ரத்த மகுடம்-143



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

புருவங்களை உயர்த்தி தாழ்த்திய, படகோட்டி வேடத்தில் இருந்த கோச்சடையன் இரணதீரன் புன்னகைத்தான். ‘‘அவரா..?’’‘‘ஆம் பாண்டிய இளவரசே! காந்தளூர் சாலையின் ஆச்சார்யரான திருநாராயண நம்பூதரிதான்!’’ பதிலுக்கு புன்னகைத்தான் இராஜசிம்மன். ‘‘வாருங்கள்... விஹாரைக்குள் சென்று பேசலாம்... வானவில்லின் வண்ணங்களைக் குறிக்கும் எழுவரே! உங்கள் வரவு நல்வரவாகுக! நீங்களும் வாருங்கள்...’’

தலைமை பிட்சு முன்னால் செல்ல, பாண்டிய இளவரசனும் பல்லவ இளவரசனும் அடுத்து வர... மூவரையும் பின்தொடர்ந்தார்கள் சீனத்தில் இருந்து வந்திருந்த எழுவரும்.அனைவரும் விஹாரையின் முதல் தளத்தை அடைந்தார்கள். தலைமை பிட்சுவின் அறை அங்குதான் இருந்தது. அனைவரும் அறைக்குள் நுழைந்ததும் இராஜசிம்மன் கதவையும் சாளரங்களையும் மூடினான்.

தன் கரத்தில் இருந்த இராட்சஷ புறாவின் தொண்டைப் பகுதியை லாவகமாக நீவினார் தலைமை பிட்சு. இதனை அடுத்து புறா தன் அலகைத் திறந்தது. அது கவ்வியிருந்த மூங்கில் குழலை தலைமை பிட்சு எடுத்தார். பிரித்தார். குழலுக்குள் நறுக்கோலைகள் பத்திரமாக இருந்தன.‘‘பல்லவ இளவரசே... சமயோசிதமாக செயல்பட்டீர்கள்... இல்லையென்றால் காந்தளூர் சாலை ஆச்சார்யர் அனுப்பிய நறுக்கோலைகளை பறிகொடுத்திருப்போம்...’’ தலைமை பிட்சுவின் நயனங்களில் நிம்மதி பெருக்கெடுத்தது.

‘‘நீங்கள் நன்றி சொல்ல வேண்டியது கரிகாலனுக்கு!’’ இராஜசிம்மன் இப்படிச் சொன்னதும் கோச்சடையனின் கண்கள் கூர்மை யடைந்தன.அதைக் கவனிக்காததுபோல் இராஜசிம்மன் தொடர்ந்தான். ‘‘சாளுக்கிய போர் அமைச்சரான ஸ்ரீராமபுண்ய வல்லபர் இப்படி புறாவை அனுப்பி நமக்கு வரும் தகவல்களை அபகரிக்க முற்படுவார் என எச்சரித்திருந்தான். அதனால்தான் பகீரதனின் மேல் அமர்ந்தபடி மைதானத்துக்குள் நுழைந்த நான், என் பார்வையை முதல் தளத்தின் மீதே பதித்திருந்தேன். விஹாரைக்கு உணவுப் பொருட்களைச் சுமந்து வந்த மாட்டு வண்டி, இந்த எளியவன் வானில் பறக்க உதவியது. மற்றபடி இதில் அடியேனின் செய்கை என்று எதுவுமில்லை...’’

‘‘நீங்கள் பேசிக் கொண்டிருங்கள்... இந்த ஜீவனுக்கு உணவளித்து பின் சுதந்திரமாகப் பறக்கவிட்டுவிட்டு வருகிறேன்...’’ சொன்ன தலைமை பிட்சு மூங்கில் குழலை இராஜசிம்மனிடம் கொடுத்தார். கோச்சடையனிடம் கண்களால் விடைபெற்றார். எழுவரைப் பார்த்து புன்னகைத்துவிட்டு புறாவை வருடியபடியே அறையில் இருந்து வெளியேறினார். எச்சரிக்கையுடன் அறைக்கதவை மூடிவிட்டே சென்றார்.

அறைக்குள் நிலவிய அமைதியை கோச்சடையனின் குரல் கிழித்தது. ‘‘கொற்கைக்கு எப்பொழுது வந்தீர்கள் பல்லவ இளவரசே..?’’
‘‘பெயர் சொல்லியே அழைக்கலாம்... நாம் இருவரும் சம வயதினர்தான்... ’’ பாண்டிய இளவரசனை நேருக்கு நேர் பார்த்தான் இராஜசிம்மன். ‘‘கடந்த ஏழு நாட்களாக இங்குதான் இருக்கிறேன்...’’‘‘மாளிகைக்கு வந்திருக்கலாமே..?’’
‘‘பிட்சு வேடத்தில் விஹாரையில் இருப்பதே பாதுகாப்பானது என்று...’’
கோச்சடையன் இடைமறித்தான். ‘‘கரிகாலன் சொன்னானா..?’’

