வேளச்சேரி தொகுதியை மாடல் தொகுதியாக மாற்றுவேன்!ஸ்பாட் லைட்-வேளச்சேரி காங்.வேட்பாளர் அசன் மவுலானா

 ‘‘தமிழகம் முழுக்கவே திமுக கூட்டணிக்கு பலத்த ஆதரவு இருக்கிறது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அறுதிப் பெரும்பான்மை பெற்று திமுக ஆட்சி அமைக்கும். இதை ஏதோ ஆரூடமாக நான் சொல்வதாக நினைக்க வேண்டாம். காங்கிரஸ் கட்சி சார்பில் வேளச்சேரி தொகுதியில் போட்டியிடும் நான் நாள்தோறும் மக்களைச் சந்தித்து வருகிறேன்.

மத்திய, மாநில ஆட்சிகள் மீது எந்தளவுக்கு அவர்கள் கோபமாக இருக்கிறார்கள் என கண்கூடாகப் பார்க்கிறேன்.வேளச்சேரி மக்கள் என்ன நினைக்கிறார்களோ அதையேதான் ஒட்டுமொத்த தமிழகமும் நினைக்கிறது. அதனால்தான் தமிழகம் முழுக்கவே திமுக கூட்டணிக்கு பலத்த ஆதரவு இருக்கிறது என உறுதியாகச் சொல்கிறேன்...’’ அழுத்தம்திருத்தமாகச் சொல்கிறார் வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளரான அசன் மவுலானா.

‘‘வேளச்சேரி தொகுதி மக்களுக்கு சேவை செய்வதற்காகவே காங்கிரஸ் கட்சி எனக்கு வாய்ப்பளித்துள்ளது. எனது தந்தையார் ஜே.எம்.ஆரூண் தமிழக வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டார். அவரைப் பார்த்து வளர்ந்த நானும் மக்களுக்காகவே உழைப்பேன். தொகுதி மக்களின் பிரச்னையைத் தீர்க்க சட்ட சபையில் குரல் கொடுப்பேன்.

விஜயநகர் பேருந்து நிலையம் அருகில் நீண்ட காலமாக கட்டப்பட்டு வரும் பாலப் பணிகளால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சேலத்தில் 12 கிமீ பாலத்தை சர்வசாதாரணமாகக் கட்டி முடித்த எடப்பாடி பழனிச்சாமி, விஜயநகர் பேருந்து நிலையம் அருகில் வெறும் 2 கிமீ பாலத்தைக் கட்டி முடிக்காமல் இருக்கிறார். இதற்குக் காரணம் வேளச்சேரி தொகுதி மக்கள் மீது அதிமுகவுக்கு அக்கறையில்லை என்பதுதான்.

இந்நிலையை கண்டிப்பாக மாற்று வேன். வேளச்சேரி தொகுதியை மேம்பட்ட பகுதியாக மாற்றுவேன். வட்டம் தோறும் ஆயிரம் குடும்பங்கள் வசிக்கும் பகுதியாக பிரிக்கப்பட்டு அங்கு ஆவின் பூத் அமைக்கப்படும்.கடல்நீர் அரிப்பைத் தடுக்க, 300 மீட்டருக்கு ஒரு தூண்டில் முள் வளைவு அமைத்துத் தர முயற்சிப்பேன். மீனவ குடும்பத்தில் உள்ள பெண்கள் படிப்பதற்காக அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைக்கப்படும். மீன் பிடி தடைக் காலங்களில் வழங்கப்படும் மானியம் இரட்டிப்பாக அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்.

சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து மட்டு மல்ல... மத்திய, மாநில அரசுகளிடம் இருந்தும் நிதி பெற்று அனைத்துத் தரப்பினருக்கும் சமுதாயக் கூடம் நவீன முறையில் அமைத்துத் தரப்படும்.39 ஆயிரம் மக்கள் வசிக்கும் பகுதியில் மகளிர் காவல் பூத் ஏற்படுத்தப்படும். வேளச்சேரி பகுதியை இரண்டாகப் பிரித்து, ஒவ்வொரு பகுதியிலும் நவீன டயாலிசிஸ் மிஷின்கள் பொருத்தப்பட்ட நிலையம் அமைத்துத் தரப்படும். இதை சிறுநீரக நோயாளிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

குடிநீர் மற்றும் கழிவுநீர்க் குழாய்கள் நவீன முறையில் அமைத்துத் தரப்படும். வேளச்சேரி ஏரியை சுத்தப்படுத்தி, கரைப்பகுதியில் மக்கள் நடப்பதற்கு கான்கிரீட் நடைபாதைகள் அமைக்கப்படும்.ஏழை மக்கள் இறந்துவிட்டால் குளிர்சாதனப்பெட்டியும் அமரர் ஊர்தியும் அவர்களுக்கு இலவசமாக அனுப்பி வைக்கப்படும்.ஒரே வார்த்தையில் சொல்வதென்றால், வேளச்சேரி தொகுதியை முதன்மைத் தொகுதியாக, மாடல் தொகுதியாக மாற்றுவேன்! மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்று இவை அனைத்தையும் செய்வேன்!’’ உறுதியாகச் சொல்கிறார் அசன் மவுலானா.