புகை பிடிக்க தயக்கமாக இருந்தது!
‘அட்டகத்தி’ நந்திதா! மறக்குமா நெஞ்சம்? ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘முண்டாசுப்பட்டி’, ‘உப்புக்கருவாடு’, ‘கபடதாரி’, ‘எம்.ஜி.ஆர். மகன்’ என பல படங்
களில் தன்னுடைய நடிப்புத் திறமையை நிரூபித்தவர்.  கன்னடத்தில் சினிமா பயணத்தை ஆரம்பித்தவர். இப்போது தென்னிந்திய மொழிகளில் படு பிஸி எனுமளவுக்கு அனைத்து மொழிகளிலும் தனக்கான இடத்தைப் பிடித்து வைத்துள்ளார்.சமீபத்தில் வெளிவந்த விஜய் ஆண்டனியின் ‘ரத்தம்’ படம் பார்த்தவர்கள் அதில் துடிப்பான மது என்னும் நிருபர் வேடத்தில் நடித்த நந்திதா ஸ்வேதாவை பாராட்டாமல் இருக்கமுடியாது.  மது கேரக்டரில் அசத்தியிருந்தீர்கள்?
‘ரத்தம்’ இயக்குநர் அமுதன் சாருடன் வேலை செய்ததில் சினிமாவைப் பற்றி நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. ஒரு காட்சி எப்படி வரணும் என்பதில் சார் தெளிவாக இருப்பார். ஆர்ட்டிஸ்ட்களிடம் அலட்டாமல் வேலை வாங்குவதில் கெட்டிக்காரர். எல்லோரும் என்னை குமுதாவாக பார்த்தபோது என்னால் மாடர்ன் கேரக்டர் பண்ண முடியும் என்று நம்பிக்கை வைத்தார். சொல்லப்போனால் அதுதான் என்னுடைய நிஜம்.
விஜய் ஆண்டனி...?
அவர் பொதுவெளியில் பார்க்கிற மாதிரிதான் படப்பிடிப்பில் நடந்துகொள்வார். அவர், ‘நான்’ படத்திலிருந்து நடிகராக தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பித்தார். இப்போது நடிகராக பத்து வருடங்கள் கடந்துள்ளார்.நானும் ஃபீல்டுக்கு வந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டன. நாங்கள் இருவரும் நடிக்க வந்தபோது நடந்த சுவாரஸ்யமான விஷயங்களை ரீவைண்ட் பண்ணிப் பார்த்தது ஜாலியான அனுபவமாக இருந்தது.
படங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?
டெம்ப்ளேட் பதிலாக இருந்தாலும் இதுதான் உண்மை. என்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும். படம் முழுவதும் நானே இருக்கணும்னு நினைக்க மாட்டேன். இப்போது ஒரு படத்தில் பல நடிகைகள் இணைந்து நடிப்பது தவிர்க்க முடியாதது.
மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும்போது அந்த மன அழுத்தம் எப்படி இருக்கும்?
எதையும் நான் சீரியஸாக எடுத்துக்கொள்ளமாட்டேன். சினிமாவில் திறமை, அழகு மட்டும் இருந்தால் போதாது. நம்முடைய ஆளுமையை வெளிப்படுத்துமளவுக்கு கேர்க்டர் கிடைக்க வேண்டும். அப்படியொரு கேரக்டர் எளிதில் கிடைக்காது. ‘ரத்தம்’ படத்தில் எனக்கான போர்ஷன் பவர்ஃபுல்லாக இருந்ததை பார்த்திருக்க முடியும். மது என்ற என்னுடைய கேரக்டர் தற்போதைய பெண்களின் மனநிலையை வெளிப்படுத்தும் விதமாக மிகவும் அழுத்தமாக இருந்திருக்கும். ஆண்கள் அதிகம் இருக்கும் ஓர் இடத்தில் அதிகாரத்துடன் எல்லோரையும் வேலை வாங்குவது போல் காட்சிகள் இருந்திருக்கும்.
சிகரெட் புகைத்ததைப் பற்றி கேட்கிறார்கள். ஆரம்பத்தில் அந்தக் காட்சியில் நடிக்கணுமா என்ற தயக்கம் இருந்தது. மது சமகாலப் பெண்களைப் பிரதி எடுத்த மாதிரி இருக்கவேண்டும். அதேசமயம் ஜர்னலிஸ்ட் வுமன் ஆளுமைமிக்கவராகவும் இருக்க வேண்டும். வேலைப் பளு மூலம் ஏற்படும் ஸ்ட்ரெஸ்ஸை வெளிப்படுத்தும் விதமாக அந்தக் காட்சி இடம்பிடித்தது. அது கேரக்டரின் ஒரு பகுதி மட்டுமே.
புகைபிடிப்பது, மது அருந்துவது, முத்தம் கொடுப்பது போன்ற தெரியாத விஷயங்களை ஒரே டேக்கில் பண்ணிவிடுவேன். அடிக்கடி பண்ணினால் நம்மையும் அறியாமல் காட்சி மீது விரக்தி ஏற்பட்டுவிடும். டெக்னிக்கலாகப் புரிந்துகொண்டால் எல்லாமே நல்லபடியாக இருக்கும். மீண்டும் மீண்டும் பண்ணினால் அது கஷ்டம். எனக்கு இரண்டு டேக் பிடித்தது. பாக்கெட் எடுக்கும்போது தலைகீழாக இருந்ததால் அது நடந்தது.
ஸ்டார் அடையாளத்தை தக்கவைக்க என்ன முயற்சி செய்கிறீர்கள்?
