தமிழக வளர்ச்சிக்கு இலவசம் அவசியம்!



சமீபத்தில் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில், ‘தமிழகத்தின் தனித்துவமான வளர்ச்சிக்கு பேராபத்து’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியானது. சென்னை வளர்ச்சி ஆய்வுக்கான நிறுவனத்தின் (எம்.ஐ.டி.எஸ்) பேராசிரி யர்களான கலையரசனும் விஜயபாஸ்கரும் சேர்ந்து இதை எழுதியிருந்தனர். தேர்தல் சமயத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது இந்தக் கட்டுரை.

 ‘‘இந்திய அளவிலான பொருளாதார வளர்ச்சியில், பிரதேச ரீதியாகவும் சமூக அளவிலும் பெரும் இடைவெளி நிலவுகிறது. வளர்ச்சியுற்றிருக்கும் பிரதேசமும் சில துறைகளில்தான் வளர்ந்திருக்கிறது. உதாரணமாக இமாச்சலப் பிரதேசமும், கேரளாவும் சமூக மட்டத்திலான மனிதவளக் குறியீட்டில் ஏற்றம் பெற்றிருக்கின்றன. ஆனால், அவற்றிடம் உள்ளூர் பொருளாதார வளர்ச்சி இல்லை.

அதேபோல பொருளாதாரத்தில் வளர்ச்சியுற்றிருக்கும் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் போன்ற மாநிலங்கள் மனிதவளக் குறியீட்டில் பின்தங்கியுள்ளன. ஆனால், இந்த இரண்டிலும் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. காரணம், திராவிட அரசியல் தமிழகத்தில் செயல்படுத்திய இருவிதமான அரசியல் வியூகங்கள்...’’ என்று ஆரம்பிக்கும் ஆய்வாளர்கள் இந்த இருவேறு வியூகங்களையும் விளக்குகிறார்கள்.

‘‘பொருளாதார வெகு மக்களியமும் (இதை பாப்புலர் என்று வரையறுக்கிறார்கள் ஆய்வாளர்கள்) சமூக வெகு மக்களியமும்தான் அந்த இரண்டு வியூகங்கள். சமூகத்தின் சில குழுக்களின் உரிமை சார்ந்த பிரச்னைகளுக்குத் திட்டங்களைக் கொண்டுவருவது சமூக வெகு மக்களியம்.
உதாரணத்துக்கு நிலச்சீர்திருத்தம், பெண்களுக்கு சொத்துரிமையில் பங்கு போன்ற நீண்ட காலத் திட்டங்கள். பொருளாதார வெகு மக்களியம் என்பது தேர்தல் காலங்களில் அதிகமாக அறிமுகப்படுத்தப்பட்டாலும் நீண்ட காலத்துக்கான மனிதவளக் குறியீடுகளை அடைவது. அத்துடன் அன்றாடம் தேவைப்படும் பொருள் ரீதியான அனுகூலங்களை மக்களுக்கு பகிர்ந்தளிப்பது.

உதாரணமாக மதிய உணவுத் திட்டம், கல்வியில் மானியம், பொதுவினியோகத் திட்டத்தில் குறைந்த விலையில் அரிசி போன்றவை...’’ என்கிற ஆய்வாளர்கள், ‘‘கடந்த 50 ஆண்டுகாலமாக திராவிட ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட இந்த இருவேறு வகைத் திட்டங்களால்தான் தமிழகம் முன்னேறியிருக்கிறது. குறிப்பாக மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்புகளில் மற்ற மாநிலங்களைவிட வளர்ச்சியுற்றிருக்கிறது.

ஆனால், கடந்த 15 வருடங்களாக மத்திய அரசின் கீழ் இயங்கவேண்டியுள்ள மாநிலங்களுக்கு பெரிய சிக்கல் எழுந்துள்ளது. நீட், வேளாண் சட்டங்கள், இடஒதுக்கீடு, வேலைவாய்ப்புகளில் நெருக்கடிகளைக் கொடுக்கும் மத்திய அரசின் திட்டங்களால் தமிழகத்தின் சமூக வெகு மக்களியத்துக்குப் பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சமூக வெகு மக்களியத்துக்கு நெருக்கடி வரும்போது பொருளாதார வெகு மக்களியத்தின் சாரமான இலவசங்களால் மனித
வளக் குறியீடுகளில் ஏற்றங்களைக் கொண்டுவரமுடியாது...’’ என்று வாதிடுகிறார்கள்.

ஆனால், இந்த தேர்தல் பிரசாரத்தில் சீமான், கமல் போன்றவர்கள் இலவசத்துக்கு எதிராகப்பேசிவருகிறார்கள். இவர்களின் கருத்துக்கு எதிராக  கட்டுரையாளர்கள் பேசுகின்றனர். இச்சூழலில் விஜய பாஸ்கரை சந்தித்தோம். ‘‘தமிழகம் சந்தித்துக்கொண்டிருக்கும் நெருக்கடியில் இலவசம் சிறந்தது...’’ என அழுத்தம்திருத்தமாகச் சொன்னபடி விஜயபாஸ்கர் ஆரம்பித்தார்.

‘‘சாதிகளால் ஏற்றத்தாழ்வுள்ள சமூகமாகத் தமிழகம் பிளவுண்டிருந்ததை திராவிட இயக்கம் கருத்தில் கொண்டது. இதை சரிசெய்ய அதிகமாக முனைப்பு காட்டியது. உதாரணமாக திராவிட பாரம்பரியம் உள்ள ஜஸ்டிஸ் கட்சியின் ஆட்சியில்தான் மதிய உணவு, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு விடுதி போன்ற திட்டங்கள் அறிமுகமானது.

