இரட்டை மரபணு மாறிய கொரோனா வைரஸ் ஆபத்தானதா?



நாட்டில் கொரோனா தடுப்பூசி போடத் தொடங்கி இரண்டு மாதங்கள் முடிந்துள்ள நிலையில், இனி கொரோனாவின் பிடியிலிருந்து மீண்டுவிடலாம் என்ற நம்பிக்கைக்குப் பிறகு, மக்களை அச்சுறுத்தும் வகையில் வந்துள்ள இரண்டு செய்திகள் முக்கியமாகின்றன.முதலாவது, கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் கொரோனா இரண்டாம் அலை வீசுகிற அசாதாரண சூழல்.

நாட்டில் 18 மாநிலங்களில் இரட்டை வேற்றுருவத்தில் மரபணு மாறிய புது வகை கொரோனா வைரஸ் பரவுகிறது என்பது அடுத்தது.வைரஸ் வகை மாறுவது ஏன்?வைரஸ் மரபணுக்கள் திடீர் மாற்றத்துக்கு (Mutation) உள்ளாவது புதிய விஷயமில்லை. முதன்முதலில் சீனாவில் பரவிய நாவல் கொரோனா வைரஸின் அமைப்பு அப்படியே இப்போது இல்லை.
இதுவரை அதன் மரபணுக் குறியீடுகளில் (Genetic code) 7,000க்கும் அதிகமாக திடீர் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. வைரஸ்களின் இனப்பெருக்க வளர்ச்சியில் ஏற்படும் இயல்பான நிகழ்வு இது. பெரும்பாலான மாற்றங்கள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் ‘சமத்தாக’ இருந்துகொள்ளும். சில மாற்றங்கள் மட்டுமே வைரஸ் பரவும் வேகத்தைக் கூட்டும்.

இந்த மாற்றத்தில் இருவகை உண்டு. வைரஸின் உருவம் மாறினால் அது ‘தனி இனம்’ (Strain); சில உள் கூறுகள் மட்டும் மாறுவது ‘வேற்றுருவம்’ (Variant).
இதை இப்படிப் புரிந்துகொள்வோம்... ஒரு காட்சியில் ஆள் மாறுவது ‘தனி இனம்’; ‘வேஷம்’ மாறுவது ‘வேற்றுருவம்’.பொதுவாக, வைரஸ், தான் சார்ந்திருக்கும் ஓம்புயிரியின் (Host) நோய் எதிர்ப்பு சக்தியோ, தடுப்பூசியோ தன்னை அடையாளம் கண்டு அழித்துவிடலாம் என்னும் நிலைமை வரும்போது, அதிலிருந்து தப்பிக்க, தன் உருவத்தையே மாற்றிக்கொள்ளும்.

வருடந்தோறும் மழைக்காலத்தில் சளிக் காய்ச்சலை உண்டுபண்ணும் ‘இன்ஃபுளுயென்சா’ வைரஸ் இனம் மாறுவது இப்படித்தான்.
அடுத்து, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள நாட்பட்ட நோயாளிகளிடம் அது நீண்டகாலம் தங்கும்போதும், தீவிரமாகப்  பரவும்போதும் வழக்கத்தைவிட வேகவேகமாக நகலெடுக்கும் (Replication).

எப்படி நாம் அவசர அவசரமாகத் தட்டச்சு செய்யும்போது பிழைகள் ஏற்படுகிறதோ, அப்படி வைரஸ் வேகமாக நகலெடுக்கும்போதும் பிழைகள் ஏற்படும். அப்போது, மரபணுக் குறியீடுகள் வரிசை மாறிவிடும். இதனால் வைரஸ் ‘வேற்றுருவ வேஷம்’ போடும்.கடந்த ஆண்டின் இறுதியில், பிரிட்டனில் பொதுமுடக்கம் தளர்த்தப்பட்டதும், மக்கள் முகக் கவசம் அணிவது, கூட்டம் கூடுவதைத் தவிர்ப்பது உள்ளிட்ட தற்காப்புகளை அலட்சியப்படுத்திய காரணத்தால், கொரோனா வைரஸ் ‘VUI202012/01’ எனும் பெயரில் புது ‘வேஷம்’ போட்டுக்கொண்டு, புதிய வேகத்தில் பரவியது.

இதேபோல் தென்னாப்பிரிக்கா, பிரேசி–்ல், டென்மார்க், சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் வேற்றுருவ கொரோனா வைரஸ்கள் பரவின. அங்கிருந்து இந்தியாவுக்கும் வந்தன.இவை தவிர்த்து, இப்போது இந்தியாவில் மரபணு மாறிய புதிய வைரஸ்களும் பரவுகின்றன. வித்தியாசம் என்னவென்றால், முன்பு பரவியவை ‘ஒற்றை வேஷம்’ போட்ட வைரஸ்கள் (Single mutant variant virus); இப்போது பரவுவது ‘இரட்டை வேஷம்’ (Double mutant variant virus) போட்ட வைரஸ்.

வைரஸில் என்ன மாற்றங்கள்?
மரபணுவை ஒரு புத்தகமாக வைத்துக்கொண்டால் எழுத்துகளை மரபணுக் குறியீடுகள் எனப் புரிந்துகொள்ளலாம். முன்னும் பின்னும் மாறிய எழுத்துகள் கொண்டவைதான் வேற்றுருவ வைரஸ்கள். இப்போது அறியப்பட்டுள்ள  E484Q, L452R என்னும் மாற்றங்கள் ஒரே வைரஸில் காணப்படும் இரட்டை வேற்றுருவங்கள். அதாவது, ஒருவரே இரண்டு வேறு வேஷம் போட்டுக்கொள்வதை ஒப்பிடலாம்! அந்நிய நாடுகளில் இவை தனித்தனி வைரஸ்களில் காணப்படுகின்றன.

