சென்னை டாக்டர் வென்ற வெண்கலப் பதக்கம்!



பொதுவாக ஸ்கேட்டிங் என்றதும் நம் நினைவுக்கு வருவதெல்லாம் உறைபனியில் சறுக்கி விளையாடுவதும், சிறுவர்கள் சாலைகளில் ஆர்வமாக ஸ்கேட்டிங் செய்வதும்தான்.
ஆனால், இது ஒரு சர்வதேச விளையாட்டு என்பதே சமீபத்தில் நடந்துமுடிந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் நம்மவர்கள் பதக்கம் வென்றபிறகே பலருக்கும் தெரிய வந்தது.
குறிப்பாக ரோலர் ஸ்கேட்டிங்கின் பெண்கள் பிரிவில் 3000 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கங்களை வென்று பலரின் பாராட்டை அள்ளியது இந்தியா.

இந்த ஸ்பீடு ஸ்கேட்டிங் தொடர் ஓட்டத்தில் கலந்துகொண்டு பதக்கம் வென்ற மூன்றுபெண்களில் இருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இதில் ஒருவர் ஆரத்தி கஸ்தூரி ராஜ், இன்னொருவர் கார்த்திகா ஜெகதீஸ்வரன். இருவருமே சென்னையைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில், ஆரத்தியிடம் பேசினோம். 
எம்பிபிஎஸ் மருத்துவரான ஆரத்தி, சென்னைஅண்ணாநகரைச் சேர்ந்தவர். ‘‘ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வாங்கினது ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கு. என்னுடைய கனவு இது. இந்தப் பதக்கம் இன்னும் உத்வேகம் தந்திருக்கு...’’ என அத்தனை உற்சாகமாகப் பேசுகிறார் ஆரத்தி.

‘‘நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னைதான். பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம்ல பள்ளிப் படிப்பை முடிச்சேன். பிறகு, போரூர் ராமச்சந்திரா மெடிக்கல் காலேஜ்ல எம்பிபிஎஸ் பண்ணினேன். அடுத்து, அங்கேயே எம்.எஸ்சி கிளினிக்கல் எம்ப்ரையாலஜி பண்ணினேன். 
சின்ன வயசுல அப்பாவும் அம்மாவும் ஏதாவது ஒரு விளையாட்டுல உன்னை கண்டிப்பாக ஈடுபடுத்திக்கோனு சொன்னாங்க. அதனால, நான் டென்னிஸுக்கும், நீச்சலுக்கும் முயற்சி செய்தேன். இதுக்காக அண்ணா நகர் டவர் பார்க் போனப்ப அங்க ஸ்கேட்டிங் இருந்தது. அதைப் பார்த்து எனக்கு ஸ்கேட்டிங் பண்ணணும்னு ஆசை வந்துச்சு. அப்ப எனக்கு ஏழு வயசு...’’ எனக் கலகலவென சிரிக்கும் ஆரத்திக்கு இப்போது 29 வயதாகிறது.

‘‘அங்க சேர்ந்து ஸ்கேட்டிங் செய்தேன். பிறகு, ஒரு லோக்கல் கிளப் மீட்ல கலந்துக்கிட்டேன். அதுல தங்கப்பதக்கமும், வெள்ளிப் பதக்கமும் ஜெயிச்சேன். அது நிறைய தன்னம்பிக்கையைத் தந்தது. அதனால், அப்பாவும் அம்மாவும் இந்த விளையாட்டுல ஆர்வம் காட்டுனு என்னை ஊக்கப்படுத்தினாங்க. 

அங்கிருந்து என் ஸ்கேட்டிங் ஜர்னி ஆரம்பிச்சது. பிறகு, தீவிரமாகப் பயிற்சி செய்ய ஆரம்பிச்சேன். என் 11 வயசுல தேசிய அளவுல மெடல் வாங்கினேன். அப்ப தங்கப் பதக்கமும், வெண்கலப் பதக்கமும் வென்றேன். அதுக்கு முன்னாடி வரை தேசிய அளவு போட்டிகள்ல கலந்துப்பேனே தவிர மெடல் அடிச்சதில்ல. இதன்பிறகு, எல்லா ஆண்டுகளும் நான் வெற்றி பெற ஆரம்பிச்சேன்.

