முதல்வராக மு.க.ஸ்டாலின் வர வேண்டும்! தீர்ப்பு எழுத தயாராகும் மக்கள்தமிழகத்தின் அடுத்த முதல்வராக யார் வர வேண்டுமென விரும்புகிறீர்கள்..? கடந்த மாதம் ஆங்கில மற்றும் தமிழ் ஊடகங்கள் நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் மக்கள் முன் வைக்கப்பட்ட பிரதான கேள்விகளில் ஒன்று இது.

இதற்கு பெரும்பான்மையானவர்கள் தந்த பதில்- மு.க.ஸ்டாலின்!ஆம். 2021 தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி ஸ்டாலின் தலைமையில் ஆட்சியை அமைக்கும் என்பதே கருத்துக் கணிப்புகளில் கிடைத்திருக்கும் தகவல்கள்.  முதலில் ‘டைம்ஸ் நவ்’ ஆங்கில செய்தி சேனல், ‘சி வோட்டர்’ நிறுவனத்துடன் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் பற்றி பார்ப்போம்.

கடந்த மார்ச் மாதம் 17ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடத்தப்பட்டிருக்கிறது இந்த கருத்துக் கணிப்பு. இதில், தமிழகம் முழுவதிலுமிருந்து 8 ஆயிரத்து 709 பேர் கலந்து கொண்டுள்ளனர்.  இதில் எவ்வளவு சதவீத வாக்குகளை ஒவ்வொரு கூட்டணியும் பெறும் என்கிற கேள்வியில், திமுக கூட்டணிக்கு 46% கிடைக்கும் என்றும், அதிமுக கூட்டணி 34.6% பெறும் என்றும் தெரிய வந்துள்ளது.

கடந்த 2016 தேர்தலில் திமுக கூட்டணிக்கு 39.4% பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்த முறை கூடுதலாக 6.6% அதிகரித்திருப்பது பெரிய வாக்கு வித்தியாசம் எனச் சுட்டிக் காட்டுகின்றனர் நிபுணர்கள். தவிர, அதிமுக கூட்டணியின் வாக்கு வங்கி கடந்த தேர்தலை விட மைனஸ் 9.1% ஆக குறைந்திருக்கிறது.

அடுத்ததாக, திமுக கூட்டணி எத்தனை இடங்களைக் கைப்பற்றும் என்கிற கேள்விக்கு 173 முதல் 181 இடங்கள் என கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. அதிமுக கூட்டணிக்கு 45 முதல் 53 இடங்கள் கிடைக்கலாம் என்கிறது கணிப்பு. தவிர, மக்கள் நீதி மய்யமும், அமமுகவும் ஒன்றிலிருந்து ஐந்து இடங்கள் பிடிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக, பாஜ தலைமையிலான மத்திய அரசின் செயல்பாடு திருப்தி அளிக்கிறதா என்கிற கேள்விக்கு 50% பேர் சிறிதும் திருப்தி இல்லை என்று பதிலளித்துள்ளனர். இதேபோல் மாநில அரசின் செயல்பாடுகள் திருப்தியாக உள்ளதா என்கிற கேள்விக்கு 38.8% பேர் சிறிதும் திருப்தி இல்லை என்றுள்ளனர்.

தொடர்ந்து முதல்வரின் செயல்பாடு திருப்தியளிக்கிறதா என்கிற கேள்விக்கு 36.51% பேர் சிறிதும் திருப்தியில்லை என்றே தெரிவித்துள்ளனர். இதில், ரொம்ப திருப்தி, ஓரளவு திருப்தி என்பதை விட சிறிதும் திருப்தி யில்லை என்கிற பதிலையே அதிகம் பேர் தெரிவித்திருப்பது கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.  இறுதியாக, முதல்வராக இருப்பதற்கு மிகவும் பொருத்தமான வேட்பாளர் யார் என்கிற கேள்விக்கு, மு.க.ஸ்டாலினுக்கு 43.1%, பேரும், எடப்பாடி பழனிச்சாமிக்கு 29.7% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதைப்போலவே, தமிழகத்தின் செய்தி சேனல்களில் ஒன்றான ‘புதிய தலைமுறை’ நடத்திய கருத்துக் கணிப்பும் திமுக கூட்டணியே வெற்றி வாகை சூடும் என்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் 18 முதல் மார்ச் 15ம் தேதி வரை இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தில் யாருக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்கிற கேள்விக்கு திமுக கூட்டணி 151 முதல் 158 இடங்களைப் பிடிக்கும் என்றும், அதிமுக கூட்டணி 76 முதல் 83 இடங்களைப் பெறும் என்றும் தெரிய வந்துள்ளது.

