நான் - டி.இமான்சென்ற வாரத்திலே ஒருநாள் மதியத்துக்கு மேல அவ்ளோ போன் அழைப்புகள். அதிலே ஒரு கால் எடுத்து பேசினேன். ‘முதல்ல டிவி ஆன் பண்ணி பாருங்க’னு சொன்னாங்க. என்னவோ ஏதோனு நானும் டிவி பார்க்கறேன். தேசிய விருது அறிவிப்பு... சிறந்த இசையமைப்பாளர் டி.இமான் (‘விஸ்வாசம்’).
எனக்கு கண்ணு கலங்குது. என்ன செய்யறதுன்னு தெரியலை. அடுத்த கால் இயக்குநர் சிவாவுக்கு அடிச்சேன். ‘சார் நீங்க எங்க இருக்கீங்க...’ இந்தக் கேள்வி மட்டுமே. நேராக ‘அண்ணாத்த’ பட ஷூட். அங்க போனா நான் வர்றதுக்கு முன்பே கேக் வெட்டி, மைக்ல அறிவிச்சு கொண்டாடியிருக்காங்க. நான் போனதும் திரும்பவும் ஒரு கேக் கட்டிங்.

‘எதாவது ஒரு வேலை செய்யணும், ஆனால், அதுவும் இசை சார்ந்து இருக்கணும். நம்ம வாழ்க்கை இசையுடன்தான். இதை மட்டுமே மனசிலே வெச்சிட்டு வேலை செய்யறேன். அந்த அளவுக்கு இசை என் வாழ்க்கையிலே கலந்திருக்கு. நாலரை வயசுல ஆரம்பிச்ச இசைப்பயணம். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் என்னை சர்ச்சிலே கீபோர்டு வாசிக்க வைக்கணும்னு மட்டுமே குறிக்கோள். அதற்காக கீபோர்டு, ஆர்கன் இதெல்லாம் கத்துக்க ஆரம்பிச்சேன்.

அப்படி துவங்கிய இசைப்பயிற்சி ஒவ்வொரு கட்டமா நகர்ந்தது. 24 ஜனவரில பிறந்தேன். அப்பா, அம்மாவுக்கு திருமணம் ஆகி எட்டு வருடங்கள் கழிச்சு பிறந்தவன். அப்பா டேவிட் கிருபாகர தாஸ், டான் போஸ்கோ பள்ளியில ஹைஸ்கூல் தாவரவியல் டீச்சரா இருந்தார். அம்மா மஞ்சுளா டேவிட்.

அப்பாவுக்கு சொந்த ஊர் மதுரை மேலூர். ஒரு டிரங்க் பெட்டி எடுத்துட்டு சென்னை வந்தவர். ரொம்ப பின்தங்கிய குடும்பம். இப்பவும் ஞாபகம் இருக்கு.  ஓட்டு வீடு. மழை பெய்தா கரப்பான், தேள் எல்லாம் வரும். அதனாலயே அம்மா என்னை இரவெல்லாம் கண் முழிச்சி பார்த்துப்பாங்க.
வீட்டுக்கு நான் ஒரே பையன். ரொம்ப செல்லம். ஆனாலும் கண்டிப்புடனும் வளர்த்தாங்க. என் முழுப்பேரு டி.இமானுவேல் வசந்த் தினகரன். வீட்ல செல்லமா இமான், மான், மானு... இப்படிக் கூப்பிடுவாங்க.

எனக்குப் பிடிச்சதை செய்யலாம், என்ன வேணும்னாலும் படிக்கலாம். ஆனால், எல்லாம் அறம் சார்ந்து இருக்கானு மட்டும் பார்த்துக்கிட்டே இருப்பாங்க. ‘என்ன வேணா செய். ஆனால் நேர்மையா செய்’ இதுதான் அப்பா, அம்மா சொல்லிக்கொடுத்தது. அப்பாவுக்கு சங்கீதத்துல ஆர்வம் உண்டு. நாலரை வயசுல பியானோ கிளாஸுக்கு என்னை அனுப்பி வைச்சாங்க. அப்பா பெரிய படிப்பாளி. அதனாலயே என்னை அதிகம் படிக்கச் சொல்லி வற்புறுத்தாம பிடிச்சதை செய்யச் சொன்னார்.

