டெல்லி சம்பவத்துக்குப் பிறகு, ‘இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்கு... இருக்கு... இருக்கு!’ என்று கையில் கல்லும் கிழிந்த சட்டையுமாக தெருவுக்குத் தெரு சென்று கத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது மத்திய அரசு. அதன் அடையாளமாகத்தான் ‘‘பெண்களின் பாதுகாப்புக்கான விசேஷ எஸ்.ஓ.எஸ் வாட்ச்களை அரசே தயாரித்து 500 ரூபாய்க்கு வழங்கும்’’ என்று அறிவித்திருக்கிறார் மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபல். அது என்ன எஸ்.ஓ.எஸ் வாட்ச்?
‘நாங்கள் ஆபத்தில் இருக்கிறோம்... காப்பாற்றுங்கள்’ என்ற அர்த்தத்தில்தான் காலம் காலமாக எஸ்.ஓ.எஸ் என்ற வார்த்தை பயன்பட்டிருக்கிறது. ஆதி காலத்தில் கப்பல் மூழ்கும் தருவாயில் தந்திக் கருவி மூலம் இந்த ஷி.ளி.ஷி என்ற மூன்று எழுத்தை கரைக்கு அனுப்புவார்களாம். காலப்போக்கில் உதவி கேட்டு அழைக்கப் பயன்படும் எல்லா நவீன வகைக் கருவிகளும் எஸ்.ஓ.எஸ் கருவி என்ற ரகத்தில் வந்துவிட்டன.
எஸ்.ஓ.எஸ் வாட்ச் என்பது வேறொன்றுமில்லை... எலக்ட்ரானிக் வாட்ச் மற்றும் செல்போனின் ஒட்டுப் பயிர் என்று இதைச் சொல்லலாம். செல்போன் போல சார்ஜ் ஏற்றிக் கொள்ளக் கூடிய இந்த வாட்ச்சில் சிம் கார்டு ஒன்றைப் பொருத்த இடம் இருக்கும். முக்கியமான எண்கள் என மூன்று முதல் ஐந்து தொலைபேசி எண்களை அதில் பதிவு செய்து வைக்க முடியும். செயற்கைக்கோளோடு தொடர்பு கொள்ளக் கூடிய ஜி.பி.எஸ் வசதி இதில் இருப்பதால், இதை அணிந்திருப்பவர் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும், சரியாக அவர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து விடலாம்.
மேலும் இந்த வாட்ச்சில் ‘பேனிக் பட்டன்’ என்று ஒன்று உண்டு. ஆபத்தான சூழ்நிலையில் மாட்டிக்கொள்ளும் நபர்கள் இதை ஒரு முறை அழுத்தினால், நாம் பதிவு செய்து வைத்திருக்கும் தொலைபேசி எண்களுக்கும் போலீஸுக்கும் ஒரு எச்சரிக்கை செய்தியை இந்த வாட்ச் அனுப்பிவிடும். அதோடு நாம் இருக்கும் இடம் பற்றிய தகவலும் போய்ச் சேர்ந்துவிடும். எல்லாவற்றுக்கும் மேலாக, அந்த பேனிக் பட்டனைத் தட்டியதும் வாட்ச்சில் உள்ள மைக்கும் கேமராவும் உயிர் பெற்று, நாம் எதிர்கொள்ளும் ஆபத்தையும் அப்படியே படம் பிடித்து வைத்துக்கொள்ளும் என்கிறார்கள்.
இத்தனை வசதிகள் கொண்ட எஸ்.ஓ.எஸ் வாட்ச்கள் இந்தியாவின் கண்டுபிடிப்பல்ல. ஏற்கனவே இதே வகை வாட்ச்கள் சீனாவில் இருந்து ஆன்லைன் மார்க்கெட் மூலம் இந்தியாவில் புழக்கத்தில் உள்ளன. போட்டியின்றி கோலோச்சும் சீன நிறுவனங்கள், இந்த வாட்ச்களை 3000 முதல் 6500 ரூபாய் வரை விலை சொல்கின்றன. மத்திய அரசு இதே வாட்ச்சை 500 ரூபாய்க்குத் தயாரிக்கப் போவதுதான் புதுசு.
‘இதில் இருக்குற எல்லா வசதியும் இதைவிட அட்வான்ஸ்டாக இப்போது செல்போனிலேயே இருக்கிறதே... அப்புறம் எதற்கு அரசு உணர்ச்சிவசப்படுகிறது?’ என்று கேள்வி கேட்பவர்களுக்கு ஒரு விஷயம். ஆபத்து நேரத்தில் ஒரு பெண் தனது செல்போனைக் கையில் எடுத்தால், அது பிடுங்கப்படும். மோசமான தாக்குதல் தொடரக்கூடும். ஆனால் வாட்ச்சில் ஒரு பட்டனை தட்டி விடுவது அப்படி ஒன்றும் வித்தியாசமாகத் தெரியாது. ஒரு பெண் ஆபத்தில் அனுப்பும் சமிக்ஞைகளை போலீஸ் உடனடியாகப் பார்த்துவிட்டு அலெர்ட் ஆனால், அந்தப் பெண் சிக்கியிருப்பது எங்கே என்பதை நிமிடங்களில் கண்டுபிடித்துக் காப்பாற்றுவது சாத்தியம்.
வெறும் வாக்குறுதியோடு நின்றுவிடாமல், இந்த வாட்ச் பெண்களின் கைக்கு வருவது அவசியம்!
- கோகுலவாச நவநீதன்