2020 ல் அமைச்சர் கண்ட கனவு!ஆளும் கட்சித் தலைமையகம்.செய்தியாளர் சந்திப்பு. டிவி சானல்களின் இலச்சினைகள் கூடிய மைக்குகள் மண்டை மண்டையாகப் பூத்திருந்தன.அமைச்சர் நாகராஜசோழன் வெளிப்பட்டார். தலையின் முக்கால்பகுதி வழுக்கையாய் இருந்தது. பின்னந்தலையிலும் இருபக்கவாட்டிலும் இருந்த கேசத்தை டை அடித்திருந்தார். மேலுதட்டில்ஐப்ரோவால் மீசை வரைந்திருந்தார்.

மினிஸ்டர் ஒயிட் சட்டையும் வேட்டியும் பட்டாபட்டி ட்ரவுசரும் டயர்செருப்பும் அணிந்திருந்தார். சட்டைப்பையில், மறைந்த அவரது கட்சித்தலைவி தெய்வநாயகி புகைப்படம் சிரித்தது. அரைலிட்டர் சென்ட் அடித்திருந்தார்.செய்தியாளர்கள் கேள்விகள் கேட்க ஆரம்பித்தனர்.
“கிசினியும் விமலும் வருகின்ற சட்டசபைத் தேர்தலில் கூட்டு சேர்ந்து நின்றால் உங்க கட்சி பரிதாபமாக தோற்றுப்போகும்; 234 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும் என அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்களே... அதுபற்றி உங்க கருத்து என்ன?”

“கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானமேறி வைகுண்டம் போனானாம் என்பர். கிசினியும் விமலும் மீடியாவால் ஊதி பெருக்கப்பட்ட பலூன்கள். தேர்தலில் அப்பளம் போல நொறுக்கிக் காட்டுவோம்!”“உங்களுக்கும் மத்தியில் ஆளும் கிஜேபிக்கும் ரகசியஉறவு தொடர்கிறது என்கிறார்களே...”“அயல் ஆணை கல்யாணம் பண்ணிக் கொண்டாலும் ஒரு பெண்ணுக்கு தனது அத்தைப்பையன் மீது தனிப் பாசம் இருக்கும் அல்லவா? அந்த பாசம்தான் எங்களுக்கும் கிஜேபிக்கும்!”“கிர்லைட் ஆலைக்கு உங்க அரசுதான் அனுமதி கொடுத்ததாக சொல்கிறார்களே...”

“உண்மைய சொல்லணும்னா ஆங்கிலேயர் அரசுதான் கிர்லைட் ஆலைக்கு மொதமொத அனுமதி குடுத்தது... நாங்க அல்ல...”அடுத்த அரைமணிநேரத்தில் செய்தியாளர் சந்திப்பு முடிந்தது.தனது ஆடி காரில் ஏறி அமர்ந்தார் நாகராஜசோழன். “பண்ணை வீட்டுக்கு வண்டிய விடுங்கப்பா...”பத்து ஏக்கர் விஸ்தீரணத்தில் பணப்பயிர்கள் பயிரிடப்பட்டிருந்தன. பண்ணைக்கு நடுவே 3000 சதுர அடியில் ஒரு பண்ணை வீடு. பண்ணை வீட்டின் உச்சியில் டிஷ் ஆன்ட்டெனா உயர்ந்திருந்தது.

நாற்பதுக்கும் மேற்பட்ட வான்கோழிகள் வீட்டைச் சுற்றி மேய்ந்து கொண்டிருந்தன.போர்ட்டிகோவில் காரை நிறுத்தி இறங்கினார் நாகராஜசோழன். சோழனைப் பார்க்க நாற்பதுக்கும் மேற்பட்டோர் சூட்கேஸ்களுடன் நின்றிருந்தனர்.கூழைக்கும்பிடுகளைப் பெற்றுக்கொண்டு பதிலுக்கு மையமாய் தலையசைத்தார் சோழன்.அந்தரங்கக் காரியதரிசியை அழைத்தார். “வந்தவன்ககிட்ட தகவல் குறிப்புகளையும் பணத்தையும் வாங்கிக்க. எவனாவது ஸ்பை கேமிரா கொண்டு வந்திருக்கப் போறான்... வந்தவன்களை தரவ்வா செக் பண்ணிட்டு டீல் பேசு!”“சரிங்கய்யா!”