என் முதல் குரு பிரேம்குமார் சத்யா. அடுத்து மிக முக்கிய குருநாதர் அப்துல்சத்தார் மாஸ்டர். அவர்கிட்ட வெஸ்டர்ன் கிளாசிகல் எட்டு வருடங்கள் கத்துக்கிட்டு எட்டு கிரேடு முடிச்சேன். இந்தியன் கிளாசிக்கலை மகாலட்சுமி மேடம் கத்துக்கொடுத்தாங்க, இந்துஸ்தானியை சேகர் மாஸ்டர்கிட்ட கத்துக்கிட்டேன். பின்னர்தான் ரிதம்ஸ்ல ஆர்வம் வந்தது. சிந்தாதிரிப்பேட்டைல சுரேஷ் மாஸ்டர்கிட்ட டிரம்ஸ் கத்துக்கிட்டேன்.

9வது படிக்கிறப்ப ரெக்கார்டிங் ஆர்ட்டிஸ்ட்டா ஆகிட்டேன். ஸ்கூல் லீவு விட்டா ‘குருதிப்புனல்’, ‘நம்மவர்’ படங்களுக்கு இசையமைச்ச மறைந்த இசையமைப்பாளர் மகேஷ்கிட்டயும், பின்னர் இசையமைப்பாளர் ஆதித்யன்கிட்டயும் கீ போர்டு பிளேயரா ஒர்க் பண்ணப் போயிடுவேன். சினிமா பாடல் துவங்கி, பின்னணி இசை வரை அத்தனையும் சொல்லிக் கொடுத்தவங்க இவங்க ரெண்டு பேர்தான்.

இந்த சமயத்துல ‘அருணா ரெக்கார்டு’ ஜார்ஜ் மகேஷ் சார் நட்பு கிடைச்சது. அவர் என்னை மியூசிக் ஆல்பம் பண்ண வச்சார். அப்புறம் ‘மேக்னா சவுண்ட்ஸ்’ சப்போர்ட்ல ‘டான்ஸ் பார்ட்டி’னு இன்னொரு ஆல்பம் செய்தேன். அந்த ஆல்பம்ல நான், தேவன், தேவி பிரசாத், யுகேந்திரன்னு பலரும் ஆளுக்கொரு பாடல் உருவாக்கினோம். அடுத்தும் மேக்னாவிற்கே ‘ஷம்மா’னு ஒரு ஆல்பம் செய்தேன். தமிழ்ல முதன் முதல்ல ஆல்பம் இசை அப்பதான் தலை தூக்கின நேரம். அந்த நேரம் சிடிக்கள் வர ஆரம்பிச்சது.

நான் போட்ட பாடல்களை எடுத்திட்டு பல கம்பெனிகளுக்கு ஏறி இறங்குவேன். அப்ப நான் பத்தாவது படிக்கிற பையன். அப்பாவுக்கு வேலை பிஸி. அதனால் பெரும்பாலும் அம்மாதான் கூட வருவாங்க. வாய்ப்புக்காக அப்படி அலைஞ்சேன். சில இடங்கள்ல காசு கூட வாங்கிட்டு ஏமாத்தினாங்க.

அப்பா என்ன கேட்டாலும் செய்வார். தன் சக்தியை மீறி எனக்கு அவ்வளவும் பார்த்துப் பார்த்து செய்தார். ஒரு கட்டத்திலே வீட்டில் இருக்கற நகையெல்லாம் கூட அடமானம் போக ஆரம்பிச்சது. இதுதான் எனக்கு மிகப்பெரிய உந்துசக்தியா மாறி என்னை கொஞ்சம் இறங்கி வேலை செய்ய வெச்சது.

இந்த நேரம்தான் குட்டிபத்மினி மேடமும், பிரபுநேபால் சாரும், ‘நாங்க தயாரிக்கிற படத்துக்கு மியூசிக் பண்றீங்களா’னு கேட்டாங்க. சந்தோஷமா ஓகே சொன்னேன். ஏதோ காரணம், பட வேலைகள் தள்ளிப்போச்சு. ஆனாலும் அவங்களுடைய ‘வைஷ்ணவி ஃபிலிம்ஸ்’ எடுத்த டிவி சீரியல்களுக்கு பின்னணி இசை அமைக்க ஆரம்பிச்சேன்.

