‘பொருளாதாரத்தில் நலிந்த, வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கு 25 சதவீத இடத்தை தனியார் பள்ளிகள் ஒதுக்க வேண்டும்!’ இதை முக்கிய அம்சமாகக் கொண்ட மத்திய அரசின் கட்டாய இலவசக்கல்வி உரிமைச் சட்டத்துக்கான (2009) வழிகாட்டு நெறிமுறைகளை சமீபத்தில் வெளியிட்டுள்ளது தமிழக அரசு. வரும் கல்வியாண்டு முதல், ஒன்றாம் வகுப்பில் இந்த இடஒதுக்கீடு நடைமுறைக்கு வருகிறது. எவ்வித வேறுபாடுமின்றி மற்ற பிள்ளைகளுக்கு இணையான கல்வியை அவர்களுக்கும் வழங்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் அல்லது அரசுப்பள்ளிகளில் ஒரு மாணவனுக்கு செலவிடும் தொகை இவற்றில் எது குறைவோ அதை தனியார் பள்ளிகளுக்கு அரசு வழங்கும். தனியார் பள்ளிகள் இதை கடுமையாக எதிர்க்கும் நிலையில், கல்வியாளர்களும் ‘இந்த அறிவிப்பு மிக மேம்போக்கானது’ என்று குற்றம் சாட்டுகிறார்கள்.
பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் நிறுவனர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, ‘‘அரசின் அறிவிப்பு மிகவும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது’’ என்கிறார்.
‘‘நலிந்தவர்கள் என்றால் யார்? அவர்களுக்கான ஒதுக்கீடு எவ்வளவு? இட ஒதுக்கீடு என்று வந்துவிட்டாலே அதற்கு பொருளாதாரத்தை அளவுகோலாக வைப்பது நியாயமில்லை. அதோடு, மாணவர்களை தேர்வு செய்யும் உரிமை பள்ளி நிர்வாகத்துக்கே வழங்கப்பட்டுள்ளது. அருகாமைப் பள்ளியில் சேர்ந்துகொள்ளும் உரிமையை குழந்தைகளுக்கு வழங்கிய இந்தச் சட்டம், தனியார் பள்ளிகளுக்கு எல்லைகளை வரையறுத்து, அருகாமையில் உள்ள பிள்ளைகளைத்தான் சேர்க்க வேண்டும் என்ற உத்தரவை வழங்கவில்லை. இதனால் குழந்தைகளை எளிதாக நிராகரிக்க வாய்ப்பிருக்கிறது. மாணவர்களைத் தேர்வுசெய்யும் பொறுப்பை கல்வி அதிகாரிகளிடம் வழங்குவதே பொருத்தமாக இருக்கும்.
இந்த சட்டம் மூலம் அனைவருக்கும் தரமான சமச்சீர் கல்வியை அரசு தந்துவிட்டதாக சில இதழ்கள் எழுதுகின்றன. அதைவிட மூடநம்பிக்கை எதுவுமில்லை. அருகாமைப்பள்ளி அமைப்பைக் கொண்ட தாய்மொழி வழி பொதுப்பள்ளிகள் மூலம்தான் தரமான சமச்சீர் கல்வியைத் தரமுடியும். அரசியல் சட்டத்தின் 41வது பிரிவு, ‘மாநிலங்கள் தங்கள் பொருளாதார நிலைக்கு ஏற்றார்போல கல்விக்கு நிதியை ஒதுக்கலாம்’ என்கிறது. இது 1950¢ல் இயற்றப்பட்டது.
அப்போது பல மாநிலங்களில் வறட்சி இருந்தது. இன்றைக்கு கோடி கோடியாக செலவு செய்து சந்திரயான் அனுப்புகிறோம். பிரமோஸ் ஏவுகணையை சோதிக்கிறோம். அணு மின்நிலையங்கள் அமைக்கிறோம். ஆனால், மொத்த உற்பத்தியில் வெறும் 4 சதவீத நிதியைக்கூட கல்விக்காக ஒதுக்கவில்லை. மாநில அரசாங்கம் மொத்த பட்ஜெட்டில் 30 சதவீதத்தை கல்விக்காக ஒதுக்க வேண்டும். ஆனால் 10 சதவீதத்துக்கும் குறைவாகத்தான் ஒதுக்குகிறார்கள்’’ என்று வருந்துகிற கஜேந்திரபாபு, தனியார் பள்ளிகளின் நடவடிக்கைகளையும் விமர்சிக்கிறார்.

‘‘இந்தச் சட்டத்தை எதிர்த்து தனியார் பள்ளிகள் பல்வேறு நட வடிக்கைகளில் இறங்கிவிட்டன. சென்னையில் சேத்துப் பட்டு, திருவான்மியூரில் இயங்கும் இரண்டு ஆங்கிலப்பள்ளிகள், ‘ஏழைக்குழந்தைகளை சேர்த்தால் உங்கள் குழந்தையின் பழக்கவழக்கங்கள் கெட்டுவிடும். உங்கள் குழந்தைகளுக்கு ஆசிரியர்களால் நேரம் ஒதுக்கமுடியாது. எதிர்காலமே கெட்டுவிடும். எனவே, இந்த சட்டத்தை எதிர்த்துப் போராட வாருங்கள்’ என்று தூண்டி சர்க்குலர் அனுப்பியிருக்கிறார்கள். இதுபற்றி புகார் செய்தும், இதுவரை எதுவும் நடக்கவில்லை. இத்திட்டத்தின் செயல்பாட்டை இதை வைத்துத்தான் மதிப்பிட வேண்டியிருக்கிறது’’ என்கிறார் கஜேந்திரபாபு.
