சென்னை கருவாடு ஆபத்தானதா..?



ஆம். கருவாடு பிரியர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தியைத்தான் இந்த ஆய்வு சொல்கிறது.மீன் உணவு சாப்பிடுவதால் உடலுக்கு ஒமேகா த்ரீ, புரோட்டீன், பல நன்மைகள் கிடைக்கும் என்று தெரியும்.

அந்த மீனை காய வைத்து கருவாடாக சாப்பிட்டால் நல்லதா கெட்டதா?

கெட்டது என்று செய்தி வருகிறது.சென்னையில் விற்பனை செய்யப்படும் 22 வகையான கருவாடுகளை ஆய்வு செய்திருக்கிறார்கள். இந்த ஆய்வை சென்னை புதுக் கல்லூரியின் விலங்கியல் துறை நடத்தியிருக்கிறது. அந்த ஆய்வு முடிவுகள் இப்போது வெளிவந்திருக்கிறது.

சென்னை மக்கள் விரும்பிச் சாப்பிடும் கருவாட்டில் ஏகப்பட்ட ரசாயனங்கள் கலந்திருக்கின்றன என்று அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.கேட்மியம் (cadmium), லெட் (lead), கோபால்ட் (cobalt) போன்ற தீங்கு விளைவிக்கும் உலோகங்கள் சென்னை கருவாடுகளில் அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த ஆய்வு 17 இடங்களில் நடத்தப்பட்டது. 

ஆய்வு செய்யப்பட்ட 22 வகை கருவாடுகளில் வஞ்சிரம், மத்தி, சூரை, நெத்திலி போன்ற அதிகம் விற்பனையாகும் கருவாடுகளும் இருக்கின்றன.இந்த ரசாயனம் கலந்த கருவாடுகளை சாப்பிட்டால் கேன்சர் வரும் அபாயம் உள்ளதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

சென்னை கருவாடுகளில் ஈயம் 32.85 - 42.09 mg/kg அளவில் இருக்கிறது. இது மிக அபாயகரமானது. உலக சுகாதார அமைப்பு (WHO) வெறும் 2.17 mg/kg அளவு ஈயத்தைத்தான் அனுமதிக்கிறது.

அதே போல் கேட்மியம் 2.18 - 3.51 mg/kg இருக்கிறது. ஆனால், WHO அனுமதிக்கும் அளவு 0.05 mg/kg.இதேபோல், கோபால்ட் உலோகம் 2.95 - 9.55 mg/kg அளவு இருக்கிறது. WHO சொல்லும் அளவு 1.13 mg/kgதான்.

சரி, ஏன் மீனுக்குள் இத்தனை ரசாயனங்கள் இருக்கின்றன?

சில காரணங்களை கூறுகிறார்கள் ஆய்வாளர்கள். வட சென்னை கடலில் பலவிதமான ரசாயனப் பொருட்கள் கலக்கப்படுகின்றன. இது கடலின் சூழலையும் மீன்களையும் பாதிக்கிறது. இந்தப் பகுதியில் கேட்மியம், ஈயம் போன்றவை கடலை மாசுபடுத்தி இருக்கின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. அது மட்டுமில்லாமல் மீன்களை காயவைத்து கருவாடு ஆக்குவதற்கு பயன்படுத்தப்படும் உப்பும் கலப்படம்தான் என்று குறிப்பிடுகிறார்கள் ஆய்வாளர்கள்.

என்.ஆனந்தி