“வந்திருக்கற சூட்கேஸ்கள்ல ஒண்ணு ரெண்டை ஆட்டைய போட்ராதே...”
“உங்களைப் பாத்துதான் பணம் குடுப்பேன்னு வந்தவன்ல யாராவது அடம்
பிடிச்சா?”“அவனை மட்டும் வடிகட்டி என் ரூமுக்குள்ளஅனுப்பு!”அறைக்குள் போய் ஆடை மாற்றிக்கொண்டார் நாகராஜசோழன். “ட்ராமால நடிச்சிட்டு வந்து வேஷத்தை கலைக்கிற மாதிரி இருக்கு என் நிலை...”

சோழனின் ஜால்ரா, “அய்யா இதுக்கே அலுத்துக்கிட்டா எப்படி? எலக்‌ஷன்ல நம்ம கட்சி ஜெயிச்சு நீங்கதான் முதலமைச்சர் ஆகப் போறீங்க!”“இந்த வார்த்தையைக் கேட்டா முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் பேயறைஞ்ச மாதிரி ஆய்டுவாங்க... விடு... எலக்‌ஷன்ல ஜெயிக்கும்போது பாத்துக்கலாம்!”

மேஜைக்கு பிளாக்லேபிள் விஸ்கி, சோடா, மினரல் வாட்டர், கொதிக்கும் அயிட்டங்கள் வந்து சேர்ந்தன.முதல் பெக்கை அப்படியே வாய்க்குள் கவிழ்த்தார்.அந்தரங்கக் காரியதரிசி பனிரெண்டு சூட்கேஸ்களுடன் வந்து சேர்ந்தான். “இன்றைய மொத்த வசூல் ஆறேகால் கோடி. ட்ரான்ஸ்ஃபர், பர்ச்சேஸ்னு பலவிதமா ஆப்ளிகேஷன்கள்!”“பீரோவுல வச்சு பூட்டி சாவியைக் கொடு!” கொடுத்தான்.

“நடிகை ஜிகினாஸ்ரீயை கூட்டி வரச் சொல்லியிருந்தேனே... வந்திட்டாளா?”
“வந்துகிட்டே இருக்காங்க அய்யா!”நறுமணத்துடன் வந்து சேர்ந்தாள் ஜிகினாஸ்ரீ. தமிழில் பத்து படங்கள் வெளியாகின்றன என்றால் அதில் எட்டு படங்களில் அயிட்டம் டான்ஸ் ஆடுபவள் ஜிகினாஸ்ரீ. சன்னி லியோனின் தமிழ்ப் பதிப்பு.

படுக்கையறைக்குள் நடந்தார் நாகராஜசோழன். அறைக்குள் இசையை ஓடவிட்டு குத்து டான்ஸ் ஆடினாள் ஜிகினாஸ்ரீ.பட்டாபட்டி ட்ரவுசருடன் ஆடினார் சோழன்.எல்லாம் முடிந்து ஜிகினாஸ்ரீயைக் கட்டிப் பிடித்துக் கொண்டு தூங்கினார் நாகராஜசோழன்.இரவு இரண்டுமணிக்கு பாதி போதை கலைந்திருந்த நிலையில் சோழனுக்கு ஒரு கனவு வந்தது.“அமாவாசை!’’ யாரோ கூப்பிட்டனர்.

மீண்டும் மீண்டும் அழைத்தபின் வந்த உருவம் நாகராஜசோழனை ஒரு மிதி மிதித்தது. “ஒழுங்கா கூப்ட்டா எந்திரிக்க மாட்டியா?”எழுந்த நா.ரா.சோழன் விக்கித்தான். எதிரே,  இறந்துபோன அவரது கட்சித்தலைவி தெய்வநாயகி நின்றிருந்தார்.
‘‘என்னைய யாருன்னு தெரியுதா? இல்ல அதிகார போதைல மறந்துட்டியா?”
“அம்மா! உங்களை மறப்போமா?”

