5 மாநில தேர்தலும் பழைய/ புதிய பென்ஷன் திட்டமும்!



National Pension Scheme (NPS)

கர்நாடகாவில் ‘40 பெர்சன்ட் ஊழல் சர்க்கார்’ என எதிர்மறையான விமர்சனம் மூலம் பாஜகவை மண்ணைக் கவ்வ வைத்தது காங்கிரஸ்  என்றால், வரும் 5 மாநிலத் தேர்தலுக்காக அதே காங்கிரஸ் பல்வேறு யூகங்களை வகுத்து வருகிறது. அதில் முக்கியமானது பழைய ஓய்வூதியத் திட்டம்! 2004ல் வாஜ்பாயின் பாஜக அரசு கொண்டுவந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தை அரசு ஊழியர்கள் தொடர்ச்சியாக எதிர்த்து வந்தாலும் அடுத்து மத்தியில் வந்த காங்கிரஸ் அரசும் அதே புதிய ஓய்வூதியத் திட்டத்தைத்தான் கடைப்பிடித்து வந்தது.

இன்றைய நிலையில் பழையதை மறக்க நினைக்கும் காங்கிரஸ், தான் ஆளும் பல மாநிலங்களில் - உதாரணமாக விரைவில் தேர்தலை சந்திக்கும் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில், - தான் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே கொண்டு வரப்போவதாக அறிவித்திருக்கிறது. 
பஞ்சாப்பை ஆளும் ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரஸைப் பின்பற்றி விரைவில் பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டுவரப்போவதாக அறிவிக்க, ஆளும் பாஜக இந்த அறிவுப்புகள் 2024 பாராளுமன்றத் தேர்தலில் என்ன விளைவுகளை ஏற்படுத்துமோ என்ற கவலையில் இருக்கிறது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஒரு மாநிலத்தின் வருவாயில் நான்கில் ஒரு பங்கை அது சாப்பிட்டுவிடுகிறது என்ற ஒரு விமர்சனம் இருந்தது. இது அரசின் நிதியில் மரண அடியைக் கொடுக்கும் என்று பல பொருளாதார நிபுணர்களும் கூவிக் கொண்டிருக்க -பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இருந்த நிரந்தரமான ஓய்வூதியம்தான் சிறந்தது... புதிய ஓய்வூதியத் திட்டம் கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமானது என்று விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

அத்துடன் அரசின் வருமானம் என்பது வெறுமனே வருமான வரி, சரக்கு வரி, டாஸ்மாக் வரியால் மட்டுமே கிடைப்பதில்லை... வளர்ச்சியடைந்த நாடுகள் பின்பற்றும் கார்ப்பரேட் வரி, சொத்து வரி, நில வரி போன்றவற்றாலும் ஒரு அரசு வரியை அதிகப்படுத்தி அரசு ஊழியர்களின் நிரந்தரமான ஓய்வூதியத்துக்கு வழிவகுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைப் பின்பற்றலாம் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

இது அரசு வருமானத்தில் பாதியான 25 சதவீதம் அல்ல... மாறாக 15 சதவீதம்தான் செலவாகும் என்று ஆதாரம் காண்பிக்கிறார்கள் நிபுணர்கள். இந்நிலையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கமான ஜாக்டோ ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளரான வெங்கடேசனிடம் பேசினோம்.

‘‘காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான், சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்கனவே பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக அரசு ஆவணத்தில் வெளியிடப்பட்டு நடவடிக்கைக்கு காத்திருக்கிறது. மத்தியப் பிரதேசத்திலும் காங்கிரஸ் அதே பழைய ஓய்வூதியத் திட்டத்தை அறிவிக்க இருப்பதாக அறிகிறேன்.

பழையது என்றால் ஒரு அரசு ஊழியர் வாங்கிய கடைசி சம்பளத்தில் பாதியை - அதாவது 50 சதவீதத்தை மாதந்தோறும் அரசு அந்தக் குடும்பத்துக்கு வழங்கும்.
புதியதில் ஒரு ஊழியரின் சம்பளத்தில் 10 சதவீத சம்பளத்தை பிடித்தம் செய்து, 10லிருந்து 14 சதவீதத்தை அரசு போடும். ஆக, 10ம் 14மாக சேர்ந்து 24 சதவீத பணத்தை பங்கு மார்க்கெட் அல்லது அரசு கடன் பத்திரம் அல்லது ஏதாவது மியூச்சுவல் ஃபண்டில் போட்டு அதில் வரும் பணத்தைக் கொண்டு அதில் 60 சதவீதமான பணத்தை ஒருவர் ஓய்வுபெறும்போது கொடுப்பார்கள்.

