நிழல்கள் நடந்த பாதை





நீதியைத் தேடி
டெல்லியில் மருத்துவ மாணவி பேருந்தில் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரம் தேசத்தின் மனசாட்சியை தட்டி எழுப்பியது. யாரையும் மனமுடைந்து போகச் செய்யும் அந்தக் குற்றத்தின் தன்மை மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மக்கள் குற்றவாளிகளை நேரடியாக தண்டிக்க விரும்பினர். அரசாங்கத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. பாலியல் குற்றவாளிகளுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்வதில் தொடங்கி, பொது இடத்தில் மரண தண்டனை நிறைவேற்றுவது வரை பல்வேறுவிதமான கடுமையான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.

இதுபோன்ற கொந்தளிப்பான சூழலில், பிரச்னைகளைப் புரிந்துகொள்வதைவிட, அதற்கு உடனடித் தீர்வுகளை வழங்குவதில் வெகுஜன ஊடகங்களும் பொதுமக்களும் தீவிரமாக இருப்பதை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பார்க்க முடிகிறது. தமிழகத்தில் வங்கிக்கொள்ளைகள் நடந்தபோது சிலர் போலி என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டதை பொது மக்கள் கொண்டாடினர். கோவை சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்திலும் தொடர்புடைய குற்றம் சாட்டப்பட்டவர் என்கவுன்டர் செய்யப்பட்டபோது மக்கள் இதே மன நிலையினை வெளிப்படுத்தினர்.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில் மனித உரிமையாளர்கள் கடும் சவால்களை சந்திக்கின்றனர். அவர்கள் ஏதோ குற்றவாளிகள் சார்பாகப் பேசுவது போன்ற ஒரு தோற்றம் உருவாகிறது. மரண தண்டனை மற்றும் போலி என்கவுன்ட்டர்களை எதிர்க்கும் என்னைப் போன்றவர்கள், விவாதங்களில் மிகவும் உணர்ச்சிகரமான எதிர்வினைகளைச் சந்திப்பது தவிர்க்க முடியாததாக இருக்கிறது. ‘மனித உரிமை சார்ந்த அடிப்படைக் கோட்பாடுகளை கைவிடுவதன் மூலம் நாம் குற்றத்தைத் தடுக்க முடியும் என்று நம்புவது ஒரு கற்பனையே’ என்பதைப் புரியவைப்பது அவ்வளவு எளிதாக இல்லை.
டெல்லி பலாத்கார விவகாரத்தில் தேசமே இரண்டாகப் பிளவுண்டு நின்றது. பெரும்பான்மையினர் கொடூரமான, கடுமையான சட்டங்களை ஆதரித்து நின்றனர். தமிழக முதல்வரும் பாலியல் குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் அடைப்பது துவங்கி ரசாயன ஆண்மை நீக்கம் செய்வது வரை பல்வேறு பரிந்துரைகளைச் செய்தார். இன்னொரு தரப்பில் மனித உரிமையாளர்கள், ‘புதிதாக கொடூரமான சட்டங்கள் தேவை இல்லை. இருக்கிற சட்டங்களை முறையாக அமல்படுத்தினாலே போதும். ஆண்மை நீக்கம், மரண தண்டனை போன்றவை சர்வதேச மனித உரிமை சார்ந்த நெறிமுறைகளுக்கு எதிரானது’ என்று வாதாடினோம்.

இந்தச் சூழலில்தான் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜே.எஸ்.வர்மா தலைமையில் இந்த விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழு தனது பரிந்துரைகளை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது. பெரும்பான்மையினர் உணர்ச்சிகளுக்கு எந்த விதத்திலும் அடிபணியாமலும், அரசியல் சாசனத்தின் வழி நின்றும், மனித உரிமையாளர்கள் முன்வைத்த பெரும்பாலான கருத்துக்களை நீதிபதி வர்மா வெளிப்படுத்தியிருப்பது ஜனநாயக சக்திகளுக்கு பெரிதும் ஊக்கமளிப்பதாக  உள்ளது.

மரண தண்டனை குறித்த கோரிக்கைகளை வர்மா குழு முற்றாக நிராகரித்துவிட்டது. ‘பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்சம் இருபதாண்டுகள் வரை தண்டனை வழங்கலாம்’ எனப் பரிந்துரைத்தது. ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் என்பது போன்ற விஷயங்களை அது கணக்கிலேயே எடுத்துக்கொள்ளவில்லை.



‘பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கு புதிதாக கடுமையான சட்டங்கள் தேவையில்லை. இருக்கிற சட்டங்களை முறையாகப் பயன்படுத்தினாலே போதும்’ என்று சொன்னதுடன், பாலியல் குற்றங்களை தடுப்பதில் காவல் துறையின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சிக்கிறது குழு. குற்றங்கள் பெருகுவதற்கு நமது நிர்வாக அமைப்பின் வீழ்ச்சி எவ்வாறு காரணமாக இருந்திருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. பாலியல் வழக்குகளில் காவல்துறையை மேம்படுத்துவதும் சீர்திருத்துவதும் அவசியம் என்பதை சுட்டிக் காட்டியதன் மூலம், பிரச்னையை சரியாகப் புரிந்துகொண்டுள்ளது இந்தக் குழு. ‘முறையாக விசாரணை மேற்கொள்ளாத அதிகாரிகள் பொறுப்பாக்கப்பட வேண்டும், ஒவ்வொரு பாலியல் பலாத்காரமும் முறையாகப் பதிவு செய்யப்பட வேண்டும்’ என்ற பரிந்துரையையும் முன்வைத்துள்ளது.

