நகரும் வீடு



இன்று எதைச் செய்தாலும் வித்தியாசமாக, புதிதாக செய்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற நிலை. இது கட்டுமானத்துறைக்கும் பொருந்தும். அதனால் பல கட்டுமான நிறுவனங்கள் வீடு கட்டுவதில் கூட புது தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியும், வித்தியாசம் காட்டியும் அசத்தி வருகின்றன. இந்த வகையில் கேரளாவில் நகரும் வீடுகள் டிரெண்டடித்துக் கொண்டிருக்கின்றன. இந்த வீட்டை ஓர் இடத்திலிருந்து, இன்னொரு இடத்துக்கு மாற்றிக்கொள்ளலாம் என்பதுதான் இதன் சிறப்பு.

அதாவது நகரும் வீட்டை முழுவதுமாக பிரித்து எடுக்க முடியும். எந்தவித சேதமும் ஏற்படாது. பிரித்ததை சுலபமாக பேக்கிங் செய்து, இன்னொரு இடத்துக்குக் கொண்டு சென்று மறுபடியும்
வீட்டைக் கட்டிக்கொள்ள முடியும். இப்படியான ஒரு நகரும் வீடு கேரளாவின் கோழிக்கோட்டில் அமைந்திருக்கிறது. இதன் உரிமையாளர் மருத்துவர் ஜெயக்குமார். குடும்பத்துடன் வார இறுதி நாட்களைக் கழிப்பதற்காக இந்த வீட்டைக் கட்டியிருக்கிறார். கேரளாவின் இணைய பத்திரிகைகளில் ஜெயக்குமாரின் நகரும் வீடு சுற்றி வருகிறது.

‘‘இப்படியான வீடு ஒன்றும் புதிதல்ல. ஆனால், பெரும்பாலானவர்களுக்கு இன்னமும் அறிமுகமாகவில்லை. இப்போது வெளிநாடுகளில் இந்த வகையான வீட்டைத்தான் அதிகமாகக் கட்டுகிறார்கள்...’’ என்று ஆரம்பித்தார் கட்டடக்கலைஞரான மஜீத். ஜெயக்குமாரின் வீட்டை டிசைன் செய்து, கட்டிக்கொடுத்தவர் இவர்தான். 
எல்ஜிஎஸ்எஃப் (Light Gauge Steel Frame) எனும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த வீட்டைக் கட்டியிருக்கிறார் மஜீத். இந்த தொழில்நுட்பத்தில் ஸ்டீல்தான் முதன்மையான கட்டுமானப்பொருள். சுவர், கூரை, உள்ளடுக்குகள் உட்பட மொத்த வீட்டையுமே கட்டுவதற்கு ஸ்டீல்தான் ஆதாரம்.

‘‘நாம் வழக்கமாக கட்டும் வீடுகளைவிட சுற்றுச்சூழலுக்கு உகந்தது இந்த நகரும் வீடு. வெள்ளப் பாதிப்பு, பூகம்பம் போன்ற இயற்கைச் சீற்றங்களின் போது இந்த வீடு பாதிப்படைந்தாலும், நம்மால் மறுபடியும் புதுப்பித்து கட்டிக்கொள்ள முடியும். வேறு இடத்துக்குக் கூட மாற்றிக்கொள்ளலாம். 
மீண்டும் கட்டுவதற்குக்கூட குறைவான நேரமே தேவைப்படும்...’’ என்கிற மஜீத் ஒரு கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். வழக்கமான நடை முறையில் இல்லாமல் புது தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கட்டுமானங்களைக் கட்டி வருகிறது இந்நிறுவனம்.

‘‘பொதுவாக இந்தியர்களிடம் புது தொழில்நுட்பம் குறித்த அறிமுகமோ, விழிப்புணர்வோ இருப்பதில்லை. 2009ம் வருட வெள்ளத்துக்குப் பிறகு கேரள மக்கள் இயற்கைப் பேரழிவால் அழியாத வீடுகளைக் கட்டுவதற்கான தொழில்நுட்பங்களைத் தேடி வருகின்றனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வழக்கமான வீடுகளை மறு உருவாக்கம் செய்ய ரொம்ப நேரமாகும். செலவும் அதிகம். அத்துடன் நிறைய குப்பைகள் உருவாகும். எல்ஜிஎஸ்எஃப் வீடுகளில் இந்தப் பிரச்னைகள் எதுவும் இல்லை. அதனால் எதிர்காலத்தில் நகரும் வீடு போன்ற புது தொழில்நுட்பங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும்...’’ என்ற மஜீத், எல்ஜி எஸ் எஃப் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கேரளாவில் நிறைய வீடுகளைக் கட்டியிருக்கிறார். அதில் ஒன்றுதான் ஜெயக்குமாருடைய வீடு.

இவருடைய வீட்டைக் கட்டி முடிக்க ஆறு மாதங்கள் ஆகியிருக்கின்றன. வீடு கட்டுவதற்கான மொத்த செலவு, 80 லட்ச ரூபாய். விரைவில் தமிழ்நாட்டிலும், கர்நாடகாவிலும் நகரும் வீடுகளைக் கட்டப்போகிறார் மஜீத்.‘‘எல்ஜிஎஸ்எஃப் வீடு தேவைப்படும் வாடிக்கையாளர்கள் எங்களைத் தேடி வருகின்றனர். 

முதலில் என்ன மாதிரியான வடிவமைப்பில் வீடு வேண்டும் என்று கேட்போம். அவர்களது விருப்பங்களுக்குத் தகுந்த மாதிரி சில டிசைன்களை வரைந்து கொடுப்போம். டிசைன்தான் வீடு கட்டுவதிலும், பட்ஜெட்டிலும் முக்கியமான ரோல். வாடிக்கையாளர்களுக்கு டிசைன் பிடித்ததும் கட்டுமானத்தை ஆரம்பிப்போம்.

இந்த நகரும் வீட்டைக் கட்டுவதற்கு குறைவான தொழிலாளிகளே தேவைப்படுவார்கள். அதனால் மெட்டீரியல்களுக்குத்தான் செலவு அதிகம்...’’ என்கிற மஜீத்தின் நிறுவனம், வீட்டைக் கட்டுவதற்கு நவீனமான கருவிகளைப் பயன்படுத்துகிறது. வழக்கமாக வீடு கட்டுவதற்குப் பயன்படுத்தும் மெட்டீரியல்களையும் ஆங்காங்கே பயன்படுத்துகிறார் மஜீத்.

மற்ற வீடுகளைக் கட்டும்போது உண்டாகும் குப்பைகள் மற்றும் உபரிகளைவிட, இந்த வீடு கட்டும்போது பெரும்பாலும் குப்பைகளே உருவாகாது என்பது எல்ஜிஎஸ்எஃப்பின் தனிச்சிறப்பு.
‘‘வழக்கமாக நாம் கட்டும் வீடுகளை நீண்ட நாட்கள் வாழ்வதற்கு ஏற்ற வகையில் கட்ட வேண்டும். ஆனால், காலம் மாறிக்கொண்டே போகிறது. வீடு கட்டுவதற்கான மண் போன்ற பொருட்கள் இல்லாமல் போகும் நிலை உருவாகலாம். அப்போது எல்ஜிஎஸ்எஃப் போன்ற புது தொழில்நுட்பத்துக்கு நாம் மாறிக்கொள்வதுதான் புத்திசாலித்தனம்...’’ என்று அழுத்தமாக முடித்தார் மஜீத்.

த.சக்திவேல்