எதிர் நீச்சல் சீரியல் அசத்தலான டிராவல்-சமையலறை பெண்களின் சாதனைக் கதை!



சிறந்த கதையம்சம், விறுவிறுப்பான காட்சிகள், நச்சென்ற வசனங்கள், சுவாரஸ்யமான திருப்பங்கள்... எனப் பார்வையாளர்களை தினம் தினம் ரசிக்க வைத்துக் கொண்டிருக்கும் தொடர் ‘எதிர்நீச்சல்’. சீரியல்கள் பார்க்காதவர்கள் அல்லது சீரியல்களை விமர்சனம் செய்பவர்கள் கூட இந்த சீரியலைப் பார்த்து அவ்வளவு குதூகலம் அடைகின்றனர் என்பதே உண்மை. அதுமட்டுமல்ல. இந்த சீரியலுக்கென தனியாக ஃபேன்ஸ் கிளப்களும், வாட்ஸ்அப் குழுக்களும்கூட நிறைய இருக்கின்றன.

இப்படி உலகம் முழுவதுமுள்ள தமிழர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு எனர்ஜி பூஸ்ட்டாக இருக்கும் ‘எதிர்நீச்சல்’ குடும்பத்தை சந்திக்கச் சென்றோம். ஒரு திருமண மண்டபத்தில் ஆதிரையின் நிச்சயதார்த்தத்தில் அனைவரும் கூடியிருந்தனர். நம்மிடம் முதலில் எதிர்ப்பட்டார், ஆதி குணசேகரனாக மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கும் நடிகர் மாரிமுத்து.‘‘55 ஆண்டுகளாக என் கூடவே ஒட்டியிருந்த என் நிஜப்பெயர் இப்ப ஆதி குணசேகரன்னு மாறியிருக்கு. காரணம் ‘எதிர்நீச்சல்’ சீரியல். நான் சினிமா துறைக்கு வந்து 35 ஆண்டுகள் ஆகுது. உதவி இயக்குநர், இணை இயக்குநர், இயக்குநர்னு கடந்து வந்த பாதை நீண்ட பயணம். அதுல சின்னத்திரை என்பது இப்ப என் நிகழ்கால டிராவல்.

இவ்வளவு பெரிய கதாபாத்திரம் எனக்கு கிடைச்சிருப்பது என் பாக்கியம்னுதான் சொல்லணும். ‘எதிர்நீச்சல்’ல நடிக்க முதல்முதலாக திருச்செல்வம் சார் ஆபீசில் இருந்து அழைச்சாங்க. சும்மா போய் பார்ப்போமேனுதான் போனேன். அதுக்கு முன்னாடி எனக்கும் திருச்செல்வம் சாருக்கும் பழக்கமே இல்ல. சேர்ந்து வேலை பார்த்ததும் இல்ல. அதுதான் எங்கள் இருவருக்குமான முதல் சந்திப்பு. தவிர இதுக்கு முன்னாடி சீரியல்ல நடிச்சதும் இல்ல.

இந்தத் தொடர்ல நான் நடிக்கிற கதாபாத்திரத்தை மூன்று மணிநேரம் சொன்னார். எனக்கு ஏற்ற கதை. என் மொழிக்கு வசதியான கதை. இதை மிஸ் செய்யக்கூடாதுனு நினைச்சேன். இந்தக் கதைக்கு எஞ்சின் மாதிரியான கேரக்டர் எனக்கு அமைஞ்சது ரொம்பப் பெருமையாக இருக்கு. இந்தத் தொடர்ல நடிக்க ஆரம்பிச்சதுக்குப் பிறகு எதிர்பார்க்காத உலகளாவிய ரீச் கிடைச்சிருக்கு. மக்கள் என்னை பெரிசா கொண்டாடுறாங்க. இந்தத் தொடர்ல நான் பேசுற ‘ஏம்மா... ஏய்...’ அவ்வளவு ஹிட்டாகி இன்னைக்கு தேசியகீதம் மாதிரி உலக முழுக்கப் பரவிடுச்சு. இந்தளவுக்கு மீம்ஸ் ஆகும், டிரண்டிங் ஆகும்னு நான் எதிர்பார்க்கல.  