பாலியல் பலாத்கார வழக்குகளில் மருத்துவப் பரிசோதனையின் இடம்தான் முக்கியமானது. பல வழக்குகளில் முறையான பரிசோதனைகள் இல்லாததால் குற்றவாளிகள் எளிதில் தப்பிவிடுகின்றனர். மேலும், பழமையான பரிசோதனை முறைகள் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கடும் சித்ரவதையாக இருந்து வருகின்றன. எனவே, ‘தகுதி வாய்ந்த மருத்துவர்களைக் கொண்டு முறையாகப் பரிசோதிக்க வேண்டும்’ என்பதை வர்மா குழு வலியுறுத்துகிறது.

காஷ்மீரிலும் மணிப்பூர், மிசோரம் போன்ற வடகிழக்கு மாநிலங்களிலும் இந்திய ராணுவம் நடத்திவரும் பாலியல் வன்முறைகள், தொடர்ந்து இந்தியாவின் பெரும் அவமானமாக இருந்து வந்திருக்கிறது. இது குறித்த குரல்களை இந்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வந்திருக்கிறது. வர்மா குழு, ‘பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் ராணுவத்தினரை சிறப்பு சட்டங்களின் கீழ் அல்லாமல் வழக்கமான குற்றவியல் சட்டங்களின் அடிப்படையிலேயே விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்’ என்கிற மிக முக்கியமான பரிந்துரையையும் வழங்கியுள்ளது.

வர்மா குழுவின் மிக முக்கியமான இன்னொரு பரிந்துரை, ‘திருமணத்திற்குள் நடக்கும் பாலியல் வன்முறைகளை குற்றமாகக் கருத வேண்டும்’ என்பது. இது தொடர்பான சர்ச்சைகள் நீண்டகாலமாக  நிலவி வருகின்றன. இந்திய குடும்ப அமைப்பில் பெண் ஒரு பாலியல் கருவியாகப் பயன்படுத்தப்படுகிறாள். இந்தியாவில் சொந்த கணவனால் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகும் பெண்களின் துயரம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. இந்தப் பிரச்னையை பாலியல் குற்றங்கள் தொடர்பான விவாதங்களில் நான் முன்வைத்தபோது, இந்திய பண்பாட்டுக் காவலர்களால் அதை ஏற்கவோ புரிந்துகொள்ளவோ இயலவில்லை. ஆனால் நீதிபதி வர்மா குழு, ‘திருமண உறவுகளுக்குள் நிலவும் பாலியல் வன்முறையை குற்றமாகக் கருத வேண்டும்’ என்கிற ஒரு முக்கியமான பரிந்துரையை செய்துள்ளது.

மேலும் பாலியல் வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று சொல்லும் வர்மா, அவர்கள் ஒருவேளை ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் தானாக முன்வந்து பதவி விலகவேண்டுமென்றும் குறிப்பிடுகிறார். ‘சமூகத்தில் ஆண் - பெண் சமத்துவத்தை உருவாக்காமல் நாம் பாலியல் வன்முறைகளை சட்டங்களால் தடுத்து நிறுத்த முடியாது’ என்பதைத் தெளிவாகவே குறிப்பிடுகிறார் அவர்.

செயலற்ற அரசாங்கம், பழிவாங்கும் உணர்ச்சியின் வன்மம் மிகுந்த வெகுஜனம்... இரண்டிற்கும் கடுமையாக எதிர்வினையாற்றியிருக்கிறது இந்த அறிக்கை. வர்மா குழுவின் பரிந்துரைகளை இந்திய அரசாங்கம் உண்மையான விருப்பத்துடனும் மன உறுதியுடனும் செயல்படுத்துவது ஒன்றே, டெல்லியில் கொடூரமாகக் கொல்லப்பட்ட அந்த மாணவிக்குச் செய்யும் உண்மையான அஞ்சலியாகும்.
 
எங்கே செல்வார் கமல்?
‘விஸ்வரூபம்’ படத்தை ஒட்டி எழுந்த தடைகள், சர்ச்சைகளினால் மனம் உடைந்துபோன கமல் ஒரு உணர்ச்சிகரமான பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். ‘‘தமிழ்நாட்டில் மதச்சார்பின்மை இல்லை. எனவே தமிழகத்தை விட்டோ, இந்தியாவை விட்டோ வெளியேற விரும்புகிறேன்’’ என்றார். பாதிக்கப்பட்ட ஒருவரின் உணர்ச்சிவசப்பட்ட வார்த்தைகள் என்பதற்கு மேல் அதில் என்னால் எந்த உண்மையையும் காண இயலவில்லை.