‘‘இல்லை... பாண்டிய மன்னர் விரும்பினார்..! அப்பொழுதுதான் சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தருக்கு சந்தேகம் எழாது என்று அவர் எண்ணினார்...’’
‘‘ஆனால், இராட்சஷ புறா வந்ததைப் பார்த்தால் சாளுக்கிய மன்னர் ஊகித்திருக்கிறார் என அர்த்தமாகிறதே..?’’‘‘பின்னே... மிகச்சிறந்த இராஜதந்திரியான ராமபுண்ய வல்லபர் அங்கு இருக்கிறாரே!’’கோச்சடையனின் உதடுகள் சுழிந்தன. ‘‘சாளுக்கியர்கள் காஞ்சியைக் கைப்பற்றியபோது...’’

‘‘காஞ்சியை அவர்கள் கைப்பற்றவில்லை! போரிட்டு வெற்றி பெற்றால்தான் அது கைப்பற்றியதாக அர்த்தம்...’’
‘‘அப்படியானால் இப்பொழுது காஞ்சி சாளுக்கியர்கள் வசம் இருப்பதற்கு என்ன அர்த்தம்..?’’
‘‘சிறிது காலத்துக்கு அவர்கள் பல்லவ நாட்டை ஆள அனுமதித்திருக்கிறோம் என்று பொருள்!’’
‘‘அனுமதி..? நீங்கள் அனுமதி வழங்கியிருக்கிறீர்களா..?’’

‘‘ஆம்! பல்லவ மன்னர் பரமேஸ்வரவர்மர், இந்த அனுமதியை சாளுக்கியர்களுக்கு வழங்கியிருக்கிறார்!’’
‘‘அதாவது எதிரிக்கு..?’’‘‘ம்... தமிழர்களின் எதிரிக்கு!’’
‘‘விந்தையாக இருக்கிறதே! வரலாற்றில் இதுபோல் எங்கும் நடைபெற்றதாக பதிவில்லையே..?’’‘‘அக்குறை தீர்க்கப்பட்டிருக்கிறது! இனி சரித்திரத்தில், ‘எதிரி தன் நாட்டை சில காலம் ஆள பல்லவ மன்னர் அனுமதித்தார்...’ என்ற வாசகம் இடம்பெறும்...’’
‘‘இராஜசிம்மா...’’

‘‘சொல்லுங்கள் கோச்சடையரே..!’’
‘‘பல்லவ மன்னர் ஏன் அப்படிச் செய்தார்..?’’
‘‘இப்பொழுது சொல்ல அனுமதியில்லை... ஆனால், விரைவில் தாங்களே பல்லவ மன்னரின் செய்கைக்கான காரணத்தை அறிவீர்கள்...’’‘‘நல்லது... இக்கணத்தில் சொல்ல என்ன அனுமதியோ... அதை காந்தளூர் சாலை ஆச்சார்யரோ அல்லது புலவர் தண்டியோ அல்லது பாண்டிய மன்னர் அரிகேசரி மாறவர்மரோ அல்லது உங்கள் வலது கரமான கரிகாலனோ... யார் உங்களுக்கு அனுமதி அல்லது கட்டளையிட்டிருக்கிறார்கள் என்று வினவப் போவதில்லை... சொல்ல வந்ததைக் கூறுங்கள்...’’

‘‘கோச்சடையரே! நீங்கள் குறிப்பிட்ட யாரும் அனுமதியோ அல்லது கட்டளையோ இடவில்லை. மாறாக, நீங்கள் குறிப்பிடாத... ஆனால், உங்களுக்கு நன்கு தெரிந்த ஒருவர்தான் எல்லாவற்றையும் உங்களிடம் கூறும்படி வேண்டுகோள் வைத்திருக்கிறார்...’’இராஜசிம்மன் இப்படிச் சொன்னதும் கோச்சடையனின் கண்கள் ஒளிர்ந்தன. தன்னையும் மீறி, ‘‘அவளா..?’’ என்று வினவினான்.‘‘ஆம் பாண்டிய இளவரசே! சிவகாமியேதான்!’’ இராஜசிம்மன் நகைத்தான்.

