Must Watch



OMG 2

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வசூலையும், பாராட்டுகளையும் குவித்த இந்திப்படம், ‘ஓஎம்ஜி 2’. இப்போது ‘நெட்பிளிக்ஸி’ல் பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்கிறது. தீவிரமான சிவ பக்தர் காந்தி. நகரத்திலுள்ள முக்கியமான கோயிலின் அருகில் ஒரு கடை வைத்திருக்கிறார். அவருடைய மகன் விவேக், புகழ்பெற்ற பள்ளியில் படித்து வருகிறான். வசதியானவர்கள் படிக்கும் பள்ளி அது. பள்ளியில் கழிப்பறையில் விவேக் சுய இன்பம் செய்யும் வீடியோ ஒன்று வைரலாகிறது.

அந்த வீடியோவால் பள்ளியின் பெயர் கெட்டுப்போய்விடும் என்று பள்ளியிலிருந்து நீக்கப்படுகிறான் விவேக். மகனுக்கு நிகழ்ந்த சம்பவத்தை ஒரு ரகசியம் போல பாதுகாக்க முற்படுகிறார் காந்தி. ஆனால், அவருடைய மனைவி, மகள், பக்கத்து வீட்டுக்காரர்கள் உட்பட எல்லோருக்கும் விவேக்கின் செயல் தெரிந்துவிடுகிறது.

வீட்டை காலி செய்து வேறு இடத்துக்குச் செல்கிறது விவேக்கின் குடும்பம். தற்கொலை முயற்சி செய்கிறான் விவேக். மகனை எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும் என்று முயற்சிக்கிறார் காந்தி. தனது பக்தனான காந்திக்கு, சிவபெருமான் எப்படி உதவுகிறார் என்பதே சுவாரஸ்யமாகச் செல்லும் திரைக்கதை.  பாலியல் கல்வியின் அவசியத்தை இப்படம் வலியுறுத்துகிறது. படத்தின் இயக்குநர் அமித் ராய்.

டிஜிட்டல் வில்லேஜ்

‘அமேசான் ப்ரைமி’ல் பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்கும் மலையாளப் படம், ‘டிஜிட்டல் வில்லேஜ்’. கேரளாவில் உள்ள ஒரு குக்கிராமம். அங்கே வசிக்கும் மக்களுக்கு யூடியூப், ஓடிடி பற்றி எதுவுமே தெரியாது. கிராமத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் சினிமா எடுக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கின்றனர். திரைக்கதை தயாராகிவிட்டது.

அந்த கிராமத்தில் சினிமாக்காரர் ஒருவர் இருக்கிறார். ‘‘நான் ஒரு லட்சம் போடுகிறேன். மக்கள் எல்லோரும் சேர்ந்து 2 லட்சம் தரட்டும். நாம் எல்லோரும் சேர்ந்து ஒரு படத்தை எடுத்துவிடலாம்...’’ என்று அந்த மூன்று இளைஞர்களிடம் சொல்கிறார். மக்களும் ஆர்வத்துடன் தங்களிடமிருக்கும் பணத்தைத் தருகின்றனர். எல்லா பணத்தையும் சுருட்டிக்கொண்டு ஓடிவிடுகிறார் அந்த சினிமாக்காரர்.

இந்நிலையில் அந்த மூன்று இளைஞர்களும் என்ன செய்தனர்? சாதாரண குக்கிராமம் எப்படி டிஜிட்டல் வில்லேஜாக மாறுகிறது என்பதே மீதிக்கதை.ஜாலியாக ஒரு படத்தைப் பார்க்க விரும்புபவர்களுக்கு நல்ல சாய்ஸ் இந்தப் படம். வெள்ளந்தியான கிராம மனிதர்களை நம் முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கின்றனர். பஹத் நந்து மற்றும் உல்சவ் ராஜீவ் இருவரும் இணைந்து படத்தை இயக்கியிருக்கின்றனர்.  

