ஆக்டர்... எடிட்டர்...டான்சர்...சிங்கர்... பன்முகம் கொண்ட ‘அன்பே வா’ விராட்



தமிழ் சீரியல் ரசிகர்களின் ‘மோஸ்ட் வாண்டட்’ ஹீரோவாக ஜொலிக்கிறார் விராட். அவரின் நிஜப்பெயரைச் சொல்வதைவிட, ‘அன்பே வா’ வருண் என்றால் கிறங்கித்தான்

போகிறார்கள்  ரசிகர்கள்.
‘‘இந்த அன்பும், அங்கீகாரமும்தான் ஒரு நடிகனுக்கு முக்கியம். அதுக்காகத்தானே நிறைய கஷ்டப்பட்டு உழைக்கிறோம். அது வெறும் சந்தோஷம் அல்ல. பேரானந்தம்...’’ உற்சாகமாகச் சொல்லும் விராட், ‘சிறந்த நடிகர்’, ‘சிறந்த காதல் ஜோடி’ என இரண்டு ‘சன் குடும்ப விருது’களைப் பெற்றவர்.    

‘‘சொந்த ஊர் பெங்களூர். என் இயற்பெயர் நவீன்குமார். இண்டஸ்ட்ரிக்காக விராட்னு மாத்தி வச்சுக்கிட்டேன். சின்ன வயசுல இருந்தே நடிப்புனா ரொம்பப் பிடிக்கும். என்னைவிட இது என் அம்மாவின் கனவுனுதான் சொல்லணும். அவங்களுக்கு என்னை வெள்ளித்திரையில் பார்க்கணும்னு ஆசை. அதை என் மைண்ட்ல விதைச்சிட்டே வந்திட்டாங்க.
அம்மா பெயர் குருதேவி. இப்ப ஜெய்நகர் பொது மருத்துவமனையில் மெடிக்கல் ரிக்கார்டு ஆஃபீசரா இருக்காங்க. கெசட்டட் போஸ்ட். எனக்கு எல்லாமே அவங்கதான். இரும்பு மனுஷி. அப்பா எங்ககூட இல்ல. அம்மாதான் தனியொருத்தியா என்னை வளர்த்தெடுத்தாங்க.

பி.எஸ்சி அனிமேஷன் முடிச்சேன். எனக்கு போட்டோகிராபி, டிராயிங், டான்ஸ், சிங்கிங்னு எல்லாமே தெரியும். மூன்றாவது வகுப்பு படிக்கிறப்பவே மாநில அளவிலான நடனப்போட்டியில் ‘காதலன்’ படத்துல வர்ற ‘முக்காலா...’ பாடலுக்கு முதல் பரிசு வாங்கினேன். அப்புறம், ஆறாம் வகுப்பு படிக்கிறப்ப இந்துஸ்தானி இசை கொஞ்சம் கத்துக்கிட்டேன். ரெண்டு மூணு கன்னடப் படங்கள்ல பாடல்கள் பாடியிருக்கேன்.
‘அன்பே வா’ சீரியல்லகூட பழைய ‘அன்பே வா’ படத்துல எம்ஜிஆர் சார் பாடுகிற ‘அன்பே வா...’ பாடலின் ரீமிக்ஸை நான்தான் பாடி நடிச்சேன்.
ஆடுறது, பாடுறது எல்லாம் பேஷன்னு சொல்லலாம். ஆனா, ஆக்டிங் அப்படியில்ல. அதைவிட ரொம்ப முக்கியமானதுனு நினைக்கிறேன்...’’ என்கிற விராட் பள்ளியில் படிக்கும்போதே சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்துவிட்டார்.  

‘‘2006ம்  வருஷம் ‘பிளாக்’னு ஒரு படத்துல நடிக்க வாய்ப்பு கிடைச்சது. அப்ப 12ம் வகுப்பு படிக்கிறேன். என் அம்மாதான் இயக்குநர்கள்கிட்ட அழைச்சிட்டுப் போவாங்க. அங்க போய் நடிச்சுக்காட்டி சான்ஸ் கேட்பது வழக்கம். அப்படியாக அந்தப் படம் அமைஞ்சது. ஆனா, அந்தப் படம் அவ்வளவா போகல.அடுத்து, ‘டென்த் கிளாஸ் ஏ செக்‌ஷன்’னு ஒரு படத்துல நான் தனி ஹீரோவா நடிச்சேன். ஸ்கூல்ல படிக்கிறப்ப காதல் பண்ணினா என்ன மாதிரியான கஷ்டங்களை வாழ்க்கையில் எதிர்கொள்ள நேரிடும்னு ஒரு மெசேஜ் இருக்கிற படம். ஆனா, அதுவும் பல காரணங்களால் சரியா போகல. படம் ரிலீசாகவே மூணு வருஷம் ஆகிடுச்சு.  