அடுத்ததாக, வரும் தேர்தலில் எந்த கட்சிக்கு வாக்களிப்பீர்கள் என்கிற கேள்விக்கு திமுக கூட்டணிக்கு 38.20% பேரும், அதிமுக கூட்டணிக்கு 28.48% பேரும், மநீம கூட்டணிக்கு 6.30% பேரும், நாம் தமிழர் கட்சிக்கு 4.84% பேரும், சசிகலா ஆதரவு கட்சிக்கு 1.09% பேரும் வாக்களிப்போம் என தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து தமிழ்நாட்டின் அடுத்த முதல்வராக யார் வர வேண்டும் என்கிற கேள்விக்கு 37.51% பேர் ஸ்டாலின் பெயரே முன்மொழிந்துள்ளனர். எடப்பாடி பழனிச்சாமிக்கு 28.33% பேரும், கமல்ஹாசனுக்கு 6.45% பேரும், சீமானுக்கு 4.93% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.இந்தத் தொலைக்காட்சிகள் நடத்திய கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணியே அமோக வெற்றி பெறும் என்பதும், மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவார் என்பதும் தெரிய வந்துள்ளன.

இதைப்போல கடந்த வாரம் ‘நக்கீரன்’ இதழ், ‘234 தொகுதிகளில் யார் முன்னிலை?’ என்ற கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது. இதில், திமுக 152 இடங்கள் முன்னிலை என்பதும், 41 இடங்கள் இழுபறியாக இருந்தாலும் அதிலும் திமுகவிற்கே அதிக வாய்ப்பிருப்பதாகவும் தெரிய வருகிறது. அதிமுக 39 இடங்கள் வரை பெறும் என்றும் அமமுக இரண்டு இடங்கள் பிடிக்கலாம் என்பதும் தெரிகிறது.   

‘‘இந்த கருத்துக் கணிப்பை ‘பண விநியோகத்துக்கு முன் கள நிலவரம்’னு சொல்லியே செய்திருக்கோம். ஏன்னா, இழுபறியான இடங்கள்ல பணத்தைக் கொடுத்து நிலைமையை மாற்றுவது உண்டு. அதை அடிப்படையா வச்சு பண்ணியிருக்கோம்.

அப்புறம், இது வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பிறகு, கிராமம், ஒன்றியம், நகரம்னு பல்வேறு இடங்கள்ல பல்வேறு தரப்பட்ட மக்களிடம் கேட்டு நடத்திய சர்வே. அந்தத் ெதாகுதியில் எந்த வேட்பாளர் முன்னிலையில் இருக்கார் என்பதே சாரம்...’’ என்றபடியே கருத்துக் கணிப்பு பற்றி பகிர்ந்தார் மூத்த பத்திரிகையாளரும், ‘நக்கீரன்’ இதழின் தலைமைப் பொறுப்பாசிரியருமான கோவி.லெனின்.   

‘‘கலைஞரும், ஜெயலலிதாவும் இல்லாத ஒரு தேர்தல்னு நினைக்கிறோம். ஆனா, இந்தப் பார்வையெல்லாம் ஊடகங்களிடமும், அரசியல் விமர்சகர்களிடமும்தான் இருக்கு. மக்கள் எப்பவும் கட்சிகளை கட்சிகளாகவேதான் பார்க்கிறாங்க. இதுல கலைஞருக்குப் பிறகு ஸ்டாலின் என்பது மக்கள் எதிர்பார்த்ததுதான். அதனால, அவங்களுக்கு ஆச்சரியம் எதுவும் ஏற்படல. 2009ல் கலைஞருக்கு முதுகில் ஆபரேஷன் நடந்தப்ப ஸ்டாலினே கட்சியை வழிநடத்தினார். பிறகு, 2017ல் செயல் தலைவரா நியமிக்கப்பட்டார். 2019ல் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றும் காட்டினார்.