கவனிக்க வேண்டிய விஷயம், கொரோனா வைரஸ் நம் உடல் செல்களுக்குள் நுழைவதற்குப் பயன்படுத்தும் கூர்ப்புரதங்களில் (Spike proteins) இந்தப் புதிய மாற்றங்களைச் செய்துள்ளது; இதன் மூலம் நம் உடலுக்குள் அதிவேகமாகப் பரவும் தன்மையைப் பெற்றுள்ளது. நம் தடுப்பாற்றலின் கண்களுக்குப் படாமல் தப்பித்துவிடும் ஆற்றலும் இதற்கு உள்ளது. இதனால், ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கும், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும் மிதமான அளவில் மறுதொற்று ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே, ‘விஓசி’ (Variant of concern) எனப்படும் கவலை தரும் வேற்றுருவ கொரோனா வைரஸ் பட்டியலில் மத்திய அரசு இதைச் சேர்த்துள்ளது. இதுதான் நமக்கு பீதியைக் கிளப்புகிறது.

ஆபத்து இல்லை!

ஆனாலும், இந்தப் புதிய வைரஸுக்கும் இப்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதற்குமான தொடர்பு இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இது இந்தியாவில் உயிராபத்தை அதிகரித்துள்ளது என்பதற்கும் இதுவரை ஆதாரங்கள் இல்லை.  மேலும், அதிவேகமாகப் பரவும் இவ்வகை வைரஸ்கள் அறியப்படுவது இது முதல்முறையல்ல. இந்தியாவில் அறியப்பட்டுள்ள E484Q வேற்றுருவம் தென்னாப்பிரிக்காவில் காணப்படும் E484K வேற்றுருவத்தையும்; L452R வேற்றுருவம் அமெரிக்காவில் காணப்படும் B.1.427/B.1.429 வேற்றுருவ வரிசையையும் ஒத்திருக்கிறது என்பதால், இந்த வைரஸ்களைக் கட்டுப்படுத்திய முன் அனுபவங்கள் நமக்குக் கைகொடுக்கும் என வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்; ஆனாலும், எச்சரிக்கை அவசியம் என்கின்றனர்.

அலட்சியம் வேண்டாம்!

நாட்டில் கொரோனா ஆபத்து அதிகமாவதும் அடங்குவதும் மக்களிடம்தான் உள்ளது. காரணம், இன்னும் கொரோனா பாதிப்பு முழுவதுமாக நீங்கிவிடவில்லை என்பதை மக்கள் மறந்துவிட்டனர். திருமண விழாக்கள், கோயில் விழாக்கள், அரசியல் கூட்டங்கள், வணிக வளாகங்கள், கடற்கரைகள் என மக்கள் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிந்தவர்களைப் பார்ப்பது அரிதாகிவிட்டது. பொது இடங்களில் சானிடைசர் பயன்பாடு காணாமல் போய்விட்டது.

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று குறையாத நிலையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தியதும், ரயில் சேவை உள்ளிட்ட நெரிசலான போக்கு
வரத்து சேவைகளுக்கு அனுமதி கொடுத்ததும் அங்கு கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் இருப்பதற்குக் காரணங்களாகக் கருதப்படுகின்றன.
தமிழகத்திலும் தேர்தல் நெருங்குவதால் இவற்றை நமக்கான எச்சரிக்கை அலாரங்களாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

இப்போது தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை மறுபடியும் ஏறுமுகத்தில் இருக்கிறது. இந்த நேரத்தில் நம்முடைய அலட்சியப் போக்கினால், மரபணு மாறிய வைரஸ் பாதிப்பும் இணைந்துகொண்டால், கடந்த ஆண்டைப்போல் பாதிப்புகள் மோசமாகிவிடும்.
அதேநேரத்தில், கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மறுபடியும் ஒரு பொதுமுடக்கம் தீர்வாகாது. புதிய கொரோனா தொற்றாளர்களுக்கு உடனடியாக சிகிச்சையைத் தொடங்குவது, தொடர்பாளர்களைத் தேடிப் பரிசோதிப்பது, தனிமைப்படுத்துவது, கண்காணிப்பது ஆகிய நடவடிக்கைகளை அரசுகள் மறுபடியும் தீவிரப்படுத்த வேண்டும்.

மக்களின் விழிப்புணர்வும் எச்சரிக்கை உணர்வும் மிக முக்கியம். இதற்கு அரசியல் தலைவர்கள் பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளி காப்பது, கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்வது, அனுமதிக்கப்பட்டவர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது உள்ளிட்ட தற்காப்பு நடவடிக்கைகளை உறுதியாகக் கடைப்பிடிப்பதே கொரோனாவின் ஆபத்திலிருந்து தப்பிக்க ஆகச்சிறந்த வழி.

தடுப்பூசிக்குப் பலன் கிடைக்குமா?

கொரோனா வைரஸின் வேற்றுருவத்தால் இப்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகளுக்குப் பலன் இல்லாமல் போய்விடுமோ என்று கவலைப்பட வேண்டாம். வைரஸ் அதே இனம்தான்; ‘வேற்றுருவ வேஷம்’தான் புதிது.  குற்றவாளிகள் மாறுவேடத்தில் வந்தாலும் கைரேகைகளை அடையாளம் வைத்துக் காவல்துறையினர் கண்டுபிடிப்பதுபோல் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு உருவாகும் ரத்த எதிரணுக்கள் கொரோனா வைரஸின் ‘வேற்றுருவ வேஷ’த்தையும் அடையாளம் கண்டு அழித்துவிடும். அந்த வகையில்தான் கொரோனா தடுப்பூசிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
               
 டாக்டர் கு.கணேசன்