யார் இந்த யூதர்கள்..? எப்போது முடியும்? எப்போது முடிவுக்கு வரும்?
இந்த இரண்டும்தான் இப்போது இஸ்ரேல் - பாலஸ்தீனப் போரின்முன் எழுப்பப்படும் கேள்விகள். முதல்கேள்வி இருபகுதிகளிலுமே வாழும் அப்பாவி மக்களின் கேள்வி. இரண்டாவது, இந்தப் போரை உற்றுநோக்கும் உலக மக்களின் கேள்வி.  இரண்டுக்குமே இரண்டாயிரம் ஆண்டுகளாகவே பதில் இல்லை என்பதே வரலாறு. ஏனெனில் இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்னை என்பது வெறும் 75 ஆண்டுகாலம் கொண்டதல்ல. அது பொது யுகத்துக்கு முன்பிருந்தே தொடங்கும் நீண்ட நெடிய வரலாறு. அதற்கு யூதர்களின் வரலாற்றை கொஞ்சம் அறிந்துகொள்வது அவசியம்.  *யூதர்கள் யார்?
யூத மதத்தைப் பின்பற்றி இஸ்ரேலில் வசிக்கும் 75 சதவீத மக்களே யூதர்கள். இதுதவிர, உலகெங்கும் வசித்து வருகின்றனர். இவர்கள் பேசும் மொழி ஹீப்ரூ. இவர்களது வேதம் தோரா. பாலஸ்தீனம், தங்களின் பூர்வீக இடம் என்கிறார்கள். இவ்வளவே நாம் அறிந்தவை. ஆனால், கிமு காலத்திலிருந்து தொடரும் வரலாறு, இவர்கள் அனைவரும் ஒரு மூதாதையரின் வழித்தோன்றல்கள் என்கிறது.
 ஆதாம், ஏவாள் காலத்திற்குப் பிறகு பதினாறாவது தலைமுறையின் தந்தை ஆபிரஹாம். இவரின் முதல் மனைவி சாரா. இவர்களுக்கு குழந்தை இல்லாததால் பணிப்பெண் ஆகாரை இரண்டாம் மனைவியாக ஆபிரஹாமுக்கு மணமுடித்து வைக்கிறார் சாரா. ஆகாருக்கு ஆண் குழந்தை இஸ்மாயில் பிறந்தார். பின்னர், பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து சாராவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவர் பெயர் ஈசாக் (ஐசக்).

முதல் மனைவி சாரா, பணிப் பெண் ஆகாரின் மகனுக்கு, அதாவது மூத்தவனுக்கு உரிமைகள் கிடைப்பதை விரும்பவில்லை. இதனால் ஆபிரஹாம் ஆகாரையும், இஸ்மாயிலையும் வீட்டை விட்டு வெளியேற்றுகிறார். அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு எகிப்து சென்று வாழ்கின்றனர். இஸ்மாயிலின் வழிவந்தவர்களே அரேபியர்கள். ஈசாக்கின் வம்சத்தவர்கள் யூதர்கள் என்கிறார்கள்.
ஈசாக்கின் மனைவி ரெபேக்கா. இவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள். மூத்தவர் ஈசா. இளையவர் ஜேக்கப். வயதான ஈசாக்கிற்குப் பார்வை இல்லாத நிலையில் இளையவர் ஜேக்கப், மூத்தவர் ஈசா போல நடித்து ஏமாற்றி தந்தையிடமிருந்து வரங்களைப் பெறுகிறார். ஈசாவையும் ஏமாற்றி மூத்தவனுக்குரிய உரிமையையும் பெற்றுக் கொள்கிறார்.