நோவேர்

‘நெட்பிளிக்ஸின்’ டாப் டிரெண்டிங் பட்டியலில் இருக்கும் ஸ்பானிஷ் படம், ‘நோவேர்’. ஆங்கிலத்திலும் காணக்கிடைக்கிறது. ஸ்பெயினில் நிலைமை சரியில்லை. அதனால் இளம் தம்பதிகளான நிக்கோவும், மியாவும் அயர்லாந்து செல்லத் திட்டமிடுகின்றனர். மியா வேறு கர்ப்பமாக இருக்கிறாள். கையில் இருக்கும் எல்லா பணத்தையும் கொடுத்து ஒரு கன்டெய்னரில் ஏறி தப்பித்துச் செல்கின்றனர். கன்டெய்னரை ஏற்றிச் செல்லும் வண்டி இடையில் நிறுத்தப்படுகிறது. அதில் நிறைய பேர் ஏற்றப்படுகின்றனர்.

அப்போது ஏற்படும் பிரச்னையில் வேறு கன்டெய்னருக்கு மாற்றப்படுகிறான் நிக்கோ. கணவனும், மனைவியும் பிரிகின்றனர். மியா பயணிக்கின்ற கன்டெய்னரில் இருபதுக்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர். அந்த கன்டெய்னர் வண்டி இடையில் நிறுத்தப்பட்டு, இராணுவத்தினரால் சோதனை செய்யப்படுகிறது. அதில் பயணம் செய்தவர்கள் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். மியா மட்டும் உயிர் பிழைக்கிறாள்.

தனியாக மியா மட்டும் கன்டெய்னரில் பயணிக்கின்றாள். அந்த கன்டெய்னர் கப்பலில் ஏற்றப்படுகிறது. புயலில் கப்பல் சிக்க, கன்டெய்னர் கடலில் விழுகிறது. மியா எப்படி உயிர் பிழைக்கிறாள் என்பதே திரில்லிங் திரைக்கதை. மொழியைத் தாண்டி எல்லோரையும்  வசீகரிக்கின்ற ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஆல்பர்ட் பின்டோ.

பிரேம விமானம்

ஒரு ஃபீல் குட் படத்தை பார்க்க வேண்டுமா? உங்களுக்கான நல்ல சாய்ஸ், ‘பிரேம விமானம்’ எனும் தெலுங்குப்படம். ‘ஜீ 5’இல் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது.
ஏழ்மையான விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களான ராமு மற்றும் லட்சுவின் ஒரே கனவு, விமானத்தில் பறப்பது மட்டுமே. சிறுவர்களான இருவரும் எப்போதுமே விமானம் என்றே இருக்கின்றனர். அவர்களது தந்தை கடன் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொள்கிறார். அந்தக் கடன் சுமை அம்மாவின் தலையில் விழுகிறது. கடனை அடைப்பதற்காக ஒரு தொகையைச் சேர்த்து வருகிறார் அம்மா.

அம்மா சேர்த்து வைத்த பணத்தை எடுத்துக்கொண்டு விமானத்தில் பறப்பதற்காக ராமுவும், லட்சுவும் வீட்டைவிட்டு ஓடிவிடுகின்றனர். இன்னொரு பக்கம் மளிகைக் கடை நடத்தி வருபவரின் மகனான மணியும், ஊரிலேயே செல்வாக்கான குடும்பத்தைச் சேர்ந்த அபிதாவும் காதலிக்கின்றனர். 

அபிதாவின் அப்பாவால் காதலுக்கு பிரச்னை வரும் என்பதால் இருவரும் ஊரைவிட்டு, துபாய்க்குச் செல்ல திட்டமிடுகின்றனர். இளம் காதலர்களும், சிறுவர்களும் சந்திக்க, சூடுபிடிக்கிறது திரைக்கதை.குடும்பத்துடன் கண்டு களிப்பதற்கான ஒரு படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் சந்தோஷ் கட்டா.

தொகுப்பு: த.சக்திவேல்