தொடர்ந்து மக்கள் சப்போர்ட் செய்யணும். அது எங்களுக்கு இன்னும் எனர்ஜியைக் கொடுக்கும்...’’ என முத்தாய்ப்பாக மாரிமுத்து முடிக்க, ஷாட் முடித்து வந்தார் அவரின் தங்கை ஆதிரைச்செல்வி ஆக நடிக்கும் சத்யா. ‘‘இதுல என் ஆதிரை கேரக்டருக்கும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சிருக்கு. இப்ப எல்லோரும் அடையாளம் கண்டு அவங்க வீட்டுல ஒருத்தர்மாதிரி பேசுறதும், விசாரிக்கிறதும் சந்தோஷமாக இருக்கு.

நான் சன் மியூசிக்ல ஆங்கராக இருந்தப்ப சேனல் வழியாக ‘அருவி’ சீரியல்ல வாய்ப்பு கிடைச்சது. ‘அருவி’யில் மலர்னு ஒரு கேரக்டர் பண்ணிட்டு இருந்தேன். அப்ப சேனல்ல இருந்து ‘எதிர்நீச்சல்’னு ஒரு சீரியல் வரப்போகுது. பண்றீங்களானு கேட்டாங்க. அப்பதான் திருச்செல்வம் சார்கிட்ட இருந்து அழைப்பு. முதல்ல பண்ண வேண்டாம்னுதான் இருந்தேன். ஆனா, சார் பேசியிருந்ததால போய் மீட் பண்ணிட்டு வந்திடலாம்னு போனேன். அங்கபோய் கதையை கேட்டதும் பிடிச்சது. இருந்தும் எனக்குள்ள நெகட்டிவ் கேரக்டர் பண்ணலாமா... வேண்டாமானு ஒரு குழப்பம் இருந்தது.

சார் ரொம்ப நம்பிக்கை கொடுத்தார். போகப்போக உங்க கேரக்டர் மாறும்னு சொன்னார். சாரை நம்பி ஆதிரை கேரக்டரை ஏற்றுக்கிட்டேன். அவர் சொன்னமாதிரி இப்ப மக்கள்
அவ்வளவு ஆதரவு  தர்றாங்க...’’ என நெகிழ்ந்தார் சத்யா. அவரைத் தொடர்ந்தார் கதையின் நாயகி ஜனனி @ மதுமிதா. ‘‘இந்த சீரியலுக்கு ஆரம்பத்துல இருந்தே மக்கள் சப்போர்ட் ரொம்ப அலாதியானது. தமிழ்ல எனக்கு இது பெரிய ரீச்னு சொல்லணும். இப்படியொரு வாய்ப்பை கொடுத்த சன் டிவிக்கும், இயக்குநர் திருச்செல்வம் சாருக்கும் நன்றி சொல்லிக்கிறேன்...’’ என அவர் முடிக்க, ஹீரோ சக்தியாக நடிக்கும் சபரி சாந்தமாக என்ட்ரி தந்தார்.  

‘‘இன்னைக்கு ‘எதிர்நீச்சல்’ ஒன்றரை ஆண்டுகளாக வெற்றிகரமாகப் போயிட்டு இருக்கு. இப்படியொரு சக்ஸஸ்ஃபுல்லான சப்ஜெக்ட்ல நானும் ஒரு அங்கமாக இருக்கேன் என்பதில் பெருமையாக இருக்கு. அதுக்கு எங்க தயாரிப்பாளரும், இயக்குநருமான திருச்செல்வம் சாருக்கு நன்றி.ஒரு வெப்சீரிஸ் புரொஜெக்ட்டுக்காக திருச்செல்வம் சார் அறிமுகம் கிடைச்சது. ஆனா, கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் அது கைவிட்டுப் போயிடுச்சு. அப்புறம், ‘எதிர்நீச்சல்’ புரொஜெக்ட் பண்ற நேரம் சார் அலுவலகத்துல இருந்து மீண்டும் அழைப்பு. உள்ளே வந்தேன்.