கல்விஆர்வலர் எஸ்.எஸ்.ராஜகோபாலன், ‘‘அரசின் இந்த அறிவிப்பு கேலிக்குரியது’’ என்கிறார்.
‘‘அரசு நடத்துகிற பள்ளிகளில் தரமில்லை என்று அரசே ஒப்புக்கொள்கிறது. இதைவிட அவலம் வேறெதுவும் இல்லை. தனியார் பள்ளிகளுக்குக் கொடுக்கும் பணத் தில் அரசுப் பள்ளிகளிலேயே நல்ல கல்வியைத் தரலாமே? மெட்ரிக் பள்ளிகளை ஆய்வுசெய்ய நியமிக்கப்பட்ட சிட்டிபாபு குழு, ‘80 சதவீத தனியார் பள்ளிகளில் தகுதியற்ற ஆசிரியர்களே பாடம் நடத்துவதாக’ குறிப்பிட்டுள்ளது. பல பள்ளிகளில் ஆசிரியர்களுக்குக் கூட நல்ல கழிவறைகள் இல்லை. அரசுப்பள்ளிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் உள்ளார்கள். அனைத்து வசதிகளும் இருக்கின்றன. இதைவிட்டு தனியார் பள்ளிகளின் பின்னால் அரசு ஏன் செல்ல வேண்டும்?’’ என்று கேள்வி எழுப்புகிற ராஜகோபால், ஒதுக்கீட்டுக்கான வரம்பையும் விமர்சிக்கிறார்.
‘‘மாதம் ரூ.17 ஆயிரம் சம்பாதிப்பவர்கள் பொருளாதாரத்தில் நலிந்தவர்களாம். மத்திய அரசு 32 ரூபாய் சம்பாதித்தால் வறுமைக்கோட்டுக்கு மேலே இருப்பதாகச் சொல்கிறது. இந்த ஒதுக்கீடு நடுத்தர மற்றும் உயர் நடுத்தர மக்களுக்கே உபயோகப்படும். அடித்தட்டு மக்களுக்குப் பயன்படாது. ஒதுக்கீட்டில் வரும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளில் இடம் கொடுப்பார்களா? இதைக் கண்காணிக்க ஏதேனும் குழுக்கள் இருக்கிறதா? ஒதுக்கீட்டின்படி மாணவர்களை தேர்வு செய்வதற்கு என்ன நெறிமுறைகள் உள்ளன என இதன் பின்னால் பல கேள்விகள் உள்ளன’’ என்கிறார் ராஜகோபாலன்.
தனியார் பள்ளிகள் தரப்பில் என்ன சொல்கிறார்கள்..?
‘‘சமூகரீதியாகப் பார்த்தால் இது நல்ல திட்டம். நிர்வாக ரீதியாக இதை செயல்படுத்துவது சிரமம்’’ என்கிறார் திருச்சி ஆல்பா மெட்ரிக் பள்ளி தாளாளர் பழனி.
‘‘தனியார் பள்ளிகள் என்றாலே ஏதோ கொள்ளை அடிக்கும் நிறுவனம் என்ற மனநிலை சமூகத்தில் இருக்கிறது. உண்மையில் தனியார் பள்ளி நிர்வாகம் என்பது வேறெதையும் விட சிரமமானது. ஏற்கனவே கட்டண நிர்ணய விவகாரத்தால் தனியார் பள்ளிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இப்போது கூடுதல் சுமையை சுமத்துகிறார்கள். ஒரு மாணவனுக்கு மத்திய அரசு 140 ரூபாய் ஒதுக்குகிறது. அதை வைத்து எப்படி தரமான கல்வியைக் கொடுக்க முடியும்?’’ என்று கேள்வியெழுப்பும் பழனி, ‘‘சீன அரசு, அங்குள்ள தனியார் பள்ளிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 750 அமெரிக்க டாலர்களை வழங்குகிறது.
துபாயில் தனியார் பள்ளிகள் அருகாமையில் இருக்கும் அரசுப்பள்ளிகளைத் தத்தெடுத்து மேம்படுத்துகின்றன. இங்கிலாந்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் கூப்பன் கொடுத்து விடுகிறார்கள். குழந்தை எந்தப்பள்ளியில் வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளலாம். பள்ளி நிர்வாகம் அந்த கூப்பனில் தமக்குரிய கட்டணத்தை நிரப்பி வங்கியில் பெற்றுக்கொள்ளும். இவற்றைப் போல மாற்றுத்திட்டங்களைக் கொண்டு வரலாம். அல்லது அரசுப்பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தலாம். இதைவிடுத்து ஒதுக்கீடு தரச்சொல்வது தனியார் பள்ளிகளை நெருக்கடிக்கு உள்ளாக்கும்’’ என்கிறார்.
அரசு என்ன செய்யப் போகிறதோ? ஜூன் மாதத்தில் பார்க்கலாம்!
வெ.நீலகண்டன்