அப்படித்தான் ‘கிருஷ்ணதாசி’ சீரியலுக்கு இசையமைச்சேன். சன் டிவில 7.30 மணி ஸ்லாட். எப்படியாவது சீரியல் ரீச் ஆகணும். அதை மனசிலே வெச்சிட்டு பாடல் ஒண்ணு செய்யலாம்னு கேட்டாங்க. ‘சினிமா பண்ணும்போது இமான்னு பேர் வைச்சுக்கோ. சின்னத்திரைக்கு வேற பெயர் யோசிக்கலாம்’னு சொன்னாங்க.

அதை ஏத்துக்கிட்டு ‘கரன்’னு வைச்சுக்கிட்டேன். ஆனா என்ன நினைச்சாங்களோ ‘கிருஷ்ணதாசி’ சீரியல்ல டி.இமான்னே போடலாம்னு சொன்னாங்க. அதற்கும் ஓகே சொன்னேன். அடுத்து ‘காதலே சுவாசம்’ படம் ஆரம்பிச்சது. அப்ப நான் +2 பொதுத்தேர்வு ஒரு பக்கம், வேலை ஒரு பக்கம்னு பிஸியா ஓடிட்டு இருந்தேன். ஸ்கூல்ல என்னைப் புரிஞ்சிக்கிட்டு கேப் கிடைக்கும்போதெல்லாம் பின்னாடி பெஞ்ச்லே தூங்கிக்க சொல்வாங்க.

ஒரு பக்கம் ‘காதலே சுவாசம்’ படம், இன்னொரு பக்கம் ‘மந்திர வாசல்’, ‘கோலங்கள்’னு 15க்கும் மேலான சீரியல்கள். படம் வெளியாக தாமதமாச்சு. அதற்கு முன்னாடி ஒரு ஆடியோ ரிலீஸ் வெச்சிக்கலாம்னு ஒரு நிகழ்ச்சி திட்டமிட்டாங்க. அதிலேதான் மறைந்த ஜிவி ஃபிலிம்ஸ் ஜி.வெங்கடேஸ்வரன் சாரை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சது.

பாட்டு அவருக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. ஆபீஸ்க்கு வரச் சொல்லி, என் சிடியை இன்னொரு இடம் சொல்லி அங்கே போய் காட்டச் சொன்னார். அங்கே எஸ்.ஏ.சந்திரசேகர் சார், அவரைத் தொடர்ந்து விஜய் சார் வர்றாங்க. கனவு மாதிரி இருந்துச்சு. அந்தப் படம்தான் ‘தமிழன்.
அப்ப நான் பச்சையப்பாஸ்ல பி.ஏ ஆங்கிலம் முதல் ஆண்டு படிச்சிட்டு இருக்கேன். இயக்குநர் மஜீத் சார், தயாரிப்பாளர் எஸ்.ஏ.சந்திரசேகர் சார், விஜய் சார்னு எல்லாரும் சிடியைக் கேட்டாங்க.

‘அறிமுகம் டி.இமான்’னு டைட்டில் கார்டில் போடப்பட்ட படமான ‘காதலே சுவாசம்’ இப்ப வரை ரிலீஸ் ஆகாமலே இருக்கு. ‘தமிழன்’ படம் ரிலீசான நேரத்துல ‘ஜெமினி’ படம் வெளியாகி எங்க பார்த்தாலும் ‘ஓ போடு’ ஓடிட்டு இருக்கு. பெரிய வாய்ப்பு கிடைச்சும், ‘தமிழன்’ல நான் சின்சியரா உழைச்சும் பெரிதா பூஸ்ட் ஆகாத நிலை.  

‘தமிழன்’ பட ரெக்கார்டிங் இப்போதைய ‘லீ மேஜிக் லேன் டர்ன்’ ஆக இருக்கற அப்போதைய ‘ஃபோர் ஃபிரேம்ஸி'ல் நடந்துச்சு. அங்க சவுண்ட் என்ஜினியர் தீபன் சேட்டர்ஜி நட்பு கிடைச்சது. இந்தியில ‘ஷோலே’, தெலுங்கில் ‘சத்யா’னு பல படங்கள்ல ஒர்க் பண்ணினவர். அவர் மூலம் ‘க்வாவிஷ்’ இந்திப் பட வாய்ப்பு அமைஞ்சது. அடுத்தடுத்து ‘சேனா’, ‘விசில்’னு கிராஃப் ஏறுது. பட்டி தொட்டி எங்கும் ‘அழகிய அசுரா...’ ஹிட்.