ஆரம்பத்துல சக்தி கேரக்டரை மக்கள் திட்டித் தீர்த்தாங்க. இப்ப முழுவதும் மாறின ஒரு சக்தியை பாராட்டுறாங்க. ஆதரவு தரும் மக்களுக்கு நன்றி...’’ என சபரி நிறுத்த, மூன்றாவது மருமகள் நந்தினி கேரக்டரில் கலக்கும் ஹரிப்ரியாவிடம் பேசினோம். இவர் ப்ரியதர்ஷினியுடன் சேர்ந்து செய்யும் பகடிக்கு உலகம் முழுவதும் எக்கச்சக்க ரசிகர்கள் உள்ளனர்.

‘‘எங்க வாழ்க்கையில் மட்டுமில்ல எல்லோர் வாழ்க்கையிலும் மிகப்பெரிய ஜர்னியா ‘எதிர்நீச்சல்’ இருக்கு. நான் சன்டிவியில் நிறைய சீரியல்கள் பண்ணியிருக்கேன். முக்கியமா ‘ப்ரியமானவள்’ நல்ல பெயர் வாங்கித் தந்தது. அப்புறம், ‘கண்மணி’யில் வளர்னு நெகட்டிவ் கேரக்டர் பண்ணினேன். பிறகு, சன்டிவியில் ஆங்கராக இருந்தேன். அப்பதான் ‘எதிர்நீச்சல்’ சீரியலுக்கு அழைப்பு வந்தது. என்ன கேரக்டர்னு எதையும் கேட்கல. ஏன்னா, திருச்செல்வம் சார் என்கிற ஒரே காரணத்துக்காக ‘பண்றேன்’னு சொன்னேன்.

ஆனா, இவ்வளவு அழகான நந்தினி கேரக்டர் பண்ணுவேன்னு நினைக்கல. இப்ப நிறையபேர், ‘உங்களால் சிரிக்கிறேன். காலையில் ரொம்ப அழுத்தத்துடன் வேலைகள் செய்வேன். இரவு உங்க காமெடி பார்க்கிறப்ப அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கு’னு சொல்லி கேட்கிறப்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கு. இந்த புகழ் எல்லாம் திருச்செல்வம் சாருக்கும், வசனகர்த்தாவான வித்யா மேடத்திற்கும்தான் போய் சேரணும்.

இந்த ஜர்னியில் நானும் ஒரு பார்ட்டாக இருக்கேன் என்பதே ரொம்ப சந்தோஷமாக இருக்கு. இது என்னுடைய மோஸ்ட் ஃபேவரைட்டாக இருக்கும்னு நம்புறேன்...’’ என ஹரிப்ரியா நிறுத்த, ரேணுகாவான ப்ரியதர்ஷினி தொடர்ந்தார். ‘‘இந்தப் பயணம் ரொம்ப சுவையானது. பெரிசா எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் இந்த சீரியலுக்குள்ள அடியெடுத்து வச்சேன். இப்ப ரொம்ப சிறப்பாக வந்திட்டு இருக்கு. நான் பேசுற வசனங்கள் எல்லாமே திருச்செல்வம் சார் பேசுறதுதான். அவர் பேசுறதை கூர்ந்து கவனிச்சாலே போதும். நமக்கு முகபாவம், மொழி எல்லாம் சரியாக வந்திடும்.