உண்மை தெரிந்து ஈசா, ஜேக்கப்பை பழிவாங்க நினைத்தார். இதனால், தாய் ரெபேக்கா ஜேக்கப்பை தனது அண்ணனிடம் அனுப்பி வைக்கிறார். ஜேக்கப் தனது மாமனின் நாட்டுக்குச் செல்லும் வழியில், மூத்தவருக்கு செய்த துரோகத்தை நினைத்து மனம் வருந்தவே, கடவுள் அவரிடம், ‘உனது பாவங்களை நினைத்து வருந்தியதால், உன்னை ஆசீர்வதிக்கிறேன். இனி நீ ஏமாற்றுபவன் என்ற அர்த்தத்தைக் குறிக்கும் ஜேக்கப் என்ற பெயர் நீங்கி ‘இஸ்ரவேல்’ என்று அழைக்கப்படுவாய்’ என்கிறார்.
ஜேக்கப் தனது மாமன் இருப்பிடம் சென்று, அவரின் மகள் ரேச்சலை திருமணம் செய்கிறார். அவரது சகோதரியையும் மணக்கிறார். இவர் மூலம் 12 ஆண்களும் ஒரு பெண்ணும் பிறக்கின்றனர். இந்த பன்னிரண்டு பேரின் வழிவந்தவர்கள் இஸ்ரவேலர்கள் எனப்பட்டனர்.
தொடர்ந்து மோசஸ், அவருக்கு கடவுள் வழியே கிடைத்த 10 கட்டளைகள், தன்னை வழிபடவேண்டிய முறைகள் பற்றியும், வாழவேண்டிய முறைகள் பற்றியும் கடவுள் எடுத்துரைத்தது (இதுவே யூதர்களின் புனித வேதமான ‘தோரா’), தாவீது, சாலமோன்... என வரலாறு நீள்கிறது. சாலமோன் காலத்தில் ஜெருசலேமில் மிகப்பெரிய தேவாலயம் கட்டப்பட்டது. இந்தத் தேவாலயத்தில்தான் மோசஸுக்கு இறைவன் அளித்த பத்து கட்டளைகள் அடங்கிய பேழை வைக்கப்பட்டது.
*கி.பி. காலம்
தங்களை மீட்க ஆபிரஹாம், மோசஸ் போல மீண்டும் ஒரு தேவதூதன் தோன்றுவார் என அனைத்து யூதர்களும் நம்பிக்கையுடன் காத்திருந்த காலம். தீர்க்கதரிசிகள் புனித குழந்தை, தோன்றும் இடம், காலம் அனைத்தையும் கூறியிருந்தனர். அதேபோலவே பெத்லஹேமில் மாட்டுத் தொழுவத்தில் குழந்தை இயேசு பிறந்தார். இதன் பிறகு நடந்த சம்பவங்கள் அனைத்தும் நம் அனைவருக்கும் தெரியும்.
இயேசு ஒரு யூதரே. அவர் சிலுவையில் அறையப்பட்டு உயிர்துறக்கும் வரை கிறிஸ்தவ மதம் உருவாகியிருக்கவில்லை. இயேசு இறந்தபிறகு மீண்டும் உயிர்த்தெழுந்தார் என்பதை யூதர்கள் நம்பவில்லை. அடுத்தது சாலமோன் ஆலயம் மீண்டும் இடிக்கப்படும் என்று இயேசு கூறியதை யூதர்களால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை.
ஆனால், இயேசு உயிர்த்தெழுந்ததையும், அவர் செய்த புதுமைகளையும் நம்பியவர்கள் அவரை இறைவனாக வழிபட ஆரம்பித்தனர். பல்வேறு நாடுகளில் யூதர்கள் கிறிஸ்துவர்களாக மாறினர். கிறிஸ்துவ மதத்தைப் பரப்பினர். அதேநேரம் தேவதூதனைக் காட்டிக் கொடுத்தவர்கள் என சனாதன யூதர்கள் பழிக்கப்பட்டனர். கி.பி.70ல் ரோமானிய படையெடுப்பின்போது இயேசு கூறியதுபோலவே மீண்டும் சாலமோன் தேவாலயம் இடிக்கப்பட்டது. அப்போது மிச்சமிருந்தது கோயில் சுவரின் ஒருபகுதிதான். இந்த ஒற்றைச் சுவரைத்தான் இன்றுவரை யூதர்கள் தங்கள் புனிதமாகக் கருதி வணங்கி வருகின்றனர். ஜெருசலேம், யூதர்கள் வாழ கடவுள் அளித்த இடம் எனக் கருதுகின்றனர்.