கமர்ஷியல் சினிமா மட்டுமல்லாமல், சிறிய படங்கள், கன்டன்ட் உள்ள படங்கள், நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள், பரீட்சார்த்த ரீதியான படங்கள் என பல ஜானர்ல படங்கள் பண்ணியுள்ளேன்.ஸ்டார் இமேஜ் நம்மைத் தேடி வராது. நாம்தான் அதை தேடிப்போக வேண்டும். இப்போது நான் செய்யும் படங்கள் எனக்கு நட்சத்திர நடிகை என்ற இடத்தை கொடுத்துள்ளது.
சினிமாவில் கவர்ச்சி வேடங்களைத் தவிர்க்க முடியாதே?
வரம்பு மீறிய கவர்ச்சி வேடங்களில் நான் நடித்ததில்லை. கவர்ச்சி வேடம் செய்யாததால் என்னுடைய கேரியருக்கு எந்த பாதிப்பும் வந்ததில்லை. அதே மாதிரி வெற்றி, தோல்வியும் என்னை பாதித்ததில்லை.நான், எப்போதும் படங்கள் செய்யும் பிஸி நடிகையாகவே இருக்கிறேன். அதுமட்டுமல்ல, இயக்குநர் என் மீது நம்பிக்கை வைத்து கொடுக்கும் வேடம் எதுவாக இருந்தாலும் அதில் நடிக்கத் தயாராக இருக்கிறேன்.
பெரிய நடிகர், பெரிய இயக்குநர்கள் படங்கள் செய்யும்போது என்ன மாதிரி அழுத்தம் இருக்கும்?
என்னுடைய முதல் படத்திலிருந்து அப்படியொரு அழுத்தம் ஏற்பட்டதில்லை. இதுவரை நான் நடித்த ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான நந்திதாவாகத்தான் என்னைப் பார்த்திருப்பீர்கள். அதற்கு காரணம், எந்த வேடம் கொடுத்தாலும் அதை என்னால் செய்யமுடியும் என்ற நம்பிக்கையில்தான் படங்களை ஒப்புக்கொள்கிறேன்.
‘பக்கத்து வீட்டுப் பெண் தோற்றம்’ என்று உங்களைப் பற்றி வரும் விமர்சனங்களை எப்படி பார்க்கிறீர்கள்?
சில சமயம் அது வருத்தமளித்தாலும் பல சமயத்தில் அப்படி என்னைப் பற்றி எழுதுவதற்காக சந்தோஷப்படுவேன். பல நடிகைகளுக்கு அப்படியொரு அடையாளம், மேக்கப் இல்லாமலேயே அழகாக இருக்கிறார் என்ற பெயர் கிடைப்பதில்லை. ‘கேர்ள் நெக்ஸ்ட் டோர்’ கேரக்டர்களில் நடிப்பதை பெருமிதமாக பார்க்கிறேன். ஏனெனில், கமர்ஷியல் ஹீரோயின் வேடத்தில் நடிப்பதைப் போல் எளிதான வேலை அல்ல அது.
ஓடிடியில் நடிக்கும் வாய்ப்பு வருகிறதா?
ஓடிடி இப்போது தவிர்க்க முடியாத களம். ஆர்வத்தை தூண்டுமளவுக்கு கதைகள் அமையாததால்தான் என்னை ஓடிடியில் பார்க்க முடியவில்லை. தற்போது தெலுங்கில் வெப் சீரீஸ் பண்ணியுள்ளேன். அது ஆடியன்ஸுக்கு சுவாரஸ்யமான அனுபவத்தைக் கொடுக்கும். தொடர்ந்து ஓடிடியில் வாய்ப்பு வந்தால் நடிப்பேன். மற்றபடி தியேட்டர் அனுபவம் தரக்கூடிய படங்களில் நடிக்கவே விரும்புகிறேன்.
சமூக வலைத்தளங்களில் உங்களை அதிகம் பார்க்க முடிவதில்லையே?
கடந்த பத்து, பதினைந்து மாதங்களாக தொடர் படப்பிடிப்பில் இருந்தேன். சொல்லப்போனால் தூங்கும் நேரமான இரவிலும் படப்பிடிப்பில் இருந்தேன். சோர்வு காரணமாக பகலில் ஓய்வு எடுப்பேன். ஓய்வு எடுக்கும் நேரம் குறைவு என்பதால் என்னுடைய செல்போனை முடிந்தளவுக்கு தூரமாக வைத்துவிடுவேன். நேரம் கிடைக்கும்போது சமூக வலைத்தளம் மூலம் என்னுடைய படங்களை புரோமோட் பண்ணுவேன். மற்றபடி தெரியாத விஷயங்களில் கருத்து சொல்கிறேன் என்ற போர்வையில் மூக்கை நுழைக்கமாட்டேன்.
உங்கள் ஹீரோக்கள் பற்றி?
சிவகார்த்திகேயன்: அமைதியும், குறும்பும் கலந்தவர்.
விஜய்சேதிபதி: எப்போதும் யதார்த்தமாகப் பழகுவார். மனம் திறந்து பாராட்டுவார்.
தினேஷ்: நல்ல நண்பர்.
விஷ்ணு விஷால்: எளிமையாக பழகக்கூடியவர். எந்தவொரு விஷயத்தையும் நேர்மறையாக அணுகக்கூடியவர்.
விஜய் ஆண்டனி: மென்மையாகவும், இனிமையாகவும் பழகக்கூடியவர்.
எஸ்.ராஜா
|