தமிழகத்தில் மதவாத சக்திகள் ஒருபோதும் நிர்ணய சக்திகளாக இருந்ததில்லை. பா.ஜ.க போன்ற அமைப்புகள் சிறிய அளவில்கூட இங்கு வேரூன்ற முடியாததே அதற்கு உதாரணம். பாபர் மசூதி இடிப்பு, கோவை குண்டுவெடிப்புகள் போன்ற விஷயங்கள் நடந்தபோதுகூட தமிழகத்தில் மதவாத அரசியலின் நிழல்கூட விழவில்லை.
மேலும் மதவாத சக்திகளை எதிர்த்துப் போராடுவதில் இந்துக்கள், முஸ்லிம்கள் என்ற வித்தியாசம் ஏதும் இருந்ததில்லை. ஜெயலலிதா அரசாங்கம் நடத்தும் ஒரு அரசியல் விளையாட்டில் கமல் சிக்கிக்கொண்டார். இங்குள்ள சில மத அமைப்புகள் அந்த விளையாட்டில் பங்கேற்றிருக்கின்றன. அவ்வளவுதான்! ஒரு திரைப்படம் சம்பந்தமான சிக்கல்களை முன்னிறுத்தி தமிழகத்தை ஒரு மதவாத பூமியாகக் காண்பது சரிதானா?

இந்தியாவில் தமிழகத்தைவிட மதச்சார்பின்மை உள்ள இன்னொரு மாநிலம் இருக்கிறதா? நீங்கள் அமெரிக்காவிற்கோ, ஐரோப்பாவிற்கோ போனால், அங்கே உங்களுக்கு கிறிஸ்துவ மதவாதம் காத்திருக்கிறது.
மோடிக்கு சான்று!
‘மோடி 100 சதவீதம் மதச்சார்பற்றவர்’ என்று ராம்ஜெத்மலானி சர்டிபிகேட் கொடுத்துள்ளார். அவர் மிக மோசமான வழக்குகளில், குற்றவாளிகள் சார்பாக திறமையாக வாதாடக் கூடியவர் என்பது தெரியும். ஆனால் இந்த அளவிற்குப் போவார் என்று நான் நினைக்கவில்லை.
(இன்னும் நடக்கலாம்...)

நான் படித்த புத்தகம்
எப்போது அழியும் இந்த உலகம்?
ராஜ் சிவா
டிசம்பர் 21ஐ மறந்துவிட்டு எல்லோரும் ஒரு சினிமாவைப் பார்க்க முடியுமா, முடியாதா என்ற கவலையில் அடுத்த மாதம் இறங்குவார்கள் என்று தெரிந்திருந்தால், மாயன் காலண்டர் பரபரப்பை உருவாக்கியவர்கள் தற்கொலை செய்துகொண்டிருந்திருப்பார்கள். அந்த அளவு பரபரப்பை உருவாக்கிய ஒரு நாளுக்குப் பின்னே என்ன இருந்தது? இந்த பரபரப்பை ஒட்டி இந்த உலகத்தில் என்னவெல்லாம் நடந்தன? விரிவாகவும் சுவாரசியமாகவும் ஆராய்கிறது ராஜ் சிவாவின் இந்த நூல். இது உலக சமுதாயமே சேர்ந்து எழுதிய ஒரு மர்மக் கதை. இந்தக் கதை முடிந்துவிட்டதா? உலகம் உண்மையிலேயே இந்த அழிவிலிருந்து தப்பிவிட்டதா? உலகம் அழிந்து போவதற்கு இன்னும் என்னென்ன சாத்தியங்கள் இருக்கின்றன. மாயன் கலாசாரம் இந்த உலகிலிருந்து எப்படி மறைந்து போனது? அவர்கள் உண்மையில் அதீத அறிவுபெற்ற மானுட சமூகமாக இருந்தார்களா? இப்படி எத்தனையோ விஷயங்களைப் பேசும் இந்த நூல், சமீபத்தில் தமிழில் வெளிவந்த மிக சுவாரசியமான புத்தகம் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
(விலை: ரூ.140/-, வெளியீடு: உயிர்மை பதிப்பகம், 11/29 சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை-600018. தொலைபேசி: 044-24993448.)

எனக்குப்பிடித்த கவிதை

தண்ணீர் கேட்டு
காலிக் குடங்களுடன்
ஊர்வலம் சென்ற சாலையில்
மறுநாள்
குடம் கேட்டு
ஊர்வலம் போகிறது
மழை நீர்!
- நர்சிம்


மனுஷ்ய புத்திரனின்
ஃபேஸ்புக் பக்கம்

இரட்டை இலையா, பறக்கும் குதிரையா விவகாரத்தில் அட்வகேட் ஜெனரலின் வாதங்களையே இன்னும் ஜீரணிக்க முடியாத நிலையில், இப்போது ‘விஸ்வரூபம்’ படம் தொடர்பான அவரது வாதங்கள் நம்மைக் கலங்க அடிக்கின்றன. எனக்கென்னவோ இதெல்லாம் வண்டு முருகனின் புகழை மறைக்கும் சதியாகவே படுகிறது.