உஷார்... வயிறு தொடர்பான நோய்களில் இது புதுசு!
பொதுவாக வயிறு சம்பந்தமான பிரச்னைகளில் அல்சர், குடல் அழற்சிநோய் உள்ளிட்ட ஒருசில நோய்கள் பற்றி நாம் அறிந்திருப்போம். ஆனால், இன்றைய வாழ்க்கைச் சூழலால் நோய்கள் விதவிதமாக வந்து கொண்டே இருக்கின்றன.சமீபமாக இந்த வயிறு தொடர்பான நோய்களில் IBS என்கிற நோய் அதிகமாகக் காணப்படுவதாகக் கூறுகின்றனர் மருத்துவர்கள். குழந்தைகள் முதல் அனைத்து வயதினரிடமும் இந்நோய் பரவலாக இருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
 இதுமட்டுமல்ல. இதில் வருத்தம் அளிக்கும் செய்தி என்னவென்றால் இந்நோய்க்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுதான். இதனால், இந்நோயை கட்டுப்படுத்த முடியுமே தவிர முழுவதுமாக குணப்படுத்த முடியாது. இந்நிலையில் IBS என்றால் என்ன... இதன் அறிகுறிகள் என்ன... ஒரு நோயாளி என்ன செய்ய வேண்டும்... என்பது உள்ளிட்ட கேள்விகளுடன் ஜெம் மருத்துவமனையின் இரைப்பை குடல் நிபுணர் மருத்துவர் வினோத்குமாரிடம் பேசினோம்.

‘‘Irritable Bowel Syndrome என்பதன் சுருக்கமே IBS. இது எதனால் வருகிறது என்கிற காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. மரபுரீதியாகவா அல்லது சுற்றுப்புறச்சூழல் காரணமாகவா அல்லது மனஅழுத்தத்தினாலா அல்லது வேறு ஏதேனும் காரணங்களாலா... எதனால் எனச் சொல்லவே முடியவில்லை. பொதுவாக இது ஏதாவது ஒரு தொற்றுக்குப்பின் ஆரம்பிப்பதாகச் சொல்கிறார்கள்.
இது யாருக்கு வரலாம் எனக் கேட்டால் மனஅழுத்தத்துடன் வேலை செய்கிறவர்கள், உடல் மற்றும் மனம் சார்ந்த அழுத்தத்தில் உள்ளவர்கள், மனஅழுத்தம், பயம், பதற்றம் உள்ளிட்ட பிரச்னைகள் இருப்பவர்கள்... இவர்களுக்கெல்லாம் வரலாம்.

அதேபோல் அடிக்கடி பாக்டீரியா தொற்று வயிற்றில் வந்தாலும், ஒத்துக்காத உணவினை உண்பதாலும் இந்நோய் ஏற்படலாம். அப்புறம், ஆய்வுகளின்படி மரபுரீதியாக சில ஜீன்ஸ் இருக்கிறது. அதனாலும், IBS வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.  ஆனால், இதுவும் நிரூபிக்கப்படவில்லை. உலக அளவில் இந்நோய் எதனால் வருகிறது? குணப்படுத்தும் வழிகள் என்ன என்பது குறித்து ஆய்வுகள் நடக்கின்றன. அதைப் பொறுத்து நிறைய மருந்துகளும் வந்துகொண்டே இருக்கின்றன. ஆனால், முன்பு இருந்ததைவிட இப்போது IBS நோயாளிகள் அதிகரித்து இருக்கிறார்கள். காரணம், வாழ்க்கைமுறை மாறியதுதான். அவசர வாழ்க்கை முறையால் ஏற்பட்ட விளைவு. அதிகநேரம் வேலை செய்வதும், குறைவான நேரம் தூங்குவதும், துரித உணவுகளை அதிகம் உட்கொள்வதும், மேற்கத்திய கலாசாரமாக மாறியதும் IBS பரவலாக அதிகரிக்கக் காரணங்கள்.
முன்பு நூறு பேருக்கு ஒன்றிரண்டு நோயாளிகளே இருந்தார்கள். இப்போது 10 முதல் 15 பேர் இருக்கிறார்கள். இந்தியாவில் 0.4 சதவீதத்தில் இருந்து 4 சதவீதம் வரை IBS பரவல் இருப்பதாக ஆய்வுகளில் சொல்கிறார்கள். இதிலும் நகர்ப்புறம், கிராமப்புறம் என்று கணக்கிடும்போது நகர்ப்புறத்தில் உள்ளவர்களுக்குத்தான் அதிகம் வருகிறது...’’ என்றவர் நிதானமாகத் தொடர்ந்தார்.