இதுல என் கேரக்டருக்கு இவ்வளவு பெரிய ரீச் கிடைக்கும்னு எதிர்பார்க்கல. ரசிகர்கள் கொடுக்கிற ஆதரவு எல்லாமே மறக்கமுடியாததாக இருக்கு. சமையல்கட்டில் பேசுகிற சின்னச்சின்ன விஷயங்கள் எல்லாம் அவங்க வாய்ஸா எடுத்துக்கிறாங்க. அது இந்த சீரியலின் ஸ்பெஷல்னு நினைக்கிறேன்...’’ என்றார் ப்ரியதர்ஷினி. அப்போது ஷாட் முடித்துவிட்டு வந்தார் அவரின் ஜோடியாக ஞானசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்கும் கமலேஷ்.

‘‘375 எபிசோடுகள் போனதே தெரியல. முதல் நாள்ல இருந்து இப்பவரை சின்ன தொய்வு இல்லாமல் நகர்ந்திட்டு இருக்கு. இதுக்குக் காரணம், மக்கள். அடுத்து இந்த வெற்றிக்குக் காரணம் கேப்டன் ஆஃப் த ஷிப் திருச்செல்வம் சார். அவர் பற்றி சொல்லிட்டே இருக்கலாம்.

நான் ‘கோலங்கள்’ பண்ணும்போது ‘ஆனந்தம்’னு இன்னொரு சீரியல்ல நடிச்சிட்டு இருந்தேன். ரெண்டு சீரியல்கள்ல தொடர்ந்து நடிக்கமுடியாத சூழல் என்பதால் ‘கோலங்கள்’ டிராப் பண்றமாதிரி ஆச்சு. அப்புறம், இவ்வளவு நீண்ட இடைவெளிக்குப் பிறகு திருச்செல்வம் சார் கூப்பிட்டார். அப்படிதான் ‘எதிர்நீச்ச’லுக்குள் என்ட்ரி ஆனேன்.

கடந்த 27 ஆண்டுகளாக சினிமா ஃபீல்டுல இருக்கேன். 80 சீரியல்களுக்கு மேல் நடிச்சிருப்பேன். சன் டிவி இல்லனா நான் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது. அவங்க வளர்ப்புதான் நான். இந்த நேரத்துல சன் டிவிக்கும், திருச்செல்வம் சாருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கேன். ‘எதிர்நீச்சல்’ இப்படியே பல எபிசோடுகள், பல ஆண்டுகள் கடந்து போகணும். ‘கோலங்கள்’, ரிக்கார்டை பிரேக் பண்ணணும். அதுவே என் ஆசை...’’ என்றார் கமலேஷ்.

தொடர்ந்து மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற அப்பத்தா கேரக்டரில் வரும் பாம்பே ஞானம் பேசினார். ‘‘நான் இந்த சீரியல் நடிப்பைவிட்டு பத்து ஆண்டுகளாகிடுச்சு. மறுபடியும் நடிக்கிற ஐடியா எனக்கு இல்ல. ஒருநாள் காலையில் இயக்குநர் திருச்செல்வமும், அவருடன் ‘கோலங்கள்’ சீரியல்ல ஆதி கேரக்டர்ல நடிச்ச அஜய்யும் சேர்ந்து பேசினாங்க. ‘இந்தமாதிரி சீரியல் பண்ணப்போறோம். அதுல நீங்க பாட்டி கேரக்டர் பண்ணணும்’னு சொன்னாங்க.

‘நான் நடிக்கிறதே விட்டுட்டேன்’னு சொன்னேன். ‘இல்ல ஆன்ட்டி... நீங்கதான் பண்ணணும். அப்பதான் அந்தக் கேரக்டர் சிறப்பாக இருக்கும்’னு சொன்னாங்க. அப்பகூட நான் எதுவும் சொல்லல. ஆனா, தொடர்ந்து எட்டு மாதங்களாக விடாமல் திருப்பித் திருப்பி கால் பண்ணி ‘நீங்க பண்ணணும்’னு சொல்லிட்டே இருந்தாங்க. சரி. இவ்வளவு சொல்லும்போது எதுக்கு நோ சொல்லணும்னு ஒத்துக்கிட்டேன்.