இந்த நேரத்துல நான் பண்ணின ஒரே தவறு நிறைய இடைவெளி விட்டது. இந்த கேப்பிற்குப் பிறகு ரமேஷ் அரவிந்த் சார் கதாநாயகனா நடிச்ச படத்துல ஒரு கேரக்டர் பண்ணினேன்.
ஆனா, வீட்டுல சும்மா இருக்காமல் யூடியூப்பை பார்த்து நானாகவே விஷுவல் எஃபெக்ட்ஸ் கத்துக்கிட்டேன். கிராபிக்ஸ், மோஷன் போஸ்டர்ஸ் செய்கிற வேலைகளைப் படிச்சேன்.
நான் செய்த மோஷன் போஸ்டர்ஸ் யூடியூப் வீடியோக்களைப் பார்த்திட்டு பிரபல இயக்குநர் தன் படத்துக்கு ஒரு மோஷன் போஸ்டர் பண்ணிக் கொடுக்கச் சொல்லி கேட்டார். அது ‘கேஜிஎஃப்’ புகழ் யாஷ் சாரின் ‘கஜகேசரி’ படம்!

கர்நாடக ஃபிலிம் இண்டஸ்ட்ரியில் நான்தான் முதன்முதலா மோஷன் போஸ்டர்ஸை அறிமுகப்படுத்தினேன். ‘கஜகேசரி’ ரிலீஸாகி ரொம்பப் பாப்புலராச்சு. அப்புறம், சுதீப் சாரின்
‘ஹெப்புலி’ படத்துக்கும் மோஷன் போஸ்டர் பக்காவா பண்ணினேன். அதுவும் ரொம்ப ரீச்சாச்சு. ஒரு நடிகருக்கு நல்ல தூக்கமும், சரியான நேரத்துக்கு சாப்பாடும் இருக்கணும். அப்பதான் நல்ல தோற்றத்துடன் முகப்பொலிவா இருப்பாங்க. ஆனா, விஎஃப்எக்ஸ் ஆர்ட்டிஸ்ட்டிற்கு இரவுதான் கிரியேட்டிவிட்டி ஓப்பனாகும். பகல்ல தூங்கிடுவாங்க. நைட்ல வொர்க் போகும். ஒரு மோஷன் போஸ்டருக்கு குறைஞ்சது இரண்டுல இருந்து மூணு வாரங்கள் எடுக்கும். இதனால, நான் ரொம்ப குண்டாகிட்டேன்.

அப்புறம் இந்த வேலை வேண்டாம்னு நானே நிறுத்திட்டேன். இதுக்கிடையில் மோஷன் போஸ்டர் பண்ணின ஒரு பட நிகழ்ச்சிக்கு வந்த இயக்குநர் ஒருவர் என்னை சந்திச்சு, ‘ஒரு படம் பண்றேன். நீங்க நடிக்கணும்’னு சொன்னார். அந்தப் படத்தின் பெயர் ‘கெரில்லா’. இந்தப் படத்துக்காகத்தான் என் பெயரை விராட்னு மாத்தி ரெண்டு மாசத்துல 16 கிலோ வெயிட் குறைச்சேன். ஆனா, எதிர்பாராவிதமா அந்தப் படமும் வெளியே வரல.

நான் நினைச்சபடி எதுவும் நடக்கல. அதேநேரம் நெகட்டிவ்வாக என்ன நடந்தாலும், நிறைய தோல்விகள் வந்தாலும் நம்பிக்கையை மட்டும் இழக்கக்கூடாதுனு தீர்மானமா இருந்தேன்.   
‘கெரில்லா’ மூவி நின்னதும் வெட்டிங் போட்டோகிராபி செய்தேன். 2012ல் விகா புரொடக்ஷன்ஸ் பெயர்ல போட்டோகிராபி கம்பெனி தொடங்கினேன். அந்த ரெண்டு ஆண்டுகள் ரொம்ப அழகிய நாட்களா இருந்துச்சு. மண்டபத்திற்குப் போறது.