‘‘இந்நோய் ரொம்ப நாட்களாகவே உள்ளது என்றாலும் சமீபமாகவே அதிகமாகத் தெரிய வந்திருக்கிறது. காரணம், நிறைய நோயாளிகளைப் பார்க்கிறபோதுதான் இது எதனால் என ஆய்வு செய்கிறோம். அப்போது இது IBS எனத் தெரியவருகிறது. அடுத்ததாக இன்று மருத்துவ ஆய்வுகள் வளர்ந்திருப்பதும் ஒரு காரணம்.
அப்புறம், மக்களிடையேயும் இன்வெஸ்டிகேஷன் நாலேஜ் அதிகமாகிவிட்டது. இப்போது வயிற்றுப்போக்கு எனச் சொன்னால், எதனால் வருகிறது, தப்பான உணவினாலா இல்லை ஏதாவது தொற்றினாலா என உடனே கேட்கிறார்கள். அதனால், வயிறு சம்பந்தமான பிரச்னைகள் என வருகிற போது இது IBD எனச் சொல்லப்படுகிற குடல்அழற்சி நோயாக இருக்குமோ என எல்லாம் சோதித்தோம். இதன்பிறகே இது IBS எனத் தெரிந்து தனியாக வகைப்படுத்தினோம்.
இந்த IBS பிரச்னையை ஒரு ரத்தப்பரிசோதனை வழியாகவோ அல்லது ஒரு ஸ்கேன் எடுத்தோ பார்த்து கண்டறிய முடியாது. இதற்கென தனியாக எந்த பரிசோதனையும் இல்லை. அதனால், வயிறு சம்பந்தமாக என்னென்ன நோய்கள் இருக்கிறதோ அதெல்லாம் இல்லை எனத் தெரிந்த பிறகே இது IBS ஆக இருக்கும் என உறுதிப்படுத்துகிறோம்...’’ என்றவரிடம் இதன் அறிகுறிகள் பற்றி கேட்டோம்.
‘‘முதல் அறிகுறி வயிற்றுவலிதான். அடுத்து வயிற்று உப்புசம், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு இருக்கும். இதுதவிர வாயு, சோர்வு, மனஅழுத்தம் உள்ளிட்டவை இருக்கும். வயிற்றுவலியைப் பொறுத்தவரை மோஷன் போனதும் சரியாகிவிடும். இன்னொரு முக்கியமான விஷயம். வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு இருக்கலாம் எனச் சொன்னதும் மக்கள் அதை IBS என நினைத்துவிடக்கூடாது. அவை வயிறு சம்பந்தமான வேறு நோய்களாகவும்கூட இருக்கலாம். அதனால், மருத்துவரை அணுகித்தான் எதையும் உறுதிப்படுத்த வேண்டும்.
அப்புறம், IBSஐப் பொறுத்தவரை அது எந்த வயதிலும் வரலாம். இப்ப பள்ளிக் குழந்தைகளிடமும், கல்லூரி மாணவர்களிடமும் IBS இருப்பதைப் பார்க்கிறோம். இதற்கான காரணம், உணவுதான். ஃபாஸ்ட் ஃபுட் அதிகமாக சாப்பிடுவதால் IBS அறிகுறிகள் வருகின்றன.இதுதவிர, IBD (Inflammatory Bowel Disease) என்று ஒரு நோய் இருக்கிறது.
அதாவது குடல்அழற்சி நோய். பொதுவாக இது 20 முதல் 30 வயதில் உள்ளவர்களுக்கோ அல்லது 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கோ வரலாம். IBD வரக் காரணம் பெருங்குடலின் சொந்த எதிர்ப்பு சக்தியே குடலுக்கு எதிராக வேலை செய்து குடலின் பலத்தை அழிப்பதுதான். இதை ஏன் இந்த இடத்தில் குறிப்பிடுகிறேன் என்றால் சிலர் IBSஐயும், IBDஐயும் குழப்பிக் கொள்கிறார்கள். IBS மாதிரி IBDயிலும் வயிற்றுவலி இருக்கும். வயிற்றுப்போக்கு ஒருநாளில் நிறைய முறை போகும். ஆனால், இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் IBSஇல் மலத்துடன் ரத்தம் போகாது. IBDஇல் மலத்துடன் ரத்தம் போகும்.