இதற்கிடையே யூதர்களுக்கும் ரோமானியர்களுக்கும் சண்டைகள் தொடர்ந்தன. கிறிஸ்துவர்களும் யூதர்களின் எதிரிகளாக இருந்தனர். ரோமானிய மன்னன் கான்ஸ்டன்டைன் கி.பி 312ல் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார்.
இதனால், ரோமானிய காலனிகளில் வசித்த யூதர்கள் பலரும் கிறிஸ்துவத்தைத் தழுவினர். பாலஸ்தீனத்தில் அப்போது இருந்த யூதர்கள், எண்ணிக்கையில் மிகவும் குறைவு. அவர்களில் பலரும் கிறிஸ்தவர்களாக மாறியிருந்தது காலத்தின் கட்டாயம். பின்னர் யூதர்கள் பலர் ரோமானிய ஆட்சிக்குட்படாத பகுதிகளில் குடியேற ஆரம்பித்தனர்.
யூதர்கள் பெர்ஷியர்களுடன் இணைந்து மீண்டும் பாலஸ்தீனத்தைக் கைப்பற்றினர். இதனால், ரோமானியர்கள் மீண்டும் போர் தொடுத்து ஆயிரக்கணக்கான யூதர்களைக் கொன்றனர். ரோமானியர்களிடம் அகப்படுவதை விரும்பாத பல யூத குடும்பங்கள் கொத்து கொத்தாக தற்கொலை செய்துகொண்டன.
ஜெருசலேம் பகுதியில் யூதர்கள் யாரும் இருக்க அனுமதிக்கப்படவில்லை. அப்பகுதியில் யூதர்கள் சுத்தமாக துடைத்தெறியப்பட்டனர்.ஆரம்ப காலத்தில் அரேபியர்களும் யூதர்களும் ஒற்றுமையாகவே வாழ்ந்து வந்தனர். ரோமானியர்களால் விரட்டி அடிக்கப்பட்டபோது, அவர்களைப் பெருந்தன்மையுடன் அரேபியர்கள் ஏற்றுக் கொண்டனர். ரோமானியர்களுக்கும், பிறகு கிறிஸ்தவர்களுக்கும் பகையாகிப்போன யூதர்கள் அரேபியர்களுக்கு எந்தவிதத்திலும் எதிரியாகத் தோன்றவில்லை.
பின்னர் நபிகளால் இஸ்லாம் மதம் அரபு நாடுகளில் புயலாகப் பரவ ஆரம்பித்தது யூதர்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியது. என்னதான் சம உரிமை இருந்தாலும் யூதர்கள் முஸ்லிம்களிடமிருந்து சற்று விலகியே வாழ ஆரம்பித்தனர். பெரும்பான்மையினரான முஸ்லிம்களை யூதர்கள் சந்தேகக் கண்ணுடன் பார்க்க ஆரம்பித்தனர்.
இதன்பிறகு, சிலுவைப்போரில் கிறிஸ்தவர்களின் புனித பூமியான ஜெருசலேமை மீட்டே தீருவது என்ற முடிவுடன், கிறிஸ்தவ நாடுகள் இணைந்து பல ஆண்டுகளாக போர் தொடுத்தன. இறுதியாக கிறிஸ்தவ மன்னனது ஆட்சி ஜெருசலேமில் மீண்டும் உதயமானது.
பாலஸ்தீனத்தில் இருந்து கிளம்பிச் சென்ற யூதர்கள் ஐரோப்பிய நாடுகளில் தங்க ஆரம்பித்தனர். தங்களின் எதிர்காலம் இருண்டுவிட்டதாக நினைத்தனர். தங்களுக்கென்று ஒரு தேசம் வேண்டுமென்று நினைத்தனர். கி.பி 1512ல் பாலஸ்தீனம், துருக்கி சுல்தான் வசம் வந்தது.
