேண்டியதுதான்.

புஷ்பா ரமேஷ், சென்னை:

பஸ்ல போறது அடித்தட்டு மக்கள்தான். பஸ் கட்டண உயர்வால ஷேர் ஆட்டோக்களுக்குத்தான் லாபம். பஸ்ஸுக்கும் ஷேர் ஆட்டோவுக்கும் கிட்டத்தட்ட ஒரே கட்டணம்தான். பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்துற எங்கள மாதிரி குடும்பங்களை பால் விலை உயர்வும் ரொம்ப பாதிக்கும்.

நூர்ஜஹான், சென்னை:

பாலுக்கு 1 ரூபா, 2 ரூபா ஏத்தலாம். 6.25ங்கிறது ரொம்பவே அதிகம். ஆவின் நிறுவனம் நஷ்டத்துல இயங்குறதா சொல்றாங்க. ஆவினுக்கு மட்டும் எப்படி நஷ்டம் வருது? சும்மாவே விலைவாசி உயர்வால எல்லாரும் தவிக்கிறோம். போதாக்குறைக்கு இதுவேற... ஓட்டு போட்டதுக்கு தண்டனையா?

ரத்னா பாலசுப்பிரமணியன், சென்னை:

வீட்டு வாடகையில இருந்து தண்ணீர் வரைக்கும் விலை ஏறிக்கிட்டே இருக்கு. அரசாங்கத் தயாரிப்புங்கிறதால ஆவின் விலை கொஞ்சம் குறைவா இருந்துச்சு. இப்போ அதையும் ஏத்திட்டாங்க. வயதானவங்க எல்லாம் பஸ்ல பயணம் பண்ணவே முடியாது. பஸ்கள் அந்த அளவு மோசமா இருக்கு. கட்டணத்தை உயர்த்தினா மட்டும் போதாது. எண்ணிக்கையை அதிகப்படுத்தி தரமான பஸ்களையும் விடணும்.

ஆராயி, சேலம்:

கட்டிட வேலை செஞ்சு தினமும் 150 ரூபா கூலி வாங்கறேன். ஏற்கனவே காய்கறி, பருப்பு, சர்க்கரை, அரிசின்னு எல்லா விலையும் அதிகமாகத்தான் இருக்கு. இதுவும் அதிகமானது ரொம்ப அதிர்ச்சி. விலைவாசிக்குத் தகுந்த மாதிரி சம்பளம் ஏறாது. எங்கள மாதிரி ஜனங்க எப்படிப் பொழைக்கிறதோ?

பவுனம்மாள், சேலம்:

எங்க குடும்பத்தோட தினசரி வருமானம் 300 ரூபா. இரண்டு குழந்தைங்க படிப்புக்கு நடுவில, தினமும் சாப்பாட்டுக்கே இழுத்துப் பிடிக்கிற நிலைமை. எங்க வாழ்க்கையே அரசாங்கத்தை நம்பித்தான் இருக்கு. இலவசம் கொடுக்கிறதுக்கு பதிலா விலை ஏற்றத்தைக் குறைக்கலாம்.

குணசேகரன், சேலம்:

எங்களுக்கெல் லாம் வியாபாரம் ஆனாத்தான் அன்னிக்கு சாப்பாடு. எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்காது. திடீர் செலவுக்கு கடன் வாங்கித்தான் காலம் ஓட்டணும். இனிமே சாப்பிடவே கடன் வாங்கும் நிலைக்கு அரசாங்கம் தள்ளியிருக்கு. எங்க வயித்துல அடிச்சுத்தான் அரசாங்கத்தோட நஷ்டத்தை ஈடு கட்டணுமா?

கோமதி, சேலம்:

நாலு பேர் இருக்கற குடும்பத்தில் ஒரு நேர சாப்பாட்டுக்கே 100 ரூபா செலவாகுது. வருமானம் இல்லாம செலவு மட்டும் கூடிட்டே போனா, மக்கள் வாழறதே பெரிய சோகமா மாறிப்போகும். தேவையில்லாத திட்டங்கள்ல பணத்தை வீணடிக்கிறதுக்கு பதிலா அத்தியாவசியத் தேவைக்கு உதவலாம்.

இளங்கோவன், வெங்கடாசலம் சேலம்:

எங்களுக்கு ஒருநாள் கூலி 150 ரூபா. மழை பெஞ்சா வேலையே இருக்காது. பால், பெட்ரோல்னு விலை ஏறிட்டே போனா டீ, டிபன்னு எல்லா விலையும் ஏறிடும். நாங்க அப்புறம் என்ன செய்யறது? எங்க நிலைமைய அரசாங்கம் யோசிக்கணும்.

ஜெயந்தி ராணி, திருச்சி:

ஏழைக் குழந்தைகளுக்கு பால் மட்டும்தான் சத்தான உணவாக இருக்கிறது. விலையை உயர்த்தியதால், அவர்களின் வாழ்க்கையே கேள்விக்குறி ஆகியுள்ளது. ஏழைகள் வயிற்றில் அடிக்கக்கூடாது.

நீலமேகம், திருச்சி:

உழைக்கத் தயாராக உள்ள மக்களுக்கு இலவசங்களை கொடுத்து சோம்பேறிகளாக்கி, அவர்களுக்கு விலைவாசி உயர்வு எனும் இடியை தந்துள்ளனர். அரசு சுமக்க வேண்டிய சுமையை, மக்கள் மீது ஏற்றியுள்ளனர்.

கலாவதி, திருச்சி:
இது ஏழை, நடுத்தர மக்களுக்குப் பேரிடி. நிதிச்சுமை என்றால், பணக்காரர்கள் வாங்கும் ஆடம்பரப் பொருட்களின் விலையை வேண்டுமானால் உயர்த்திக் கொள்ளட்டும். ஏழைகளை ஏன் வதைக்க வேண்டும்?

மனோகரன், திருச்சி:

ஏற்கனவே குடும்பத்தை நடத்த முடியாமல் தள்ளாடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு மேலும் சுமை ஏற்றியுள்ளனர். திருச்சி & சென்னைக்கு பஸ் கட்டணம் ரூ. 70 அதிகரித்துள்ளனர். வேலை தேடிச் செல்லும் இளைஞர்கள் பாதிக்கப்படுவார்கள்.
தொகுப்பு: வெ.நீலகண்டன், ஸ்ரீதேவி, ஜோ.மகேஸ்வரன்
படங்கள்: கே.எம்.சந்திரசேகரன், ஏ.செல்வன்