‘மேலே சொல்லுங்கள்’ என்பதுபோல் கோச்சடையன் அமைதியாக இராஜசிம்மனையே பார்த்தபடி நின்றான்.தலையை அசைத்தபடி இராஜசிம்மன் தொடர்ந்தான். ‘‘முதலில் தொண்டைக்குள் சிக்கிய முள்ளாக உங்களை உறுத்திக்கொண்டிருக்கும் வினாவுக்கு விடையளித்து விடுகிறேன்... விலங்குகளை எப்படி உள்ளே இழுத்து வேட்டையாடுவோமோ அப்படி இம்முறை சாளுக்கியர்களை வீழ்த்த திட்டமிட்டோம்.

எனவேதான் பல்லவ எல்லைக்குள் சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரின் தலைமையிலான படை நுழைந்ததும் பல்லவ மன்னர் காஞ்சியை விட்டு வெளியேறினார்... கரிகாலன், மல்லைக்குச் சென்றான்... நான் ஆரல்வாய்மொழி கணவாய்க்கு வந்தேன்! முன்பே ஏற்பாடு செய்தபடி கொற்கை, விழிஞம் துறைமுகத்தில் வந்திறங்கிய களிறுகளை ஆரல்வாய்மொழி கணவாய்க்கு வரவழைத்து பயிற்சி கொடுத்தேன். பயிற்சி பெற்ற யானைகள் இப்பொழுது போருக்குத் தயாராக இருக்கின்றன...’’‘‘இடையில் வசவசமுத்திரம் துறைமுகத்துக்கு சென்றீர்களா..?’’ நிதானத்தை இழக்காமல் பாண்டிய இளவரசன் வினவினான்.

இராஜசிம்மன் வாய்விட்டுச் சிரித்தான். ‘‘பாண்டிய ஒற்றர் படை எந்தளவுக்கு திறமையானது என்பதற்கு ஒரு சோறு பதம்தான் உங்கள் கேள்வி! ஆம் கோச்சடையரே! மதுரையில் இருந்து பல்லவ நாட்டுக்கு வந்த நெசவாளர்களை வரவேற்கவும், அவர்களை தொண்டை மண்டலத்தில் இருக்கும் கோட்டங்களுக்கு பிரித்து அனுப்பவும் வசவசமுத்திரம் துறைமுகத்துக்குச் சென்று வந்தேன்!’’
‘‘நெசவாளர்களால் என்ன செய்ய முடியும்..?’’

‘‘நடைபெறவிருக்கும் போர் அதை உலகுக்கு அறிவிக்கும் பாண்டிய இளவரசே! உங்கள் உள்ளத்தில் இருந்த கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டேன் என்று நினைக்கிறேன்... இப்பொழுது பார்வையாளர்களாக நம் உரையாடலை கவனித்துக்கொண்டிருக்கும் இந்த எழுவருக்கும் சில விஷயங்களைத் தெளிவுப்படுத்திவிட்டு மேற்கொண்டு நாம் பேசலாம் என்று நினைக்கிறேன்... உங்களுக்கு சம்மதம்தானே..?’’
தலையசைத்து தன் சம்மதத்தை கோச்சடையன் இரணதீரன் தெரிவித்தான்.

இராஜசிம்மன் முழுமையாகத் திரும்பி ஏழு சீன பிட்சுகளையும் பார்த்தான். ‘‘உங்களைச் சேர்க்காமல் நாங்கள் இருவரும் மட்டும் இதுவரை உரையாடியதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்...’’‘‘இளவரசே! என்ன இது... எங்களிடம் போய் மன்னிப்பெல்லாம் கேட்கிறீர்கள்...’’ எழுவரில் ஒருவர் முன்னால் வந்து இராஜசிம்மனின் கரங்களைப் பற்றினார். ‘‘உங்கள் கட்டளைப்படி நடக்க வேண்டும் என்றுதான் எங்கள் மன்னர் உத்தரவிட்டிருக்கிறார்...

அதற்காகவே தமிழில் பேசவும் எழுதவும் எங்களுக்கு கற்றுக் கொடுத்து அனுப்பியிருக்கிறார்... பாண்டிய இளவரசருக்கு நீங்கள் அளித்த பதில்கள் அனைத்தும் எங்கள் மனதிலும் எழுந்த வினாக்களுக்கான விடைகள்தான்... கடல் பயணத்தில் நாங்கள் துண்டு துண்டாக கேள்விப்பட்ட சம்பவங்களை எல்லாம் நீங்கள் கோர்த்து மாலையாக்கி இருக்கிறீர்கள். எனவே உங்கள் உரையாடல் எங்களுக்கும் பயனளித்திருக்கிறது...’’