திருமணத்தைப் படம்பிடிக்கிறது, அதை எடிட் செய்றதுனு இருந்தேன். ஐம்பது வெட்டிங் போட்டோகிராபியாவது செய்திருப்பேன்.

இந்நேரம் மோஷன் போஸ்டர்ஸ் பண்ணினப்ப பழக்கமான இன்னொரு இயக்குநர், ‘எத்தனை நாட்கள் இப்படியே இருப்பீங்க. இப்ப நிறைய சீரியல்கள் போயிட்டிருக்கு. அதுல எனக்கு நிறைய கான்டெக்ட் இருக்கு. சீரியல் பண்றீங்களா’னு கேட்டார். அப்படியாக சீரியல் உள்ள வந்தேன்.

ஜீ கன்னடா சேனலுக்காக, ‘சுபவிவாஹா’ சீரியல் செய்தேன். செம ரீச்சாச்சு. எட்டாண்டுகள் கிடைக்காத பேரும் புகழும் அந்த ஒரே சீரியல்ல கிடைச்சது. நான் ரொம்ப கவனம் பெற்றேன். அப்புறம், ‘நிஹாரிகா’னு இன்னொரு சீரியல் வேறொரு சேனலுக்குப் பண்ணினேன். அதுவும் நல்லா போச்சு...’’ என்கிறவரிடம், ‘அன்பே வா’ வாய்ப்பு பற்றி கேட்டோம்.  
‘‘‘நிஹாரிகா’ சீரியலுக்கு ப்ரொமோ ஷூட் செய்ய டெக்னீஷியன்ஸ் எல்லாம் சென்னையில் இருந்து வந்தாங்க. அவங்க என் பெர்ஃபாமன்ஸை பார்த்திட்டு தமிழுக்கு கூப்பிட்டாங்க. அப்படியாக தமிழ்ல ‘பேரழகி’ சீரியல் பண்ற வாய்ப்பு அமைஞ்சது.

அதுக்கப்புறம், கொஞ்சம் பிரேக் எடுத்துக்கலாம்னு நினைச்சேன். அப்பதான் ‘அன்பே வா’ ஆஃபர் சரிகம நிறுவனத்தில் இருந்து வந்தது. சென்னைக்கு வந்து ஸ்கிரீன் டெஸ்ட் கொடுத்திட்டு போனேன். ஓகே ஆச்சு. இங்க ஓகே ஆன நேரம் ஒரு போன்கால் வந்தது. என்னனு பார்த்தால் ஒரு கன்னடப் படத்துல ஹீரோவாக நடிக்க ஆஃபர்! புது இயக்குநர். ஆனா, அவர் நிறைய ஸ்டார் படங்கள்ல அசிஸ்டென்ட்டா வேலை செய்தவர். ‘கேஜிஎஃப்’லயும் வேலை செய்திருக்கார். கதை சொன்னாங்க. செமயா இருந்துச்சு. அந்தப் படம் வெளியாகியிருந்தால் நிச்சயம் கன்னட சினிமாவுல நல்லதொரு ஓப்பனிங் எனக்கு கிடைச்சிருக்கும்.

உடனே, சரிகம சேர்மன் விஜயலட்சுமி மேடத்திற்கு போன் பண்ணி விஷயத்தை சொன்னேன். அவங்க, ‘ஸ்கிரீன் டெஸ்ட்ல எல்லாம் தேர்வாகிட்டீங்க. இது ரொம்ப நல்ல புரொஜெக்ட்’னு என்னை கன்வின்ஸ் பண்ணினாங்க. ஹீரோ சான்ஸை மிஸ் செய்ய எனக்கும் மனசு வரலை. ‘இந்த ஒருதடவை ரிலீவ் பண்ணுங்க, ப்ளீஸ்’னு கேட்டேன். கடைசியில் சரினு ஒத்துக்கிட்டாங்க.  

அந்தப் படத்துக்காக காலையில் ஃபைட் கிளாஸ், அடுத்து ஜிம்னு ஒரு மாசம் தயாரானேன். உடம்பை ஃபிட்டா வச்சேன். அடுத்த வாரம் பட பூஜைனு சொல்லியிருந்தாங்க. ஆஹா டைம் வொர்க்அவுட் ஆகுதுனு நினைக்கிறப்ப கோவிட் வந்திடுச்சு... லாக்டவுன் போட்டுட்டாங்க.
 