“நடிக்காத... உங்களை எல்லாம் நான் ஆட்சியில் இருந்தப்ப எப்டி வச்சிருந்தேன்... பரமார்த்த குருவுக்கு அஞ்சு முட்டாள் சீடர்கள் மாதிரி எனக்கு இருபத்தியைஞ்சு அமைச்சர்கள்... ஒருத்தர் மூஞ்சியாவது மீடியாவுக்கு தெரியுமா? யாராவது தனியா மீடியாவுக்கு குரல் கொடுக்க முடியுமா? அமாவாசை வந்தா உஷ் பௌர்ணமி வந்தா இஷ்னுல அமைச்சர்களை மாத்திக்கிட்டு இருந்தேன்.

பொட்டுப்பூச்சியா முதுகெலும்பில்லாத கொத்தடிமைகளா இருந்த நீங்க எல்லாம் என் மரணத்துக்குப் பிறகு தனித் தனியா ஆட்டம் போடுறீங்க... ஒரு அமைச்சர் ஓசோன் ஓட்டையை தெர்மாகோல் வச்சு அடைக்கலாம்னு ஐடியா குடுக்கிறான்... இன்னொரு அமைச்சர் தன்னோட செருப்பை ஒரு பழங்குடியின சிறுவனை விட்டு கழட்டச் சொல்றான்!”

“அதெல்லாம் எதிர்க்கட்சிக்காரன் கிளப்பிவிடுற புரளி அம்மா!”தெய்வநாயகி எட்டி ஒரு அறை அறைந்தார். கன்னத்தைப் பொத்திக்கொண்டார் நா.ரா.சோழன்“அமாவாசை! எதுக்கெடுத்தாலும் எங்க ஆட்சி அம்மா ஆட்சி அம்மா ஆட்சின்னு ஓலமிடுறீங்களே... எனக்கே என் ஆட்சி பத்தி நல்ல அபிப்ராயம் இல்லை... மக்களையும் தமிழ்நாட்டையும் குட்டிச்சுவராக்கினது நான்தான்... என் ஆட்சி மோசம்னா உங்க ஆட்சி படுபடுமோசம்... ஆட்சி அதிகாரத்தை நீங்க எடுத்துக்கிட்டு தைய்யாதக்கான்னு ஆடினா எப்படி?”
“ஹிஹி!”

“அசடு வழியாதே!’’ மீண்டும் ஒரு அறை விட்டார் தெய்வநாயகி.“அடிக்காதீங்கம்மா... காது ஙொய்னுது!”“மத்திய அரசு கையைப் பிடிக்கச் சொன்னா பாஞ்சு காலைப் பிடிக்கிறீங்களே... இது நியாயமா? இதுக்கு பதிலா சட்டசபையைக் கலைச்சிட்டு புதுசா நீங்க தேர்தலை சந்திக்கலாமே...”“இருநூத்திமுப்பத்தி நாலு தொகுதிகள்லயும் டெபாசிட் போக வழி சொல்றீங்களே...” முணுமுணுத்தார் நாகராஜசோழன்.

“என்ன வாய்க்குள்ளயே முனங்கிற!” நங்கென்று தலையில் ஒரு குட்டு வைத்தார் தெய்வநாயகி. துள்ளித்துடித்தார் நாகராஜசோழன்.“இனி நீங்க என்ன செய்யணும்னு தெரியுமா அமாவாசை? ஆளாளுக்கு கருத்துகந்தசாமி ஆகாதிங்க. லஞ்சம் வாங்காதிங்க. மத்திய அரசுக்கு அடிமையாய் இராது, உணவு பாதுகாப்பு சட்டத்திற்கு, நியூட்ரினோ திட்டத்திற்கு, கெய்ல் எரிவாயு திட்டத்திற்கு, ஹைட் ரோகார்பன் திட்டத்திற்கு, புதிய கல்விக் கொள்கைக்கு, முத்தலாக் சட்டத்திற்கு, உயர்சாதி வகுப்பினருக்கான பத்து சதவீத ஒதுக்கீட்டுக்கு, காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு, தேசிய மின்கொள்கைக்கு, தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டத்திற்கு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவியுங்கள். நீர் மேலாண்மை நிர்வாகம் செய்யுங்கள். தமிழ்நாட்டில் எங்கு காற்றும்
நிலத்தடி நீரும் மாசுபடுதோ அங்கெல்லாம் தயவு தாட்சண்யம் இல்லாம தடை செய்யுங்க.