இந்திய அளவில் பொருளாதாரத் திட்டங்கள் மேட்டுக்குடி பார்வையில்தான் உள்ளது. கல்வி என்றால் உயர்கல்வி, மருத்துவம் என்றால் சிகிச்சைக்கு முன்னுரிமை தரப்பட்டது. ஆனால், திராவிட ஆட்சியில் கல்வியில் ஆரம்பக் கல்வி, மருத்துவத்தில் ‘வரும்முன் காப்போம்’ எனும் தடுப்பு மருத்துவம் பின்பற்றப்பட்டது. இவைபோன்ற சமூகத் திட்டங்களால்தான் தமிழகத்தில் ஏற்றத்தாழ்வு குறைந்தது...’’ என்கிற விஜயபாஸ்கர் மேலும் சில சமூகத் திட்டங்கள் பற்றி விளக்கினார்.

‘‘ஆரம்ப சுகாதார நிலையங்கள், இடஒதுக்கீடு போன்றவை மருத்துவத்திலும், கல்வியிலும் முன்னேறிய மாநிலமாக தமிழகத்தை மாற்ற உதவியது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்துகளை இலவசமாக வழங்கியதால்தான் தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள சமூகம் மருத்துவத்துக்காக சொந்த பாக்கெட்டில் இருந்து செலவழிக்க வேண்டிய நிலை உருவாகவில்லை.

அதேபோல கல்வியில் ஒடுக்கப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கியதால்தான் தொழிற்கல்வியைக் கற்றுக்கொண்டு வந்த தொழில் முனைவோர் பெரும் தொகையாக தமிழகத்திலிருந்து வெளிவந்தனர்...’’ என்கிற விஜயபாஸ்கரிடம், ‘தமிழகம் பலவற்றில் சறுக்கியிருப்பதற்கான காரணம் என்ன..?’ என்றோம்.

‘‘இது உலகளவில் ஏற்பட்ட மாற்றத்தால் நிகழ்ந்தது. உதாரணமாக 90களில் ஏற்பட்ட திறந்த பொருளாதாரம். தமிழகம் எங்கும் தனியார் கல்வி நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகள் கோலோச்சிய காலம் இது. ஆனாலும் அரசியல் இடையீடுகள் தங்கள் திட்டங்களை மேலும் கூர்மைப்படுத்தியிருக்க வேண்டும். தவிர, அரசியல் காரணங்களுக்காக பல பொருளாதாரத் திட்டங்கள், சமூகத் திட்டங்கள் தனியாருக்குச் செல்ல ஆரம்பித்தது.

எம்ஜிஆர் காலத்தில் கல்வித் தந்தைகள் உருவானதை இந்த விஷயத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இன்றைய தேதியில் கல்வியைப் பொறுத்தளவில் தமிழகம் மோசமாக இருந்தாலும் தனியாருக்குச் சளைத்தது அல்ல. கடந்த 15 வருடங்களாக மாநில அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசின் திட்டங்கள் மூலம் ஆபத்து வந்திருக்கிறது என்பதுதான் நிதர்சனம்...’’ என்றவரிடம், ‘பொருளாதாரத் திட்டங்களுடன் கைகோர்த்து வெற்றியை ஈட்டித்தந்த நலத்திட்டங்களை சில பிரிவினர் தவறாகச்சொல்வதற்குக் காரணம் என்ன..?’ என்று கேட்டோம்.

‘‘இது ஒரு மேட்டுக்குடி, ஆதிக்க ஜாதி, படித்தவர்கள் சொல்லும் குற்றச்சாட்டு. ஆனால், அடித்தட்டு மக்கள் இன்னும் இலவசங்களை எதிர்பார்க்கிறார்கள். ஆனால், வெறும் இலவசம் ஒரு சமூகத்தை உயர்த்தாது. மனித வளம், பொருளாதார வளம் இரண்டும் சேர்ந்தால்தான் ஏற்றத்தாழ்வுகள் குறைந்து ஒரு சமத்துவமான சமூகம் உருவாகும். சமூகத் திட்டங்கள் இல்லாமல் வெறும் நலத்திட்டங்கள் ஓரளவுதான் ஏற்றத்தாழ்வைச்
சமாளிக்கும்.  

இன்றைய நிலையில் தமிழகம் உட்பட இந்தியாவில் பெரும் நெருக்கடி உள்ளது. இதைக் கருத்தில்கொண்டுதான் மாதந்தோறும் அடிப்படை வருமானம் போன்ற விஷயங்களைப் பொருளாதார வல்லுனர்கள் கூறிவந்தார்கள். ஆனால் தமிழகத்தில் சீமான், கமல் போன்றவர்கள் மக்களுக்கு ‘மீன் கொடுக்காதீர்கள்… நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீன்பிடிக்கக் கற்றுக்கொடுப்போம்’ என்று பிரசாரம் செய்துவருகிறார்கள். இன்றைய தேதியில் பசியாற மீன கொடுப்பதே சரியான தீர்வாக இருக்கும்.

ஆனால், மீன் கொடுப்பது மட்டுமே நீண்ட காலப் பிரச்சனைகளைத் தீர்க்காது. சமூகப் பிரச்னைகளுக்கு விடிவு காலம் ஏற்படும்போதுதான் இலவசம் என்பது காணாமல்போகும்...’’ என்று முடித்தார் விஜயபாஸ்கர்.

டி.ரஞ்சித்