மீதி 40 சதவீத பணத்தை மீண்டும் அதே பங்கு மார்க்கெட், கடன் பத்திரங்களில் போட்டு வரும் பணத்தில் ஒரு தொகையை மாதந்தோறும் ஓய்வூதியமாகக் கொடுப்பார்கள்.
ஆனால், புதிய ஓய்வூதியத் திட்டம் ஒரு சூதாட்டம் போல பங்குமார்க்கெட்டிலும், கடன் பத்திரங்களிலும் போடப்படுவதால் ஒரு ஊழியருக்கு மாதந்தோறும் எவ்வளவு பணம் கிடைக்கும் என்று யாருக்குமே தெரியாது. 

இதனால்தான் புதிய திட்டம் ஒரு சூதாட்டத் திட்டம்; அது ஊழியருக்குக் கேடு விளைவிக்கும் திட்டம் என்று எங்களைப் போன்ற அமைப்புகள் சொல்கின்றன...’’ என்று சொல்லும் வெங்கடேசன், தமிழ்நாட்டில் கடைப்பிடிக்கப்படும் பென்ஷன் திட்டத்தைப் பற்றி விளக்கினார்.

‘‘தமிழ்நாட்டில் சுமார் 6 லட்சம் அரசு ஊழியர்களாவது இருக்கிறார்கள். இப்போது இந்த ஊழியர்களுக்கு வழங்கப்படும் திட்டத்தை ஒரு பென்ஷன் திட்டம் என்று சொல்லமுடியாது.
உதாரணமாக புதிய ஓய்வூதியத் திட்டம் போலவே தமிழக அரசு ஊழியர்களிடமிருந்து 10 சதவீதத்தை சம்பளத்தில் இருந்து பிடித்த பின் அரசும் தன் பங்குக்கு 10 சதவீதம் போட்டாலும் அது புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இருக்கும் ஆபத்தான பங்கு வர்த்தகம், கடன் பத்திரம் என்று போகாமல் அரசிடமே இருக்கும்.

ஊழியரின் 10 சதவீத பங்கு, அரசின் 10 சதவீத பங்குடன், வட்டியும் சேர்த்து ஒரு ஊழியர் ஓய்வுபெறும்போது அரசு மொத்தமாக கையில் கொடுத்துவிடும். இதை பென்ஷன் என்பதைவிட செட்டில்மென்ட் என்றுதான அரசும் ஊழியர்களும் குறிப்பிடுவார்கள். அரசு போடும் 10 சதவீத பங்கும் மக்கள் வரிப் பணத்தில் இருந்துதான் அரசு வழங்குகிறது...’’ என்று சொல்லும் வெங்கடேசனிடம், ஓய்வூதியம் என்பது அரசின் வருவாயில் கால்பங்கை சாப்பிடுவதாக பலரும் குற்றம்சாட்டுகிறார்களே என்று கேட்டோம்.

‘‘தமிழக பட்ஜெட்டிலேயே இதற்கு ஆகும் செலவு 15 சதவீதம் என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார்கள். வருமான வரி, விற்பனை வரி மற்றும் இன்னும் சிறு வரிகளையும் தாண்டி வருமானம்
ஈட்டுவதற்கான பல்வேறு வழிகள் அரசிடம் உண்டு. உதாரணமாக தமிழகத்தில் கனிமவளங்களின் செல்வம் கொட்டிக்கிடக்கிறது. முறையாக இந்தத் தொழிலில் அரசு ஈடுபடுமானால் அரசு தன் வருமானத்தைப் பெருக்கிக்கொள்ளலாம்.  

திமுக அரசும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டுவருவதாக தேர்தல் அறிக்கையில் சொல்லியிருந்தது. விரைவில் அதை அமல்படுத்தும் வேலையில் தமிழக அரசு இறங்கும் என நம்புகிறோம்...’’ நம்பிக்கையுடன் சொல்கிறார் வெங்கடேசன்.

டி.ரஞ்சித்