இந்த ரோலர் ஸ்கேட்டிங்ல அண்டர் 10, அண்டர் 12, அண்டர் 14, அண்டர் 16னு பிரிவுகள் இருக்கு. இதன்பிறகு, 16 வயதுக்கு மேல்னு ஒரே பிரிவுல வந்திடும். இதில் எல்லாவற்றிலும் நான் தங்கப்பதக்கம் வாங்கியிருக்கேன். தேசிய அளவுல ஒரு ஸ்கேட்டர் நான்கு ஈவென்ட்லதான் கலந்துக்கலாம். தேசிய அளவு விளையாட்டைப் பொறுத்தவரை நான் குறுகிய தூரம் மற்றும் நீண்ட தூரம் உள்ள போட்டிகள்ல கலந்துப்பேன். ஆனா, சர்வதேச அளவுலனு போறப்ப நான் நீண்ட தூரப் போட்டிகள்ல மட்டுமே பங்கேற்கிறேன்.

இதுல குறுகிய தூரம் என்பது 500 மீட்டர், 1000 மீட்டர்னு வரும். நீண்ட தூரம்னா பத்து கிமீ, 15 கிமீ, 42 கிமீ தூர மராத்தான் ஸ்கேட்டிங்னு இருக்கும். சர்வதேச அளவுல நான் முதல்முறையாக 2008ம் ஆண்டு கலந்துக்கிட்டேன். அப்ப எனக்கு 14 வயசு. அதன்பிறகு எல்லா ஆண்டுகளிலும் நான் கலந்துக்கிறேன். பிறகு, சர்வதேச அளவுல 2009ல் டாப் 10ல் வந்தேன். 

கடந்த 2018ம் ஆண்டும் நான் ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்துக்கிட்டேன். அதுல ஏழாவதாக வரமுடிஞ்சது. இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தனிநபர் பிரிவில் பத்து கிமீ தூரம் பண்ணினேன். அதுல ஐந்தாவதாக வந்தேன்.

அப்புறம், ரிலே பண்ணினப்பதான் மூன்றாவதாக வந்து வெண்கலம் வென்றோம்...’’ என்கிறவர், இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட தங்கப்பதக்கங்கள் வென்றுள்ளார். இந்த ஆசிய போட்டிக்குமுன் பெரும் விபத்தில் சிக்கிய ஆரத்தி, அதிலிருந்து மீண்டு வந்தே இந்தப் பதக்கத்தை வென்றுள்ளார். 

‘‘கடந்த மே மாசம் நான் பயிற்சி எடுக்கும்போது ஒரு பையன் குறுக்கே வந்துட்டான். அவனை இடிச்சு நான் விழுந்ததுல என் நெற்றியில் 20 தையல்களுக்கும் மேல் போடும்படி ஆகிடுச்சு. அதன்பிறகு, மூன்று நாட்கள் கழிச்சுதான் நான் மெதுவாக பயிற்சி எடுக்க ஆரம்பிச்சேன்.

அடுத்த ஒருமாசத்துல ஃபைனல் ட்ரையல் இருந்தது. அதனால, என் பயிற்சியாளர் சத்தியமூர்த்தியும், என் பெல்ஜியம் பயிற்சியாளரும், என் ஃபிட்னஸ் பயிற்சியாளர் கோடீஸ்வரனும் வீட்டுல சைக்கிளிங் பண்ண வச்சாங்க. வேர்வை வராமல் பயிற்சியெடுக்கச் செய்து என்னை கொஞ்சம் கொஞ்சமாக மேம்படுத்தினாங்க. ஒரு வாரத்திற்குப்பின் தையல் பிரிச்ச பிறகே நான் மேற்கொண்டு வொர்க்அவுட் பண்ணினேன். இவை எல்லாவற்றுக்கும் என் பயிற்சியாளர்களும், என் குடும்பத்தினரும் தந்த ஊக்கம்தான் காரணம்...’’ என்கிறவர், தன் குடும்பம் பற்றித் தொடர்ந்தார்.    

‘‘நான் இன்னைக்கு இந்த இடத்துல இருக்கேன்னா அதற்கு அப்பா கஸ்தூரிராஜும், அம்மா மாலா ராஜும்தான் காரணம். அப்பா கஸ்தூரிராஜ் பிசினஸ்மேன். அம்மா மாலா ராஜ் மகப்பேறு மருத்துவர். அப்பாதான் என்னுடன் எல்லா போட்டிகளுக்கும் கூட வருவார். இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிக்குக்கூட அவர் வந்திருந்து ஊக்கப்படுத்தினார். அம்மா மருத்துவர் என்பதால் அவங்களால் பயணம் செய்ய முடியாது. ஆனா, என் படிப்பை அம்மாதான் கவனிச்சிக்கிட்டாங்க.