‘‘நல்லது...’’ இராஜசிம்மன் புன்னகைத்தான். ‘‘தமிழக வரலாறு உங்களுக்கு எந்தளவுக்கு தெரியும் என்று எனக்குத் தெரியாது. ஆனால், முழுமையாக உங்களிடம் கூற விரும்புகிறேன். அப்பொழுதுதான் இனி நாம் என்ன செய்யவேண்டும் என திட்டமிட முடியும். ஒருவேளை நீங்கள் அறிந்த வரலாற்றையே நானும் சொல்லக்கூடும். அதை அறிந்ததை நினைவுபடுத்தும் செயலாக ஏற்றுக் கொள்ளுங்கள்...’’

நிறுத்திய பல்லவ இளவரசன், கோச்சடையன் இரணதீரனை ஏறிட்டான். ‘‘பாண்டிய இளவரசே! இவர்கள் எழுவரும் புத்த பிட்சுகள் மட்டுமல்ல... சீனத்தை ஆளும் தாங் அரச வம்சத்தவருக்கு அரணாக விளங்கும் படைத்தளபதிகளின் குடும்ப வாரிசுகள்... தொண்டை மண்டலத்தில் இருந்து சீன நாட்டுக்குச் சென்ற போதிதர்மர் அங்கு படைப்பயிற்சி மையம் ஒன்றை அமைத்தார் அல்லவா..?

அந்த மையத்தில் பனிரெண்டு ஆண்டுகள் பயிற்சி பெற்றவர்கள்! எந்திரப் பொறிகளில் வல்லுனர்கள்; வித்தகர்கள்... நமக்கு உதவ தாங் மன்னர் இவர்களை இங்கு அனுப்பி வைத்திருக்கிறார்...’’நிறுத்திய இராஜசிம்மன் அறைக்கு நடுவில் வந்து நின்றான். அந்த இடத்தில் இருந்து பாண்டிய இளவரசனையும் எழுவரையும் ஒருசேர பார்க்க முடிந்தது. ‘‘இப்பொழுது தமிழகத்தின் நிலையை சொல்கிறேன்...’’
‘‘இராஜசிம்மரே... அதற்கு முன்னால் ஒன்று கேட்கலாமா..?’’ எழுவரில் ஒருவர் இடைவெட்டினார்.
‘‘கேளுங்கள்...’’

‘‘காந்தளூர் சாலை என்பது எங்கள் நாட்டில் படைகளுக்கு பயிற்சி அளிக்கும் கல்வி நிலையம் போன்றதா..?’’‘‘ஆம்...’’‘‘அதன் ஆச்சார்யார்தான் படைகளை எப்படி நடத்த வேண்டும் என வியூகம் அமைத்துக் கொடுத்திருக்கிறாரா..?’’
‘‘ம்...’’‘‘அவர் உங்கள் படைகளுக்கு தலைமை வகிப்பவரா..?’’‘‘இல்லை...’’‘‘அப்படியானால் அவர் வியூகம் அமைத்துக் கொடுத்து அதன்படி படைகளை நடத்தச் சொல்வது சரியா..?’’இராஜசிம்மனும் கோச்சடையன் இரணதீரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

எழுவரில் ஒருவர் தொடர்ந்தார். ‘‘எங்கள் நாட்டிலும் இப்படி தலைமைப் பயிற்சியாளர்கள் படை விஷயத்தில் மூக்கை நுழைத்திருக்கிறார்கள். அதனால் பல விபரீதங்கள் ஏற்பட்டுள்ளன. பதவியில் இல்லாமலேயே நாட்டின் அதிகாரங்களைத் தீர்மானிக்கும் சக்தியாக தலைமைப் பயிற்சியாளர்கள் உருவெடுப்பது சரியல்ல... இதை நீங்கள் அனுமதித்தால் பின்னால் மன்னராக யார் அமரவேண்டும் என்பதை அமைச்சரவை அல்ல...

தலைமைப் பயிற்சியாளர்கள்  முடிவு செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். சொல்வதற்கில்லை... இதற்காக அரச குடும்பத்து வாரிசுகளைக் கொலை செய்யும் அளவுக்குக் கூட அவர்கள் சென்றுவிடுவார்கள்... மிகைப்படுத்திச் சொல்வதாக நினைக்க வேண்டாம்... தாங் அரச குடும்பத்தில் அப்படி பல சம்பவங்கள் நடந்துள்ளன!’’

இராஜசிம்மனும் கோச்சடையன் இரணதீரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.‘‘உங்கள் எச்சரிக்கைக்கு நன்றி... பாண்டிய இளவரசரும் நானும் கவனமாக இருக்கிறோம்...’’ சொன்ன இராஜசிம்மன் நிமிர்ந்தான். ‘‘தமிழகத்தின் நிலையை இப்பொழுது சொல்கிறேன்... கவனமாகக் கேளுங்கள்...’’

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்