இதற்கிடையில் ‘சேனா’ படத்திலே ஒரு பாடல் ‘தீராதது காதல்...’. இந்தப் பாடலை ஒரு டீக்கடைக்காரர் காலை தொடங்கி கடை மூடுகிற வரை தொடர்ச்சியா போட்டுக் கேட்பாராம். அந்த டீக் கடையில சுந்தர் சி சார் அடிக்கடி டீ சாப்பிட, ‘என்னப்பா இந்தாளு இந்தப் பாட்டை விடாம கேட்கறார்’னு கேட்டு என்னை வந்து சந்திச்சார். ‘கிரி’ பட வாய்ப்பு கொடுத்தார். அந்த டீக்கடைக்காரர் எங்கிருந்தாலும் நல்லா இருக்கணும்.  ‘கிரி’ படத்துல பாட்டு, காமெடி எல்லாம் ஹிட். எனக்கு அடையாளம் கிடைச்சது. அர்ஜுன் சார் கூட நிறைய படங்கள் செய்தேன். எனக்கு மெலடி பாடல்கள் பண்ணணும்னு ஆசை. அதற்கான வாய்ப்பே இல்லாம வெறும் கமர்ஷியல் பீட் பாடல்கள் செய்திட்டு இருந்தேன்.

இந்த நேரத்துலதான் ‘மைனா’ வழியா எனக்கு லக் அடிச்சது. என் வாழ்க்கையையும் இந்தப் படமே மாத்தினது. ஆசைப்பட்ட மெலடியை தொடர்ந்து போடறா மாதிரி கரியர் மாறுச்சு.‘கும்கி’ என்னையே எனக்கு அடையாளம் காட்டி தமிழ் நாடு விருது துவங்கி பல விருதுகளைக் கொண்டு வந்து சேர்த்துச்சு. எனக்குக் கிடைச்ச இயக்குநர்கள்  பிரபு சாலமன் சார், எழில் சார், சிவா சார், சுசீந்திரன் சார், பொன்ராம் சார் உட்பட தமிழ் சினிமா இயக்குநர்கள் அத்தனை பேரும் முழு சுதந்திரம் கொடுத்தாங்க. வித்யாசமான கதைக்களங்கள்ல வேலை செய்ய ஆரம்பிச்சேன்.

குறிப்பா, உறவுகளுக்குப் பாட்டமைக்க ஆரம்பிச்சேன். அப்பா - பையன், அக்கா - தம்பி, அப்பா - மகள், தோழன் - தோழினு ஆரம்பிச்சு என் தனிமையும் எனக்கு உறவுதான் என்கிற பாணியில் ‘என் இனிய தனிமையே’ (‘டெடி’) வரை என் பயணம் சிறக்க  ஆரம்பிச்சிடுச்சு.
‘விஸ்வாசம்’ பாடலான ‘கண்ணான கண்ணே...’ எனக்கு மட்டுமில்ல... பல குடும்பங்கள், உறவுகளுக்கு நெருக்கமா இருப்பதை பார்க்கறேன். சந்தோஷமா இருக்கு. கமர்ஷியல் படங்களுக்கு தேசிய விருதுகள் எல்லாம் கிடைக்காது என்கிற பிம்பத்தை இந்தப் பாடல் உடைச்சிருக்கு.

‘அண்ணாத்த’, ‘லாபம்’னு என் இசைல படங்கள் வெளியாக இப்ப வரிசையா காத்துக்கிட்டு இருக்கு. ஒரு காலத்திலே அம்மாவுடைய மருத்துவ செலவுக்குக் கூட வருமானம் இல்லாம இருந்தவன் நான். இன்னைக்கு பல ஏழைக் குழந்தைகள் கல்விக்கு உதவும் வகைல ஒரு தொண்டு நிறுவனம் ஆரம்பிக்கற முயற்சிகள்ல இருக்கேன். ஆமா, என்னுடைய எதிர்காலத் திட்டம் அதுதான்.திறமை எந்த அளவுக்கு இருக்கோ அதே அளவுக்கு உயர உயர பணிவும் இருக்கணும்.

அதேபோல் தேவையில்லாம எல்லாத்துக்கும் தலையாட்டுறதையும் செய்யக்கூடாது. நேர்மையா, நியாயமா உங்க திறமைய நிரூபிங்க. கூடவே பணிவையும் வளர்த்துக்கிட்டா தாமதமானாலும் வெற்றி உங்களை வந்தடையும். அதுக்கு நானே சான்று.

செய்தி: ஷாலினி நியூட்டன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்