ராதா மகளுக்கு டும் டும் டும்..?



நடிகை ராதாவுக்கு அறிமுகம் கொடுக்க ஆரம்பித்தால் 80ஸ் & 90ஸ் கிட்ஸ் இருந்த இடத்தில் இருந்தே கல்லெடுத்து எறிவீர்கள்!ஏனெனில் பாரதிராஜாவின் ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் அறிமுகமான ராதாவுக்கு இன்றும் முன்னாள் வாலிபர்கள் மத்தியில் இருக்கும் மவுசு ஓயவில்லை.
ராதா மீதிருக்கும் அதே ஈர்ப்பு, அவரது மகள் கார்த்திகா விஷயத்தில் இருக்கும் என்ற பெரும் நம்பிக்கையோடு அவரை களத்தில் இறக்கினார்கள்.தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்று பழமொழி உண்டு. ஆனால், இந்த பழமொழி கார்த்திகா விஷயத்தில் சுத்தமாக எடுபடவே இல்லை.

ராதா மகள் என்ற பின்னணியோடு இரண்டு மூன்று படவாய்ப்புகள் வந்தாலும், கார்த்திகாவால் இங்கு தாக்குப்பிடிக்க முடியவில்லை. ‘கோ’ படம்போல் ஒன்றிரண்டு மட்டுமே அவர் பெயர் சொல்லின. இதனால் தனது அப்பா பார்த்து வரும் ஹோட்டல் பிஸினஸுக்கு தாவிவிட்டார் கார்த்திகா.இந்நிலையில் வாய்ப்பு வராவிட்டாலும், வயது ஏறிக்கொண்டேதானே இருக்கும் என்பதால், ஒரு வழியாக திருமணம் செய்து கொடுத்து அவரை வாழ்க்கையில் செட்டிலாக்கி விடலாம் என ராதா முடிவெடுத்து இருக்கிறாராம்.

இதே வேகத்தில் கார்த்திகாவுக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலம் ஜரூராக நடந்தது. சினிமா செட்டாகவில்லை. இனி வாழ்க்கையிலாவது அடுத்த வேலையை பார்க்கலாம் என்று கார்த்திகாவும் ஓகே சொல்லி விட்டாராம்.வெகுசீக்கிரத்தில் ராதா வீட்டிலிருந்து கார்த்திகா திருமண அழைப்பிதழ் வரலாம் என அனைவரும் ஆருடம் சொல்லி வந்த நிலையில், தன் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை கார்த்திகா வெளியிட்டிருக்கிறார்.

ஆணின் முகம் முழுவதுமாக வெளிப்படாத அந்த போட்டோவில், கார்த்திகா அவரை அணைத்திருக்கிறார்.இப்படத்தின் கீழ் எந்த கேப்ஷனையும் கார்த்திகா வெளியிடவில்லை. போதாதா... இணையமே பற்றிக்கொண்டது!கார்த்திகாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது... அப்பொழுது எடுக்கப்பட்ட படம்தான் இது... என ஆளாளுக்கு பேசி வருகிறார்கள்.

அதிகாரபூர்வமாக  ராதாவோ அல்லது கார்த்திகாவோ அறிவிக்கும் வரை இந்த கிசுகிசு புகைந்தபடியேதான் இருக்கும். நிலவரம் தெரியாமலேயே கார்த்திகாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில் ஒரேயொரு பயன் மட்டும் எட்டிப் பார்க்கிறது.வேறொன்றுமில்லை. நயன்தாரா, ஹன்சிகா மோத்வானி திருமணம் மாதிரி கார்த்திகாவும் தன் மேரேஜை ஏதேனும் ஒரு ஓடிடிக்கு தாரை வார்த்துவிடுவாரோ... என்பதுதான் அது!  

காம்ஸ் பாப்பா