யூதர்களின் ஒரு குழு, அவரிடம் சென்று பாலஸ்தீனத்தில் தாங்கள் வாழ்ந்த பகுதிகளில் மீண்டும் யூதக் குடியிருப்புகளை ஏற்படுத்த அனுமதி பெற்றனர். ஆங்காங்கே இருந்த யூதர்கள் தங்களது கனவுஉலகமான பாலஸ்தீனத்தில் அடியெடுத்து வைத்தனர். சிறுசிறு நிலங்களைக் கையகப்படுத்தி, விவசாயம், கால்நடைகள், சிறு வியாபாரிகள் என சிறிது சிறிதாக முன்னேறினர்.
இரண்டாம் உலகப்போரின்போது ஹிட்லரின் நாஜிப்படைகள் பல லட்சம் யூதர்களைக் கொன்றதும், ரஷ்யர்கள் சில லட்சம் யூதர்களைக் கொன்றதும் உலக நாடுகளின் அனுதாபத்தைச் சம்பாதிக்க வைத்தது.
அப்போது பிரிட்டனின் ஆதிக்கத்தில் இருந்தது பாலஸ்தீனம். போர் முடிந்ததும் புதிய நாடு யூதர்களுக்காக உருவாக்கப்படும் என பிரிட்டன் வாக்குறுதி அளித்தது. கொஞ்சம் கொஞ்சமாக பாலஸ்தீன பகுதிகளில் குடியேற ஆரம்பித்து, அங்கிருந்த அரேபியர்களின் வறுமையைப் பயன்படுத்தி யூதர்கள் நிலங்களை அபகரித்தனர்.
இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்ததும் பாலஸ்தீனம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, இஸ்ரேல், பாலஸ்தீனம் என ஆகியது. பிரச்னைகளின் முக்கிய புள்ளியான ஜெருசலேம் ஐக்கிய நாடுகள் சபை கட்டுப்பாட்டில் இருக்கும்.
அங்கே அனைவரும் வரலாம்.ஆனால், யூதர்களின் தேசமாக இஸ்ரேல் அறிவிக்கப்பட்டதுமே அரபு நாடுகளின் ராணுவம் இஸ்ரேல் மீது போர் தொடுத்தன. அதுவரை இல்லாத அளவுக்கு யூதர்கள் மீது வெறுப்பை உமிழ காரணங்கள் நிறையவே இருந்தன. சிலுவைப் போர்கள் நடைபெற்ற போது, அரேபியர்கள் அனைவரின் ஆதரவுடன் இருந்தாலும், யூதர்கள் அப்போரில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக ஒரு துரும்பைக்கூட நகர்த்தவில்லை. திடீரென அனைவரும் அங்கிருந்து கிளம்பியிருந்தார்கள். ஆனால், பாலஸ்தீனியர்கள் மட்டும் வாழ்வோ சாவோ தங்களது தேசத்திலேயே அனைத்தையும் தாங்கிக் கொண்டு வாழ்ந்து வந்தனர்.அதேபோல் மீண்டும் திரும்பி வந்து அரேபியர்கள் நிலங்களை தந்திரமாக அபகரித்துக் கொண்டனர்.
இதனால் யூதர்கள் மீது ஆத்திரத்தில் இருந்த அரேபிய நாடுகள் யூதர்களைக் கொன்று குவித்த ஹிட்லர், முசோலினிக்கு தங்களது ஆதரவை இரண்டாம் உலகப் போரின்போதே தெரிவித்தன. சுமார் ஓராண்டு காலம் இஸ்ரேல்-அரேபிய தேசங்கள் இடையே போர் நடைபெற்றது. இந்நேரம், ஐக்கிய நாடுகள் சபை போர் நிறுத்தத்தை அறிவித்தது. இஸ்ரேல் முதலில் தற்காப்புப் போரில் இறங்கினாலும் பின் சுதாரித்துக்கொண்டு அதிரடியில் இறங்கி தாக்கியது.