இந்தத் தேர்தல் களத்துல முக்கியமான அம்சம்னு பார்த்தால் கட்சிகளைக் கடந்தும் ஸ்டாலின் மக்கள்கிட்ட சென்றடைந்திருக்கார் என்பதுதான். அதை ஓட்டாக மாற்றுவதிலேயே திமுகவின் வெற்றி இருக்கு. அதிமுகவைப் பொறுத்தவரை ஜெயலலிதா இல்லை என்றாலும் எடப்பாடி ஓரளவு செயல்பட்டார்னு சொல்லலாம். திமுக எதிர்ப்பு மனநிலை உள்ள வாக்காளர்களுக்கு ஒரு தலைவர் வேணும். அந்தவகையில் எடப்பாடி இருந்தார். ஆனா, ஓபிஎஸ் அணினு உட்கட்சிப் பூசல் இருந்திட்டே இருந்தது பெரிய மைனஸ்.

அப்புறம், இந்தத் தேர்தல்ல பாஜகவிற்கு எதிரான மனநிலை மக்கள்கிட்ட அதிகம் காணப்படுவதைப் பார்க்க முடியுது. இந்த எண்ணம் அதிமுககாரர்களிடமேகூட இருக்கு. ஜெயலலிதா இருக்கும்போது ‘மோடியா லேடியா’னு கேட்டாங்க. அப்படியான ஒரு கட்சிக்கு அடிபணிந்து நடப்பது சரியில்லனு அவங்க நினைக்கிறாங்க.

அதேநேரம் பாஜக வேட்பாளர்களும் ேமாடி படத்தைப் போட்டு ஓட்டு கேட்காமல் ஜெயலலிதாவின் படத்தைப் போட்டே கேட்குறாங்க. நிலைமை அப்படியிருக்கு. அடுத்து, ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு பிரச்னை இருக்கு. குறிப்பா, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாதது. அடுத்து, ஐந்தாண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடக்காதது. அதனால குடிநீர் வசதி கூட சரியா செய்யப்படல. நிர்வாக முடக்கமும், அலட்சியம் இருக்கிறதும், மக்களுக்கான அடிப்படைகள் நிறைவேறாததும் இந்த கணிப்புகளில் முக்கியமானதா இருந்துச்சு.  
 
அடுத்து, இளம் வாக்காளர்கள். இவங்க முதல்முறையா ஓட்டு போடுறதால தங்களின் ஓட்டு தமிழகத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கப் போகுதுனு நம்பிக்கை இருக்கும். இதுல மூணு வகை வாக்காளர்கள் இருக்காங்க. இருக்கிற கட்சிகள் எப்படி இருக்கு? அதுல எதை நாம் தேர்ந்தெடுக்கணும்னு நினைக்கிற இளம் வாக்காளர்கள் ஒரு தரப்பு. இன்னொரு தரப்பு, எல்லாவற்றையும் மாற்றணும்; இந்தக் கட்சிகள் எல்லாம் வேணாம்; புதுசா யாராவது வரணும்னு எதிர்பார்க்கிற வாக்காளர்கள்.

ஆனா, அந்த எதிர்பார்ப்பு உள்ளவங்களுக்கு ஏற்ப தலைவர்கள் உருவாகி இருக்காங்களா என்பது கேள்விதான். இதுதவிர, வழக்கமா திமுக குடும்பத்தைச் சேர்ந்தவங்க, அதிமுக குடும்பத்தைச் சேர்ந்தவங்கனு இருக்கிற இளம் வாக்காளர்கள். இவங்க வழக்கமா அந்தந்த கட்சிகளுக்கே தங்கள் ஓட்டுகளைப் போடுவாங்க. இந்தத் தேர்தல்ல பொதுவான இளம் வாக்காளர்களின் சாய்ஸ்னு பார்த்தால் திமுகவாவே இருக்கு.

பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக ஆதரவு அலையே அடிக்குது. திமுகவை ஆதரிக்கிறவர்களில் எண்பது சதவீதம் பேர் அந்தக் கட்சியின் தலைமை மேல் உள்ள நம்பிக்கையில்தான் ஆதரிக்கிறார்கள். அந்த அடிப்படையில் இந்தத் தேர்தலில் ஸ்டாலின் முன்னிலையில் இருக்கார்...’’ என்கிறார் கோவி.லெனின்.                  

பேராச்சி கண்ணன்