இரண்டாவது, IBS உள்ள ஒருவருக்கு தூங்கும்முன்புவரை பிரச்னை இருக்கும். தூங்கியபிறகு பிரச்னை இருக்காது. நடுராத்திரியில் வயிற்றுவலி என எழுந்திருக்கமாட்டார்கள். ஆனால், IBDஇல் தூங்கின பிறகு இரவு வயிற்றுவலி என எழுந்துபோவார்கள். அதற்கான வாய்ப்பு அதிகம். மூன்றாவது, IBDஇல் உடல் எடைக் குறைவு ஏற்படும். இந்த இரண்டுக்குமே வெவ்வேறு சிகிச்சைகள். அதனால், IBS என நினைத்து IBDயை கவனிக்காமல் விட்டால் குடலில் பெரிதாக புண்ணாகி வருங்காலத்தில் புற்றுநோயைக் கொண்டு வந்துவிடும் வாய்ப்புகள் இருக்கிறது.
அதனால், எந்த வயதினருக்கும் மலத்தில் ரத்தம் வந்தாலோ, அதிகமாக வயிற்றுப்போக்கு போனாலோ, நடுராத்திரி வயிறு கலக்கி மோஷன் போனாலோ நிச்சயம் மருத்துவரை அணுக வேண்டும்...’’ என்றவரிடம் IBSஐ குணப்படுத்த முடியுமா என்றோம். ‘‘ஆங்கிலத்தில் Gut Brain Axis எனச் சொல்வோம். அதாவது வயிற்றுக்கும் மூளைக்கும் இடையில் உள்ள நெட்வொர்க்கால் வருகிற பிரச்னை இது. அதனால், இதை குணப்படுத்த முடியுமா எனக் கேட்டால் இப்போதைக்கு இல்லை என்பதே பதில். ஆனால், கட்டுப்படுத்த முடியும்.
இதற்கு நம்ம வாழ்க்கை முறையையும், உணவு முறையையும் மாற்ற வேண்டும். அப்படி மாற்றினால் மாத்திரைகள் இல்லாமல் கட்டுப்பாட்டிலேயே வைத்துக் கொள்ளலாம். இந்நோயால் பெரிய பாதிப்பு ஒன்றும் வராது. கண்டிப்பாக வயிற்றுவலி இருக்கும். மனம் சார்ந்த அழுத்தங்களும் இருக்கும். ஆனால், கேன்சர் உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தான விஷயங்கள் எதுவும் வராது...’’ என்றவர், நோய் வந்தபின் செய்ய வேண்டியவை பற்றிக் குறிப்பிட்டார்.
‘‘முதலில் மனஅழுத்தத்தை குறைக்க வேண்டும். தேவையில்லாமல் பயப்படவோ, பதற்றமாகவோ கூடாது. நன்றாகத் தூங்க வேண்டும். உணவுமுறையில் FODMAP என ஒரு டயட் இருக்கிறது. இதன் விரிவாக்கம் Fermentable, Oligosaccharides, Disaccharides, Monosaccharides And Polyols என்பது. இதுசார்ந்த உணவுகளை எடுக்கும்போது நோயாளிகள் ரிலாக்ஸாக இருப்பார்கள். நார்மல் டயட்டைவிட இது மிகச்சிறந்தது.
குறிப்பாக, எளிதாக செரிமானம் ஆகக்கூடிய உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும். பால் சார்ந்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். இதெல்லாம் இந்த டயட்டிலேயே இருக்கிறது. இந்த உணவுகளை ஒவ்வொருவரின் அறிகுறிகள் பொறுத்து எடுத்துக் கொள்வது முக்கியம். FODMAP என இணையத்தில் குறிப்பிட்டால் நிறைய தகவல்கள் வரும். அதைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.
இதுதவிர, IBSதான் என நாங்கள் உறுதிப்படுத்தியதும் மனரீதியான விஷயங்களில் கவனம் எடுத்துக்கொள்ளச் சொல்வோம். முதலில் யோகா, தியானம் உள்ளிட்ட விஷயங்களை மேற்கொள்ளச் சொல்வோம். இதனுடன் அவர்களுக்குப் பிடித்த விளையாட்டுகள், பொழுதுபோக்குகளில் கவனம் செலுத்தச் சொல்கிறோம். இதெல்லாம் அவர்களின் மனங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும். அப்போது, உடலும் பலமாகும். மனதிலும் உற்சாகம் பிறக்கும். IBS அதிகரிக்கும் வாய்ப்புகளும் குறையும்.
இந்த IBSஐப் பொறுத்தவரை திடீரெனக் குறையும், திடீரென அதிகரிக்கும். அதிகரிக்கும்போது மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். குறையும்போது மருந்தில்லாமல் உணவுமுறையிலேயே கொண்டு போக வேண்டும். இதையெல்லாம்விட மனஅழுத்தத்தைவிடுத்து மகிழ்ச்சியை நோக்கி நகர்ந்தாலே போதும், நம்மை எந்த நோயும் அண்டாது...’’ என உற்சாகம் பொங்கச் சொன்னார் டாக்டர் வினோத்குமார்.
பேராச்சி கண்ணன்
|