ஒருநாள் வெளியே வரக்கூடாதுனு முதல்ல சொன்னாங்க. கோவிட் சீரியஸ் அப்ப தெரியல. ஒரு நாள் ஒரு மாசமாச்சு. ரெண்டு மாசமாச்சு. சரி, நமக்கு டைம் கிடைக்க கிடைக்க ரொம்ப நல்லதுனே நம்பிக்கையா இருந்தேன். அதேநேரம், விஜயலட்சுமி மேடமும் போன் பண்ணி என்ன முடிவு செய்திருக்கிறீங்கனு மறுபடியும் கேட்டாங்க. அவங்களுக்கு இந்த இண்டஸ்ட்ரியில் எப்படி வேலை நடக்கும்னு தெரியும். ‘நான் சொல்றதைக் கேளுங்க விராட்.

இந்த டைம்ல பெரிய ஹீரோக்கள் நடிச்ச படங்களே ரிலீசாகுறது கஷ்டம். நீங்க இந்த டைம்ல படம் பண்ணினாலும் முதல்ல உங்க படம் ரிலீசாகாது. தியேட்டர்ல ரிலீசாகப் பல படங்கள் இருக்கு. அதெல்லாம் முடிஞ்சுதான் உங்களுக்கு வரும்.

அதனால, பிராக்டிக்கலா யோசிங்க’னு இயல்பை விளக்கினாங்க.  அதேமாதிரி பட இயக்குநரும் போன் பண்ணி, நாளைக்கு ஷூட் வச்சிக்கலாம்னு சொல்வார். ஆனா, கேன்சல் ஆகிடும். இந்த மாதிரி பத்துமுறை ஷூட் ப்ளான் பண்ணி கேன்சல் ஆச்சு. எதார்த்தம் புரிஞ்சுது. இன்னும் லேட் பண்ணினால் ‘அன்பே வா’ ப்ரொஜெக்ட்டும் கைவிட்டுப் போக வாய்ப்பிருக்கு. லாக்டவுன் டைம்ல நம்மைக் கூப்பிட்டு வேலை கொடுக்குறதே பெரிய விஷயம்.

அதனால, ‘அன்பே வா’ சீரியல்ல கமிட்டானேன். நினைச்சுப் பார்க்க முடியாத பேரும் புகழும் கிடைச்சிருக்கு...’’ என்கிறவர் தொடர்ந்தார்.   ‘‘என் ஆசையெல்லாம் என் அம்மாவை அழைச்சிட்டு உலகம் முழுவதும் சுத்திப் பார்க்கணும். எனக்கு அதுக்குத் தேவையான எனர்ஜி, எகனாமி, டைம் எல்லாம் வேணும். அப்படியொரு நேரம் வரணும்னு கடவுளை வேண்டிக்கிறேன்.

ஒருவேளை நடிக்காமல் போயிருந்தால் எடிட்டராகவோ, விஎஃப்எக்ஸ் டிசைனராகவோ, பாடகராகவோ அல்லது இயக்குனராகவோ ஆகியிருப்பேன். எப்படினாலும் இந்த இண்டஸ்ட்ரியில்தான் இருந்திருப்பேன். அந்தளவுக்கு நான் இந்த இண்டஸ்ட்ரியை நேசிக்கிறேன்...’’ மகிழ்ச்சியாகச் சொல்கிறார் விராட்.

பிடிச்சது...

ஊர்: பெங்களூர்.
நாடு: இந்தியா.
உணவு: மட்டன் பிரியாணி.
உடை: டி-சர்ட், ஜீன்ஸ்.
நடிகர்: விக்ரம்.
நடிகை: கங்கணா.
இசையமைப்பாளர்:  ஏ.ஆர்.ரஹ்மான்.
டான்ஸ் மாஸ்டர்: பிரபுதேவா.
அடிக்கடி முணுமுணுக்கிற பாடல்: ‘நியூயார்க் நகரம் உறங்கும்போது...’
சினிமா: ‘டைட்டானிக்’, ‘அவதார்’.
சீரியல்: ‘அன்பே வா...’
பிடிக்காத விஷயம்: பொய் சொல்றது.

செய்தி: பேராச்சி கண்ணன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்