ஐ.நா.வின் அறிக்கைப்படி ஜெருசலேம் பிரச்னைக்குரிய பகுதி. எனவே, அது ஐநாவின்பொறுப்பில் இருக்கும். ஐநாவின் போர் நிறுத்த அறிவிப்பால், எதுவரை ஒரு நாட்டின் ராணுவம் இருந்ததோ, அதுவரை அது அந்த நாட்டிற்கு சென்றுவிடும். பிடிபட்ட இப்பகுதிகள் முழுவதும் பாலஸ்தீனப் பகுதிகள்.
போரின் முடிவில் அனைத்தையும் பாலஸ் தீனியர்கள் இழந்தனர். கிழக்குப் பகுதி ஜெருசலேம் ஜோர்டானிடமும், மேற்குப் பகுதி ஜெருசலேம் இஸ்ரேலிடமும் சென்றது. காசா பகுதி எகிப்து வசம் சென்றது. எனவே, ஒப்பந்தத்தில் அனைத்து தரப்பு மக்களும் ஜெருசலேம் வருவதிலோ, ஆலயங்களில் வழிபாடு நடத்துவதிலோ இரு அரசுகளும் எந்தவித பிரச்னையும் செய்யக்கூடாது என அறிவிக்கப்பட்டது.
ஆனால், நாளடைவில் ஜோர்டானின் கிழக்கு ஜெருசலேமில் யூதர்கள் வர தடை விதித்தனர். எனவே, அங்கிருந்த யூதர்கள் இஸ்ரேல் நோக்கி நகர, பதிலுக்கு இஸ்ரேல் அரேபியர்களை அவர்களது புனிதத் தலமான ஜெருசலேமுக்குள் வரத் தடை செய்தது.அனைத்து அரபு தேசங்களும் தங்கள் நாட்டிலுள்ள யூதர்களை வெளியேற்றின.
ஆனால், அரபு தேசங்களும், இஸ்ரேலும் கண்டு கொள்ளாமல் விட்டவர்கள் பாலஸ்தீனியர்களே.உலகெங்கும் வாழும் யூதர்களை நாங்கள் எப்படி ஏற்றுக் கொள்கிறோமோ, பிற நாட்டு மக்களை அமெரிக்கா எப்படி ஏற்றுக் கொள்கிறதோ, அதுபோல பாலஸ்தீன முஸ்லிம்களை அரபு நாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றது இஸ்ரேல். அரபு நாடுகள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. கடைசியில், தான் பிடித்த பாலஸ்தீன பகுதிகளை இஸ்ரேல் விட்டுக் கொடுத்துவிட்டால் சரியாகிவிடும். ஆனால், கோரிக்கை எழுமுன் இஸ்ரேல் வேகமாக தலையாட்டி மறுத்துவிட்டது. பல நாடுகள் வெறிபிடித்த நாய்களாய் விரட்டிய போது, ஓடிவந்த யூதர்களை அரவணைத்து ஏற்றுக் கொண்டவர்கள் பாலஸ்தீனியர்களே. இருவரும் ஒரே மூதாதையர் வழி வந்தவர்கள்.
ஆனால், இப்போது அனைத்தையும் மறந்து, தாங்கள் வாழ்ந்த பூமியை அபகரித்ததோடு, தங்களது புனிதத் தலமான அல்-அக்ஸா மசூதிக்குள் நுழையும் உரிமையையும் பறித்துக் கொண்டதை எக்காரணத்தை முன்னிட்டும் பாலஸ்தீனியர்கள் மன்னிக்கத் தயாராக இல்லை. நாடில்லாமல் அலைந்து, பலராலும் துரத்தப்பட்டு, ஓடி ஓடி அலைந்த வலியை யூதர்களைத் தவிர வேறு யாரும் அறிந்திருக்க முடியாது. இருந்தும் அதே வலியை சகோதரர்களான பாலஸ்தீனியர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறது இஸ்ரேல்.
பேராச்சி கண்ணன்
|