அப்ப இயக்குநர் திருச்செல்வம், ‘இதுல உங்க கேரக்டர் படிச்ச பாட்டி. ஆனா, கொஞ்ச நாளைக்கு அவங்க பேசவே மாட்டாங்க. எல்லாத்தையும் அப்சர்வ் பண்ணுவாங்க. ஒருநாள் அவங்க பேசுவாங்க’னு சொன்னார். ஆனா, இந்தப் பாட்டி ஏன் பேசாமல் உம்னு இருக்கானு பெரிய எதிர்பார்ப்பை எல்லாரிடமும் கிளப்பிடுச்சு.  அப்ப எல்லோரும் என்கிட்ட, ‘நீங்க ஏன் பேசமாட்டேங்கிறீங்க. நீங்க ஊமையாக இருந்தால் எழுதிக்காட்டலாமே’னு சொன்னாங்க. ‘நீங்க எதாவது சொல்லி ஜனனிக்கு சப்போர்ட் பண்ணக்கூடாதா’னு எல்லாம் கேட்டாங்க.

ஒருநாள் நான் பேசினப்ப இவ்வளவு தூரம் அது பேசப்படும்னு நான் எதிர்பார்க்கல. இப்ப ‘அப்பத்தா அப்பத்தா’னு நெகிழ்றாங்க. இத்தனை ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ஒரு பூஸ்ட் மாதிரி புகழின் உச்சிக்கு என்னை கொண்டு போய் நிறுத்தியிருக்கு ‘எதிர்நீச்சல்’. அதுக்கு சன் டிவிக்கும், இயக்குநர் திருச்செல்வத்திற்கும் நான் நன்றி சொல்லணும்...’’ என்றார்.  

நிறைவாக தொடரின் இயக்குநர் திருச்செல்வத்திடம் பேசினோம். ‘‘‘கோலங்கள்’ சீரியல்ல வீட்டிலுள்ள பெண்கள் வெளியே சென்று சாதிக்க நினைச்சாங்க. இதில், வீட்டிற்குள் இருக்கும் பெண்கள் தங்கள் சுயத்தைத் தேடி அலையறாங்க. இதுதான் முதல் பார்ட். நம் வீட்டில் அம்மா, சகோதரிகள், அம்மத்தா, அப்பத்தானு இருக்கிற பெண்கள் ஏதோ ஒரு கட்டத்தில் அழுத்தத்தில் உருவாக்கப்படுறாங்க. அந்த அழுத்தம் வீட்டு அடுப்படியில் ஆரம்பிச்சு வெளியே அலுவலகம் வரை தொடருது. இந்த அழுத்தத்தை சொல்லணும் என்பதுதான் இந்தக் கதையின் நோக்கமாக இருந்தது. அப்படியொரு கதையின் நாயகியே ஜனனி.

இதன் தொடக்கத்திற்கு மிகுந்த உற்சாகம் தந்தது சன் டிவியின் சேர்மன் கலாநிதி மாறன் சாரும், காவேரி மேடமும்தான். இந்த  சீரியல் பெண்களுக்கு ஒரு உத்வேகமாக அமையணும் என்பதில் தெளிவாக இருந்தாங்க. ஒவ்வொருமுறை மீட்டிங்கின் போதும் காவேரி மேடம் ‘வீடுகள்ல என்ன சொல்றாங்க... பெண்கள் என்ன நினைக்கிறாங்க’னு இந்தக் கதையின் ஃபீட்பேக்கை சொல்லிட்டே இருப்பாங்க. இதெல்லாம் பெரிய சப்போர்ட்டாக அமைஞ்சது. சேர்மன் சாருக்கும் மேடத்திற்கும் பெரிய நன்றியை சொல்லிக்கிறேன்.