எதற்கெடுத்தாலும் முந்தைய ஆட்சி மீது பழி போடாதிங்க. தவறு செய்தால் வெளிப்படையா மன்னிப்பு கேளுங்க. மொத்தத்துல தமிழ்நாட்டை சுடுகாடாக்காம பாத்துக்கங்க!” சொல்லிவிட்டு நாகராஜசோழனை மொத்துமொத்து என்று மொத்தி எடுத்தார் தெய்வநாயகி.
கனவு அறுபட்டது. நாகராஜசோழன் விருட்டென்று படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தார். கனவில் அடிபட்ட இடங்கள் வலித்தன.விடியவிடிய கொட்டகொட்ட முழித்திருந்தார் சோழன். விடியற்காலை.

கைபேசி எடுத்து சக அமைச்சரின் கைபேசியை தொடர்பினார் நாகராஜசோழன்.“பொதிகைநிலவன்! அந்த குண்டம்மா தெய்வநாயகி என் கனவுல வந்து என்னை விளாசு விளாசுன்னு விளாசி எடுத்திருச்சு!”“உன்னையுமா? என் கனவுலயும் தெய்வநாயகி வந்து லெப்ட்ரைட் குடுத்துச்சு!”கான்ஃபரன்ஸ் காலில் அனைத்து அமைச்சர்களும் ஒப்பாரி வைத்தனர்.

“என் கனவுலயும் வந்து என் பெண்டை கழட்டிருச்சு!”“என் கனவுலயும் வந்து எனக்கு கும்மாங்குத்து விட்ருச்சு தெய்வநாயகி!”“என் டங்குவார் அந்து போச்சு!”“வடிவேலுவை முட்டுசந்துல வச்சு சாத்துனமாதிரி சாத்துச்சு என்னை அந்த தெய்வநாயகி!”நாகராஜசோழன் குரலை உயர்த்தினார். “பேசாம நாமல்லாம் திருந்திருவோமா?”“நல்லா கதையை கெடுத்த போ... எனக்கு கேரள நம்பூதிரி ஒருத்தரை தெரியும்... தெய்வநாயகி நம்ம கனவுகள்ல வந்து படுத்தாம இருக்க ஒரு பரிகார யாகம் நடத்திரலாம்...”யாகம் தடபுடலாய் நடந்தது.

பத்திரிகையாளர் சந்திப்பில் ஒரு நிருபர் நாகராஜசோழனிடம், “ஏதோ ரகசியமா யாகம் நடத்தினீங்க போல!”“ஹிஹி! அம்மாவின் புகழ் இந்த பூமி இருக்கும் வரை நிலைக்கணும்னு யாகம் பண்ணினோம்!” வீங்கின கன்னத்தை மறைத்துக்கொண்டார் நா.ரா.சோழன்.அன்றிரவு வழக்கம் போல குடியும் கும்மாளமுமாய் இருந்த சோழன் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார்.

கனவு வந்தது. எண்ணெய் தடவிய பிரம்புடன் தெய்வநாயகி.“திருந்தச் சொன்னா கனவுல நான் வராம இருக்க பரிகார யாகம் பண்றீங்களா?”உடலெங்கும் கொழுக்கட்டை கொழுக்கட்டையாய் வீங்க விளாசித் தள்ளினார் தெய்வநாயகி. 2021லும் நாகராஜசோழன் ஓடிக் கொண்டிருக்கிறார். யாராவது காப்பாற்றுங்களேன்!

ஆர்னிகா நாசர்