அப்புறம், தங்கச்சி ஆராதனா, வழக்கறிஞராக இருக்காங்க. அவங்க ஸ்குவாஷ் வீராங்கனை. எனக்கு ஆரம்பத்துல படிப்புடன் ஸ்கேட்டிங் பண்றது ரொம்ப சிரமமாக இருந்தது. அப்ப என் தங்கச்சி ஆராதனாதான் சப்போர்ட்டாக இருந்து என்னை கைடு பண்ணிட்டே இருந்தாங்க. அவங்க மூணுபேரும் இல்லனா நான் இல்ல. எனக்கு 2019ல் திருமணமாச்சு. என் கணவர் சந்தீப் வாரியர் கிரிக்கெட் வீரர். தமிழ்நாடு அணிக்காக விளையாடுறார். ஐபிஎல்ல மும்பை இந்தியன்ஸ் அணியில் இருக்கார்.

திருமணமான நேரத்துல நிறைய பேர் உன் வாழ்க்கையே மாறிடும்னு சொன்னாங்க. ஆனா, என் கணவரும் சரி, என் மாமியார் வீட்டிலும் சரி இப்பவரை எனக்கு ரொம்ப உறு
துணையாக இருக்காங்க. உண்மையில் நான் திருமணத்திற்குப் பிறகுதான் முதுநிலை படிப்பை முடிச்சேன். அப்பவும் எனக்கு நிறைய சப்போர்ட் செய்தாங்க. 

உன்னால் ரெண்டுமே பண்ண முடியும்னு என் கணவர் நம்பிக்கை தந்தார். ஃபிட்னஸ், டயட் எல்லாவற்றிலும் எனக்கு நிறைய சப்போர்ட்டாக இருந்து, ‘உன்னால் முடியும். வெற்றி பெறுவே’னு சொல்லிட்டே இருக்கிற அணுகுமுறை கொண்டவர். இந்த விஷயத்துல நான் ஆசீர்வதிக்கப்பட்டவள்.

அப்புறம் எல்லா விளையாட்டிலும் ஏதாவது ஒரு கஷ்டம் இருக்கும். எங்க விளையாட்டுல தவறி கீழே விழுந்தால் காயங்கள் நிறைய ஏற்படும். அதைத்தாண்டிதான் வரணும். என்னைப் பொறுத்தவரை ஸ்கேட்டிங்ல கஷ்டம்னு எதுவும் கிடையாது. டெக்னிக்ஸை கத்துக்கணும். அப்புறம், பேலன்ஸ் அதிகம் வேணும். இந்த விளையாட்டு சின்னப் பசங்களுக்கு ரொம்ப பயனுள்ளது. இப்ப ஆசிய விளையாட்டுப் போட்டி பதக்கத்திற்குப் பிறகு இன்னும் நிறைய பேருக்கு இந்த விளையாட்டைப் பத்தி தெரிய வந்திருக்கு.

அது சந்தோஷமாக இருக்கு. இதுதவிர, அன்னைக்கு பதக்கம் வாங்கிட்டு வந்ததுமே தமிழ்நாடு அரசு எங்களைப் பாராட்டி பரிசுத்தொகை வழங்கி கௌரவிச்சாங்க. முதல்வர் மு.க.ஸ்டாலினும், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் வாழ்த்தி ஊக்கப்படுத்தினது ரொம்ப சந்தோஷமாக இருந்தது...’’ என்கிறவரின் கனவு தனிநபர் பிரிவில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே! ‘‘எனக்கு ஸ்கேட்டிங் ரொம்பப் பிடிக்கும். இந்த விளையாட்டை நான் பணத்திற்காகவோ, புகழுக்காகவோ விளையாடல. சின்னப் பொண்ணாக ஸ்கேட்டிங் ஆரம்பிச்சேன். இப்பவரை 22 ஆண்டுகளாக நான் ஸ்கேட்டிங் பண்றேன். என்னோட பேஷன் இது.

இந்த விளையாட்டு ஒலிம்பிக்ஸ்ல இல்லாதது கஷ்டமாகத்தான் இருக்கு. இருந்தும் என் கனவுனு பார்க்கிறப்ப அடுத்த 2026ல் நடக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தனிநபர் பிரிவுல பதக்கம் வெல்லணும் என்பதுதான். ஜெயிப்பேன்னு நம்பிக்கை இருக்கு’’ என மனஉறுதியுடன் புன்னகைக்கிறார் ஆரத்தி கஸ்தூரிராஜ்.  

பேராச்சி கண்ணன்