அப்புறம், ‘எதிர்நீச்சல்’ கதாபாத்திரங்கள் எல்லாமே நான் சந்தித்த மனிதர்களின் பிரதிபலிப்புதான். ஆதி குணசேகரன் கேரக்டர் நான் தென்பகுதியில் பார்த்த ஒரு மனிதர். அவரின் குணாதிசயம்தான் இதுல முக்கால்வாசி குணசேகரன் பாத்திரம். இதுக்கு மண் சார்ந்த முகமாக தேவைப்பட்டதால மாரிமுத்து சாரை நடிக்க வைக்க அணுகினேன். இப்பவரை சிறப்பாக செய்றார். ஜனனி கதாபாத்திரத்திற்கு இயல்பான முகமாகத் தேவைப்பட்டது. அப்படியாக மதுமிதா வந்தாங்க.

மருமகள்கள் மூன்றுபேருமே எனக்கு ரொம்ப ஃபேவரைட். கனிகா என் குடும்ப நண்பரும்கூட. அவங்க, ‘ஏதாவது சீரியல் ஆரம்பிக்கிறமாதிரி இருந்தால் சொல்லுங்க சார். நான் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் பண்றேன்’னு சொன்னாங்க. ஈஸ்வரி கேரக்டர் பற்றி சொன்னேன்.

முதல் மூணு மாசம் எதுவும் பேசாமல் இருந்தாலும் இப்ப ஈஸ்வரி கேரக்டர் மரியாதைக்குரிய கேரக்டராக பேசப்படுது. ப்ரியதர்ஷினி, ஹரிப்ரியா இவங்க ரெண்டு பேர் கதாபாத்திரமும் இரட்டையர்கள் என்பது போல ரொம்ப பாப்புலராகியிருக்கு. உடல்மொழி, வட்டார வழக்கு ரெண்டையும் ப்ரியதர்ஷினியும் ஹரிப்ரியாவும் அற்புதமா வெளிப்படுத்தறாங்க.

ஹீரோ சபரி இந்தக் கதாபாத்திரத்திற்கு ரொம்ப பொருந்தி நிற்கிறார். அப்புறம், சத்யப்ரியா மேடம். அவங்க என் எல்லா தொடர்லயும் நடிச்சிருக்காங்க. நான் தென்பகுதியில் இவங்க தோற்றத்துல ஒருத்தங்களைப் பார்த்தேன். அந்த  கெட்டப்தான். கமலேஷ், விபுராமன், பாம்பே ஞானம் மேடம், சத்யா உள்ளிட்ட எல்லாருமே சிறப்பாக பண்றாங்க.

அப்புறம், வசனம் எழுதுகிற ஸ்ரீவித்யாவைப் பற்றியும் சொல்லணும். ‘வல்லமை தாராயோ’னு ஒரு வெப்சீரிஸ் பண்ணினேன். அது முழுக்க பெண்கள் சார்ந்த கதை. அதுக்கு கதை, திரைக்கதையை நான் எழுதாமல் ஒரு பெண்ணை எழுத வச்சா என்னனு தோணுச்சு. எனக்கு ஸ்ரீவித்யா ‘கோலங்கள்’ல நடிச்சதுல இருந்தே குடும்ப நண்பர். அவங்கள ‘எழுதுங்க’னு சொன்னேன்.

‘வல்லமை தாராயோ’ வெப்சீரிஸிற்கு முதல் சீனே நல்லா எழுதியிருந்தாங்க. ‘எதிர்நீச்சல்’ பெண்களின் உணர்வுகள் சார்ந்த கதை என்கிறதால அவங்க வசனங்கள் இன்னும் கூடுதல் பலமாக இருக்கு.

அடுத்து இதுல கேமராமனாக சந்தானம் இருக்கார். இங்குள்ள தொழில்நுட்பக் கலைஞர்கள் எல்லாருமே சிறப்பான கலைஞர்கள். இந்த வெற்றிக்கு இவங்க எல்லாருமே காரணம்...’’ நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் இயக்குநர் திருச்செல்வம்.

செய்தி: பேராச்சி கண்ணன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்